T034 திக்பலம் & திருக்பலம் (புள்ளியியல் பார்வையில்)


திக்பலம், திருக்பலம்
எனைத்தானும் நல்லவை கேட்க!

(திக்பலம் & திருக்பலம் – இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 14. சட்பலம் – மூன்றாம் பாகம்)

திக்பலம் & திருக்பலம். மகரிஷி பராசரர் முறையின் சட்பலம் (Shadbala) என்ற கட்டுமானத்தைப் பற்றிய மூன்றாம் பாகம் இதுவாகும். இந்த பாகத்தில் நாம் திக்பலம் (திசை பலம் – Dig bala) மற்றும் திருக்பலம் (பார்வை பலம் – Drik bala) என்னும் இரண்டு கூறுகளைப் பற்றிப் பார்க்க இருக்கிறோம். இது மகரிஷி பராசரர் உள்ளம் உணர முற்படும் ஒரு முயற்சி ஆகும். 

இது சோதிடத்தில் உயர்நிலை புரிதல் நோக்கி செல்பவர்களுக்கான கட்டுரை. படிக்கும்போது படிக்கின்ற விடயம் எங்கேனும் உங்கள் தலைக்குமேல் போவதுபோலத் தோன்றினால் பயப்படாமல் கடந்து மேலே செல்லவும். அதற்கான காலம் வரும்போது தானாகப் புரியும். 😊 இறுதியில் உள்ள கட்டுரை சுருக்கம் முக்கியம்.

Disclaimer:

இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள சில கருத்துக்கள் உங்களில் சிலருக்கு உடன்பாடு இல்லாததாக இருக்கக்கூடும். நான் முழுதும் தரவுகள் ஊடாக மட்டும் பார்ப்பதால், எந்தவித ஒட்டுதலும் இல்லாமல் என் கருத்துக்களை திறந்த மனதோடு எழுதுகிறேன்.

இக்கட்டுரையை திறந்த மனதோடு அணுகும்படி உங்களையும் கேட்டுக்கொள்கிறேன். ஒருவேளை, சில விடயங்களில் என் விளக்கங்கள் உங்களுக்கு கூடுதல் தகவல்களை தரக்கூடும். அப்படி இல்லையெனில், உங்களுக்கு மாறுபாடு உள்ள இடங்களை பின்னூட்டம் இடவும். நானும் ஒரு மாணவனாக கற்றுக்கொள்ள உங்கள் கருத்துக்கள் எனக்கு உதவும்.

சட்பலம்
சட்பலம்

சட்பலம் பற்றிய இந்தக் கட்டுரையின் முதல் பாகம் (நைசர்கிக பலம் மற்றும் ஸ்தான பலம் பற்றியது) மற்றும் இரண்டாம் பாகம் (காலபலம் பற்றியது) ஆகியவற்றை நீங்கள் இதுவரை படிக்கவில்லை எனில், அவற்றை படித்த பின்னர் இந்தப் பாகத்தை படிப்பது உங்களுக்கு ஒரு தொடர்ச்சியை தரும்.

இந்தக் கட்டுரையை படிக்கும்போது குறைந்தபட்சம் உங்கள் ஜாதகத்தையும் அதன் அடிப்படையில் கணக்கிடப்பட்ட சட்பல அட்டவணையையும் உங்கள் முன் வைத்துக்கொண்டு இக்கட்டுரையில் சொல்லவரும் விடயங்களை ஒப்பீடு செய்து படிப்பது உங்களுக்கு சட்பல கணக்கின் பல நுண்ணிய விடயங்களை உணர்த்தும். இதுவும் ஒரு நீண்ட மற்றும் ஆழமான ஆராய்ச்சிக் கட்டுரை. எனவே, சற்று நேரம் எடுத்து மெதுவாகப் படிக்கவும். 😊

இத்தொடரின் முந்தைய பாகங்களை (ராசிகளும் கிரகங்களும் (T024), அயனாம்சம் (T025), லக்கினம் (T026), பாவகம்(T027),  காரகத்துவம் (T028), யோகங்கள், கிரக சேர்க்கை மற்றும் பார்வைகள் (T029), அஸ்தங்கம், வக்கிரம் மற்றும் கிரக யுத்தம் போன்ற கட்டுமானங்கள் (T030), வர்க்கச் சக்கரங்கள் (T031), சட்பலத்தில் நைசர்கிக பலம் மற்றும் ஸ்தான (இட) பலம் (T032), காலபலம் (T033)) நீங்கள் இதுவரை படிக்கவில்லை என்றால், நேரம் கிடைக்கும்போது அவற்றையும் படித்து அறியவும்.

இவற்றை தொடரின் ஆரம்பத்தில் இருந்து தொடர்ச்சியாக படிப்பது இத்தொடரில் விரியும் சோதிடத்தின் முழு வடிவத்தையும் நம் முன்னோர்களின் கணித அறிவின் பிரம்மாண்டத்தையும் உங்களுக்கு உணர்த்தும்! இந்த கட்டுரையில் பயன்படுத்தியுள்ள சில கலைச்சொற்களின் ஆங்கில மொழியாக்கம் கீழே உள்ளது.

  • தரவு (Data)
  • மாறி (Variable)
  • மாறி மாற்றம் (variable transformation)
  • கட்டுமானம் / கட்டுமானக் கூறு (Construct)
  • பெறப்பட்ட மாறி (Derived variable)
  • புள்ளியியல் மாதிரி (Statistical Model)
  • சட்பலம் (Shadbala)
  • நைசர்கிக / இயல்பான பலம் (Naisarkiga bala / Natural Strength)
  • ஸ்தான / இட பலம் (Sthana bala / Positional Strength)
  • கால பலம் (Kala bala / Temporal Strength)
  • திக்பலம் / திக்கு பலம் (Dig bala / Directional Strength)
  • திருக்பலம் / பார்வை பலம் (Drik bala / Aspectual Strength)
  • சேஷ்ட / சேட்டை பலம் (Chesta bala / Motional Strength)

சோதிடக் கட்டுமானம் #10: சட்பலம் அல்லது கிரகங்களின் ஆறுவித பலம் தொடர்ச்சி – திக்பலம் மற்றும் திருக்பலம்

பராசரர் முறை சோதிடத்தின் மூன்று பரிமாணங்களில் இந்த சட்பலம் என்ற கட்டுமானக்கூறு கிரகம் (Graha) என்ற பரிமாணம் (dimension) சார்ந்து சொல்லப்படுவது ஆகும். இந்தப் பரிமாணம் பற்றிய முதல் இரண்டு பாகங்களில் நாம் இயல்பான பலம்,  ஸ்தான (இட) பலம் மற்றும் காலபலம் பற்றிப் பார்த்தோம்.

இந்தப் பாகத்தில் நாம் திக்பலம் (திசை பலம் – Dig bala) மற்றும் திருக்பலம் (பார்வை பலம் – Drik bala) என்னும் பிற கிரகப் பரிமாணங்கள் சார்ந்த மாறிகள் எவ்வாறு கணக்கிடப்படுகின்றன என்று புள்ளியியல் ரீதியாக விளங்க முற்படுவோம்.

நாம் இந்தக் கட்டுரையின் முந்தைய பாகத்தில் பார்த்த மாதிரி ஜாதகத்தின் மதிப்புகள் உங்கள் ஞாபகத்துக்காக கீழே காட்டப்பட்டுள்ளன.

திக்பலம், திருக்பலம்
மாதிரி திக் பலம் மற்றும் திருக்பலம் மதிப்புகள்

10.4 திக்பலம் / திக்கு பலம் (ஒரே கூறு – குறைந்தபட்ச பலஅளவில் 11% முக்கியத்துவம்)

சட்பல கணிதத்தின் நான்காம் பெரும்கூறு திக்கு பலம் ஆகும். இது கிரகம் பெறும் திசை அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ஜாதக பலனுரைத்தலில் ஒருவருக்கு சாதகமான திசைகள் எவை என அறிய திக்பலம் பயன்படுத்தப்படுகிறது.

இது ஒருவரின் லக்கின புள்ளி அடிப்படையில் கணக்கிடப்படும் எல்லை வகுக்கப்பட்ட தொடர்ச்சியான மாறி (range bound continuous variable) ஆகும். 7 கிரகங்களும் குறிப்பிட்ட நான்கு ராசிகளில் வலுவடைவதாக இந்த மாறி வடிவமைக்கப்பட்டுள்ளது.

குருவும் புதனும் லக்கின(1ஆம்) ராசியிலும், சனி லக்கினத்துக்கு 7ஆம் ராசியிலும், சுக்கிரனும் சந்திரனும் 4ஆம் ராசியிலும் மற்றும் சூரியனும் செவ்வாயும் 10ஆம் ராசியிலும் இந்த மாறியின் முழு மதிப்பை (60 விரூபா) அடைகின்றன.

சட்பலத்தின் 7 கிரகங்களும் ஏதாவது ஒரு கேந்திர வீடுகளிலேயே முழு பலம் அடைகின்றன. சட்பலத்தில் கேந்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட மற்றொரு மாறி இதுவாகும். நாம் முன்பு பார்த்த ஸ்தான பலத்தில் கேந்திராதி பலம், கேந்திரம் வைத்து சொல்லப்பட்ட மற்றொரு கூறு ஆகும். இருப்பினும் இந்த திக்பலம் என்ற கூறு தனி மாறியாகவே அதைவிட அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இந்த மாறியில் ஒரு கிரகம் பெறத்தக்க மதிப்பை பிற கிரகம் பாதிப்பதில்லை.

ஒவ்வொரு கிரகமும் இந்த ஒதுக்கப்பட்ட ராசிகளில் இருந்து எவ்வளவு தூரம் தள்ளி இருக்கின்றனவோ, அதற்கு ஏற்ப இந்த பலத்தின் மதிப்பு அமையும். ஒரு கிரகம் பெறக்கூடிய திக்கு பல மதிப்பின் அளவு 0 முதல் 60 விரூபா வரை இருக்கும். சூரியன், புதன் மற்றும் சுக்கிரனுக்கு முறையே 10, 1, 4ஆம் வீடுகள் திக்பலம் பெறும் வீடுகளாக சொல்லப்பட்டுள்ளதால், இவற்றில் ஏதேனும் ஒன்று மட்டுமே ஒரு நேரத்தில் இந்த பலத்தை முழுதும் பெறக்கூடும். இதன் காரணமாக, 7 கிரகங்கள் பெறும் மொத்த திக்பலம் குறைந்த பட்சம் 60 விரூபா முதல் அதிகபட்சமாக 360 விரூபா என்ற அளவுக்கு குறைவாகவே இருக்கும் (420 விரூபா சாத்தியமில்லை).

ராசிமண்டல கட்டமைப்பில் திசைகள் எதிரெதிராக வடிவமைக்கப்பட்டுள்ளதால் தனக்கு எதிரான திசையில் ஒரு கிரகம் இந்த பலத்தை முழுதும் இழக்கும். ஒரு கிரகத்தின் திக்கு பலம் 0 என்ற அளவில் இருந்தால் அது நிஷ்பலம் (திக்பல ராசிக்கு 7ஆம் இடம் – பலமற்ற நிலை) என்று சொல்லப்படுகிறது.

வானியல் ரீதியாக லக்கினம் கிழக்கு திசையையும், 7ஆம் இடம் மேற்கு திசையையும், 10ஆம் பாவம் வடக்கு திசையையும் (உச்சி) 4ஆம் பாவம் தெற்கு திசையையும் (பாதாளம்) சுட்டுகின்றன. இந்த மாறி லக்கினம் என்ற பெறப்பட்ட பரிமாணம் (derived dimension) சார்ந்து வரையறை செய்யப்பட்டுள்ளதால் இதற்கு வேறு வானியல் பின்புலம் மற்றும் தரவுகள் இல்லை எனலாம்.

ஒரு ஜாதகத்தில் அதிக திக்பலம் பெற்ற கிரகம் எது?

பராசரர் குறிப்பிட்ட கிரகம் பெறவேண்டிய குறைந்தபட்ச திக்கு பல மதிப்புகளையும் சட்பல கணிதத்தில் வரையறை செய்துள்ளார். அதுபற்றி பின்னர் பார்க்கலாம். ஒரு கிரகம் பெற்ற திக்பல மதிப்பு அது பெறவேண்டிய குறைந்த பட்ச திக்பல மதிப்பில் இருந்து எத்தனை மடங்கு உள்ளது என்பதை கணக்கிட்டு, அதன் அடிப்படையில் அதிக திக்கு பலம் பெற்ற கிரகங்களை வரிசைப்படுத்தலாம் (rank ordering based on ratio of actual dig bala score vs minimum required score). பின்னர் இந்த வரிசை அடிப்படையில் ஒருவரின் ஜாதகத்தில் அவருக்கு மிகவும் சாதகமான திசையை கண்டுபிடித்து பயன்படுத்தலாம்.

சில நேரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் திக்கு பலம் பெற்ற ராசிகளில் அமரும்போது, அவற்றில் எது அதிக பலத்தோடு உள்ளது என்பதை அறிய இந்த மதிப்பை பயன்படுத்தலாம். மேலும், ஒருவருக்கு எந்த கிரகமும் திக்பலம் பெற்ற ராசிகளில் இல்லை என்றாலும் கூட, அவருக்கு அதிகம் அனுகூலமான திக்பல கிரகம் மற்றும் திசை எது என்பதை இந்த திக்பல மதிப்பின் அட்டவணையின் அடிப்படையில் தீர்மானிக்க இயலும்.

இதுபோல நேரடியாக ஒரு மாறியை பலன் சொல்வதற்கு இணைத்ததில் நமது முன்னோர்களின் அறிவுத்தெளிவு புலனாகிறது.

10.5 திருக்பலம் (பார்வை பலம் – குறைந்தபட்ச அளவு வரையறை இல்லை)

சட்பலத்தின் 5ஆம் கூறு திருக்பலம் அல்லது பார்வை பலம் ஆகும். இது சோதிடத்தில் நாம் சிலாகித்து சொல்லும் கிரகப் பார்வைகள் பற்றிய ஒரு மாறி ஆகும்.

திருக்பலம் பற்றிய விளக்கத்தில் (BPHS, Vol 1, பக்கம் 409), ஒரு கிரகத்துக்கு தீய (நைசர்கிக அசுபர்) பார்வைகள் இருந்தால் அதன் மொத்த பார்வை பலத்தில் கால் பாகம் கழிக்கப்படவேண்டும் மற்றும் நல்ல கிரகத்தின் (நைசர்கிக சுபர்) பார்வை இருந்தால் அதன் மொத்த பார்வை பலத்துடன் கால் பாகம் கூட்டப்படவேண்டும் என்று இதன் கணக்கீடு சொல்லப்பட்டுள்ளது. மேலும், அதுபோல பெறப்பட்ட மதிப்புடன் புதன் மற்றும் குருவின் மொத்த பார்வை பலத்தையும் சேர்க்கவேண்டும் என்று இந்த மாறியை தருவிக்கும் முறை சொல்லப்பட்டுள்ளது.

இதனைத் தாண்டி, அதிகம் விளக்கமாக சொல்லாமல் இந்த திருக்பலம் பற்றிய குறிப்புகள் முடிந்து போகின்றன. பேராசிரியர் ஜெயசேகர் (System Jaya) போன்றோர் திருக்பலம் கணிதம் பற்றி மாறுபாடான பார்வைகளை கொண்டுள்ளனர். புரிதல் மாறுபாட்டின் காரணமாக தற்கால சட்பல கணிதத்தில் குழப்பமும் பல பிழைகளும் ஏற்பட இந்தக் குறைவான விளக்கம் இடம் தந்ததைப்போல தோன்றுகிறது.

காளிதாசரின் உத்தர காலாமிர்தம் நூலில் (பக்கம் 71-74) திருக்பலம் கணிதம் பற்றி கூடுதல் விளக்கங்கள் உள்ளன.

கிரகப் பார்வைகளின் புள்ளியியல் பார்வை பற்றி முந்தைய ஒரு கட்டுரையில் (T029) விரிவாக விளக்கியுள்ளேன். அதில் செவ்வாய், குரு மற்றும் சனி ஆகியவற்றின் சிறப்பு பார்வைகளை புள்ளியியல் ரீதியாக எப்படி பார்க்கலாம் என்று அறிந்தோம். அந்தக் கட்டுரையில் நான் விளக்கம் சொன்ன படம் கீழே உள்ளது.

பார்வை, திருக்பலம்
கிரக சிறப்பு பார்வைகள்

நடைமுறையில் இது போன்றே பெரும்பாலான ஜோதிடர்களால் தோராயமாகவே பலன் சொல்லப்படுகிறது.

எல்லா கிரகங்களுக்கும் 7ஆம் பார்வை மற்றும் சில சிறப்பு பார்வைகளை பராசரர் வரையறை செய்த போதும் கிரகங்கள் 1, 11 & 12 தவிர்த்த பிற 9 ராசிகளிலும் (கிரகம் நின்ற பாகையில் இருந்து 0-30, 150 மற்றும் 300-360 பாகைகள் தவிர்த்து) தங்கள் பார்வையை (ஸ்புட திருஷ்டி) மாறுபாடான அளவுகளில் செலுத்துவதாக பராசரர் பார்வை பலத்தை பற்றி தெளிவான விளக்கம் தந்துள்ளார்.

சுலோகங்களின் வரிசை அடைப்படையில் பார்த்தால், பார்வை பலம் (ஸ்புட திருஷ்டி) பற்றி ஒரு முழு அத்தியாயமே (பராசர பிருஹத் ஹோரா சாஸ்த்ரா, சாகர் பதிப்பகம், தொகுதி 1, அத்தியாயம் 28 பக்கம் 359 முதல் 384 வரை) சட்பலத்துக்கு முந்தைய அத்தியாயமாக வைக்கப்பட்டுள்ளது. ஒரு கிரகம் தனது 1, 6, 11 மற்றும் 12 ஆம் வீடுகளை பார்ப்பதில்லை என்ற அமைப்பில் பார்வை பலம் அந்த அத்தியாயத்தில் பொதுவாக வரையறை செய்யப்பட்டுள்ளது.

பார்வைகள் ஒரு கிரகம் நின்ற பாகை (ஸ்புட) அளவில் இருந்து  கணக்கிடப்படுகின்றன. நின்ற ராசி அளவில் பார்வைகள் வரையறை செய்யப்படவில்லை. ஒரு ராசியில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தால் அவை கிரக சேர்க்கை என்ற வேறுவகை மாறி வகையில் (கிரகம் + கிரகம் சார்ந்த யோகங்கள்) வரும்.

கிரகம் உள்ள ராசியில் அதற்கு பார்வை பலம் கிடையாது என்றே இதன் மூலம் நமக்கு விளங்குகிறது.

கிரகம் நின்ற பாகை பொறுத்து குறிப்பிட்ட பாகை தூரங்களில் உள்ள கிரகங்கள் பெறும் ஸ்புட திருஷ்டி மதிப்புகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இது நேர்கோட்டு சமன்பாட்டில் (linear equation) அமையாமல், வெவ்வேறு வீடுகளுக்கு மற்றும் பாகைகளுக்கு வெவ்வேறு அளவாக மாறுகிறது. இதன் எல்லை 0 முதல் 60 விரூபா ஆக அமையும். அது கீழேயுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது. இது 7 கிரகங்களுக்கும் பொதுவாகும்.

திருக்பலம், கிரக ஸ்புட திருஷ்டி
திருக்பலம்: கிரக ஸ்புட திருஷ்டி

BPHS தொகுதி 1, அத்தியாயம் 28, பக்கம் 377 முதல் 384 வரை உள்ள அட்டவணையின் அடிப்படையில் இந்த வரைபடத்தை (graph) உருவாக்கி உள்ளேன். 8 பக்க தரவுகளின் தொகுப்பு இந்த ஒரு படம். ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்பது எவ்வளவு நிதர்சனம்?!

ஸ்புட கணிதம் என்பது இரு கிரகங்களின் பாகைகள் அடிப்படையில் கணக்கிடப்படுவதாகும். இதுபோன்ற ஒவ்வொரு கிரகத்துக்கும் செய்யப்படவேண்டிய ஸ்புட திருஷ்டி கணிதம் மிகவும் சிக்கலான நேரம் பிடிக்கக்கூடிய ஒன்றாகும். அதுவும்கூட, தோராயமான பார்வை அளவுகளை (ராசி அளவில்) சோதிடர்கள் பயன்படுத்தக் காரணம் ஆகும்.

இந்த படத்தை உற்றுநோக்கினால் ஒரு கிரகத்தின் பார்வை பலம் அதற்கு 172.5 முதல் 210 பாகைகள் வரை 45 முதல் 60 விரூபா என்ற அளவில் இருக்கும் என்பதை அறியலாம். இருப்பினும், கிரக பார்வையின் மதிப்புகள் 45 முதல் 60 விரூபா வரை உள்ள 7 ஆம் ராசியை மட்டும் பொதுவாக நாம் எல்லா கிரகமும் பெற்ற 7ஆம் பார்வையாக கருதுகிறோம். இதிலிருந்து முக்கால் ரூபம் பலமாவது இருந்தால்தான், அந்தப் பார்வைக்கு மதிப்பு என்பது நுட்பமாக பெறப்படுகிறது.

மேலும் காளிதாசரின் உத்தர காலாமிர்தத்தில் சனி, குரு மற்றும் செவ்வாய் ஆகியவற்றின் சிறப்பு பார்வைகளுக்கும் நிலையான (fixed values) பலம் மதிப்புகள் (சனிக்கு 3, 10ஆம் பார்வைகளுக்கு 0.75 ரூபா, குருவின் 5, 9 ஆம் பார்வைகளுக்கு 0.50 ரூபா மற்றும் செவ்வாயின் 4, 8 ஆம் பார்வைகளுக்கு 0.25 ரூபா பலம்) வரையறை செய்யப்பட்டு உள்ளன. அவையும்கூட, இந்த ஸ்புட திருஷ்டி கணித மதிப்புடன் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.

நாம் பார்த்த மாதிரி ஜாதகத்தில் (பிப்ரவரி 1976, மாலை 5 மணி) உள்ள கிரகநிலைகளுக்கான திருக்பலம் கணிதத்தின் தொகுப்பு கீழே காட்டப்பட்டு உள்ளது. சிறப்பு பார்வைகளின் இந்த கூடுதல் மதிப்புகளையும் (அட்டவணையில் வட்டமிடப்பட்டவை) ஸ்புட திருஷ்டியுடன் சேர்த்தால் வரும் கூட்டு மதிப்பு, கீழே உள்ள படங்களில் காட்டப்பட்டுள்ளது.

ஸ்புட திருஷ்டி உதாரணம்
ஸ்புட திருஷ்டி உதாரணம்

ஆஸ்ட்ரோ விஷன் லைப்சைன் (AstroVision LifeSign Report) மென்பொருளில் ஷஷ்டி அம்சத்தில் திருக்பலம் என்ற தலைப்பில் உள்ள அட்டவணை இது. 

இதில் இயற்கை சுபர்களின் பார்வைகளுக்கு சுப (நேர்மறை) திரிஷ்டியும் இயற்கை அசுபர்களின் பார்வைக்கு அசுப (எதிர்மறை) திருஷ்டியும் கணக்கிடப்பட்டுள்ளன. இறுதியாக, ஒரு கிரகம் பெற்ற மொத்த திருக்பல மதிப்பு இயற்கை சுப மற்றும் அசுப கிரக பார்வைகளின் தொகுத்த மதிப்பாக திருஷ்டி பிண்டம் கழித்து கணக்கிடப்படுகிறது.

திருக்பலம் – ஏன் சனியின் பார்வைக்கு பலம் அதிகம்?

கீழே உள்ள 3 படங்களை உற்றுக் கவனிக்கவும். இவை ஸ்புட திருஷ்டியுடன் சிறப்பு பார்வை மதிப்புகளை கூட்டிப் பெறப்பட்டவை ஆகும். இந்தப் படங்களை பார்க்கும்போது, உங்களுக்கு என்னவெல்லாம் தோன்றுகிறது? இவற்றின் அடிப்படையில் பார்வை பலம் பற்றி என்னென்ன முடிவுகளை உங்களால் எட்ட முடிகிறது? யோசித்துவிட்டு மேலே தொடரவும். 😊

திருக்பலம், சனி, கிரக ஸ்புட திருஷ்டி, சிறப்பு பார்வை பலம்
சனி: கிரக ஸ்புட திருஷ்டி + சிறப்பு பார்வை பலம்

திருக்பலம், குரு, கிரக ஸ்புட திருஷ்டி, சிறப்பு பார்வை பலம்
குரு: கிரக ஸ்புட திருஷ்டி + சிறப்பு பார்வை பலம்

திருக்பலம், செவ்வாய், கிரக ஸ்புட திருஷ்டி, சிறப்பு பார்வை பலம்
செவ்வாய்: கிரக ஸ்புட திருஷ்டி + சிறப்பு பார்வை பலம்

இந்த வரைபடங்கள் கிரக ஸ்புட திருஷ்டி மற்றும் சிறப்பு பார்வைகளின் கூட்டு பலத்தை, பாகை ரீதியாக காட்சிப்படுத்துகின்றன. இந்தப் படங்களில்  45 விரூபா பலத்துக்கு மேலே உள்ள  (படத்தில் 45 பாகை கோட்டிற்கு மேல்) இடங்களை மட்டும் கவனிக்கவும்.

தனிப்பட்ட ஸ்புட திருஷ்டி கணித மதிப்புகளுடன் கிரகம் பெற்ற சிறப்பு பார்வைகளுக்கான கூடுதல் பார்வை மதிப்புகளையும் கூட்டினால், சனியின் பார்வைக்கு குரு மற்றும் செவ்வாயைவிட மொத்த பார்வை பலம் அதிகம் உள்ளதை அறியலாம்!

அதை கீழே உள்ள உதாரணம் மூலம் விளங்கவும். மேலே உள்ள படங்களைப் (chart) பார்த்து தோராயமான ராசி எண்ணின் ஸ்புட திருஷ்டி மதிப்புகளை ஊகித்துக்கொள்ளவும்.

1) சனியின் 3 ஆம் பார்வை + 3 ஆம் ராசியின் ஸ்புட திருஷ்டி பலம் = 45 விரூபா + (குறைந்தபட்சம் 15 முதல் அதிகபட்சம் 45 விரூபா). மொத்தம் = 1 ரூபா முதல் 1.5 ரூபா வரை

2) குருவின் 5 ஆம் பார்வை + 5 ஆம் ராசியின் ஸ்புட திருஷ்டி பலம் = 30 விரூபா + (குறைந்தபட்சம் = 0 முதல் அதிகபட்சம் 30 விரூபா). மொத்தம் = 0.50 ரூபா முதல் 1.0 ரூபா வரை

3) செவ்வாய் 4 ஆம் பார்வை + 4 ஆம் ராசியின் ஸ்புட திருஷ்டி பலம் = 15 விரூபா + (குறைந்தபட்சம் = 30 முதல் அதிகபட்சம் 45 விரூபா). மொத்தம் = 0.75 ரூபா முதல் 1.0 ரூபா வரை

மேலே கொடுத்துள்ள உதாரணத்தில் சனியின் பார்வைக்கு அதிகபட்சம் 1.5 ரூபா (45+45 = 90 விரூபா) பலம் கிடைக்க வாய்ப்புள்ளது. குரு செவ்வாய்க்கு அது அதிகபட்சம் 1 ரூபா மட்டுமே! 

சனி அசுபர் என்பதால், இந்த பலம், திருக் பல கூட்டுத்தொகையில் ஒரு கிரகம் பெற்ற பலத்தில் இருந்து கழிக்கப்பட்டு விடும் (அதனை சனி பார்த்தால்). அது அந்த கிரகம் பெற்ற மொத்த பலத்தை குறைக்கும். இது கணித சமன்பாட்டில் சம்பந்தப்பட்ட கிரகத்துக்கு எதிர்மறையாக போகும் என்பதால் சனியின் பார்வை அஞ்சப்படுகிறது.

பலம் ரீதியாக, ஒரு கிரகத்தை மூன்றாம் பார்வையாக சனியும் 9ஆம் பார்வையாக குருவும் தான்இருக்கும் ராசிகளில் ஒரே பாகைகளில் இருந்து பார்த்தாலும் (இங்கே குரு – சனி சம சப்தமம் ஆக வரும்), சனி தனது வலுவான 3ஆம் பார்வை மூலம், குரு தரும் சுப (சுபம் = பலம் பெற வைக்கும்) திருஷ்டியைவிட அதிக அசுப (அசுபம் = பலம் இழக்க வைக்கும்) திருஷ்டியை அதற்கு 3இல் உள்ள கிரகத்துக்கு தரும்.

மேலே உள்ள படங்களை நீங்கள் நன்கு உற்றுநோக்கி இருந்தால், கீழ்க்கண்ட நுணுக்கமான முடிவுகளை அறியலாம். இவை யாவும் குறிப்பிட்ட கிரகம் நின்ற பாகையின் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன என்பதை ஞாபகத்தில் இருத்தவும் (ராசி அடிப்படையில் அல்ல).

  1. சனியின் மிகவும் வலுவான 3ஆம் பார்வை, அதன் 10ஆம் பார்வையைவிட அதிக தீமையை தரும் (ஒரு கிரகம் பெற்ற திருக் பலத்தை அதிகம் குறைப்பதன் மூலம்).
  2. குருவின் 9 ஆம் பார்வைக்கு 45 விரூபாவுக்கு மேலான பரவல் அதன் 5ஆம் பார்வையைவிட அதிகம். குருவின் 5ஆம் பார்வையில் முன் பாதிக்கே அதிக பலம்.
  3. செவ்வாயின் 4 மற்றும் 8ஆம் பார்வைகள் ஒரே மாதிரியான பலக்குறைவையே பார்க்கப்படும் கிரகங்களுக்கு ஏற்படுத்துகின்றன.

புள்ளியியல் பார்வையில் திருக்பலம்

புள்ளியியல் ரீதியாக திருக்பலம் எல்லைகளுக்குள் அடங்கும் தொடர்ச்சியான பரவலை உடைய ஒரு மாறி (range bound, continuously distributed variable) எனலாம். இதன் எல்லை 0 முதல் 1.5 ரூபா ஆகும். மேலும் இதிலும் 0.75 ரூபா (அல்லது 45 விரூபா) மதிப்பிற்கு மேல் மதிப்புகள் உள்ளே ராசிகள் மட்டுமே பொதுவான பலன் கூறுதலில் பயன்படுத்தப்படுகின்றன.

புள்ளியியலில் மாறி மாற்றம் (variable transformation) என்றொரு உத்தி ஒரு குறிப்பிட்ட மாறி (variable) சமன்பாட்டில் (model) அதிக மாற்றங்களை விளக்க வைக்க செய்யப்படும் உத்தியாகும் (variable transformation to capture more variability in dependent variable).

திருக்பலம் அதுபோல கிரகம் நின்ற பாகையின் அடிப்படையில் பெறப்பட்ட ஒரு மாறி மாற்றம் செய்யப்பட்ட(transformed variable), இரட்டை முகடுடைய மாறி (bi-modal transformation) ஆகும். படத்தில் இரண்டு மேடுகள் உள்ளதை கவனிக்கவும்.

A polynomial transformation of 5th order for this data for non zero values yield a R Square value of 0.6171.

திருக்பலம், மாறி மாற்றம்
திருக்பலம், மாறி மாற்றம்

அந்த மாற்றத்தின் கூடுதல் மாறியாக (additional variable) குரு, சனி மற்றும் செவ்வாய்க்கு மட்டும் சிறப்பு பார்வைகள் சேர்க்கப்பட்டுள்ளன எனலாம். இந்த சிறப்பு பார்வைகளை புள்ளியியல் ரீதியாக சமன்பாடு பிழை திருத்தும் மாறிகள் என்றும் கருதலாம் (additional variable to capture unexplained variation in the model).

இதுபற்றி இத்தொடரின் முந்தைய ஒரு கட்டுரையிலும் (T029) பூட்டு-சாவி உதாரணத்துடன் விளக்கி இருந்தேன். இப்போது அதன் அடுத்த படிநிலையை பார்ப்போம். 😊

பலன் சொல்லும் சமன்பாட்டில் கூடுதல் மாறுபாடுகளை விளக்க உதவும் கிரகப் பார்வைகளை ஒரு 12 லீவர் சாவியாக கருதினால், 7 கிரகங்களும் பெற்ற பார்வைகளின் சாவிகளும் கீழ்க்கண்டவாறு இருக்கும். இந்தப் படத்தை நன்கு கவனித்து உள்வாங்கிக்கொள்ளவும். இது கிரகப்பார்வை விடயத்தில் நீங்கள் மறக்க முடியாத படமாக ஆகப்போகிறது!

திருக் பலம், குரு, சனி, செவ்வாய், கிரக ஸ்புட திருஷ்டி, சிறப்பு பார்வை, பலம்
கிரக ஸ்புட திருஷ்டி + சிறப்பு பார்வை பலம்

இந்தப் படத்தில் கிரகப்பார்வையின் அடிப்படையில் ஒவ்வொரு சாவியும் வித்தியாசமாக இருப்பதை கவனிக்கவும்.

திருக்பலம்: ஏன் திருக்பலத்துக்கு குறைந்தபட்ச மதிப்புகள் சொல்லப்படவில்லை?

மொத்தமுள்ள 18 சட்பலத்தின் தனித்த கூறுகளில், மொத்த மதிப்பு எதிர்மறை எண்ணாக அமைய வாய்ப்புள்ள ஒரே மாறி திருக்பலம் மட்டுமே! பொதுவாக இந்திய சோதிடத்தில் இதுபோல எதிர்மறை எண்களை பயன்படுத்தும் பழக்கம் அந்தக் காலத்தில் இல்லாத காரணத்தால்தான் பிற சட்பல கூறுகளுக்கு குறைந்த பட்ச மதிப்புகளை வகுத்த பராசரர், திருக் பலத்துக்கு மட்டும் எந்த குறைந்த பட்ச அளவுகளையும் வரையறையும் செய்யவில்லை என்பது எனது வாதமாகும்.

ஒரு கட்டுரை பாகத்தில் அதிகம் எழுதினால் அதிகம் பேர் படிப்பதில்லை என்பதை உணர்ந்ததால், இந்த பாகத்தை இங்கே நிறைவு செய்கிறேன். 😊 இதுவரை பார்த்த திக்கு மற்றும் திருக் பலத்தின் தொகுத்த கூறுகளை விரைவாக ஒருமுறை அசை போடுவோம்.

கட்டுரை சுருக்கம் – சட்பலம் பாகம் 3 – திக்பலமும் திருக் பலமும்

சட்பல கூறுகளில் நான்காவதான திக்கு பலமும், ஐந்தாம் கூறாகிய திருக் அல்லது பார்வை பலமும் ஒரு கூறால் ஆன மாறிகள் (single unique variables) ஆகும்.

இவற்றில் திக்பலம் லக்கின கேந்திரம் சார்ந்தும், பார்வை பலம் கிரகம் நின்ற பாகை சார்ந்து இரட்டை முகடுடைய மாறியாகவும் (variable with bi-modal distribution) வரையறை செய்யப்பட்டுள்ளன.

சட்பல அட்டவணையில், திக்பல மதிப்புகள் ஒரு ஜாதகத்தில் அதிகம் பலம் பெற்ற திசையை அறிய பயன்படும் (கேந்திரத்தில் வரையறை செய்யப்பட்ட கிரகம் இல்லாதபோதும்!).

வெளிவட்ட கிரகங்களின் சிறப்பு பார்வைகள், கூடுதல் பலத்தை அல்லது பல இழப்பை பிற கிரகங்கள் மீது திணிக்கின்றன. சனியின் 3ஆம் பார்வை அதிக பல இழப்பை பிற கிரகங்களுக்குத் தரத்தக்கது.

பிற சட்பல கூறுகளைப்போல, திக்கு பலம் மற்றும் பார்வை பலம் என்னும் இந்த இரண்டு மாறிகளும் நவீன கால புள்ளியியல் மாதிரிகளின் (statistical models) உருவாக்கத் தத்துவங்களோடு மிகவும் அருமையாக பொருந்திப் போகின்றன.

ஒரு பெரிய உடல்நிலை கூறு ஆய்வு அறிக்கையில் (Master Health Checkup Report) ஒவ்வொரு காரணியையும் வரிவரியாக புரிந்துகொள்வதைப்போல, சட்பலம் என்னும் ஒரு பெரிய தொகுத்த அறிக்கையை நாம் மிகவும் ஆழமாக புரிந்து வருகிறோம். இதன் தொடர்ச்சியாக, இறுதியான மற்றும் மிக முக்கிய கூறாகிய சேஷ்ட பலம் (சேட்டை பலம்) பற்றி அடுத்த பாகத்தில் பார்க்கலாம். சட்பலத்தினைப் பற்றிய எனது கழுகுப் பார்வையிலான அலசலும் இன்னும் மீதமுள்ளது. அதையும் அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.

அடுத்த பாகம் சட்பலம் நிறைவு பாகமாக இருக்கலாம். சுருங்கச் சொல்லி முடித்துவிடத்தான் ஆசை. ஆனால் எழுத எழுத வளர்ந்து கொண்டே உள்ளது! எழுதிய பின்னரும் முழுதாக சொல்லிவிட்டேனா என்றும் தெரியவில்லை. அடுத்த பாகத்தில் நிறைய வானியல் மற்றும் தரவுகளின் தொகுத்த திறனாய்வுகளைத் தருவேன். தவறவிடாமல் படித்து மகிழவும். 

இதுவரை இந்தக் கட்டுரையை முழுதாக படித்தமைக்கு நன்றி!

மேலும் வளரும்!… 🙏🌷🌸🌹🌺🌻🌼

பின்னூட்டங்களும் பகிர்வுகளும் வரவேற்கப்படுகின்றன!


Feel welcome to share your comments or feedback!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This Post Has 5 Comments

  1. லட்சுமி நரசிம்மன்

    எனக்கு தங்களின் தொலைபேசி எண் வேண்டும்

  2. Balu Natarajan

    ஆழ்ந்த ஆராய்ச்சியும் கடின உழைப்பும் அறிவின் வீச்சும் தங்களின் கட்டுரையில் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இந்தத் துறையில் தெரியாததுஅதிகம் ஆதலால் இக்கட்டுரையை படித்து அறிந்து கொள்ள என்னால் இயலவில்லை. இருப்பினும் தங்களின் ஆராய்ச்சி பிரமிப்பை அளிக்கிறது.தஙகளின் ஆய்வுப் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்

    1. Ramesh

      மிக்க நன்றி பாலு ஐயா!