T032 நைசர்கிக பலம் & ஸ்தான பலம் (சட்பலம் புள்ளியியல் பார்வையில்)

சட்பலம், ஷட்பலம், ஆறுவித பலம், T032
அவனருளாலே அவன் தாள் வணங்கி!

இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 12. சட்பலம் முதல் பாகம்

நைசர்கிக பலம் & ஸ்தான பலம்: மகரிஷி பராசரர் முறையில் காணக்கிடைக்கும் அடுக்கடுக்கான சோதிடக்கணித பரிமாணங்கள் பலவாகும். அவற்றில் கிரகம், ராசி மற்றும் பாவகம் ஆகிய மூன்றும் மூலப்பரிமாணங்கள் என்று முந்தைய கட்டுரைகள் மூலம் அறிந்தோம். அதனை தொடர்ந்து பலவித தனித்த சோதிட அடிப்படை கூறுகளின் புள்ளியியல் பின்புலத்தை இதுவரை பார்த்தோம். இதன் தொடர்ச்சியாக கிரகம் என்ற பரிமாணத்தை பலவித வகைகளிலும் அலசி அதன் தொகுத்த சாரத்தை பிழிந்து தரும் சட்பலம் / ஷட்பலம் (Shadbala) என்ற தொகுத்த மதிப்பீட்டை இந்தப் பாகத்தில் புள்ளியியல் சார்ந்த பார்வையில் விரிவாக பார்க்கலாம். வாருங்கள்! மற்றுமொரு சோதிட வர்ணஜாலத்தை தரவு அறிவியல் பார்வையில் அறிய முற்படுவோம். 😉

கிரகங்கள் சார்ந்து சட்பலம் மற்றும் விம்ஸோபட்ச பலம் என்னும் இரு தொகுத்த அணிக்கோவை மதிப்பீடுகள் கணக்கிடப்படுகின்றன. அவை இரண்டில் இந்தப்பாகத்தில் சட்பலம் பற்றி விரிவாகப் பார்ப்போம். இந்தக் கட்டுரை சோதிடத்தில் சற்று உயர்நிலை புரிதல் உள்ளவர்களுக்கானது. ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் மிரண்டுவிடாமல் தாக்குப் பிடித்துப் படிக்கவும். நீங்கள் சோதிடத்தில் அடுத்த நிலைக்கு உயர இந்தப் பாகம் உதவும் என்பது திண்ணம்! 😊

ஆர்வமுள்ள அனைவரும் தெரிந்துகொள்ள நிறைய சங்கதிகள் உள்ளன. இது ஒரு நீண்ட கட்டுரை. எனவே, நேரம் எடுத்து மெதுவாகப் படிக்கவும். 😊

இத்தொடரின் முந்தைய பாகங்களை (ராசிகளும் கிரகங்களும் (T024), அயனாம்சம் (T025), லக்கினம் (T026), பாவகம்(T027),  காரகத்துவம் (T028), யோகங்கள், கிரக சேர்க்கை மற்றும் பார்வைகள் (T029), அஸ்தங்கம், வக்கிரம் மற்றும் கிரக யுத்தம் போன்ற கட்டுமானங்கள் (T030), வர்க்கச் சக்கரங்கள் (T031) ) நீங்கள் இதுவரை படிக்கவில்லை என்றால், நேரம் கிடைக்கும்போது அவற்றை படித்து அறியவும். இவற்றை தொடரின் ஆரம்பத்தில் இருந்து தொடர்ச்சியாக படிப்பது இத்தொடரில் விரியும் முழு வடிவத்தையும் பிரம்மாண்டத்தையும் உங்களுக்கு உணர்த்தும்!

இந்த கட்டுரையில் பயன்படுத்தியுள்ள சில கலைச்சொற்களின் ஆங்கில மொழியாக்கம் கீழே உள்ளது.

  • தரவு (Data)
  • மாறி (Variable)
  • கட்டுமானம் / கட்டுமானக் கூறு (Construct)
  • பெறப்பட்ட மாறி (Derived variable)
  • மாறி மாற்றங்கள் (Variable transformations)
  • தொகுத்த மதிப்பெண் (Composite Score)
  • அணிக்கோவை மதிப்பு (Determinant of Matrix)
  • சட்பலம் (Shadbala)
  • நைசர்கிக பலம் (Naisarkiga bala / Natural Strength)
  • ஸ்தான பலம் (Sthana bala / Positional Strength)
  • கால பலம் (Kala bala / Temporal Strength)
  • திக்கு பலம் (Dig bala / Directional Strength)
  • திரிக் பலம் (Drik bala / Aspectual Strength)
  • சேட்டை பலம் (Chesta bala / Motional Strength)

சோதிடக்கட்டுமானம் #10: சட்பலம் அல்லது கிரகங்களின் ஆறுவித பலம்

பராசரர் முறை சோதிடத்தின் மூன்று பரிமாணங்களில் இந்த சட்பலம் என்ற கட்டுமானக்கூறு கிரகம் என்ற பரிமாணம் (dimension) சார்ந்து சொல்லப்படுவது ஆகும். இந்த கட்டுமானம் (construct) ஒரு கிரகம் பெற இயலும் பலவித நிலைகளை தனித்துவமான மாறிகளாக (unique variables) அடையாளம் கண்டு, அவற்றை ஒரு குறிப்பிட்ட உப மாறிகளின் தொகுப்பாக (dimension) ஆறு தலைப்புகளின் கீழ் தொகுத்து உருவாக்கப்பட்ட ஒரு கூட்டு மதிப்பெண் (composite score) ஆகும். இந்த அணிக்கோவையின் மொத்த மதிப்பு ரூபம் அல்லது ரூபாய் என்ற ஒற்றை மாறியாகவும் (index value) எளிமை கருதி கணக்கிடப்படலாம். ஒரு மாதிரி சட்பல அட்டவணை உங்களுக்காக கீழே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சட்பலம், மாதிரி சட்பல அட்டவணை
மாதிரி சட்பல அட்டவணை

சட்பலம் / ஷட்பல நிர்ணயத்தின் பின்புலம்

பராசரர் முறையின் முப்பரிமாணங்களில் அதிகம் மாற்றங்களுக்கு உள்ளாகக் கூடிய மாறிகள் கிரகங்கள் மற்றும் பாவக பரிமாணங்கள் சார்ந்து அமைகின்றன. இவை இரண்டிலும் கிரகங்கள் சார்ந்த மாற்றங்கள் (variability) பல நுண்ணிய வகைகளாக விளக்கப்பட முடியும் என்பதால் அந்தப் பரிமாணம் அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. சட்பலம் இல்லாதபோதுகூட கிரகம் சார்ந்த பல தனித்த மாறிகளை நாம் தனிப்பட்ட முறையிலேயே பலன் உரைக்க பயன்படுத்துகிறோம் (உதாரணமாக – கிரக உச்சம், திக் பலம் போன்றவை).

சட்பலம் என்னும் ஆறுவித பலங்களின் தொகுப்பு என்பது அடுத்த படிநிலையாக தொகுப்பாக கிரகங்கள் பெற்ற மொத்த பலத்தை மதிப்பிட பயன்படுத்தப்படுகின்றது. இது முக்கியமாக ஒரு கிரகம் தசை-புக்தி நாதனாக வரும்போது, அந்தக் காலங்கள் எந்த அளவு நன்மைகளை தரும் நிலையில் உள்ளது என்று அறிவதற்காக பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கிரகம் அது பெறவேண்டிய குறைந்தபட்ச சட்பல மதிப்பை பெற்றுவிட்டால் அது நன்மைகளை தரும் என்றும் அது அந்த அளவு பலத்தை பெறவில்லை என்றால் தீயபலன்களை செய்துவிடும் என்பதன் அடிப்படையில் பலன்கள் சொல்லப்படுகின்றன. மேலும் மொத்த ரூப மதிப்பின் அடிப்படையில் எந்த கிரகங்களின் கை(கள்) மொத்த விளைவுகளில் ஓங்கி இருக்கும் என்பதையும் இந்த சட்பல மதிப்பின் மூலம் அறியலாம்.

பிற சில சோதிடக்கூறுகளைப் போல, சட்பலத்தை பலன்கள் சொல்வதற்கு எப்படி பிரயோகம் செய்வது என்பது காலம், தேசம், மொழி மற்றும் சொல்லிக்கொடுக்கும் குருநாதர் பொறுத்து மாறுபடுகிறது.

உதாரணமாக, பேராசிரியர் K. ஜெய சேகர் அவர்கள் சட்பல கணக்கீடுகளை ஒட்டி ஒரு விரிவான பலன்கூறும் முறையையே (System Jaya) வடிவமைத்துள்ளார். அவரது முறையில் ஒருவர் சுமந்துவரும் மூன்று வகை கர்மாக்களை (சஞ்சித, ஆகாமிய மற்றும் பிராரப்த கர்மாக்கள்) அளவீடு மற்றும் ஒப்பீடு செய்ய சட்பல முறையை அவர் பயன்படுத்துகிறார். ஆர்வமும் நேரமும் உள்ளவர்கள் அவரது முறை பற்றி மேலும் தேடிப்படித்து அறியவும். இன்று சந்தையில் உள்ள பல சோதிட மென்பொருட்களிலும் அவரது முறை பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது என்பது கூடுதல் தகவல்! 😊

எனக்கு அந்த முறையின் அடிப்படை கட்டுமானத்தில் பல  கேள்விகள் உள்ளன. அவற்றை பின்னால் பார்ப்போம். 😊

ஒரு கிரகம் பெறக்கூடிய பலவித நிலைகளை தனித்த மாறிகளாக கருதுவதாலும், அவற்றின் தொகுத்த மதிப்பை (composite score) குறைந்தபட்ச மதிப்பீட்டின் அடிப்படையில் ஒப்பீடு செய்து, பலத்தின் அடிப்படையில் தரவரிசைபடுத்த (rank order) பயன்படுத்துவதாலும், இது ஒரு மேம்பட்ட புள்ளியியல் கட்டுமானம் ஆகும்.

பல இடங்களில் இந்தக் கணக்கீடு அதன் முழு வீச்சில் பயன்படுத்தப்படுவது இல்லை என்பது என் அபிப்ராயம். சிக்கலான நேரம் பிடிக்கும் கணித சமன்பாடுகளும், இதன் தனித்த கூறுகளை பலன் சொல்ல எப்படி பிரயோகம் செய்வது என்பது பற்றிய தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாமல் இருத்தலும், சோதிடர்கள் குறைவான நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு பலன் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பதும் அதற்கு முக்கிய காரணம் ஆகும். தற்போதுள்ள சோதிட மென்பொருட்கள் இந்தக் கணிதத்தை இலகுவாக்கியுள்ளன.

பிற்காலத்தில் புள்ளியியல் பின்புலத்தோடு இயந்திர வழிக்கற்றல் சார்ந்த பலன் சொல்லும் உதவியாளன் உருவாக்கப்படும் போது, இந்த தொகுத்த சட்பலத்தின் பல்வேறு பரிமாணங்களும் அவற்றின் கூறுகளின் முக்கியத்துவமும் அவை எந்தெந்தப் பலன்களோடு அதிகம் தொடர்புபடுகின்றன என்றும் நமக்கு இன்னும் தெளிவாக விளங்கக்கூடும்.

இந்த கட்டுரையில் நாம் சட்பலத்தை புள்ளியியல் ரீதியான பார்வையில் அணுகுவோம்.

சட்பல கட்டுமானத்தின் கூறுகள்

சட்பலம் (சட் = ஆறு (6)) என்பது ஆறுவிதமான பலங்களை குறிப்பிட்டாலும் இந்த கணக்கீட்டின் பின்னே மொத்தம் 18 வகையான தனித்த கணக்கீடுகள் பொதிந்துள்ளன. அவற்றை கீழே உள்ள படத்தில் காட்சிப்படுத்தி உள்ளேன். ஒவ்வொரு கூறின் இறுதியிலும் அவற்றின் உப கூறுகளின் எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஸ்தான பலம் 5 உப கூறுகளால் ஆனது.

சட்பலம், சட்பல கூறுகள்
சட்பல கூறுகள்

இந்த கூறுகளை எவ்வாறு கணக்கீடு செய்வது என்பது பற்றி பராசர பிருஹத் ஹோரா சாஸ்திரா (BPHS, சாகர் பதிப்பகம், புதுடெல்லி),  பாகம் 1, அத்தியாயம் 29, பக்கம் 385 முதல் 414 வரை விளக்கப்பட்டுள்ளது. காளிதாசரின் உத்தரகாலாமிர்தத்திலும் இந்தக் கணக்கீட்டு முறைகள் சில காணக்கிடைக்கும். இந்தத் தொடரின் நோக்கம் புள்ளியியல் பார்வையிலான அலசல் மட்டுமே என்பதால் அவற்றின் கணிதத்தை நான் இங்கே அதிகம் விளக்கப்போவது இல்லை. ஆனால், யாரும் சொல்லாத / எழுதாத அதன் தனித்துவங்களை மட்டும் புள்ளியியல் பார்வையில் குறிப்பிட்டு காட்ட முயல்வேன். புதிதாக சட்பல கணிதம் பற்றி படிப்பவர்கள், நல்ல அடிப்படை நூல்கள் (உதாரணமாக – பராசர பிருஹத் ஹோரா சாஸ்திரா (BPHS, சாகர் பதிப்பகம், புதுடெல்லி)) மூலம் அறியவும்.

கிரகம் பெற்ற நிலைகளை, பிற அடிப்படை சோதிட கட்டுமான கூறுகளோடு தொடர்புபடுத்தி இந்த கூறுகள் தருவிக்கப்படுகின்றன என்பதை ஞாபகத்தில் இருத்தவும். உதாரணமாக ஆண் – பெண் ராசிகள், லக்கினம் சார்ந்து மாறும் கேந்திரங்கள், கிரக நட்பு-பகை உறவுகள் போன்றவை இந்த சட்பல கூறுகளின் பின்னே நிற்கின்றன.

சட்பல கணக்கீட்டில் ராகு-கேதுக்கள்

சட்பல கணக்கீட்டில் ராகு-கேதுக்கள் சேர்க்கப்படுவது இல்லை. இந்த இரு கணித புள்ளிகளும் உண்மையில் கிரகங்கள் இல்லை என்பதை நாம் அறிவோம். பிற கிரகங்களுக்கு சொல்லப்படும் ஒளி, கதி மாறும் நிலைகள் மற்றும் ஆட்சி வீடுகள் போன்றவை இவற்றுக்கு வரையறை செய்யப்படவில்லை என்ற காரணத்தால் இவை சட்பல கணக்கில் சேர்க்கப்படவில்லை.

இனி இந்த ஆறு கூறுகளையும் புள்ளியியல் ரீதியாக ஒவ்வொன்றாக பார்ப்போம். இவற்றில் வானியல் சிறப்பு உள்ள இடங்களையும் தேவைப்படும் இடங்களில் தொட்டுக் காட்டுவேன். 😊

10.1. நைசர்கிக பலம் (இயல்பான வலிமை) (1 கூறு – 10% முக்கியத்துவம்)

கிரகங்கள் பெற்ற இயல்பான வலிமை என்பது ஜாதகம் பொறுத்து மாறாத ஒரு நிலையான கணக்கீட்டு அளவாக வரையறை செய்யப்பட்டுள்ளது. அதாவது ஜாதகர்கள் எல்லோருக்கும் இந்த மதிப்பு ஒரே மாதிரி இருக்கும். ஜோதிட கட்டுமானத்தில் கிரகங்களின் ஒளி அளவுகளுக்கு நேரடியான தொடர்பு உண்டு என்பதை உணர்த்தும் ஒருசில இடங்களில் இந்த இயல்பான பலம் என்ற கணக்கீட்டு அளவுகோல் முதன்மை பெறுகிறது.

வான்வெளியில் உள்ள ஒளிரும் பொருட்களின் வெளிப்படையான பிரகாசத்தின் அளவு (Apparent Visual Magnitude) என்ற மதிப்பீட்டின் அடிப்படையில் பார்த்தால் நம்மால் +6.5 என்ற மடக்கை அளவுவரை பிரகாசம் கொண்ட வான்பொருட்களை வெற்றுக் கண்களால் பார்க்க முடியும். அதிக எதிர்மறை மடக்கை (negative log) மதிப்புகள் அதிக பிரகாசத்தை குறிக்கும். ஒரு முந்தைய கட்டுரையில் (T019 / E020) இது பற்றி விரிவாக எழுதி உள்ளேன்.

கீழே உள்ளே அட்டவணையில் கிரகம் சார்ந்த சில வானியல் அளவீடுகள் தரப்பட்டுள்ளன. இயல்பான பலத்தின் கிரக வரிசைப்படி அட்டவணை உள்ளது. கூடுதலாக கிரகத்தின் விட்டம், பூமியில் இருந்து அதன் சராசரி தூரம், அவற்றின் வெளிப்படையான பிரகாசத்தின் அளவு, அவற்றில் இருந்து ஒளி பூமியை வந்தடைய ஆகும் காலம், சூரியனை ஒப்பிடும்போது ஒரு கிரகம் தரும் ஒளி அளவு போன்றவை கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அட்டவணையை கூர்ந்து நோக்கினால், கிரகங்களின் இயல்பான பலம் என்ற வரிசை அமைப்பு கிரகங்களின் வெளிப்படையான பிரகாசத்தின் சராசரி அளவு அடிப்படையில் அமைந்து இருப்பதை பார்க்கலாம்.

இந்த ஒளி அளவுடன் கிரக விட்டம் மற்றும் தூரம் என்ற விகிதத்தையும் சேர்த்துப் பார்த்தால், நமது ஞானிகள் எந்த அளவு பூமியில் இருந்து பார்த்தால் தெரியும் ஒளியின் அளவை கணக்கிட்டு கிரகங்களை வரிசைப்படுத்தி இருக்கிறார்கள் என்பது புரியும்.

நைசர்கிக பலம், இயல்பான வலிமை
நைசர்கிக பலம் (இயல்பான வலிமை)

இந்த பிரகாச அளவு எதிர் மடக்கையாக (negative logarithm) அளக்கப்படுவதால் சூரியன் மற்றும் சந்திரனுக்கு இடையே எண்ணளவில் வித்தியாசம் -14 என்று இருந்தபோதிலும், சூரியன் சந்திரனைவிட 398,107 மடங்கு பிரகாசம் நிறைந்தது ஆகும்! எனவே, இந்த எண்ணை சாதாரணமாக மதிப்பிட்டுவிட வேண்டாம். 😊

இவற்றில் செவ்வாய் மற்றும் சனி கிரகங்களுக்கான அளவீடுகள் மட்டும் சராசரி மதிப்பின் வரிசையில் பொருந்தி வரவில்லை. இந்த அட்டவணையில் கிரக வரிசை சராசரி வெளிப்படையான பிரகாசத்தின் அளவு சனி மற்றும் செவ்வாய்க்கு மாறுபட்ட போதிலும் (அட்டவணையை உற்று நோக்கினால் இவை இரண்டின் வரிசை மாறி வருவதை கவனிக்கலாம்), அதிகபட்ச பிரகாச அளவு (பச்சை வண்ண எண்கள்) செவ்வாய்க்கே இருப்பதால் அது வரிசையில் சனிக்கு முன்னர் வைக்கப்பட்டு உள்ளது.

அதாவது, செவ்வாயின் அதிகபட்ச பிரகாச அளவு சனியின் அதிகபட்ச அளவைவிட பலமடங்கு அதிகம். செவ்வாய் அதிகப்பிரகாசமாக இருக்கும் காலமும் சனியை விட அதிகம் ஆகும். எனவே, சனியை பின்னுக்குத் தள்ளி செவ்வாய் இந்த நைசர்கிக பல வரிசையில் முன்னிலை பெறுகிறது.

புதன் அளவில் சிறியதாக இருந்த போதிலும் தனது சராசரி பிரகாசத்தின் காரணமாக செவ்வாய், சனியைவிட வரிசை அமைப்பில் முன்னிலை பெறுகின்றது.

சூரியனுக்கு ஒரு ரூபம் (1 ரூபா = 60 காலம் அல்லது விரூபா) என்பதை  அடிப்படையாக  கொண்டு பிற கிரகங்கள் பெரும் மதிப்புகள் 1/7 இன் மடங்காக வரையறை செய்யப்பட்டுள்ளன. சூரியன் (7/7*60= 60 காலம் அல்லது 100%), சந்திரன் (6/7*60 = 51.42 காலம் அல்லது 85.7%), சுக்கிரன் (5/7 ரூபா – 71.4%), வியாழன் (4/7 ரூபா அல்லது 57.1%), புதன் (3/7 ரூபா அல்லது 42.9%), செவ்வாய் (2/7 ரூபா அல்லது 28.6%) மற்றும் சனி (1/7 ரூபா அல்லது 14.3%) என்று இந்த இயல்பான பலத்தின் வரிசைப்படுத்துதல் அமைந்துள்ளது. இங்கே வெளிப்படையான பிரகாசத்தின் அளவு என்பதையும் தாண்டி, கிரக வரிசை (rank order) எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பதே ஞானிகளின் வழிகாட்டுதலாக இருந்துள்ளது.

இந்த இயல்பான வலு என்ற மாறி (variable) கிரகத்தின் பிரகாசம் (luminosity) சார்ந்து அமைந்திருப்பது அதன் வானியல் சிறப்பு ஆகும். பிற சட்பல அளவுகளில் இரு கிரகங்கள் சம அளவில் அமையும்போது அவற்றில் வலுவான கிரகத்தை தீர்மானிக்க நைசர்கிக பலம் பயன்படுத்தப்படலாம் என்ற வழிகாட்டுதல் தரப்பட்டுள்ளது.

10.2. ஸ்தான பலம் (இட வலிமை) (5 கூறுகள் – 39.7% முக்கியத்துவம்)

கிரகம் பெரும் ஸ்தான பலம் ஐந்து உப கூறுகளாக கணக்கிடப்படுகிறது. இந்த ஐந்தும் சேர்ந்து கிரகம் பெறவேண்டிய குறைந்தபட்ச பலத்தில் கிட்டத்தட்ட 40% முக்கியத்துவம் தரப்பட்டுள்ளன. சட்பல தொகுப்பில் இதுவே பிரதானமான கூறாகும். பராசரர் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம், ஒருவர் பலன் சொல்லும்போது இந்தக் கூறுகளை சோதிடர் அதிகம் கவனிக்கவேண்டும் என்பது புலனாகிறது.

10.2.1 உச்சபலம்

பராசரர் முறை சோதிடத்தில் கிரகங்களுக்கு தனித்தனியாக உச்ச வீடுகள் மற்றும் நீச்ச வீடுகள் வரையறை செய்யப்பட்ட போதிலும், சட்பல கணக்கீட்டில் ஒரு கிரகம் தனது அதிநீச்ச புள்ளியில் இருந்து தனது அதியுச்ச புள்ளியை நோக்கி கடந்துள்ள தூரத்தின் அடிப்படையில் அதன் உச்சபலம் எண்ணாக (ரூபம் அல்லது காலம்) கணக்கிடப்படுகிறது.

அதியுச்ச புள்ளியில் முழு வலுவும் (60 ரூபம்) அதிநீச்ச புள்ளியில் பூச்சிய வலுவும் சுட்டப்படுகின்றன. ஆரோகணம் (உச்சபாகை நோக்கிய நகர்வு) மற்றும் அவரோகண கதிகளால் (நீச்சபாகை நோக்கிய நகர்வு) இந்த மாறி பெரும் மதிப்பு அதிகமாவதும் அல்லது குறைந்து வருவதும் சுட்டப்படுகிறது.

சோதிடர்கள் தனித்து பலன் சொல்லும்போது, ஒரு கிரகம் ராசியில் உச்ச வீட்டில் இருந்தாலே முழு பலம் என்று சொல்லிவருகிறார்கள். அது தோராயமானது என்றாலும் தவறில்லை. உச்ச வீட்டுக்கு அருகில் உள்ள கிரகமும் கணிசமான பலம் பெற்றுள்ளது என்பது இந்த பல கணக்கீட்டு முறை மூலம் நமக்கு உணர்த்தப்படுகிறது.

கணக்கில் உள்ள அனைத்து கிரகங்களும் (7 மட்டும்) தங்களது அதி உச்சப் பாகையில் அமைந்தால் (அதிகபட்சம் 6 மட்டுமே அமையக்கூடும் என்பது வானியல் உண்மை – சூரியனும் புதனும் ஒரே நேரம் உச்சமடைய முடியாது!), இந்த மாறியின் மொத்த மதிப்பு அதிகபட்சம் 7 x 60 = 480  விரூபா ஆக வரும்.

தனிப்பட்ட முறையில் ஒரு கிரகம் உச்சப் புள்ளியில் அமையும்போது அது 60 விரூபா பலம் பெரும். இது சூரியனைத் தவிர்த்த பிற கிரகங்களுக்கு அவை பெறக்கூடிய இயல்பான பலத்தை விட அதிக மதிப்பு ஆகும். இதன் மூலம் கிரக உச்சம், இயல்பான பலத்தை விட ஒரு பலமான மாறி என்பது குறிப்பாக பெறப்பட்டது.

10.2.2 சப்தவர்க்க பலம்

இட பலத்தின் இரண்டாம் கூறாகிய இந்த சப்தவர்க மதிப்பீடு, குறிப்பிட்ட கிரகம் ராசி (D-1), ஹோரை (D-2), திரேக்காணம் (D-3), சப்தமாம்சம் (D-7), நவாம்சம் (D-9), துவாதசாம்சம் (D-12) மற்றும் திரிம்சாம்சம் (D-30) ஆகிய 7 வர்க்கச் சக்கரங்களில், எத்தனை ராசிகளில் தனது மூலத்திரிகோண வீடு, ஆட்சி வீடு, அதிநட்பு வீடுகள், நட்பு வீடுகள், சம வீடுகள், பகை வீடுகள் மற்றும் அதீத பகை வீடுகளில் உள்ளது என்பதை பொறுத்து முறையே 45, 30, 20, 15, 10, 4 மற்றும் 2 விரூபா என்ற அளவில் கணக்கிடப்பட்டு, அதன் மொத்த கூட்டுத்தொகையாக பயன்படுத்தப்படுகிறது.

இங்கே முக்கியமாக கவனிக்கவேண்டியது என்னவெனில் மொத்தமுள்ள 16 வர்க்கச் சக்கரங்களில் 7 மட்டுமே அதிமுக்கியமாக மகரிஷி பராசரரால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. கீழே உள்ள அட்டவணையில் அவற்றின் புள்ளியியல் கட்டுமானக்கூறுகளை நினைவூட்டலுக்காக கொடுத்துள்ளேன்.

சப்தவர்க்க பலம், சப்தவர்க்கம்
சப்தவர்க்கம் உள்ளடக்கம்

இந்த அட்டவணையை உற்றுக் கவனியுங்கள். உங்களுக்கு என்னவெல்லாம் புலப்படுகின்றன?

ஆழ்ந்து நோக்கினால், இதில் எல்லா சக்கரங்களும் உறவு சார்ந்து பலன் சொல்லும் சக்கரங்களாக அமைந்து இருப்பதை நீங்கள் அறியலாம். அதிர்ஷ்டம் (D-4), தொழில் (D-10), மகிழ்ச்சி (D-16), படிப்பு (D-24) மற்றும் மத நம்பிக்கைகளை (D-45) சொல்லும் வர்க்கச் சக்கரங்கள் இந்த கிரக பல கணக்கீட்டில் சேர்க்கப்படவில்லை என்பதில் இருந்து அவற்றுக்கு ஒருவர் கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்தை பராசரர் சூசகமாக உணர்த்தி இருப்பது தெரியும்! 😊

புள்ளியியல் ரீதியாகப்பார்த்தால், ராசிகளின் இருவகை கூறாகிய ஒற்றை, இரட்டை என்னும் வரையறை, சரம், திரம், உபயம் என்ற மூவகை தொகுப்பு மற்றும் நால்வகை பூதங்களை குறிப்பிடும் 1, 5, 9 வீடுகள் (திரிகோணம்) ஆகிய 3 கட்டுமானங்களால் வடிவமைக்கப்பட்ட வர்க்கச் சக்கரங்களால் இந்த தொகுப்பு வரையறை செய்யப்பட்டுள்ளது. மேலும் நான்காவதாக சூரிய சந்திரர்களை வைத்து செய்யப்பட்ட ஓரை (D-2) சக்கரமும், பிற 5 கிரகங்களால் வரையறை செய்யப்படும் திரிம்சாம்ச (D-30) வர்க்கச் சக்கர கட்டமைப்பும் ஒரு புதிரில் கிரகரீதியாக ஒன்றோடொன்று விட்டுப்போன தகவல்களை முழுதுமாக நிரப்புகின்றன (இதனை மீண்டும் மீண்டும் படித்து புரிந்துகொள்ளுங்கள்). இந்த 4 கட்டுமானக் கூறுகளும் சப்தவர்க பலம் மூலம் விளக்கப்படுகின்றன.

இந்த கணக்கீட்டை உற்றுநோக்கினால் இந்த சப்தவர்க்க பலமே மொத்தமுள்ள 18 கூறுகளில் அதிகபட்ச மதிப்பை பெறக்கூடிய கூறாக வடிவமைக்கப்பட்டுள்ளது புரியவரும். உதாரணமாக, ஒருவருக்கு இந்த 7 வர்க்கக் கட்டங்களிலும் ஒரு கிரகம் தனது மூலத்திரிகோண ராசியில் அமைந்தால் அது மட்டுமே 7 x 45 = 315 விரூபாவை தந்துவிடும்! ஆனால் அப்படி அமைவது எல்லா கிரகங்களுக்கும் சாத்தியம் இல்லை. இந்த கூற்றை நன்றாக உள்வாங்கிக்கொள்ளவும். ஏனெனில் பின்னால் நாம் கிரகம் பெறவேண்டிய குறைந்த பட்ச ரூபம் மதிப்பை பற்றி விளங்க இருக்கிறோம். இதில் 7 சக்கரங்களிலும் முழுப்பலம் பெற்றால், இந்த ஒரு பலமே பெரும்பாலான கிரகங்களை கரை சேர்த்துவிடும் (meets total minimum cut-off score)!

அதிகபட்சம் 45 விரூபா மட்டுமே (மூலதிரிகோணம் பெற்றால்) ஒரு கிரகம் பெரும் அதிகபட்ச அளவாக சொல்லப்பட்டுள்ளதால், இந்த மூலதிரிகோணம் என்ற மாறி தனிப்பட்ட முறையில் உச்சம் என்ற மாறியை விட புள்ளியியல் ரீதியாக சற்று வலுகுறைந்த மாறி என்பது இங்கே குறிப்பாக பெறப்பட வேண்டும். இந்த விளக்கத்தின் மூலம் அடுத்த முறை உச்சமா மூலத்திரிகோணமா என்று கேள்வி வரும்போது, எது பலம் வாய்ந்தது என்ற சந்தேகம் உங்களுக்கு வராது என்று நம்புகிறேன். 😊

10.2.3 ஓஜ-யுக்ம (ஆண்-பெண்) ராசி-அம்ச பலம்

இந்திய சோதிடத்தில் ஒற்றைப்படை ராசிகள் (மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு மற்றும் கும்பம்) ஆண் ராசிகளென்றும்,  இரட்டைப்படை ராசிகள் (மீதமுள்ள 6 ராசிகள்) பெண் ராசிகள் என்றும் பிரிக்கப்பட்டுள்ளன என்பதை அறிவோம்.

ஆண்-பெண் ராசி-அம்ச பலம்
ஆண்-பெண் ராசி-அம்ச பலம்

மேலும் கிரகங்களையும் ஆண், பெண், இரட்டைத்தன்மை உடையவை என பிரித்து உள்ளனர் என்பதையும் அறிவோம். இந்த இடத்தில் சந்திரனும் சுக்கிரனும் பெண் கிரகங்கள் என்றும் மீதமுள்ள 5 கிரகங்களும் (சூரியன், குரு, செவ்வாய், சனி மற்றும் புதன்) ஆண் கிரகங்கள் என்றும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

ஒரு ஆண் கிரகமோ அல்லது பெண் கிரகமோ ராசி மற்றும் நவாம்சம் ஆகிய இரண்டு வர்க்கச் சக்கரங்களிலும் தங்கள் பாலினத்தை சேர்ந்த ராசிகளில் இடம் பிடித்தால் அது ஒரு கூடுதல் பலமாக கருதப்படுகிறது. அப்படி இருந்தால் அது 15 விரூபா பலம் பெரும். அப்படியில்லை எனில் அந்தக் கிரகத்துக்கான, இந்த பல மதிப்பு பூச்சியம் ஆகும்.

பாலினம் சார்ந்த பரிமாண அடிப்படையில் பெறப்படும் இந்த பலத்தின் அதிகபட்ச மதிப்பு 15 விரூபா என்பதில் இருந்து இது ஒரு வலு குறைந்த மாறி என்பது குறிப்பாக உணர்த்தப்படுகிறது. ஒரு கிரகம் குறிப்பிட்ட நட்சத்திர பாதங்களில் அமரும்போதே அது நவாம்சத்தில் குறிப்பிட்ட பாலின ராசிகளில் இடம் பிடிக்க முடியும். புள்ளியியல் ரீதியாக அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே இருப்பதால், இந்த மாறிக்கு குறைந்த முக்கியத்துவமே கொடுக்கப்பட்டுள்ளது எனலாம்.

10.2.4 கேந்திர பலம்

இந்தக் கூறு ராசி கட்டத்தின் லக்கினம் விழுந்த ராசியின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது ஆகும். அதன்படி ஒரு கிரகம் லக்கினத்துக்கு 1,4,7,10 என்று சொல்லப்படும் கேந்திர ராசிகளில் அமையும்போது அது 60 விரூபா பலம் பெறுகிறது. அதற்கடுத்த ராசிகளில் (2,5,8,11 ராசிகள்) கிரகம் இருந்தால் அவை 30 விரூபா பலம் பெறுகின்றன. மூன்றாவதாக விட்டுப்போன அதற்கும் அடுத்த ராசிகளில் (3,6,9,12) கிரகம் நின்றால் அதற்கான பல மதிப்பு 15 விரூபா என கணக்கிடப்படும். இந்த பலம் பெற கணித ரீதியாக குறைந்த கட்டுப்பாடுகளே (லக்கினம் மட்டுமே) உள்ளதால்,  இந்த பலம் எளிதில் பெறப்படலாம். கேந்திரங்கள் ஜாதகத்தின் தூண்களாக சொல்லப்படுவது இந்தப் பலத்தினால் தான்!

இந்த கூற்றின்படி, ஒரு கிரகம் எங்கு இருந்தாலும் ஓரளவு பலமே! ஒருவருக்கு இதில் உள்ள 7 கிரகங்களும் கேந்திரத்தில் நின்றுவிட்டால் அது மட்டுமே 7 x 60 = 420 விரூபா பலத்தை தந்துவிடும். எல்லா கிரகங்களும் மூன்றாம் நிலை பலம் பெற்றாலும் கூட இந்த கூறின் மொத்த பலம் 7 x 15 = 105 விரூபா வந்துவிடும். எனவே, புள்ளியியல் ரீதியாக இது மிகவும் முக்கியம் வாய்ந்த கூறு எனலாம். ஆனால் நடைமுறையில் பலன் சொல்லும்போது நாம் கேந்திரம் தவிர்த்த பிற வீடுகளை கவனிக்கத் தவறிவிடுகிறோம்.

கேந்திர வீடுகள் ஒருவர் பிறருடன் இணைந்து பணியாற்றும் இயல்பை சுட்டுகின்றன. எல்லா கேந்திரங்களிலும் ஏதாவது கிரகம் இருப்பவர்களிடம் பழகிப் பாருங்கள். ஒரு விடயத்தில் அவர்களின் புரிதலே வேறு உயரத்தில் இருப்பதை உணர்வீர்கள்! (எனக்கும் கூட உள்ளது மைலார்ட்😉)

10.2.5 திரேக்காண பலம்

கிரகங்களின் பாலினம் மற்றும் அவை ராசிக்கட்டத்தில் பெரும் திரேக்காணம் (ஒரு ராசியை மூன்றாக கூறிட்டது ஒரு திரேக்காணம் = 10 பாகைகள்) பொறுத்து கணக்கிடப்படும் இந்த பலத்தின் அதிகபட்ச மதிப்பு 15 விரூபா ஆகும்.

ஒரு ராசியின் மூன்று திரேக்காணங்களும் ஆண், இரட்டைத்தன்மை, பெண் என முறையே வகைப்படுத்தப்பட்டு உள்ளன. அதுபோல சூரியன், செவ்வாய் மற்றும் குரு ஆண் கிரகங்கள் என்றும், சுக்கிரனும் சந்திரனும் பெண் கிரகங்கள் என்றும் புதனும் சனியும் இரட்டைத்தன்மை உடையவை என்றும் இந்தக் கணக்கீட்டில் கருதப்படுகின்றன.

இந்த இரு பரிமாணங்களும் (அதாவது திரேக்காணம் x  கிரக பாலினம்) ஒன்றாக பொருந்திப் போனால், அது தனித்த பலமாக 15 விரூபா அளவு என கணக்கிடப்படுகிறது. உதாரணமாக, ஒருவருக்கு சுக்கிரன் ராசி கட்டத்தில் ஏதாவது ஒரு ராசியில் 20-30 பாகைகளில் இருந்தால் சுக்கிரன் பெரும் திரேக்காண பலம் 15 விரூபா ஆகும். சுக்கிரன் வேறு பாகைகளில் (0°-20°) எங்கு இருந்தாலும் அது பெரும் திரேக்காண பலம் பூச்சியம் (0) விரூபா ஆகும்.

புள்ளியியல் ரீதியாக இதுவும் ஓஜ-யுக்ம ராசி-அம்ச பலத்தை போல ஒரு பலம் குறைந்த மாறி ஆகும்.

கட்டுரையின் நீளம் கருதி இந்த பாகத்தை இங்கே நிறைவு செய்கிறேன். மீதமுள்ள சட்பல கூறுகளை அடுத்த பாகத்தில் அலசுவோம். இதுவரை இந்தப் பாகத்தில் பார்த்தவற்றின் சாரத்தை இப்போது பார்ப்போம்.

கட்டுரை சுருக்கம்

சட்பலம் என்னும் தொகுப்பு என்பது கிரகங்கள் பெற்ற மொத்த பலத்தை மதிப்பிட பயன்படுத்தப்படுகின்றது. ஒரு கிரகம் தசை-புக்தி நாதனாக வரும்போது, அந்தக் கிரகம் எந்த அளவு நன்மைகளை தரும் நிலையில் உள்ளது என்று அறிவதற்காக சட்பல மதிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. சட்பலம் என்பது ஒரு தொகுத்த மதிப்பெண் என்ற ரீதியில் பார்க்கப்படலாம். இதன் குறைந்த பட்ச அளவுகளை ஒரு கிரகம் பெறும்போது அது நன்மைகளை வழங்கும் தகுதியை பெறுகிறது எனலாம். புள்ளியியல் ரீதியாக இது போன்ற ஒரு தொகுத்த மதிப்பு பலவித மாறிகளின் விளைவாக அமைவதால் பலன் சொல்வதற்கு இது தனித்த மாறிகளைவிட சிறப்பான மாறியாக கருதப்படவேண்டும்.

சட்பல கூறுகளில் முதலாவதான இயல்பான (நைசர்கிக) பலம், வானியல் சார்ந்து கிரகம் வெளியிடும் ஒளி அளவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒளி அளவை காட்டிலும் அதன் அடிப்படையில் அமைந்த கிரக வரிசை முக்கியத்துவம் பெறுகிறது.

இரண்டாவது கூறாகிய இட பலம் 5 உப கூறுகளால் ஆன மிகவும் முக்கியம் வாய்ந்த தொகுப்பு எண் ஆகும். அதன் கூறுகளில் சப்தவர்க பலமும், கேந்திராதி பலமும் முக்கியமானவை எனலாம். அதனை அடுத்து உச்ச பலமும், ஓஜ -யுக்ம ராசி-அம்ச பலமும் திரேக்காண பலமும் பல வரிசைப்படி அமைகின்றன. இவை ஒவ்வொன்றும் கிரகம் இருக்கும் இடத்தினை பொறுத்து அமைகின்றன.

தனிப்பட்ட கிரக இட அமைவுகளையும் தாண்டி, சோதிடர்கள் மேம்போக்காக கடந்து செல்லும் சில இடங்களும் இந்தக் கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டன.

இந்தப் பாகம் உங்களுக்கு சட்பலம் பற்றி ஒரு மேம்பட்ட புள்ளியியல் ரீதியான புரிதலை அளித்திருக்கும் என்று நம்புகிறேன். சட்பலத்தின் பிற 4 கூறுகளையும்,  தற்போது நடைமுறையில் உள்ள சட்பல கணக்கீடுகளில் மற்றும் புரிதல்களில் நான் பார்க்கும் கணித பிழைகளையும் பற்றி இதன் அடுத்த பாகத்தில் விரிவாக எழுதுவேன்.

வளரும்! …

பின்னூட்டங்களும் பகிர்வுகளும் வரவேற்கப்படுகின்றன! 😊

Feel welcome to share your comments or feedback!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This Post Has 4 Comments