இன்றைக்கு நாம் பார்க்க இருக்கும் பகுதி சோதிடத்தில் விதிகள் – நிறைவுப்பகுதி. நீங்கள் எந்த ஒரு ஜோதிட முறையை பின்பற்றினாலும், இந்த பதிவு உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். இந்தக் கூற்றுகள் பொதுவில் சொல்லப்படுகின்றன. இந்த கட்டுரையில் சொல்லப்படுபவை யாவுமே ஒரு ஜோதிடருக்கு மிகவும் அடிப்படையான, குறைந்தபட்ச தேவைகள் ஆகும். இவை சோதிடத்தை குறைவாக மதிப்பிடவோ அல்லது ஜோதிடரை குறை கூறுவதற்காகவோ சொல்லப்பட்டது அல்ல.
சோதிடத்தின் இறுதியான நோக்கமே, பலன்களை யாருக்கு சொல்கிறோமோ அது அவருக்கு பயன்பட வேண்டும் என்பதே ஆகும். சொல்லும் பலன்கள் சோதிடர் உடைய தன்னலம் கலந்ததாக இருக்கக் கூடாது. ஒரு மருத்துவர் எப்படி தன்னை நாடி வந்துள்ள நோயாளி குணமடைய வேண்டும் என்று தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்கிறாரோ அது போல ஒவ்வொரு சோதிடரும் தன்னை நாடி வந்துள்ள வாடிக்கையாளருடைய பிரச்சினைகளை அறிந்து ஜோதிட முறையில் ஆலோசனை சொல்வது அவரது அடிப்படையான தார்மீக கடமை ஆகும்.
சிகிச்சை வெற்றி நோயாளி மரணம் அடைந்தார் என்பதை விடவும் என் சிகிச்சை தோற்றது ஆனால் நோயாளி நலமாக இருக்கிறார் என்பது மேலானது. பலன் சொல்வதில் ஜாதகருடைய நலனே முக்கியம். ஜோதிடர்கள் உடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், நம்பிக்கைகள் மற்றும் இறுமாப்புகள், சோதிடம் பார்க்க வந்தவரின் தேவையை பின்னுக்குத் தள்ளி விடக்கூடாது.
இந்தப் பதிவில் சோதிடம் ஜோதிடர்களுக்கு பயன்படும் காலத்தையும், ஜாதகர்களுக்கு பயன்படும் காலத்தையும், சோதிடம் பலன் தரக்கூடிய வாழ்வியல் நிகழ்வுகளையும், பிரச்சனைகளையும் பற்றியும், ஜோதிட விதிகளை சரியான அளவில் தெளிவாக அறிந்து பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் எப்படி ஒரு வெற்றிகரமான ஜோதிடராக ஜொலிக்க முடியும் என்பது பற்றியும் பார்க்கலாம்.
முதலில் சோதிடர்களை பற்றி எடுத்துக்கொள்வோம். சோதிடம் என்பது எல்லா காலத்துக்கும் பொருந்தும் ஒரு கலை என்ற போதிலும் சோதிடர்களின் வாழ்வு காலமும் அவர்களால் பார்க்கக்கூடிய ஜாதகங்களில் காலமும் ஒரு குறிப்பிட்ட எல்லையில் முடிந்து போகக் கூடியவை. நீங்கள் ஜோதிடம் பயில அல்லது தொழில்முறை ஜோதிடராக சராசரியாக ஒரு 24-25 வயதில் ஆரம்பிக்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் அதிகபட்சமாக ஒரு 45 ஆண்டுகள் வெற்றிகரமான ஜோதிடராக விளங்குகின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம் (இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட அனுமானம்).
இந்த 45 ஆண்டு கால வெளியில் நீங்கள் பெரும்பாலும் உங்களுக்கு முன்னால் 40 ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்த ஜாதகங்களையும், உங்களுக்கு ஒரு 60 வருடம் பின்னால் பிறந்த ஜாதகர்களின் ஜாதகத்தையும் பார்த்து பலன் சொல்லிக் கொண்டு இருப்பீர்கள். அதிகபட்சமாக நீங்கள் பார்க்கும் அனைத்து ஜாதகர்களும் ஒரு நூறு வருட இடைவெளிக்குள் பிறந்தவர்களாகவே இருப்பார்கள்.
எனவே, நீங்கள் பயன்படுத்தும் விதிகளும் சொல்லும் பலன்களும் இந்த நூறு ஆண்டுகளுக்கு சரியாக பொருந்தி போனாலே, நீங்கள் வெற்றிகரமான ஜோதிடராக வலம்வர முடியும்.
அடுத்து ஜாதகம் பார்க்க வருகின்றவர்களை பற்றி பார்க்கலாம். ஜோதிடம் பார்க்க வருகிறவர்கள் பெரும்பாலும் ஒரு 15 வயதில் இருந்து 70 வயது வரை உடையவர்களே. இவற்றிலும் பிரதானமாக கவனித்தீர்கள் என்றால் பெரும்பாலான ஜாதகர்கள் ஒரு 22-55 வயதில் இருப்பவர்களே. பெரும்பாலான நேரங்களில் சோதிடம் வாழ்க்கையில் நடைபெற இருக்கும் வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தைப்பேறு போன்ற முக்கியமான நிகழ்வுகளை முன் வைத்தோ அல்லது கடந்து போன அல்லது நிகழ்ந்து கொண்டிருக்கும் கசப்பான அல்லது துக்க நிகழ்வுகளின் காரணத்தை கண்டுபிடித்து அவற்றில் இருந்து வெளிவர உதவும் ஒரு கருவியாகவோ பயன்படுத்தப்படுகிறது. இதையும் தாண்டி சோதிடத்தில் ஒரு சராசரி மனிதருக்கான தேவையும் ஈடுபாடும் குறைவாகவே இருக்கும்.
வாழ்க்கையில் நல்ல நிலையில் இருக்கும் பெரும்பாலான மனிதர்கள் ஜாதக நோட்டை தூக்கிக் கொண்டு அலைவது இல்லை. அதுபோல வாழ்க்கையில் கஷ்டப்படும் பெரும்பாலான விளிம்பு நிலை மனிதர்களும் ஜோதிடர்களை அணுகுவது இல்லை. ஒரு ஜோதிடரை தேடி வரும் ஜாதகர்களின் அளவானது மக்கள்தொகையில் 5 சதவீதத்திற்கும் குறைவே. மேலும் ஜாதகம் பார்க்க வருகின்றவர்கள் உடனடியாக மீண்டும் மீண்டும் வருவதும் இல்லை (சில நேரங்களில் திருமணப்பொருத்தம் பார்க்கின்றவர்கள் தவிர்த்து). மக்கள் அவர்கள் எதிர்பார்க்கின்ற காரியம் நடந்து முடிந்த பின் ஜோதிடரை மறந்து போவார்கள். நீங்கள் முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் வெவ்வேறு குழுக்களில் ஜாதகத்தை போட்டு பலன் கேட்பவர்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு. அவர்கள் எண்ணிக்கை அளவில் ஜாதகம் பார்க்க வருபவர்களை பிரதிபலிப்பது இல்லை. அவர்கள் பளிச்சென வெளியே தெரியும் மிகைப்படுத்தப்பட்ட சிறு புள்ளிகளே ஆகும்.
ஊரில் பல ஜோதிடர்கள் பெருகிவிட்ட இந்த காலத்தில் ஒரு ஜோதிடர் வெற்றிகரமாக இயங்குவதற்கு அவர் மீதான நம்பிக்கை மிக முக்கியம். இந்த நம்பிக்கையானது, ஒரு சோதிடர் தனது வாடிக்கையாளர்களை எந்த அளவுக்கு சுயநலம் இன்றி நேர்மையாக அணுகுகிறார் மற்றும் எந்த அளவுக்கு அவர்களது பிரச்சினைகளை சோதிடம் மூலம் சரியாக அறிந்து, அந்த பிரச்சனைகளில் இருந்து வெளிவர, நடைமுறைக்கு ஒத்து வருகின்ற ஆலோசனை வழங்குகிறார் என்பதை பொறுத்தே அமைகிறது.
எல்லா தொழில்களிலும் இருப்பது போல, ஒரு வெற்றிகரமான ஜோதிடருக்கு மீண்டும் மீண்டும் வருகின்ற வாடிக்கையாளர் அவசியம். பெரும்பாலான மக்கள் தனது ஜோதிடரை அவ்வளவு சீக்கிரம் மாற்றிக் கொள்ள மாட்டார்கள். எனவே, ஒரு ஜோதிடருக்கு தன்னை நாடி வந்துள்ள வாடிக்கையாளரை தக்க வைத்துக்கொள்வது மிக அவசியம் ஆகும். ஜோதிடர் வெற்றிகரமாக இயங்க அவர் சொல்லும் பலன்கள் ஜாதகருக்கு பொருந்திப் போவது முக்கியம். பலன்கள் பொருந்திப் போக வேண்டுமெனில், ஜோதிடர் பயன்படுத்துகின்ற அடிப்படை விதிகளின் கட்டமைப்பும் நம்பகத்தன்மையும் மிக மிக முக்கியம்.
அடுத்து நாம் மக்கள் எதற்காக சோதிடர்களை அணுகுகிறார்கள் என்று பார்க்கலாம். மக்கள் ஜோதிடரை நாடி வருகின்ற பெரும்பாலான வாழ்வியல் பிரச்சனைகளை ஒரு 15-20 வகைகளில் அடக்கி விட முடியும். பிள்ளைகளின் உடல்நலம், படிப்பு, திருமணம், வேலைவாய்ப்பு, குழந்தை பிறப்பு, குடும்ப வாழ்க்கை, வீடு, மனை, வாகன வசதி, தொழிலில் முன்னேற்றம், தொழிலில் பிரச்சனைகள், புதிய முயற்சிகளை ஆரம்பிக்க சரியான தருணங்கள், குடும்ப வாழ்வில் கணவன் மனைவி பிரச்சனை, சகோதரம் வழி பிரச்சனைகள், தாய் தந்தையர் வழி பிரச்சனைகள், வம்பு வழக்கு, சொத்து சம்பந்தமான தகராறு, குறுகிய கால மற்றும் நீண்ட கால உடல்நிலை பிரச்சினைகள், அகால மரணம் என்பதுபோல மொத்த பிரச்சினைகளையும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வரையறைக்குள் அடக்கிவிட முடியும். நீங்கள் ஜோதிடம் கற்கும்போது நூற்றுக்கணக்கான விதிகளை பொதுவாக கற்பதை விடவும், பெரும்பாலான மக்களின் இந்த 15 அல்லது 20 பிரச்சனைகளை எந்த விதிகள் எவ்வளவு துல்லியமாக கண்டுபிடிக்கும் என்பதை அறிந்து கற்பது ஜோதிடருக்கு பயனுள்ளதாக இருக்கும்.
அடுத்து நாம் சோதிடர்கள் பயன்படுத்தும் விதிகளைப் பற்றி பார்க்கலாம். ஒரு சோதிடர் நூற்றுக்கணக்கான சோதிக்கப்படாத அல்லது உறுதி செய்யப்படாத விதிகளை அரைகுறையாக, அவ்வப்போது பயன்படுத்துவதைவிட, எல்லோருக்கும் பொருந்திப்போகும் சில விதிகளை மட்டும் எப்போதும் பயன்படுத்தி பலன் சொல்வது மேலானது.
நாம் முந்தைய பதிவுகளில் பார்த்ததுபோல, எல்லா விதிகளும் எல்லா ஜாதகர்களுக்கும் பொருந்திப் போவதில்லை. ஆனால், சில விதிகள் பெருமளவில் எல்லா ஜாதகர்களுக்கும் பொருந்திப்போகும். ஒரு ஜோதிடருக்கு தனக்கு தெரிந்த விதிகளை வகைப்படுத்தி, அவ்வப்போது அவற்றை பரிசோதித்து பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம்.
நீங்கள் ஒரே ஒரு சோதிட முறையை கொண்டு வாடிக்கையாளர்களின் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்வதை விடவும், ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகளைக் கொண்டு இந்த பதினைந்து அல்லது இருபது வகையான பிரச்சனைகளுக்கு நம்பிக்கையான சோதிக்கப்பட்ட விதிகளின் மூலம் பலன் சொல்வது உங்களது வாடிக்கையாளர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும். நீங்கள் எந்த முறையில் பலன் சொல்கிறீர்கள் என்பது உங்கள் பிரச்சனை. வாடிக்கையாளர் பிரச்சனை அல்ல! எப்படி பலன் சொல்கிறோம் என்பதை விடவும், சொல்கின்ற பலன்கள் சரியாக அமைகின்றதா என்பது தான் முக்கியம்.
உங்களிடம் வருபவர்கள் தங்கள் பிரச்சனைக்கு ஒரு வழியை தேடித்தான் வருகிறார்கள். உங்களுக்கு தெரிந்த சோதிட அறிவைக்கொண்டு அதை சோதிடத்தில் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. வருபவர்களை குழப்பி அனுப்பி வைக்காதீர்கள். அதைவிட நீங்கள் எந்த விதிகளையும் பயன்படுத்தாமல் ஆறுதலாக சொல்லும் சில நல்ல வார்த்தைகள் மேலானவை. நீங்கள் எந்த முறையில் பலன்களை சொன்னாலும், வந்தவர்களுடைய முக்கியமான பிரச்சினை அல்லது தேவைக்கு ஆலோசனைகளை சொல்வதே மூல நோக்கமாக இருக்க வேண்டும். அதை விடுத்து தேவையில்லாத புது பிரச்சனைகளை உங்கள் ஜோதிட ஆராய்ச்சியின் மூலம் கிளப்பி விடக்கூடாது. ஜாதகருக்கு தலைவலி போய் திருகுவலி வந்த கதையாக ஆகிவிடக்கூடாது.
சோதிடர்கள் தங்களை ஒரு மருத்துவர் போல பாவிக்க வேண்டும். மேடை நடிகர்கள் போல பாவிக்க கூடாது. உங்கள் நோக்கம் சோதிடம் பார்க்க வருபவருக்கு வேடிக்கை காட்டுவது அல்ல. அவர்களுடைய பிரச்சினைகளை அறிந்து, அவை தீரும் காலம் பற்றி சொல்வது. எல்லா வெற்றிகரமான சோதிடர்களும் இதை கண்டிப்பாக செய்வார்கள்.
நாம் இந்தக் கட்டுரையின் இறுதிப் பகுதிக்கு வந்துள்ளோம். இதுவரை நாம் சோதிட விதிகள் கட்டுரைகளில் பார்த்தவற்றை, இப்போது தரவு அறிவியல் மற்றும் இயந்திர வழிக் கற்றலோடு தொடர்புபடுத்திப் பார்க்கலாம்.
நீங்கள் ஜோதிட விதிகளை பயன்படுத்துவதை தரவு அறிவியல் ரீதியாக அணுகினால், உங்களுக்கு எவ்வாறு தங்களுக்கு தெரிந்த ஜோதிட விதிகளின் பயன்பாட்டை மேம்படுத்திக் கொள்ளலாம் என்பது புரியும்.
- முதலில் நீங்கள் தங்களிடம் ஜாதகம் பார்க்க வருகின்ற ஒவ்வொரு ஜாதகருக்கும் ஒரு தனித்துவமான அடையாள எண்ணை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அவர்களின் விபரங்களை ஒரு தொகுப்பாக வகைப்படுத்தி வையுங்கள். ஜாதகரின் பிறப்பு விபரங்கள் மற்றும் அவர் தங்களை நாடி வந்துள்ள தேதி மற்றும் அன்றைய தேதியில் அவர் சோதிடம் பார்க்க வந்த அடிப்படையான காரணம், மற்றும் அவற்றுக்கு நீங்கள் அளித்த ஆலோசனை போன்றவற்றை தனியாக ஒரு பதிவேடாக தொகுத்து வைத்து கொண்டே வாருங்கள் (data base of customers). நீங்கள் கணினி வழியே சோதிடம் பார்ப்பவர்கள் என்றால், மைக்ரோசாப்ட் எக்ஸெல் மூலம் இந்த தொகுப்பினை உருவாக்கிக்கொண்டு பயன்படுத்த முடியும். இந்த அடிப்படையான தரவுகளை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தரவு அறிவியல் ரீதியாக ஆராய்வதன் மூலமே, தங்களை நாடி வருகின்ற வாடிக்கையாளர்களின் பொதுவான வயதுவரம்பு, பாலினம், பிரச்சனைகள் போன்றவற்றை பற்றி உங்களால் ஒரு முடிவுக்கு வரமுடியும். இதன் மூலம் தாங்கள் எந்த வகையான பிரச்சினைகளில் தங்கள் ஜோதிட அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் உணரலாம்.
- அடுத்து நீங்கள் தங்களுக்குத் தெரிந்த முக்கியமான விதிகளை இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டதுபோல 15 அல்லது 20 பொதுவான பிரச்சனைகளின் கீழ் வகைப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள் (Cataloguing of rules). உங்களுக்குத் தெரிந்த அனைத்து விதிகளையும் ஒவ்வொரு பிரச்சனையின் தலைப்பின்கீழ் வகைப்படுத்துங்கள். இந்த விதிகளின் தொகுப்பில், தாங்கள் அடிக்கடி பயன்படுத்தும் விதியையும் எப்போதாவது பயன்படுத்தும் விதியையும் வரிசைக்கிரமமாக குறித்து வையுங்கள். ஒவ்வொரு விதியும் எந்த முறையை சார்ந்தது என்பதையும் குறிப்பிடுங்கள். நீங்கள் ஒரு பிரச்சனைக்கு புதிதான பலன் சொல்லும் விதிகளை அறிந்து கொள்ளும்போது, அவற்றையும் உங்களுடைய விதிகளின் தொகுப்பில் சேருங்கள். இந்த தரவு தொகுப்பையும் (data base of rules) கூட நீங்கள் மைக்ரோசாப்ட் எக்ஸெலில் பதிவேற்றம் செய்து வைத்துக்கொள்ள முடியும்.
- தாங்கள் ஒரு ஜாதகத்திற்கு தங்களுடைய ஆலோசனையை வழங்கிய பின்னர் உடனடியாக சற்று நேரம் ஒதுக்கி தாங்கள் எந்த விதிகளின் மூலம் தங்களுடைய பலன்களை சொன்னீர்களோ, அந்த விதிகளுக்கு நேராக ஜாதகருடைய அடையாள எண்ணை குறிப்பிடுங்கள். ஒரு ஜாதகத்திற்கு பொருந்திப் போகின்ற, உங்கள் தொகுப்பில் உள்ள அனைத்து விதிகளுக்கும் ஜாதகருடைய அடையாள எண்ணை குறிப்பிடுங்கள். இதை உடனடியாக செய்வது அவசியம். இல்லாவிடில் மறந்து போய்விடும். காலப்போக்கில் நீங்கள் உங்கள் தொகுப்பில் உள்ள விதிகளை ஆராய்ச்சி செய்தீர்கள் என்றால், தங்களுடைய தொகுப்பில் உள்ள எந்தந்த விதிகள் பெரும்பாலான ஜாதகர்களுக்கு பொருந்திப் போகின்றன என்பதை கண்டுபிடிக்க முடியும். சில விதிகள் பெரும்பாலான ஜாதகர்களுக்கு பொருந்திப் போனால், நீங்கள் அத்தகைய விதிகளை புதிதாக வருகின்ற ஜாதகங்களில் பரிசோதித்து பார்க்கலாம்.
இதுவரை நீங்கள் தங்கள் சோதிட வாடிக்கையாளர்களை பற்றி எந்த வகையான தரவு தொகுப்பை ஏற்படுத்தி வைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. இனிமேலாவது தாங்கள் இது பற்றி யோசித்து ஒரு முயற்சியை முன்னெடுங்கள். இதை நீங்கள் மற்றவர்களுக்காக செய்யவில்லை. உங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்வதற்காகவும் தங்களுடைய சோதிட அறிவை மெருகூட்டி கொள்வதற்காகவும் மட்டுமே செய்கிறீர்கள் என்பதை ஞாபகத்தில் வைத்து, அதற்காக சற்று முயற்சியை மேற்கொள்ளுங்கள்.
சோதிட கல்வி நிலையங்களை நடத்துபவர்கள், இந்த தரவு தொகுப்புகளில் தேவை பற்றி தங்கள் மாணவர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். நீங்கள் பயிற்றுவிக்கும் முறை சார்ந்த விதிகளை, தாங்களே வகைப்படுத்தி அவற்றில் தங்கள் மாணவர்களை ஆராய்ச்சி செய்யச் சொல்லுங்கள். இது பிற்காலத்தில் உங்களது ஜோதிட முறைக்கும் அதை பயிலும் மாணவர்களுக்கும் விட்டுச் செல்லும் மிகப்பெரிய சொத்தாக அமையும்.
நம் அனைவரின் கூட்டு முயற்சியின் மூலம் மட்டுமே இது போன்றதொரு ஒரு மாபெரும் தரவு தொகுப்பினை உருவாக்க முடியும். நீங்களே இந்த தரவு தொகுப்பின் கட்டுமானத்தை முன்னெடுக்கும் போது, தனி நபர் மூலம் ஏற்படும் தரவு கட்டமைப்பு குறைபாடுகளை பெருமளவு குறைக்க முடியும். இந்த கட்டுமானத்திற்கு நீங்கள் தரவு அறிவியல் நன்கு தெரிந்த நபர்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
மேலை நாடுகளில், இத்தகைய தரவு தொகுப்புகள் தனிநபர் மற்றும் குழுக்களின் முயற்சியின் மூலம் முன்னெடுக்கப்பட்டு பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளன. சோதிடத்தின் பிறப்பிடமாகக் கருதப்படும் இந்தியாவில் இது போல ஒரு வகைப்படுத்தப்பட்ட தரவுத் தொகுப்பு இல்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம். ஜோதிடக்கலை என்பது தனி நபர்களை விட மேலானது. நமது தனிப்பட்ட தரவுத் தொகுப்பினை ரகசியம் போல மூடி வைக்காமல் பொதுவெளியில் அனைவருக்கும் பயன்படும் படி செய்வதன் மூலம் சோதிடக் கலையில் நாம் இழந்துவிட்ட பல விஷயங்களை மீட்டெடுக்க முடியும். தரவு அறிவியல் இதற்கு ஒரு இன்றியமையாத தோழனாக அமையும். ஒரு ஜோதிடராக நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
வளரும் …
I agree with your view