சோதிட ராசி உருவகங்களின் தூரம் / நீளங்கள்
T017 பன்னிரண்டு ராசிகளும் 27 நட்சத்திரங்களும்: வானியல் சார்ந்த பார்வை – பாகம் 2 – ராசி தூரம்
ராசி தூரம் – எனது முந்தைய கட்டுரையில் அண்டத்தைப் பற்றியும், வான்வெளியில் சூரியனின் வட்டப் பாதையில் அமைந்த 12 ராசிகள் பற்றியும் சுருக்கமாக பார்த்தோம். மேலும், நட்சத்திரங்களின் கற்பனையான இணைவுகளின் அடிப்படையில் அமைந்த வெவ்வேறான ராசிகளின் உருவ அமைப்பைப் பற்றியும், அவை தேசத்திற்கு தேசம் மாறுபட்டு இருக்கின்றன என்பதையும் பார்த்தோம். இந்தக் கட்டுரையின் முதல் பாகத்தை இதுவரை நீங்கள் படிக்கவில்லை என்றால் அதனை முதலில் படித்துவிட்டு, பிறகு இந்த கட்டுரையை தொடரவும்.
இந்த கட்டுரையில் இந்திய சோதிடத்தில் முக்கியமாக கருதப்படுகின்ற ராசிகளை பற்றி வானியல் ரீதியாக பார்ப்போம். இதன் அடுத்த பகுதியில் நட்சத்திரங்கள் பற்றிய வானியல் தரவுகளை பார்க்கலாம்.
சூரியனின் வட்டப் பாதையில் சுழன்று வருகின்ற கிரகங்களை பூமி மைய பார்வையில் இருந்து பார்ப்பதற்கும், சூரிய மைய பார்வையில் வைத்து பார்ப்பதற்கும் வெவ்வேறான அடையாளம் காட்டும் கட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பூமி தன் அச்சில் 23.5 பாகை சாய்ந்து உள்ளதால் இந்த இரு கட்டங்களும் ஒன்றுக்கொன்று சற்று சாய்வாக அமையும். அதற்கு பதிலாக பூமியை நேராக வைத்து பார்த்தால் இந்த இரு கட்டங்களும் தட்சிணாயன மற்றும் உத்தராயன காலத்தில் உள்ள புள்ளிகளுடன் ஒன்றுடன் ஒன்று வெட்டிக்கொண்டு செல்லும்.
இதையும் தாண்டி முழு அண்டத்தையும் உருவகப்படுத்த, அண்ட கட்டங்கள் என்ற கோடுகளும் தனியாக பயன்படுத்தப்படுகின்றன. நாம் வானில் பார்க்கும் எந்த ஒரு ஒளி மிகுந்த பொருளையும், இந்த ஏதாவது ஒரு கட்டங்களில் குறுக்குவெட்டு புள்ளிகளாக குறிப்பிடமுடியும்
நீங்கள் 12ராசி மண்டலங்களுக்கும் அப்பாற்பட்ட தொலைவிலிருந்து பூமியை மையமாக வைத்து, அதனை சுற்றி உள்ள ராசி மண்டலங்களை பார்ப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அதாவது பூமியை சுற்றியும் ராசி மண்டலங்கள் ஒரு மேற்புற போர்வையாக மூடி உள்ளதாக நினைத்துக் கொள்ளுங்கள். அப்படிப்பார்க்கும் போது, நீங்கள் பார்க்கும் ராசி மண்டலத்தின் பரவலானது கீழே உள்ள படத்தில் உள்ளது போல இருக்கும்.
மேலே உள்ள படத்தில் நட்சத்திர வீதியானது, நாம் பயன்படுத்தும் அட்சரேகை தீர்க்கரேகை அடிப்படையில் அமைந்த கட்டங்களின் ஊடாக உங்களுக்கு காண்பிக்கப் பட்டுள்ளது. பூமியின் 23.5° சாய்வு கோணம் காரணமாக, பூமியிலிருந்து பார்க்கும்போது, நாம் சூரியனை சுற்றிவரும் பாதையானது நமக்கு ஒரு வளைந்த கோடாக மேலும் கீழுமாக தெரியும். இதனால்தான் பூமியின் வட பகுதியில் தெரியும் ராசி மண்டலமும் தென் பகுதியில் இருந்து பார்க்கின்ற போது தெரியும் ராசி மண்டல பகுதிகளும் வித்தியாசமாக தெரிகின்றன. இதனை கீழ்காணும் படத்திலிருந்து நீங்கள் பார்த்து புரிந்து கொள்ளலாம்.
சூரியனை மையமாக வைத்துப் பார்க்கும்போது, அனைத்து கிரகங்களும் சூரியனை நீள்வட்ட பாதைகளில் சுற்றி வருகின்றன என்பது நமக்கு தெரியும். நாம் இந்திய சோதிடத்தில் கருத்தில் கொள்ளும் சனி வரையிலான கிரகங்களின் நீள்வட்டப் பாதை இந்த நட்சத்திர வீதி என்று நாம் கருதும் 12 ராசிகளின் ஊடாகவே அமைகிறது. கீழ்க்காணும் படம் இதனை உங்களுக்கு காட்சிப்படுத்துகிறது. வெவ்வேறு கிரகங்கள் வெவ்வேறு நீள் வட்ட பாதைகளில் சூரியனை சுழன்று வருகின்றன என்பது உங்களுக்கு தெரியும். இவற்றின் சுழலும் பாதை ஒன்றிற்கு ஒன்று சற்று சிறு அளவில் மாறுபாட்டுடன் அமைகிறது. இதையே மத்தியில் உள்ள வெவ்வேறான வண்ணக்கோடுகள் உங்களுக்கு காட்டுகின்றன. கிரகங்களின் நீள்வட்டப்பாதையை குறிக்கும் இந்த பாதையானது, 14 பாகை (0°± 7°) அளவுக்கு அகலமானது (படத்தில் ஒரு பட்டையாக காண்பிக்கப்பட்டுள்ளது) என சோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது.
இந்த இரண்டு கட்டங்களையும் (பூமத்திய கட்டத்தையும் கிரகண கட்டத்தையும்) ஒன்று மீது ஒன்று பொருத்தினால், அவை கீழே உள்ள படத்தில் உள்ளது போல அமையும். இதில் கிரகங்கள் சூரியனை சுற்றி வரும் நீள் வட்டப் பாதை ஆனது 0° பாகையில் உள்ளது.
பிற்சேர்க்கை
இரு கட்டங்களுக்கும் இடையே உள்ள சாய்வு வித்தியாசத்தை நீங்கள் இதிலே பார்க்கலாம். பூமியை நேராக வைத்து பார்த்தால் இந்த இரு கட்டங்களும் தட்சிணாயன மற்றும் உத்தராயன கால புள்ளிகளுடன் ஒன்றுடன் ஒன்று வெட்டிக்கொண்டு செல்லும் (உள்படம் விரித்து காட்டப்பட்டு உள்ளது – படத்தில் 0 பாகை மற்றும் 180 பாகை என பச்சை மற்றும் மஞ்சள் வண்ண எழுத்தில் குறிப்பிட்டுள்ள புள்ளிகள்).
கிரகண கட்டங்கள் சூரிய மைய கோட்பாட்டின் படி அமைவதால், அவையும் தொடர்ச்சியாக சிறு அளவில் மாறிக்கொண்டே உள்ளது. எனவே, நாம் இன்று கணக்கிடும் கிரகண கட்டங்களும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள காலகட்டத்தில் இருந்த கிரகண கட்டங்களும் ஒன்றுடன் ஒன்று பொருந்தி போகாது.
அடுத்து, இந்த கிரகண கட்டங்கள் (Ecliptic grid) மேலே பொருந்தாத ஒரு படத்தை கீழே பார்க்கலாம்.
- இந்த படத்தினை உற்று நோக்கினால் நாம் கருதும் 12 ராசிகளும் கிரகண பாதையை ஒட்டி இருப்பதையும், அதே நேரம் மேலும் கீழும் வெவ்வேறான அகலத்தில் அமைந்து இருப்பதை பார்க்கலாம்.
- அது போல, நாம் சோதிடத்தில் கருதும் 27 நட்சத்திரங்களில் சில (உதாரணம்: அஸ்தம், பூரட்டாதி, மூலம் போன்றவை) இந்த கிரகண பாதையை விட மிகவும் தள்ளி அமைந்து இருப்பதையும் கவனிக்கலாம்.
- சில நட்சத்திரங்கள் சோதிடத்தில் சொல்லப்பட்ட 12 ராசிகளுக்கும் அப்பால் இருப்பதையும் பார்க்கலாம்.
- சில நட்சத்திரங்கள் ஒன்றாக இல்லாமல் நட்சத்திர தொகுப்பாகவும் அமைந்து இருப்பதை (உதாரணம்: அஸ்தம்) நீங்கள் பார்க்கலாம்.
ராசிகளுக்கு இடையே உள்ள தூரம்: அளவீட்டு முறை
மேற்கொண்டு இந்த கட்டுரையை தொடர்வதற்கு முன் இதனை முக்கியமாக கவனிக்கவும்: இந்த கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள ராசி உருவகங்கள் மற்றும் தரவுகள் பெரும்பாலும் ஸ்டெல்லரியம் மென்பொருள் மற்றும் விக்கிப்பீடியா ஊடாக பெறப்பட்டவை. ஒவ்வொரு தரவாக பொருக்கி, தொகுத்து, அவற்றை ஆராய்ந்து, நீண்ட உறுதிப்படுத்துதலுக்கு பிறகு இந்த கட்டுரையை எழுதுகிறேன்.
இருப்பினும், ஸ்டெல்லரியம் மென்பொருள், விக்கிப்பீடியா தகவல்கள் மற்றும் எண்களை உள்ளீடு செய்வது என மூன்று இடங்களிலும் எங்கேனும் தெரியாமல் சிறு அளவில் பிழைகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. வானியல் மற்றும் சோதிடம் தெரிந்த நண்பர்கள், தரவுகளில் ஏதாவது பிழை இருப்பதாக உணர்ந்தால் தயங்காமல் சுட்டிக்காட்டலாம்.
நட்சத்திர தாரை வடிவங்கள் – நமது இந்திய ராசிகளின் உருவகங்கள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன.
இதற்கு அடுத்த படத்தில், மேடம் மற்றும் இடபத்தில் உள்ள எல்லை நட்சத்திரங்கள் ஹிப்பாகிரஸ் (Hippacros) குறியீட்டின்படி அடையாளம் கொடுக்கப்பட்டு உள்ளன. HIP என தொடங்கும் நட்சத்திர பெயர்கள் ஹிப்பாகிரஸ் முறையிலான உலக அளவில் ஒத்துக் கொள்ளப்பட்டுள்ள நட்சத்திர அடையாளம் ஆகும்.
எல்லா வான் பொருட்களும் தொடர்ச்சியாக இடம் மாறிக்கொண்டே இருப்பதால் அவற்றின் இடத்தை குறிப்பிட, குறிப்பிட்ட வருட நிலைகள் அடிப்படையாக அமைகின்றன. இந்த கட்டுரையில் பயன்படுத்தியுள்ள கிரகண கட்ட தீர்க்கரேகைகள் (Ecliptic Longitude) தரவுகள் யாவும் J2000.0 என்ற ஒப்பீட்டு புள்ளிகளின் அடிப்படையில் அமைந்தவை. இந்த ஒப்பீடு 2000 ஆம் ஆண்டு நிலவிய நட்சத்திரங்களின் வானியல் இட அமைவின் அடிப்படையில் அமைந்தது.
நாம் இப்போது இந்த ராசி உருவங்கள் அடிப்படையில் அமைந்த ராசிகளின் குறுக்குவெட்டு தூரம் பற்றி பார்ப்போம். கிரகண கட்டத்தின் (Ecliptic Grid) அடிப்படையில் இந்த தூர அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இரு புள்ளிகளின் கிரகணக்கட்ட தீர்க்கரேகை (Ecliptic Longitude) அளவிலான வித்தியாசத்தை அவற்றின் இடையேயான தூரம் என எடுத்துக்கொள்ளலாம்.
அதன்படி பார்த்தால், மேடத்தின் தொடக்க நட்சத்திரம் HIP 8832 A மற்றும் அதன் கிரகணக்கட்ட தீர்க்கரேகை இட அமைவு (Ecl. Long) 33°11’05.30″ ஆகும். மேடத்தின் இறுதியான நட்சத்திரம் HIP 14838 மற்றும் அதன் கிரகணக்கட்ட தீர்க்கரேகை இட அமைவு (Ecl. Long) 50°51’13.90″ ஆகும். HIP 8832A வின் இட அமைவு புள்ளி, பாகை தசம எண் அளவில் 33.185 ஆகும். HIP 14838வின் இட அமைவு புள்ளி பாகை தசம எண் அளவில் 50.854.9 ஆகும். எனவே, இவற்றுக்கு இடையிலான தூரம் 17.98 பாகை தசம எண் ஆகும். இது போல மற்ற ராசிகளுக்கும் கணக்கிட முடியும்.
பொதுவாக, ஓவ்வொரு ராசிக்கும் இடையே சற்று இடைவெளி உள்ளதாக நாம் ஏற்கனேவே பார்த்தோம். நமது இந்திய முறையில் ராசிகளுக்கு இடையே எல்லை கோடுகள் இல்லை என்பதையும் எனது முந்தைய கட்டுரையில் சொல்லி இருந்தேன். எனவே, நாம் ஒரு ராசிக்கும் அடுத்த ராசிக்கும் இடையே உள்ள தூரத்தை கணக்கிட இரு ராசி உருவங்களின் தொடக்க நட்சத்திரங்களுக்கு இடையே உள்ள தூரத்தை அளந்தால், அது சரியாக இருக்கும். அதன்படி பார்த்தால், மேட ராசியின் உருவகத்தின் முதல் நட்சத்திரமாகிய HIP 8832A முதல் இடப ராசியின் உருவகத்தின் முதல் நட்சத்திரமாகிய HIP 15900 வரை உள்ள அளவை மேடத்தின் தூரம் என எடுத்துக்கொள்ளலாம்.
ஒவ்வொரு ராசியின் தொடக்க மற்றும் முடிவு நட்சத்திரங்களும், மேலே சொன்னபடி அளந்தால் வருகின்ற தரவுகளும் கீழே உள்ள அட்டவணையில் “அடுத்த ராசிமுனை வரையிலான தூரம் (I)” என்ற நெட்டுவாக்கு கட்டங்களில் கொடுக்கப்பட்டு உள்ளன. சோதிட நூல்களில் நமக்கு சொல்லப்பட்ட ராசிகளின் நீளங்களும், நாம் வானியல் முறையில் உறுதிப்படுத்திய அளவுகளும் இந்த அட்டவணையில் கொடுக்கப்பட்டு உள்ளன.
இந்த அட்டவணையை பார்க்கும் முன்பு, இந்த முக்கியமான அனுமானத்தை நினைவில் வையுங்கள். இந்த அட்டவணை ராசி உருவகங்களில் அமையப் பெற்றுள்ள நட்சத்திரங்கள் அடிப்படையில் அமைந்தவை. இந்த நட்சத்திரங்கள் அனைத்தும் நாம் சோதிடத்தில் பயன்படுத்தும் 27 நட்சத்திரங்கள் அல்ல. சோதிடத்தில் பயன்படுத்தும் 27 நட்சத்திரங்கள் மட்டும் சார்ந்த ராசிகளின் நீள அளவீடுகளை, நட்சத்திரங்களை பற்றி பின்னால் வர இருக்கின்ற ஒரு கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
எனக்கு தெரிந்த அளவில், நமது சோதிட நூல்களில் ராசிகளின் பாகை அளவுகள் குறிப்பிடப்பட்டு இருக்கவில்லை. மேலும் நமக்கு சொல்லப்பட்டுள்ள ராசிகளின் நீளங்கள் (அட்டவணையில் J** என்று கொடுக்கப்பட்டுள்ள தரவுகள்) ஆளாளுக்கு வேறான அர்த்தம் தர இடம் உள்ளது. எடுத்துக்காட்டாக, சுமாரான நீளம் மற்றும் குறைந்த நீளம் – இவற்றில் எது அதிகம்? நீளமானது என்றால் சரியாக 30 பாகையா அல்லது 30க்கும் அதிகமா? இது போல குழப்பம் உள்ளது. நான் கொடுத்துள்ள அட்டவணையில் வானியல் சார்ந்து தெளிவான அளவுகள் எண்கள் ஆக கொடுத்து உள்ளேன். அதனுடன், நமக்கு சொல்லப்பட்டுள்ள அளவுகளுடன் ஒப்பீடும் செய்துள்ளேன்.
கவனிப்புகள்:
- கன்னி, மீனம், இடபம், சிம்மம், தனுசு, மிதுனம்,விருச்சிகம், கடகம், மேடம், துலாம் என ராசிகளின் நீளம் குறைந்துகொண்டே வருகிறது.
- மகரம், கும்பம் இரண்டும் ஒன்றோடு ஒன்று விரவி உள்ள காரணத்தாலும், நாம் அளக்க எடுத்துக்கொண்டுள்ள முறையின் காரணத்தாலும், மகரத்தின் அளவு மிகவும் குறைந்த நீளம் என நமது கணக்கில் வருகிறது.
- கன்னி ராசி எல்லாவற்றையும் விட, மிகவும் நீளமாக 51 பாகை அளவில் அமைந்து உள்ளது.
- மிதுனம் சரியாக 30 பாகை அளவில் அமைந்து உள்ளது.
- துலாம் இருப்பதிலேயே நீளம் குறைந்த ராசி என வருகிறது (மகரம் தவிர்த்து).
ராசி உருவகங்களின் தூரம்
நாம் மேலே அட்டவணையாக பார்த்ததை கீழே படங்களாக பார்ப்போம். கீழே உள்ள படத்தில் ஒரு ராசியின் இருமுனைகளுக்கு இடையே உள்ள தூரம் (அட்டவணையில் G என்று குறிப்பிட்டு உள்ள தரவுகள்) கொடுக்கப்பட்டு உள்ளன. இந்த தரவுகளின் பின்னே உள்ள நொடி மற்றும் வினாடிகள், எண்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதை நினைவில் கொள்ளவும். மொத்தமாக, 12 ராசி உருவகங்களும் 315 பாகை அளவிலான தூரத்தை வியாபகம் செய்து உள்ளன. இது மொத்த தூரம் ஆகிய 360 பாகைகளில், 88 சதவீதம் ஆகும்.
- கன்னி ராசி உருவகம் மிக அதிக பாகைகளையும், கடகம் ராசி உருவகம் குறைந்த அளவு பாகைகளையும் வியாபித்து உள்ளன.
- கன்னி, மீனம், இடபம், சிம்மம் மற்றும் தனுசு ஆகிய 5 ராசி உருவங்களும் 30 பாகைகளுக்கும் அதிகமான நீளத்தை பெற்று உள்ளன.
அடுத்து ராசிகளுக்கு மத்தியில் உள்ள இடைவெளியின் தூரத்தை பார்ப்போம் (அட்டவணையில் H என்று குறிப்பிட்டுள்ள தரவுகள்). கீழே உள்ள படத்தில் அவை காட்டப்பட்டுள்ளன.
பதினோரு ராசி உருவங்களுக்கு மத்தியில் இடைவெளி உள்ளது. கும்பம் மற்றும் மகர ராசிகள் மட்டும் 12 பாகைகள் வரை, ஒன்றன் மீது ஒன்று விரவி உள்ளன. அதாவது பொதுவான ஒரு இடத்தை பங்கிட்டுக் கொள்கின்றன.
ஒரு ராசியின் முதல் நட்சத்திரத்தில் இருந்து அடுத்த ராசியின் முதல் நட்சத்திரம் வரை உள்ள தூரம் (அட்டவணையில் H என்று குறிப்பிட்டுள்ள தரவுகள்) அடுத்த படத்தில் காட்டப்பட்டுள்ளன.
இவற்றை பற்றி நாம் அட்டவணையின் கீழே விரிவாக ஏற்கனவே பார்த்து உள்ளோம்.
இதுவரை பார்த்தவற்றின் தொகுப்பு:
நாம் இந்த கட்டுரையில் பார்த்த தரவுகளின் மற்றும் அளவீட்டு முறையின் அடிப்படையில் ராசிகளின் நீளங்களை பற்றிய வானியல் சார்ந்த நமது புரிதல் சோதிடத்தில் இருந்து குறிப்பிடத்தக்க அளவு மாறி உள்ளது.
இந்த கட்டுரையின் அடிப்படையில் நாம் பார்த்த ராசி உருவங்களின் நீளங்கள் உண்மை என்றால் தற்போது நாம் பயன்படுத்தும் ராசி கட்டங்களின் அளவுகள் மற்றும் அவை சார்ந்த கணிதம் கேள்விக்கு உள்ளாகும்.
மேலும், ராசி உருவகங்கள் தான் முக்கியம் எனில் அவற்றிற்கு அப்பால் உள்ள நட்சத்திரங்கள் ஏன் இந்திய சோதிடத்தில் நமது முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டன என்ற கேள்வியும் எழுகிறது.
இந்த கருத்துக்களை பற்றி யோசித்துக்கொண்டு இருங்கள். ராசிகளின் நீளம் பற்றி இந்த கட்டுரையின் அடிப்படையில் எந்த தீர்க்கமான முடிவுக்கும் வராதீர்கள். எனது அடுத்த கட்டுரையில், நாம் நட்சத்திரங்கள் அளவில் இறங்கி, இன்னும் சற்று ஆழமாக நமது புரிதல்களை மேம்படுத்திக் கொள்வோம்.
கட்டுரையின் அடுத்த பாகத்தை எழுத நட்சத்திரங்கள் என்னை அழைக்கின்றன 😊. நட்சத்திரங்கள் சார்ந்த வானியல் தரவுகள் மிகவும் சுவாரசியமானவை. அடுத்த பாகம் வரும் வரை, சற்று பொறுமையோடு காத்திருங்கள்.
நன்றி!
ஆதார தரவுகள் மற்றும் வானியல் மென்பொருள் உதவி: Stellarium.org
இந்த கட்டுரை முதலில் வான் கட்டம் சார்ந்து அமைக்கப்பட்டு இருந்தது. பின்னர், கிரகண கட்டம் சார்ந்த தரவுகளுடன் 29-06-2020 அன்று திருத்தி எழுதப்பட்டது.
பிரமாதம். அரிய முயற்சி. வாழ்க.
நட்சத்திரங்களின் கால அளவு நாழிகையில் வித்தியாசம் கொண்டு வந்து உள்ளார்கள்.
Pingback: T025 இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 5. அடிப்படை சோதிட கட்டுமானங்கள் - 2 - AI ML
Pingback: T018 பன்னிரண்டு ராசிகளும் 27 நட்சத்திரங்களும்: வானியல் சார்ந்த பார்வை - பாகம் 3 - AI ML in Astrology