T004 ஜோதிட விதிகள்- பாகம் 1


நான் 2016இல் சோதிட கல்விக்குள் நுழைய தூண்டுதலாக  இருந்த நண்பர் திரு. குமரன் சீனிவாசன், அவர் மூலம் அறிமுகம் ஆகிய இணையதள வகுப்பறை வாத்தியார் திரு. சுப்பையா வீரப்பன் (http://classroom2007.blogspot.com/ ), Jagannatha Hora Sri. PVR. Narasimha Rao, தொடர் கல்வி மற்றும் தேடலில் அறிமுகம் ஆகிய அமரர். திரு. ரவி சங்கரன் (சித்தயோகி சிவதாசன் ரவி), திரு. அருள்வேல், திரு. ஆதித்ய குருஜி மற்றும் திரு. கா. பார்த்திபன் முதலான பெரியோர்களுக்கு நன்றி கூறி, சோதிட விதிகள் தொடர்பான எனது சில புரிதல்களையும் ஒரு பொறுப்பான மாணவனாக சோதிடத்தை கணிதம் மற்றும் புள்ளியியல் சார்ந்த அறிவியல் தளத்துக்கு எடுத்து செல்வது பற்றிய எனது சிந்தனை துளிகளையும் இந்த கட்டுரை மூலம் உங்கள் சிந்தனைக்கு முன்வைக்கிறேன்.

கட்டுரைகளை நீங்கள் வரிசைக்கிரமமாக படித்தால் நான் எவ்வாறு இயந்திர வழிக் கற்றலை அணுகுகிறேன் என்று படிப்படியாக என்று உங்களுக்கு புரியும். உங்களுக்கு புள்ளியியலில் (statistics) சற்று பரிச்சயம் இருந்தால் உங்களுக்கு இந்த கட்டுரைகள் மிகவும் எளிதில் பிடிபடும். பரிச்சயம் இல்லாதவர்களுக்காக நான் அங்கங்கே முக்கியமான கருதுகோள்களை சுருக்கமாக தெளிவுபடுத்துகிறேன். உங்களுக்கு மிகவும் ஆழமான தகவல்கள் வேண்டுமெனில், இந்த புள்ளியியல் சார்ந்த கலைச் சொற்களை பற்றி நீங்கள் இணையத்தில் தேடி அறிந்து கொள்ளலாம்.

சோதிடமும் புள்ளியியலும்

சோதிடம் நம் முன்னோர்களின் மாபெரும் ஒரு கணித அறிவின் எளிமைப்படுத்தப்பட்ட வெளிப்பாடு. இந்த கட்டுரைகளில் புள்ளியியல் (statistics), தரவு அறிவியல் (data science), செயற்கை நுண்ணறிவியல் (artificial intelligence), எதிர் கூறல் (prediction) போன்றவற்றின் கூறுகளை சோதிடத்தில் எங்கு காணலாம் என்று பார்ப்போம். இன்றைய நவீன தரவு அறிவியலாக (data science) நாம் கருதுவதை என்றைக்கோ எளிமையாக பகுத்து (segmentation), தொகுத்து (profiling), எதிர் கூறல் விதிகளையும் (predictive modeling) இலகுவான மொழியில் (rules) வகுத்து சென்ற மஹாமேரு  போன்ற எம் முன்னோர்கள் அனுபவ அறிவு அளப்பரியது.

நாம் எல்லோரும் வெவ்வேறு காலத்தில் பிறந்திருந்தாலும் நாம் அனைவருமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக மாதிரியான வாழ்க்கை முறைகளையும் வாழ்வியல் நிகழ்வுகளையும் குறிப்பிட்ட கால இடைவெளியில் சந்திக்கிறோம் (normal distribution). இந்த வாழ்க்கை பெரும் அளவில் பொதுவாகவும், தனிப்பட்ட அளவில் வெவ்வேறு ஆகவும் பல பரிமாணங்களை கொண்டு அமைந்துள்ளது (multi-dimensional).

ஜோதிடத்தை புள்ளியியல் ரீதியாக அணுகினோம் என்றால், சோதிடம் என்பது தனிமனித வாழ்க்கையில் நிகழும் நிகழ்வுகளை ஒரு தொகுப்பாக அணுகி, பெரும்பாலானவர்களுக்கு பொதுவாக நிகழும் நிகழ்வுகளை கிரக அமைப்புகளுடன் தொடர்பு படுத்தி, கிரக நிலைகளை வினையாகவும் தனிமனித வாழ்க்கை நிகழ்வுகளை விளைவுகளாகவும் கருத்தில் கொண்டு அனைவருக்கும் பொருந்தும் வகையில் கணித விதிகளாக சுருக்கிக் கொடுத்த ஒரு கல்வி எனலாம்.

இந்தப் பதிவு ஜோதிட விதிகளை பற்றியது. விதிகள் என்றதும் எந்த ஒரு குறிப்பிட்ட முறைசார்ந்த விதிகளையும் நீங்கள் யோசிக்க வேண்டாம். இந்தப்பதிவில் எவ்வாறு விதிகள் இருக்க வேண்டும் என்பதை அறிவியல்பூர்வமாக அணுகலாம்.

ஜோதிட விதிகள் இயற்பியலில் உள்ளதுபோல 100% எல்லா நேரங்களிலும் பொருந்துவன அல்ல. ஒரு வலுவான ஜோதிட முறையை கட்டமைக்க வேண்டும் எனில் அதற்கு விதிகள் அடிப்படையான அலகு ஆகும். ஒன்று விதியாக வேண்டும் எனில் அதற்கென்று சில அடிப்படை தேவைகள் உள்ளன.

அவற்றில் சில:

  1. ஒரு விதி எனப்படுவது பெரும்பான்மை பற்றி கூறப்படுவது ஆகும் (fits majority – not necessarily every case).
  2. விதிகள் அளவில் சிலவாகவும் விதிவிலக்குகள் அவற்றைவிட குறைவான அளவிலும் இருக்கவேண்டும் (Rules should be minimum and its exceptions should be even fewer).
  3. விதிகள் தனிப்பட்ட முறையில் தங்களுக்குள் முரண்பாடுகள் இன்றி இருக்க வேண்டும். மேலும் ஒன்றுடன் ஒன்று பொருந்த வேண்டும் (independently consistent and collectively converging).
  4. விதிகளுக்குள் தொடர்பு படுத்தக் கூடிய அளவில், ஒரு இலக்கணத்தில் அடங்குவதாக இருக்க வேண்டும் (fits to a larger system).
  5. விதிகள் காலம் கடந்து விளங்குபவை ஆகவும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய அளவிலும் இருக்கவேண்டும் (withstand test of time and easy to understand and explain).
  6. விதிகள் சோதனைகளுக்கு உட்படுத்த கூடியதாகவும் மாற்றங்களுக்கு ஏற்புடையதாகவும் இருக்க வேண்டும் (Open for testing and changes to suit times).

மேலே உள்ள படத்தை பாருங்கள். கேட்கப்பட்ட கேள்வியை வெவ்வேறு முறைகள் எவ்வாறு அணுகுகின்றன என்பதன் விளக்கமே இந்த படம் ஆகும். இது வெவ்வேறு சோதிடமுறைகளைப் பற்றி எனது அகண்ட பார்வையாகும்.

இப்போது இந்தக் கட்டுரை சார்ந்து, படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு முறைகளைப் பற்றிய விதிகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்.

வளரும்…


Feel welcome to share your comments or feedback!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This Post Has 2 Comments

  1. Sivasubramanian

    Prediction எதிர்கூறல் என்று கூறுவதற்கு பதில் முன் கூறல் என்பது பொருத்தமாக இருக்கலாம்…. sivasubramanian