T015 சந்திரனின் இடமாறு தோற்றப்பிழை யும் தசைபுக்தி கால கணிதமும்


தசைபுக்தி
திருச்சிற்றம்பலம்
பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே!

— சிவபுராணம்

T015 சந்திரனின் இடமாறு தோற்றப்பிழை யும் தசைபுக்தி கால கணிதமும்

சந்திரனின் இடமாறு தோற்றப்பிழை:  வேத ஜோதிடத்தின் முக்கியமான அடிப்படை கோட்பாடுகளில் ஒன்று உடு தசை / விம்சோத்தரி முறை சார்ந்து பயன்படுத்தப்படும் தசைபுக்தி கால கணிதம் ஆகும். மகரிஷி பராசரர் முறையில் ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் 120 ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டு, இந்த கால இடைவெளி ஆனது ஒன்பது கிரகங்களுக்கும் வெவ்வேறு அளவில் மகாதசை காலமாக பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மகாதசைகள் மேலும் பகுக்கப்பட்டு புக்தி, அந்தரம் முதலான மேலும் சிறிய காலக்கூறுகளாக பகுக்கப்படுகின்றன.

பன்னிரெண்டு ராசிகளை உள்ளடக்கிய மொத்த ராசிப்பட்டையும் (360 பாகை), 27 நட்சத்திரங்களாக பிரிக்கப்பட்டு (360 பாகை / 27 நட்சத்திரங்கள் = 13° 20’ / நட்சத்திரம்) , ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு நவக்கிரகம் நட்சத்திர நாதனாக அடையாளம் காணப்பட்டு உள்ளது. மேஷம் முதல் கடகம் வரை உள்ள நட்சத்திர நாயகனின் வரிசையே சிம்மம் முதல் விருச்சிகம் வரையும், மற்றும் தனுசு முதல் மீனம் வரையும் திரும்பவும் வருகிறது.

ஒரு ஜாதகர் பிறக்கும்போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் அமைகிறதோ அதுவே அவரின் ஜென்ம நட்சத்திரமாக அமைகிறது. சந்திரன் அமைந்த நட்சத்திர நாதனின் தசை, ஜாதகரின் வாழ்வின் தொடக்க தசையாக கொண்டு ஒருவரின் வாழ்வில் நிகழவுள்ள சம்பவங்களின் காலக்கணக்கீடுகள் தொடங்குகின்றன.

கீழே உள்ள படம் ஜாதகரின் ஜென்ம நட்சத்திரத்தை பொறுத்து மாறுபடும் இந்த வெவ்வேறான தொடக்க புள்ளிகளை அடையாளம் காட்டுகிறது. சந்திரன் தோராயமாக ஒரு நாளைக்கு ஒரு நட்சத்திரத்தை கடப்பார். இதனால் தான் ஒரு நாள் வித்தியாசத்தில் பிறந்தால் கூட, இரு குழந்தைகள் ஒரே விதமான தசை அமைப்பில் வாழ்க்கையை அனுபவிப்பது இல்லை என்று சொல்லப்படுகிறது.

தசைபுக்தி, தோற்றப்பிழை
மாறுபடும் ஆரம்ப புள்ளிகள்

இரு குழந்தைகள் ஒரே நாளில், ஒரே நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் கூட, அவர்களின் பிறப்பு ஜாதகத்தில் உள்ள சந்திரனின் பாகை அளவை வைத்து நட்சத்திர பாதங்களும், மீதமுள்ள தசை கால இருப்பும் கணக்கிடப்படுகிறது.

சந்திரன் ஒரு நாளில் ஒரு நட்சத்திரத்தை கடந்தாலும், வெவ்வேறு நட்சத்திர நாதர்களுக்கு வெவ்வேறான மகாதசை காலம் கொடுக்கப்பட்டு உள்ளதால், கேது, செவ்வாய் தவிர்த்து, எந்த இரு கிரகங்களுக்கும் உண்டான நட்சத்திரங்களிலும், சந்திரனின் ஒரு பாகை நகர்வானது, தசைபுக்தி கணிதங்களில் வெவ்வேறான கால விளைவுகளை ஏற்படுத்தும்.

கீழே உள்ள அட்டவணை இதனை உங்களுக்கு காட்சிப்படுத்துகிறது.

கார்த்திகை அல்லது அசுவினி  நட்சத்திர தினத்தில், இரு வேறு நேரங்களில் பிறந்த குழந்தைகளின் தசா இருப்பு வித்தியாசத்தை விட, பரணி அல்லது பூசத்தில் அதே நேரங்களில் பிறந்த குழந்தைகளின் தசா இருப்பு வித்தியாசம் அதிகமாக இருக்கும். உங்கள் நட்சத்திரம் சூரியனுடையது என்றால், சந்திரனின் ஒரு பாகை வித்தியாசம் உங்கள் தசைபுக்தி கணக்கினை 164 நாட்கள் மாற்றி வைக்கும். அதுவே நீங்கள் சுக்கிரன் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால், சந்திரனின் ஒரு பாகை மாறுபாடு உங்கள் தசை புக்தியை ஒன்றரை ஆண்டுகள் (548 நாட்கள்) வரை முன்பின்னாக புரட்டிப்போட்டுவிடும்!

வேத ஜோதிட முறையில் முக்கியமாக சொல்லப்படும் எல்லா பலன் உரைத்தல்களும், எடுக்கப்படும் முடிவுகளும் தசைபுக்தி கால அமைப்பை சார்ந்தே அமைகின்றது. நட்சத்திரம் மற்றும் அதன் பாதம் தொடங்கி, தசைபுக்தி பொது பலன்கள், அனுகூல மற்றும் பிரதிகூல காலங்கள், 10 வகையான திருமண பொருத்தம், தசை சந்தி என தசைபுக்தி கணிதம், சோதிடத்தை சார்ந்து வாழ்வினை அமைத்துக்கொள்ள முயலும் மனிதர்களின் வாழ்வில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. இந்த கணிதத்தை நம்பியே வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை, காலாகாலத்தில் எடுக்காமல் தள்ளிப்போடும் நண்பர்களை நான் அறிவேன். எத்தனையோ திருமணத்திற்கு காத்திருக்கும் வரன்கள்,  மற்ற பொருத்தங்கள் இருந்தும், தசை சந்தி பொருத்தமின்மையால் தம்பதி ஆகாமலேயே போய் இருக்கிறார்கள்.

சந்திரனின் ஒரு சிறு அளவிலான பாகை வித்தியாசம் கூட, தசா நாதன் மாற்றத்தையோ அல்லது சம்பந்தப்பட்டுள்ள தசாநாதனை பொருத்து, பெரிய அளவில் தசா புத்தி காலங்களில் மாற்றங்களையோ ஏற்படுத்தக்கூடும் எனில் நாம் பயன்படுத்தும் தசைபுக்தி கணக்கீடு எவ்வளவு துல்லியமாக அமைய வேண்டும்? ஆனால் உண்மையிலேயே நாம் தற்போது பரவலாக பயன்படுத்தி வரும் சந்திரனின் பாகை கணக்கீடு முறை சரியானதுதானா என்று இந்த கட்டுரை ஆராய முற்படுகிறது.

இன்றைய நிலை

சோதிடத்தில் பிறப்பு ஜாதகம் கணிக்க, பிறந்த இடம், நாள், நேரம் ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இவற்றில், அட்ச மற்றும் தீர்க்க ரேகைகள் லக்கினம் விழும் புள்ளியை கணிக்க மட்டுமே பயன்படுகின்றன  என்பது உங்களுக்கு தெரியுமா? மற்ற எல்லா கிரக நிலை கணக்குகளும் புவியின் மைய பகுதியை அடிப்படையாக கொண்டே செய்யப்படுகின்றன. சரி, இதில் என்ன பிரச்சினை என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இதன் உள்ளே சற்று நுழைந்து பார்ப்போம்.

கிரகங்களின் ராசி மற்றும் நட்சத்திர இருப்பினை முடிவு செய்ய பயன்படுத்தப்படும் மிகவும் அடிப்படையான சித்தாந்தம், பார்வை கோணம் ஆகும். பூமிக்கு வெகு தொலைவில் பல நூறு ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திரங்கள் கிரக இருப்பை உறுதி செய்ய ஒரு பின்புல திரை போல,  அடையாளம் காட்டிகளாக மட்டுமே பயன்படுகின்றன. இந்த கூறு பற்றி எனது அடுத்த கட்டுரையில் மிக விரிவாக பார்ப்போம்.

மிகவும் எளிமையாக சொல்வதானால், நாம் பூமியில் ஒரு புள்ளியில் இருந்து வான்வெளியில் ஒரு கிரகத்தினை பார்க்கும்போது, அந்த நேரத்தில் நாம் பார்க்கும் கிரகத்தின் நேர்பின்னால் எந்த நட்சத்திரம் உள்ளதோ, அந்த நட்சத்திரத்தில், நாம் கவனிக்கும் அந்த கிரகம் நிற்பதாக கணக்கில் எடுத்துக்கொள்கிறோம். நாம் நிற்கின்ற இடத்தின் அட்ச மற்றும் தீர்க்க ரேகை பயன்படுத்துவதன் மூலம், நாம் பார்க்கும் அந்த நேரத்தில் எந்த ராசி அல்லது நட்சத்திரம் வானின் கீழ்த்திசையில் உதயம் ஆகிறதோ, அந்த புள்ளியை லக்கின புள்ளியாக நாம் கணக்கில் எடுத்துக்கொள்கிறோம். இப்படித்தான் பிறப்பு ஜாதகங்கள் பஞ்சாங்கம் மற்றும் மென்பொருள் மூலம் கணிக்கப்படுகின்றன.

லக்கின புள்ளியை கணிக்க உதவும் அட்ச, தீர்க்க ரேகைகள் மற்ற கிரக கணக்கீடுகளின் கணிதத்தில் பயன்படுத்தப்படுவது இல்லை. பூமியின் மைய புள்ளியினை இடமாக வைத்தே, மற்ற கிரகங்களின் இருப்பு பாகைகளும், குறிப்பிட்ட கிரகம் நின்ற நட்சத்திரமும் முடிவு செய்யப்படுகின்றன. இந்த கணித முறை, நாம் ஜாதகத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளும் பூமியை விட்டு வெகுதொலைவில் உள்ள சூரியன் முதல் சனி வரையிலான 6 பெரிய கிரகங்களுக்கும் பொருத்தமானதாக இருக்கலாம். ஆனால், சந்திரனின் நிலை அப்படிப் பட்டது அல்ல.

சந்திரன் பூமிக்கு வெகு அருகாமையில் உள்ள துணைக்கோள். கீழே உள்ள அட்டவணையை பாருங்கள். இந்த அட்டவணையில், பூமியில் இருந்து கிரகங்களின் சராசரி தூரமும், அவற்றில் இருந்து வரும் ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரமும், கிரக விட்டமும் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த அட்டவணையை நீங்கள் கூர்ந்து கவனித்தீர்கள் என்றால், மற்ற கிரகங்களை விட சந்திரன் நமக்கு எவ்வளவு அருகில் உள்ளது என்பது புரியும்.

நமக்கு மிகவும் தொலைவில் உள்ள ஒரு பொருளை நாம் இரு கண்களாலும் பார்க்கும் போது, நமக்கு மிகவும் அருகில் உள்ள பொருள் மத்தியில் வருமானால், நமக்கு அருகில் உள்ள பொருள் சிறிய அளவினால் ஆன இடமாறு தோற்றப்பிழைக்கு உள்ளாகும். நாம் புவியின் மத்தியில் இருந்து சந்திரன் ஊடாக ஒரு நட்சத்திரத்தை பார்க்கும் போதும், புவியில் 180 பாகை வித்தியாசத்தில் அமைந்த  இரண்டு தீர்க்க ரேகை (அட்ச ரேகை வேறுபாடு இல்லை) உள்ள இடங்களில் இருந்து அந்த நட்சத்திரத்தினை சந்திரனின் ஊடாக அதே நொடியில் பார்க்கும் போதும்,  சந்திரன் நின்ற பாகை அளவில் ஒரு சிறு அளவிலான கோண வித்தியாசம் ஏற்படும் (Parallax angle). இது உங்களுக்கு புரிந்தால் கீழே உள்ள விளக்கத்தை கடந்து செல்லுங்கள். சரியாக புரியாவிடில், கீழே உள்ள சோதனையை செய்து பாருங்கள் அல்லது படித்து புரிந்து கொள்ளுங்கள்.

இந்த கூற்றினை நன்கு புரிந்து கொள்வதற்காக, நாம் ஒரு சிறிய சோதனையை மேற்கொள்வோம். 

தோற்றப்பிழை – சோதனை

தேவையான பொருட்கள்: ஒரு மெழுகுவர்த்தி, ஒரு செங்குத்தான மறைப்பான் (எடுத்துக்காட்டு: ஒரு அடி நீள மர அளவுகோல்).

நிலை 1: கிரகம் அற்ற நிலை

1.நீங்கள் சம தரையில் நேராக அமர்ந்து கொள்ளுங்கள்.

2.உங்கள் கண் பார்வையின் உயரத்தில் நேராக பார்க்கும் போது, உங்களுக்கு 2 அல்லது 3 மீட்டர் தூரத்தில் ஒரு எரியும் மெழுகுவர்த்தியை வையுங்கள். மெழுகுவர்த்தியை நேராக இரண்டு கண்களாலும் பாருங்கள். இப்போது உங்களுக்கும் மெழுகுவர்த்திக்கும் நடுவில் வேறு எதுவும் இல்லை.

இந்த உதாரணத்தில், உங்களை பூமியின் மத்தியில் இருந்து பார்ப்பதாகவும், மெழுகுவர்த்தியை ஒரு தொலைதூர நட்சத்திரம் என்றும் எடுத்துக்கொள்ளுங்கள். நாம் அடுத்து பயன்படுத்த இருக்கின்ற செங்குத்தான மறைப்பானை, கிரகம் என்று எடுத்துக்கொள்ளலாம்.

நிலை 2: தொலைவில் உள்ள கிரகம்

இப்போது அந்த மெழுவர்த்திக்கு அருகில் ஒரு 10-15 சென்டிமீட்டர் முன்னால், உங்களிடம் உள்ள மர அளவுகோலை (அல்லது செங்குத்தான ஒரு மறைப்பானை) நேராக நிறுத்துங்கள். இந்த நிலையில் மறைக்கின்ற அளவுகோல் மெழுகுவர்த்திக்கு அருகிலும், உங்களுக்கு சற்று தொலைவிலும் இருக்கும். நீங்கள் இரண்டு கண்ணாலும் பார்க்கும் போது, மெழுகுவர்த்தி ஒளி நேராக தெரியக் கூடாது. இந்த காட்சியை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது நீங்கள் இரண்டு கண்களால் பார்ப்பதற்கு பதில் முதலில், வலது கண்ணை மூடிக்கொண்டு, இடது கண்ணால் மட்டும் மெழுகுவர்த்தி மற்றும் மறைக்கின்ற அளவுகோலை  பாருங்கள். இப்போது நீங்கள் பார்க்கும் காட்சியில் மெழுகுவர்த்தியும் மறைப்பானும் சிறிய அளவில் சற்று இடது வலதாக நகர்ந்து இருப்பது போல மாறி காட்சி அளிக்கும்.

அடுத்ததாக, நீங்கள் இடது கண்ணை மூடிக்கொண்டு வலது கண்ணால் மட்டும் பார்க்கும்போது, மெழுகுவர்த்தியும் மறைப்பானும் சற்று வலது இடதாக நகர்ந்து இருப்பது போல மாறி காட்சி அளிக்கும்.

இந்த இரு காட்சிகளிலும் மெழுகுவர்த்தி மற்றும் மறைப்பான் இடையிலான மாறிய கோண அல்லது தூர வித்தியாசத்தை கவனித்து வைத்துக் கொள்ளுங்கள்.

நிலை 3: அருகில் உள்ள கிரகம்

அடுத்ததாக, நமது மறைப்பானை உங்களுக்கு 50 சென்டிமீட்டர் முன்னால் கொண்டுவாருங்கள்.

இந்த நிலையில் மறைக்கின்ற அளவுகோல் உங்களுக்கு அருகிலும் மெழுகுவர்த்திக்கு தொலைவிலும் இருக்கும். இப்போது நீங்கள் இரண்டு கண்ணாலும் பார்க்கும் போது தோன்றும் காட்சியை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். மெழுவர்த்தி முழுதும் மறைக்கப்படவில்லை என்றாலும் பரவாயில்லை. உங்கள் கண் பார்வையின் நேர்கோட்டில் மறைப்பானும், மெழுகுவர்த்தியும் இருந்தால் போதும்.

இப்போது நீங்கள் நாம் முன்பு சொன்னது போல, இரண்டு கண்களால் பார்ப்பதற்கு பதில் முதலில், வலது கண்ணை மூடிக்கொண்டு, இடது கண்ணால் மட்டும் மெழுகுவர்த்தி மற்றும் மறைக்கின்ற அளவுகோலை  பாருங்கள். இப்போது நீங்கள் பார்க்கும் காட்சியில் மறைப்பான் மெழுகுவர்த்திக்கு வலது புறமாக காட்சி அளிக்கும். அடுத்ததாக, நீங்கள் இடது கண்ணை மூடிக்கொண்டு வலது கண்ணால் மட்டும் பார்க்கும்போது, மறைப்பான் இடது புறமாக நகர்ந்து இருப்பது போல மாறி காட்சி அளிக்கும்.

இந்த இரு காட்சிகளிலும் மெழுகுவர்த்தி மற்றும் மறைப்பான் இடையிலான தூர அல்லது கோண வித்தியாசத்தை கவனித்து வைத்துக்கொள்ளுங்கள். இவை, நாம் நிலை 2ல் பார்த்த தூர அல்லது கோண வித்தியாசத்தை விட மிக அதிகமாக இருக்கும்.

நாம் ஒரு பொருளை இரண்டு கண்களாலும் (புருவ மத்தி) பார்ப்பதை பூமியின் மத்தியில் இருந்து பார்ப்பதாக எடுத்துக்கொள்வோம். வலது அல்லது இடது கண்ணால் மட்டும் பார்ப்பதை, பூமியின் இருவேறு சுற்று வட்ட எல்லைகளில் இருந்து பார்ப்பதாக வைத்துக்கொள்வோம்.

நாம் இப்போது பார்த்த 3 காட்சிகளில், எது சரியானது?

நாம் தற்போது உள்ள முறைப்படி பூமியின் நடுவில் உள்ள பார்வையினை பயன்படுத்துகின்றோம். ஆனால், பூமியின் வெவ்வேறு இடங்களில் இருந்து ஒரே நேரத்தில் பார்க்கும் சந்திரனின் காட்சிகள் மற்றும் பார்வை கோணங்கள் வேறானவை அல்லவா? இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால், நமக்கு மிகவும் அருகில் உள்ள சந்திரனுக்கு, நாம் பூமியின் மத்தியில் இருந்து கணக்கீடு செய்தால், நமக்கு தவறான பாகை கணக்கீடு கிடைக்க வாய்ப்பு அதிகம். இது, நாம் பார்க்கின்ற இடத்தை பொறுத்து பல்வேறு அளவுகளில் மாறுபடக்கூடியது.

நிலவின் இடமாறு தோற்றப்பிழை

இப்போது நாம் சந்திரனின் இடம் மாறுவது போல உள்ள நிலையை கீழே உள்ள படத்தில் காண்போம். இந்த படத்தில் பூமி இடது புறத்திலும், நட்சத்திரம் வலது எல்லையிலும், நிலா மத்தியிலும் காண்பிக்கப்பட்டு உள்ளன.

தசைபுக்தி
நான் கண்ட காட்சி நீ காணவில்லை!

பூமி நமது வடதுருவத்தில் இருந்து மேலிருந்து பார்க்கும்போது எவ்வாறு தோன்றுமோ, அவ்வாறு காட்சி படுத்தப்பட்டுள்ளது. ஒரே அட்சரேகையிலும் தீர்க்கரேகை 180 பாகை வித்தியாசத்திலும் அமைந்த பூமி பரப்பின் இரு புள்ளிகள் முறையே A, B என்ற இரு புள்ளிகளால் (சிவப்பு மற்றும் பச்சை நிற இடம் சுட்டிகள்) குறிக்கப்பட்டு உள்ளன. புவியின் மத்தியில் இருந்து நிலவை பார்க்கும்போது, புவியின் பரப்பில் அமையும் புள்ளி O என்று குறிக்கப்பட்டு உள்ளது (ஆரஞ்சு வண்ண இடம் சுட்டி).

நாம் பார்க்கின்ற படத்தில் பூமி சுழலாமல் இருப்பது போலவும், நிலா மட்டும் நகர்வது போலவும் கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த படத்தை புரிந்துகொள்ளுங்கள். அப்படி பார்க்கும்போது,  A, O மற்றும் B என்ற மூன்று புள்ளிகளிலும் நட்சத்திரம் நிலவின் நேர்பின்னால் அமைவது இல்லை. A புள்ளியில் இருந்து பார்க்கும்போது நிலா நட்சத்திரத்தினை கடந்து சென்றுவிட்டது. அதுவே நீங்கள் B புள்ளியில் இருந்து பார்த்தால், நிலா இன்னும் நட்சத்திரத்தினை நெருங்கவில்லை. ஆனால் நாம் A, B என்ற இரு புள்ளிகளுக்கும் O என்ற மத்திய புள்ளியில் நிலா இருப்பது போல தசைபுக்தி இருப்பு கணிதம் செய்கின்றோம். A, B மற்றும் புள்ளிகள் O என்ற புள்ளியை விட எந்த அளவு தள்ளி உள்ளதோ, அந்த அளவு நிலவின் பாகை கணிதம் பிழையானது.

சந்திரனின் இந்த இடமாறு தோற்றப்பிழை சில கலைகள் (minutes) முதல் அதிக பட்சமாக 2 பாகை (degree) வரை இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. உங்கள் ஜென்ம நட்சத்திர அதிபதி சுக்கிரன், சனி, ராகு, புதன் மற்றும் குரு எனில் உங்கள் தசை புக்தி கால கணிதத்தில் இந்த பிழை அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.

தற்போதுள்ள எனது தசைபுக்தி கணக்கு சரியானது தானா?

இதனை தெரிந்து கொள்ள, கீழே உள்ளவற்றை பாருங்கள்.

  1. உங்கள் ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து சந்திரன் எந்த பாவகத்தில் இருக்கிறது என்று பாருங்கள். உங்கள் ஜாதகத்தில் சந்திரன் 10 அல்லது 4 ஆம் வீடுகளில் பாவக மத்திக்கு அருகில் இருந்தால், தற்போதுள்ள உங்கள் தசைபுக்தி கணிதம் சரியானது. இது நமது படத்தில் பூமி புள்ளி O மூலம் காட்டப்படுகிறது.
  2. உங்கள் ஜாதகத்தில் சந்திரன் 1 அல்லது 7ஆம் பாவகங்களில் இருந்தால், தற்போதுள்ள கணிதத்தில் சந்திரனின் பாகை திருத்தம் செய்யப்படவேண்டும். ஜென்ம நட்சத்திர நாதன் சார்ந்து உங்கள் தசை புக்திகள் கணிதம் பெருமளவு மாறக்கூடும்.
  3. உங்கள் ஜாதகத்தில், சந்திரன் உங்கள் லக்கினம் அருகில் இருந்தால் (11, 12, 1, 2 மற்றும் 3ஆம் பாவகங்கள்), தற்போதுள்ள உங்கள் தசைபுக்தி கணிதம் முன்னோக்கி நகர்த்தப்பட வேண்டும். ஏனெனில் அந்த தசை புக்தி ஏற்கனவே தொடங்கிவிட்டது அல்லது முடிந்தே விட்டது. இது நமது படத்தில் பூமி புள்ளி A மூலம் காட்டப்படுகிறது.
  4. உங்கள் ஜாதகத்தில், சந்திரன் உங்கள் 7ஆம் பாவகத்தின் அருகில் இருந்தால் (அதாவது 5, 6, 7, 8, மற்றும் 9 ஆம் பாவகங்கள்), தற்போதுள்ள உங்கள் தசைபுக்தி கணிதம் பின்னோக்கி நகர்த்தப்பட வேண்டும். ஏனெனில் சந்திரன் உங்கள் பிறப்பு ஜாதகத்தில் உள்ள பாகையை விட நிஜத்தில் பின்னால் உள்ளது. இது நமது படத்தில் பூமி புள்ளி B மூலம் காட்டப்படுகிறது.

தோற்றப்பிழை – ஒரு சோதிடராக செய்ய வேண்டியது என்ன?

இது ஒரு வகையில் உங்களுக்கு ஒரு விழிப்புணர்வு பதிவு.

  • நீங்கள் ஒரு தொழில்முறை சோதிடர் மற்றும் ஏதோ ஒரு சோதிட மென்பொருள் பயன்படுத்துபவர் எனில், உங்கள் மென்பொருள் தயாரிப்பவரிடம் சந்திரனின் இந்த பாகை கணித பிழையை சரிசெய்து கொள்ளும் வசதியை, அவர்கள் வழங்கும் மென்பொருளில் ஏற்படுத்தித் தரச்சொல்லுங்கள்.
  • நீங்கள் பஞ்சாங்கம் மூலம் சோதிட கணிதம் செய்பவர் என்றால், உங்கள் பஞ்சாங்க ஆசிரியர் அல்லது பதிப்பாளரிடம் இந்த சந்திரனின் பாகை சரிசெய்யும் கணிதத்தை அல்லது சூத்திரத்தை பஞ்சாங்கத்துடன் இணைத்து வழங்க சொல்லுங்கள். இந்த கணிதம் அட்சரேகை தீர்க்கரேகை சார்ந்து இலகுவாக பயன்பாட்டில் கொண்டுவரப் படக்கூடியதே. இதற்கான சரிசெய்யும் சூத்திரங்கள் உண்மையான தேடல் உள்ளவர்களுக்கு எளிதில் கிடைக்கக் கூடும்.

சந்திரன் பாகை சரிசெய்யப் பட்ட மென்பொருட்கள் வருவதற்கு சில காலம் ஆகலாம். அப்படிப்பட்ட மென்பொருட்கள் ஏற்கனவே சந்தையிலும் உண்டு. நானும் கூட வைத்திருக்கிறேன். எனவே, இது ஒரு கற்பனை அல்ல.

எனக்கு தெரிந்தவரை, நான் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் நம்பிக்கைக்கு உரியதாக கருதப்படும் முக்கிய மென்பொருட்களிலேயே இந்த வசதியை பார்க்கவில்லை. அப்படியெனில், சிறு அளவில் உபயோகப்படுத்தப்படும் மென்பொருட்கள் பற்றி கேட்கவே வேண்டாம்.

தொழில் தர்மம்

ஒரு விடயம் தவறென தெரியாதபோது அதனை பயன்படுத்தி நாம் சொல்லும் பலன்கள் ஆண்டவனால் மன்னிக்கப்படலாம். ஆனால், ஒரு கால கணிதம் தவறென தெரிந்த பிறகும், அதனை பயன்படுத்தி சொல்லப்படும் பலன்கள் தொழில் தர்மம் அன்று. அவை ஜாதகனின் வாழ்க்கையை மோசமாக பாதிக்கக்கூடும். அவற்றிற்கு விமோசனம் இல்லை.

சரியப்பா. பிரச்சினை தெரிந்துவிட்டது. இந்த சரி செய்யப்பட்ட மென்பொருள் வரும் வரை தொழில்முறை சோதிடர்களாகிய நாங்கள் என்ன செய்வது என்று நீங்கள் கேட்பது நியாயமே. உங்களுக்கான எனது ஆலோசனைகள் கீழே உள்ளன.

  1. அடுத்தமுறை நீங்கள் ஜாதகம் பார்க்கும் போது, ஒரு ஜாதகத்தில் சந்திரன் உள்ள பாவகத்தை கவனியுங்கள். நான் கொடுத்துள்ள குறிப்புகளில் எந்த குறிப்புடன், சந்திரனின் இருப்பு பொருந்தி போகிறதோ அதற்கு ஏற்றாற்போல கம்ப்யூட்டர் அல்லது நீங்கள் போடும் தசை புத்தி கால கணிதம் எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
  2. முக்கியமாக, நீண்ட கால மகாதசை உள்ள கிரகங்களில் ஜென்ம நட்சத்திரம் இருந்தால் நன்கு யோசித்து, சற்று தோராயமாகவே பலன்களை சொல்லுங்கள். வினை/சம்பவம் நிகழ இருக்கும் காலத்தை அடித்து கூறாதீர்கள். இது உங்களுக்கு நல்லது, ஜாதகருக்கு மிகவும் நல்லது.

References & Courtesy:

  1. https://en.wikipedia.org/wiki/Parallax#Lunar_parallax
  2. https://www.goravani.com/blog/

இந்த கட்டுரை பற்றிய உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும்.

நன்றி!

Feel welcome to share your comments or feedback!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This Post Has 4 Comments

  1. Ravichandran VS

    Very good analytical work

    1. Ramesh

      Thank you! There are also contrarion views to it.

  2. செந்தில்குமார்

    ரமேஷ் இது ரொம்ப நல்ல அருமையான விளக்கமான பதிவு… இதுவரை இந்த கோணத்தில் எந்த ஒரு ஜோதிடரும் யோசித்துப் பார்க்கவில்லை…

    1. கோபி

      அருமையான கட்டுரை