T018 அந்த 27 நட்சத்திரங்கள் – வானியல் பார்வை

27 நட்சத்திரங்கள்
நூலுணர் வுணரா நுண்ணியோன் காண்க

T018 பன்னிரண்டு ராசிகளும் 27 நட்சத்திரங்களும்: வானியல் சார்ந்த பார்வை – பாகம் 3 – அந்த 27 நட்சத்திரங்கள்

இந்தக் கட்டுரையின் முதலாம் மற்றும் இரண்டாம் பாகங்களை இதுவரை நீங்கள் படிக்கவில்லை என்றால் அதனை முதலில் படித்துவிட்டு, பிறகு இந்த கட்டுரையை தொடர்வது பயனுள்ளதாக இருக்கும். இந்த கட்டுரை தொடரின் முதல் இரண்டு பாகங்களில் அண்டத்தைப் பற்றியும், வான்வெளியில் சூரியனின் வட்டப் பாதையில் அமைந்த நட்சத்திரங்களின் கற்பனையான இணைவுகளின் அடிப்படையில் அமைந்த 12 ராசிகள் பற்றியும் பார்த்தோம்.

சோதிடத்தில் சொல்லப்பட்ட ராசி உருவங்களின் நீளங்கள் பற்றியும் அவை வானியல் ரீதியான தரவுகளில் இருந்து சற்று மாறுபட்டு இருக்கின்றன என்பதையும் பார்த்தோம். இந்த தொடர் கட்டுரையின் இந்த மூன்றாம் பாகத்தில், நாம் நட்சத்திரங்கள் சார்ந்து, இன்னும் ஆழமான பார்வையை விரிவான வானியல் தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்வோம்.

இந்திய ஜோதிடத்தில் அடிப்படையான மற்றும் வித்தியாசமான கோட்பாடுகளில் ஒன்று நட்சத்திரங்களை வைத்து பலன் சொல்லும் முறை ஆகும். மற்ற நாட்டு முறைகள் அனைத்திலும் ராசிகளை மட்டும் வைத்து பெருமளவில் பொதுவாக பலன் சொல்லுகின்ற நிலையில், இந்திய சோதிடத்தில் மட்டும் 12 ராசிகளும் மேலும் பகுக்கப்பட்டு 27 நட்சத்திரங்களாக மேலும் வகைப்படுத்தப்படுகின்றன. இந்த நட்சத்திரங்களை சார்ந்து கணக்கிடப்படும் தசை புக்தி கணிதம் இந்திய சோதிடத்தின் தனித்துவமான கூறு ஆகும். நாம் கணக்கில் கொள்கின்ற 27 நட்சத்திரங்களில், சந்திரன் ஒருவர் பிறந்த காலத்தில் எந்த நட்சத்திரத்தில் பயணிக்கிறது என்று கணக்கில் கொண்டு தசாபுத்தி காலத்தை கணிக்கிறோம்.

நட்சத்திரங்களை தேவர்கள் (தேவதைகள்! 😊) வாழும் புவனம் என வேதம் சொல்கிறது. பல்வேறு சோதிடர்களும் 7 கிரகங்களையும் தாண்டி, இந்த நட்சத்திரங்களுக்கு மிக அதிகமான முக்கியத்துவம் அளிக்கின்றனர். சந்திரன் மற்றும் பிற கிரகங்கள் இந்த நட்சத்திரங்களில் இருந்து ஒளியை வாங்கி, அதை நமக்கு அளிக்கின்றது என்று சொல்லக் கூடிய முன்னணி சோதிடர்கள் இருக்கிறார்கள். அவர்களது இது போன்ற கூற்றுகளை கேள்வி கேட்காமல் நம்பக்கூடிய ஒரு பெரிய கூட்டமும் இருக்கிறது. மேலும், இந்த 27 நட்சத்திரங்களை சார்ந்து, பஞ்சாங்க கணிதம் கூட, கணிதம் மற்றும் வாக்கியம் என பிளவுபட்டு கிடக்கின்றது. இந்த இரண்டில் எந்தப் பஞ்சாங்கம் சிறந்தது என்று முடிவுக்கு வராத ஒரு பஞ்சாயத்து எப்போதும் நடந்து கொண்டே இருக்கிறது. நல்லவேளையாக, இந்த பஞ்சாங்க பஞ்சாயத்து தமிழ்நாட்டு எல்லையோடு நிற்கிறது. மற்ற மாநில அல்லது தேசங்களைச் சேர்ந்த சோதிடர்கள், இதுபோல பஞ்சாங்கத்தை வைத்து அடித்துக்கொள்வது போல் தெரியவில்லை.

இந்திய சோதிட கணிதமுறைகளில் மேடம் முதல் மீனம் வரை 12 ராசிகளும் வெவ்வேறான தூரங்களில் விரவி இருப்பதாக கணக்கில் கொள்ளப்பட்டாலும், 27 நட்சத்திரங்களும் 360 பாகை கொண்ட ராசி பட்டையை சமமாக பிரிக்கின்றன என்றே கருத்தில் கொண்டு நட்சத்திரங்களும், அதன் பாதங்களும் மற்றும் பாகைகளும் கணிதம் செய்யப்படுகின்றன. சிறு அளவிலான பாகை மாற்றம் கூட நட்சத்திரத்தை அல்லது ராசியை மாற்றி விடுவதாக அமைகிறது. நட்சத்திரங்களுக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் எனில் நாம் ராசிக்கட்டத்தில் குறிப்பிடுகின்ற நட்சத்திரங்களின் இருப்பு உண்மையிலேயே வான்வெளியில் அந்தந்த ராசிகளில் சமமாக அமைந்து இருக்க வேண்டும் அல்லவா?  இந்த கட்டுரை அதுபோன்றதொரு உறுதிப்படுத்திக் கொள்ளும் முயற்சியை வானியல் தரவுகள் சார்ந்து முன்னெடுக்கிறது.

முக்கிய குறிப்பு: இந்தக் கட்டுரை கீழ்க்கண்ட விக்கிபீடியா பக்கத்தினை  தழுவி, மேலும் விரிவு படுத்தி எழுதப்படுகிறது.

https://en.wikipedia.org/wiki/List_of_Nakshatras

இதில் குறிப்பிடப்பட்டுள்ள வானியல் சார்ந்த தரவுகள் ஸ்டல்லரியம் என்ற வானியல் மென்பொருளின் துணைகொண்டு கணக்கிடப்பட்டுள்ளன. www.iau.org இல் இருந்து பெறப்பட்ட, மேம்படுத்தப்பட்ட தரவுகளும் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

அந்த 27 நட்சத்திரங்கள்:

சோதிடத்தின் 27 நட்சத்திரங்களை பற்றிய சில சுவையான மற்றும் ஆச்சரியம் ஊட்டக்கூடிய தகவல்களை, வானியல் சார்ந்து பார்ப்போம்.

ஒரு நட்சத்திரம் என்பது தன்னளவில் தனித்து விளங்குவதாகவும், சில கிரகங்களை தனது குடும்பத்தில் பெற்று விளங்குவதாகவோ அல்லது கிரகங்கள் ஏதும் இல்லாமலோ இருப்பதாகும். உதாரணத்திற்கு, நமது சூரியன் ஒரு நட்சத்திரம். இதுபோலதான் நாம் கருதும் சோதிட நட்சத்திரங்களும் ஆகும்.

இந்திய சோதிடத்தில் 27 தனித்த நட்சத்திரங்களாக இல்லாமல், அவற்றின் நட்சத்திர தாரைகளாக பயன்படுத்துகிறோம். தாரை என்பது நட்சத்திரங்களின் கூட்டம் அல்லது தொகுப்பு ஆகும். இவை ராசியின் ஒரு பகுதியாக அமையலாம். நட்சத்திர தாரைகளின் எண்ணிக்கை பற்றிய குறிப்புகள் பல சோதிட நூல்களிலும் உங்களுக்கு காணக்கிடைக்கும். அதன் அடிப்படையில் கணக்கெடுத்துக் கொண்டால், நாம் 27 நட்சத்திரங்களுக்கும் சேர்த்து 73 நட்சத்திர தாரைகளை  கணக்கிட முடியும்!

நான் அந்த குறிப்புகளை ஸ்டெல்லரியும் மென்பொருளில் உள்ள நட்சத்திர உருவகங்களோடு ஒப்பிட்டு, வானியல் தரவுகளோடு பொருந்திப்போகாத சில பிழைகளை சரி செய்து பின்னர் எனது தரவுகளை அளிக்கிறேன்.  உதாரணத்திற்கு, சதயம் நட்சத்திரத்திற்கு 100 தாரைகள் என சொல்லப்பட்டுள்ளது. ஆனால், வானியல் தரவுகளின் படி அது ஒரு தாரையை மட்டுமே உடையது. சதயத்தின் பெருமையை சொல்வதற்காக, இந்த 100 தாரைகள் கூற்று சொல்லப்பட்டு இருக்கலாம்.

மேலும், பெரும்பாலான தனி நட்சத்திரங்களும் (73ல் 54), சூரியனை போல அல்லாமல் இரட்டை (binary) அல்லது மூன்று நட்சத்திரங்கள் வகையை சேர்ந்தவை ஆகும். சில நட்சத்திரங்களே (73ல் 19) சூரியனை போல தனி (single) நட்சத்திரங்கள் ஆகும்.

கீழே உள்ள படத்தை பாருங்கள். இதில் ஒவ்வொரு நட்சத்திரத்தின் பின்னேயும் உள்ள தனித்துவமான நட்சத்திர தாரைகளின் எண்ணிக்கை தரப்பட்டுள்ளது. 1* என்பது ஒற்றை தாரையையும் 2* என்பது இரட்டை தாரைகளையும் குறிக்கும்.

நட்சத்திர தாரைகள்
நட்சத்திர தாரைகள்

இவை மேலும் விரிவாக அடுத்த படத்தில் காண்பிக்கப்பட்டு உள்ளன. நட்சத்திரத்தின் அதிபதிகள் சார்ந்து, நட்சத்திரங்கள் வேவ்வேறு வண்ண பட்டைகளாக கொடுக்கப்பட்டு உள்ளன. நட்சத்திர எண் நட்சத்திரத்தின் கீழேயே கொடுக்கப்பட்டு உள்ளது.

நட்சத்திர தாரைகள் எண்ணிக்கை
நட்சத்திர தாரைகள் எண்ணிக்கை

மூலம் (9) மற்றும் கிருத்திகை (8) ஆகிய இரண்டும் அதிகபட்ச  நட்சத்திர தாரைகளின் தொகுப்பாக உள்ளன.

பிரகாசமான கார்த்திகை நட்சத்திரத்தின் உருவகம் மற்றும் தாரைகள் கீழே உள்ள இரு படங்களில் உங்கள் தகவலுக்காக காட்டப்பட்டு உள்ளன.

கார்த்திகை நட்சத்திரங்கள்
கார்த்திகை நட்சத்திரங்கள்
Image Courtesy: NASA, ESA and AURA/Caltech / Public domain https://commons.wikimedia.org/wiki/File:M45map.jpg

கவனிப்புகள்

  • மொத்தமுள்ள 27 நட்சத்திரங்களில் 8 மட்டுமே ஒற்றை நட்சத்திரங்கள் (ரோகிணி, திருவாதிரை, மகம், உத்திரம், சித்திரை, சுவாதி, சதயம் மற்றும் ரேவதி ஆகிய எட்டு நட்சத்திரங்கள் – இவை யாவுமே binary என்ற வகையை சேர்ந்தவை).
  • மேலும் 8 நட்சத்திரங்கள் இரட்டை தாரைகளை கொண்டவை.

நட்சத்திர தேர்வுக்கான விளக்கமும் தரவுகள் சொல்லும் உண்மையும்

இந்திய முறையில் வானில் தெரியும் 12 ராசிகளில் உள்ள பிரகாசமாக தெரியும் நட்சத்திரங்கள் முக்கியமான அடையாளங்களாக கருதப்பட்டு உள்ளன என்று ஒரு கருத்து உள்ளது. ஆனால், எனது ஆய்வில் அந்த கருத்துக்கு வலு சேர்ப்பது போல தரவுகள் அமையவில்லை.

இதனை பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள படத்தை பார்க்கவும். கீழே உள்ள படத்தில் மேஷ ராசி உருவகமும் அதில் காணப்படும் அசுவினி மற்றும் பரணி நட்சத்திர தொகுப்புகளும் காட்டப்பட்டுள்ளன.

மேட ராசி
மேட ராசி

இந்த ராசி உருவகத்தில் உள்ள முக்கியமான, அதிகம் பிரகாசமாக தெரியும் நட்சத்திரமாகிய ஆல்பா அரிஏடிஸ் (Alpha Arieties / Hamal) நமது இந்திய முறையில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இந்த நட்சத்திரம் மற்ற நாட்டு முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. தெரிந்து கொள்க: ஒரு ராசியில் ஆல்பா என குறியிடப்பட்டுள்ள நட்சத்திரங்கள் பெரும்பாலும் அதிகம் பிரகாசமானதாக தெரியும்.

நட்சத்திரங்கள் வெளியிடும் வண்ண கதிர்கள்:

நட்சத்திரங்களில் நிகழும் நியூக்கிளியர் நிகழ்வுகள் மற்றும் கதிர்வீச்சு வெளியீடைப் பொறுத்து அவை வெளியிடும் வண்ணங்கள் நீலம் முதல் சிவப்பு வரையிலான அலைக் கற்றைகளாக பிரிக்கப்படலாம். நீல வண்ணத்தில் காட்சி அளிப்பவை மிகவும் அதிக அளவிலான நியூக்கிளியர் வினை நிகழும் எரிபொருள் அதிகம் நிறைந்த நட்சத்திரங்கள் ஆகும். பெருமளவு எரிந்து போன நட்சத்திரங்கள் சிவப்பாக காட்சி அளிக்கும். இவற்றுக்கு மத்தியில் உள்ள நட்சத்திரங்கள் மஞ்சள் வண்ண ஒளியை உமிழ்கின்றன (நமது சூரியனை போல). இதன் அடிப்படையில், கீழே உள்ள படத்தை பாருங்கள். இந்த படத்தில் பிரகாசமான நட்சத்திரங்களில் ஒன்றான சிம்ம ராசியில் உள்ள மகம் நட்சத்திரம் காட்டப்பட்டுள்ளது (நீல வண்ணம்).  அதன் அருகில் உள்ள (இரு பரிமாணத்தில்) வெவ்வேறான வண்ணங்களை உமிழும் நட்சத்திரங்களையும் பார்க்கலாம்.

மக நட்சத்திரம்
மக நட்சத்திரம்

அடுத்த படத்தில், மேற்கத்திய நாட்டு முறையிலான மேட ராசியின் கற்பனையான உருவகத்தில் அமைந்துள்ள சில நட்சத்திரங்களும், அவற்றின் வானியல் அடையாளங்களும், அவை வெளியிடும் ஒளிக்கற்றையின்  வண்ணங்களும் காண்பிக்கப்பட்டு உள்ளன. இந்த உருவகம், நாம் இதற்கு முன் பார்த்த இந்திய மேடராசி உருவக கோடுகளில் இருந்து சிறிய அளவில் மாறுபட்டுள்ளதை கவனிக்கவும்.

மேட ராசி நட்சத்திரங்கள்
மேட ராசி நட்சத்திரங்கள்

நாம் ஒரு ராசியில் பார்க்கும் நட்சத்திரங்கள் அருகருகே உள்ளது போல தோன்றினாலும், அவற்றை முப்பரிமாண வெளியில் பார்க்கும் போது அவை யாவும் கற்பனைக்கும் எட்டாத தூரங்களில் விலகி இருப்பதை அறியலாம். இருபரிமாண வெளியில் அவை நமக்கு தட்டையாக அருகருகே தெரிகின்றன. கீழே உள்ள படத்தில், மேட ராசியில் உள்ள நட்சத்திரங்களை அதுபோல முப்பரிமாணத்தில் பார்த்தால் அவற்றின் பின்னே உள்ள தூர வித்தியாசம் காட்டப்பட்டுள்ளது. இந்த தூரம் பல நூறு ஒளிஆண்டுகள் வரை நீளும். இந்த தூரம் பற்றிய தரவுகள் பின்னால் வர இருக்கின்றன.

நட்சத்திரங்கள் பக்கவாட்டு பார்வையில்
மேட ராசி நட்சத்திரங்கள் பக்கவாட்டு பார்வையில்

எனது தரவின் தொகுப்புகள்:

ராசி நட்சத்திரம் அட்டவணை – வானியல் ரீதியாக, நட்சத்திரங்கள், அவற்றின் தாரைகள், நட்சத்திர அதிபதி மற்றும் நட்சத்திரங்கள் கிரகண கட்டத்தில் அமைந்துள்ள ஒழுங்கு பற்றி, கீழே வகைப்படுத்தி உள்ளேன். எனது முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போல ஹிப்பாகிரஸ் (HIP) குறியீட்டு அடிப்படையில் அடையாளம் கண்டுள்ளேன். இந்த நட்சத்திரங்களின் IAU (International Astronomical Union) அடையாளங்களும் IAU பெயர்களும் கூட தரப்பட்டுள்ளன. பின்னால் வர இருக்கின்ற கட்டுரையின் பாகங்களுக்கு, இவையே அடிப்படையான தரவுகள் ஆகும்.

கேது – சுக்கிரன் – சூரியனின் நட்சத்திர தாரைகள்

கேது - சுக்கிரன் - சூரியனின் தாரைகள்
கேது – சுக்கிரன் – சூரியனின் தாரைகள்

ஒவ்வொரு நவகிரகத்திற்கும் 3 நட்சத்திரம் கொடுக்கப்பட்டு இருந்தாலும், வானியல் ரீதியாக அவற்றின் எண்ணிக்கையை கணக்கிடும்போது, அவை மேலும் விரிவடைகின்றன. உதாரணமாக, மேலே உள்ள அட்டவணையை பார்த்தால், கேதுவின் மூன்று நட்சத்திரங்களுக்கும் பின்னால் மொத்தம் 12 நட்சத்திர தாரைகள் உள்ளன என்பது கேது (12) என குறிப்பிடப்பட்டுள்ளது.

  • கேது (12) மற்றும் சூரியன் (11) பின்னணியில், அதிகபட்ச தாரைகள் உள்ளன.

சந்திரன் – செவ்வாய் – ராகுவின் நட்சத்திர தாரைகள்:

சந்திரன் – செவ்வாய் – ராகுவின் நட்சத்திர தாரைகள்

ராகுவிற்கு மட்டும் சிறப்பாக மூன்றுமே ஒற்றை தாரைகளாக உள்ளதை, மேலே உள்ள அட்டவணையில் பார்க்க முடியும். இவை மூன்றுமே பிரகாசமானவை மற்றும் பெரும்பாலான நாடுகளிலும் உள்ள முறைகளில் பயன்படுத்தப்படும் நட்சத்திரங்கள் ஆகும்.

இம்மூன்றிலும், சதயத்திற்கு வானியல் அடிப்படையில் ஒரு சிறப்பான இடம் உண்டு. அதை பின்னால் வரும் கட்டுரையில் பார்ப்போம். 

குரு – சனி – புதனின் நட்சத்திர தாரைகள்:

குரு - சனி – புதனின் நட்சத்திர தாரைகள்
குரு – சனி – புதனின் நட்சத்திர தாரைகள்
  • புதனின் ரேவதி தவிர்த்து, குரு-சனி-புதனின் மற்ற எல்லா நட்சத்திரங்களும் ஒன்றிற்கும் மேலான தாரைகள் உள்ளதை மேலே உள்ள அட்டவணையில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
  • சூரியன், சனி மற்றும் ராகுவின் அனைத்து நட்சத்திர தாரைகளும் தன்னளவில் ஒன்றிற்கும் மேலான நட்சத்திர தொகுப்பை (binary) உடையவை.

27 நட்சத்திரங்களை (அதாவது 73 தாரைகள்) பற்றிய தரவுகளில் அவற்றின் இருப்பிடம், பிரகாசம், தூரம், முறையான மற்றும் பக்கவாட்டு இயக்கம் மற்றும் நகரும் வேகம் ஆகியவை மேலும் சில முக்கியமான வானியல் தரவுகள் ஆகும். அவை, இப்போதுள்ள சில சோதிட(ர்களின்) கருத்துக்களுக்கு மற்றும் நம்பிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. அவற்றை பற்றி, இந்த தொடரின் அடுத்த பாகத்தில் பார்க்கலாம். பல முக்கியமான தரவுகளும் அவற்றின் அலசல்களும் அடுத்த பாகத்தில் வெளியாகும். அவற்றின் அடிப்படையில் நீங்கள் அடுத்த முறை வானில் உள்ள நட்சத்திரங்களை பார்க்கும் போது, இதுவரை உங்கள் கண்களுக்கு தெரியாத பல விடயங்கள் உங்களுக்கு தெளிவாக தெரிய வரும் என்று நம்பலாம்! அதுவரை, சற்று காத்திருங்கள். 😊

கட்டுரையின் நீளம் கருதி இந்த மூன்றாம் பாகத்தை இங்கே நிறைவு செய்கிறேன்.

நன்றி!

மென்பொருள் உதவி: ஸ்டெல்லரியம்


புதுப்பித்த நாள்: 27-ஜூலை-2020
இந்த கட்டுரையில், பூசம் நட்சத்திரத்திற்கு உரிய தரவுகள் அளவில் சிறு அளவிலான பிழை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

Feel welcome to share your comments or feedback!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.