T012 சோதிடத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர வழிக்கற்றல்: பாகம் 1
அறிமுகம் – சோதிடம் கணக்கீடுகளில் மெல்ல மெல்ல கணினிகளின் பயன்பாட்டை ஏற்றுக்கொண்டு வருகிறது. கைபேசி செயலிகள் (Mobile Apps) அடிப்படை சோதிட கணக்கீடுகளை அனைவருக்கும் எட்டும் வகையில் எளிமை படுத்திவிட்டன. இன்னும் சில வருடங்களில் கணினி இல்லாமல், பஞ்சாங்கத்தை மட்டும் வைத்துக்கொண்டு தொழில் செய்யும் சோதிடர்கள், தொழிலில் நிலைத்து இருப்பார்களா என்பதே சந்தேகம் தான். இந்த கட்டுரை கணினிகளின் யுகத்தில், சோதிடத்தில் செயற்கை நுண்ணறிவு – சோதிடத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியை உங்களுக்கு உணர்த்தும் மற்றும் தயார்படுத்தும் ஒரு முயற்சி.
இன்றைக்கு நாம் கணினி சார்ந்து பயன்படுத்தும் பெரும்பாலான சேவைகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர வழிக்கற்றல் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. உதாரணமாக, உங்களுக்கு தெரிகிறதோ இல்லையோ, நீங்கள் பயன்படுத்தும் முகநூல், கூகுள் உதவியாளன் (Google Assistant), சிரி (Siri), கார்ட்டானா (Cortana), அலெக்சா(Alexa) போன்றவை யாவும் ஒரு பயனாளியை பற்றி தொடர்ந்து கவனித்துக்கொண்டே / கண்காணித்துக்கொண்டே இருக்கின்றன. இதன் மூலம் ஒரு பயனாளியைப்பற்றி அவை கொஞ்சம் கொஞ்சமாக நன்கு புரிந்துக்கொண்டு, அந்த நபருக்கு மிகவும் பொருந்தும் வரையில் இலகு படுத்தும் தெரிவுகள் மற்றும் வியாபார சேவைகளை அளிக்க முன்வருகின்றன.
அவை உங்களுக்கு உண்மையிலேயே உங்கள் நலம் சார்ந்ததா அல்லது உங்கள் பர்ஸை பதம் பார்க்குமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்பது வேறு விடயம். எடுத்துக்காட்டாக, நீங்கள் முகநூலில் உலாவும் போது, நீங்கள் என்றோ தொடர்பில் இருந்த ஒரு பழைய நண்பரின்/ நபரின் பக்கத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்தி, இவருடன் நண்பராக முகநூலில் இணைகின்றீர்களா என பரிந்துரை செய்வது ஒரு சௌவுகரியமான சேவை. இது உங்களுக்கு பலநேரம் தேவையாகவும் இருக்கலாம். அதுவே, உங்கள் பெயரை நீங்கள் முகநூலில் யார் கண்ணில் சிக்காமல் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்களா, அவர்களிடம் உதவி செய்கிறேன் பேர்வழி என்று போட்டுக்கொடுத்தால் சோலி முடிஞ்ச மாதிரிதான். இது போன்ற உருப்படியான சேவையில், பெரிய வியாபார உந்துதல் எதுவும் உடனடியாக இல்லை.
அதுவே, நீங்கள் அமேசானில் ஒரு பொருளை வாங்க முயலும் போது, அமேசான் உங்களது பழைய கூகிள் தேடல்களையும் இணைத்து அதன் அடிப்படையில் உங்களுக்கு ஒரு பொருளை உங்கள் தேடலில் வரிசைப்படுத்தும் போது, அது முழுக்க முழுக்க உங்கள் நலம் சார்ந்து மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
அமேசான் தங்களுக்கு எந்த பொருளை விற்றால் அதிக லாபமோ அதைத்தான் உங்களுக்கான தேடுதலில் முதலில் வரிசைப்படுத்துவார்கள். இங்கு வியாபார நோக்கமே முன்னிலை பெறும். நான் மேற்சொன்ன உதாரணங்களில் இருந்து உங்களுக்கு செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டின் இரு பக்கங்களும் புரிந்திருக்கும் என நம்புகிறேன்.
அதெல்லாம் சரி.
- இதற்கும் சோதிடத்திற்கும் என்ன சம்பந்தம்?
- சோதிடம் பெரிய கடல் ஆயிற்றே?
- ஏகப்பட்ட முறைகள், ஒவ்வொரு முறையிலும் எண்ணற்ற கணக்கீடுகள், விதிகள், விதி விலக்குகள் சோதிடத்தில் உள்ளதே!
- சோதிடம் மறைபொருள், சூட்சுமம் நிறைந்த சாத்திரம் ஆயிற்றே?
- ஏகப்பட்ட தனித்துவம் உள்ள துறை ஆயிற்றே? இதற்கு போய் இந்த தொழில்நுட்பத்தினை எப்படி பயன்படுத்துவது?
- இது எப்படி ஒரு தொழில் முறை சோதிடருக்கு உதவும்?
- எப்படி ஒரு ஜாதகருக்கு உதவும்?
- எதற்காக உனக்கு இந்த விபரீத ஆசை, முந்திரிக்கொட்டைத்தனம்?
என்று பல கேள்விகள் எழலாம். இந்த கட்டுரைத் தொடரில் உங்கள் கேள்விகளுக்கான விடைகளை நான் மிகவும் நேர்மையாக அளிக்க முயல்கிறேன்.
இந்த முதல் பாகத்தில் சோதிடத்தில் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் தேவையை பார்ப்போம்.
முதலில், செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன என்பதை பற்றி பார்க்கலாம். கணினிகளை மனிதர்களைப்போலவே முடிவெடுக்க பழக்குவதே செயற்கை நுண்ணறிவு இயல் ஆகும். மனிதர்கள் எப்படி ஒரு விஷயத்தை யோசிப்பார்கள், எந்த முடிவை எடுப்பார்கள் என்பதை அறிந்து, முடிவெடுக்க பயன்படுத்தும் தரவுகளையும், முடிவுகளையும் நீண்ட கால அடிப்படையில் சேமித்து வைத்து,
அதனை தரவு அறிவியலின் அடிப்படையில் தொடர்ச்சியாக பகுப்பாய்ந்து, அந்த தரவுகளின் அடிப்படையில் மனிதர்களை போலவே கணினிகளை முடிவெடுக்க பழக்குவதே செயற்கை நுண்ணறிவு ஆகும்.
அடுத்ததாக, சோதிடத்தில் இதன் தேவை பற்றி பார்ப்போம். இந்திய சோதிடத்திலேயே வேத சோதிடம் என்று சொல்லப்படும் பராசர முறை, ஜெய்மினி முறை, கே பி முறை (Stellar system), பிருகு நந்தி நாடி, சந்திர நாடி போன்ற பல நாடி முறைகள், பிரசன்னம், பஞ்ச பட்சி என பல முறைகள் உள்ளன. இந்த கட்டுரையில் நாம் பிறந்த ஜாதகம் வைத்து பலன் சொல்லும் முறைகளை மட்டும் கருதுவோம். எல்லா முறைகளும் சோதிடத்தை அதனதன் பரிமாணங்களில் தனித்துவமாக அணுகுகின்றன என்பதை நாம் ஏற்கனவே எனது முந்தய கட்டுரைகளில் பார்த்தோம்.
இப்படி சில பிரபலமான முறைகள் இருந்தாலும், இதை பயிலும் எல்லோரும் ஒரே நபர் அல்லது பள்ளியில், இந்த முறைகளை கற்பது இல்லை. பல நேரங்களில் தேடல் அதிகமாகி(!), பலரும் ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகளை கற்பதையும் பார்க்கிறோம். தனிப்பட்ட எந்த இரு நபர்களும் ஒன்று போலவே கற்பதும் இல்லை. இது போன்ற காரணங்களால், ஒருவர் சோதிடம் கற்க சற்று நீண்ட காலம் பிடிக்கிறது. அதில் சொல்லிக்கொள்ளும் அளவு தேர்ச்சி பெற மேலும் சில ஆண்டுகள் ஆக கூடும். பல சோதிட மாணவர்கள் மிகவும் ஆர்வமாக ஏதோ ஒரு உந்துதலில் சோதிட வகுப்பில் சேர்ந்து விட்டாலும், அவர்கள் சுய நம்பிக்கையுடன் தைரியமாக பலன் சொல்வதற்கு, நீண்ட காலம் எடுத்துக் கொள்கின்றனர். இது போன்ற காரணங்களால், ஒருவர் நன்கு பலன் சொல்வதை பழக இன்னும் சற்று காலம் பிடிக்கிறது. சொல்லும் பலன்கள் சரியாக உள்ளனவா என்பது வேறு விடயம்.
இந்திய மற்றும் உலக சோதிடத்தில் முக்கிய பிரச்சினையாக இருப்பது, சோதிடருக்கு சோதிடர் மாறுபடும் சோதிட பலன் உரைத்தல் ஆகும். பலன் சொல்பவரின் சோதிட அறிவு, அனுபவம், அவர் பயன்படுத்தும் முறைகள், பலன் சொல்கின்ற போது அவர் இருக்கக்கூடிய மனநிலை போன்றவற்றை பொறுத்து சொல்லப்படும் பலன்களில் பெருமளவு வித்தியாசம் வருகிறது. ஒரே சோதிடரே ஒரே ஜாதகத்திற்கு வெவ்வேறு காலகட்டத்தில் ஒரே மாதிரியான பலன்களை சொல்வது இல்லை.
ஒரு நல்ல நம்பிக்கையான சோதிடரையே உதாரணமாக எடுத்துக்கொள்வோம். அவருக்கு பலன் சொல்ல கிடைக்கும் நேரம் குறைவாக உள்ளபோது அவர் எல்லா சோதிட விதிகளையும் விலக்குகளையும் முழுதாக அலசாமல் மேம்போக்காக சிலநேரங்களில் பலன் சொல்லும்போது, அது சரியாக பொருந்தி போகாத பட்சத்தில் சோதிடத்தின் மீது மக்களுக்கு அவநம்பிக்கையை உண்டாக்குகிறது.
இதை தவிர்க்க, ஒரு சோதிடருக்கு எல்லா கணிதங்களையும் உடனடியாக தவறின்றி செய்யவும், கணக்கீடுகளின் சாரத்தை தொகுத்துக்கொடுக்கவும், ஒரு நல்ல தோழன் /இன்றியமையாத உதவியாளன் தேவை.
இன்றைய தினம் சந்தையில் உள்ள பெரும்பாலான மென்பொருட்கள் நான் குறிப்பிட்டுள்ள தேவைகளில், கணக்கீடு செய்வதை மட்டுமே அதிக பட்சமாக அளிக்கின்றன. சில மென்பொருட்களில் பலன்கள் சொல்லும் வசதிகள் அளிக்கப்பட்டாலும் அவை குறிப்பிட்ட சோதிட முறையை சார்ந்தவையே தவிர, சோதிடருக்கு சோதிடர் மாறும் தனித்துவமானவை அல்ல. நான் மேலே குறிப்பிட்டுள்ள திறன்களை உடைய ஒரு மேம்பட்ட உதவியாளன் இன்று எந்த சந்தையிலும் இல்லை. இந்த வலைப்பூவின் நோக்கமே அப்படிப்பட்ட ஒரு உதவியாளனை உருவாக்குவதை நோக்கிய பயணம் தான்.
கொஞ்சம் விருப்பு வெறுப்பின்றி கற்பனை செய்துபாருங்கள்.
- உங்களிடம் இருந்து கற்றுக்கொண்டு, அச்சு அசலாக உங்களை போலவே சோதிட பலன் சொல்ல ஒரு உதவியாளன் இருந்தால் உங்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கும்?
- அந்த உதவியாளன் உங்களை எதிர்கேள்வி கேட்காமல், உங்களிடம் இருந்து தொடர்ச்சியாக கற்றுக்கொண்டே இருப்பவனாக, நீங்கள் கேட்கும் கணக்கீடுகளை கொடுப்பவனாக, நீங்கள் ஒரு ஏற்கனவே ஒரு ஜாதகருக்கு சொன்ன பலன்களை நீங்கள் விரும்பினால் தொகுத்து அளிப்பவனாக, என்றும் இளமையாக இருப்பவனாகவும், தொடர்ச்சியாக அனுபவ முதிர்ச்சி அடைபவனாகவும் இருந்தால், உங்கள் காலத்தையும் தாண்டி என்றும் வாழும் ஆயுள் பெற்று இருந்தால், அதை விட நீங்கள் இந்த உலகத்துக்கு விட்டுச் செல்லும் பெரிய அறிவுக்கொடை வேறு இருக்க முடியுமோ?
பல தலைசிறந்த ஜோதிடர்களின் சோதிட அறிவு அவர்களின் மறைவுக்கு பின்னர் யாருக்கும் கிடைக்காமலேயே அழிந்து போய் விடுகிறது. இதுபோன்ற சோதிட ஞானத்தை நாம் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர வழிக் கற்றல் மூலம் தக்க வைத்துக்கொள்ளவும், பாதுகாக்கவும், நமது சந்ததிகளுக்கு விட்டு செல்லவும் முடியும். இதன் மூலம் ஒரு நல்ல ஜோதிடரின் ஞானம் அவரது காலம் கடந்தும் நிலைத்து நிற்கும், பின்வரும் சந்ததிகளுக்கும் உதவியாக இருக்கும்.
இப்போது நீங்கள் ஒரு ஜாதகத்துக்கு பலன் சொல்லும் போது, உங்களை போன்ற மற்றொரு சோதிடரோ அல்லது மிகவும் திறமை வாய்ந்ததாக நீங்கள் நினைக்கும் ஒருவரோ அந்த குறிப்பிட்ட ஜாதகத்துக்கு என்ன பலன் சொல்வார்கள் என்பதை நீங்கள் உடனடியாக நீங்கள் இருக்கும் இடத்திலேயே அறிந்து கொண்டால், நீங்கள் சொல்லும் பலனை மேலும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் அல்லவா?
நன்கு கட்டமைக்கப்பட்ட ஒரு செயற்கை நுண்ணறிவு அமைப்பு (system) மூலம் நாம் ஒரே ஜாதகத்துக்கு வெவ்வேறான ஜோதிடர்கள் பலன் சொன்னால் என்ன மாதிரியான பலன்கள் ஒத்திசைவாக வருகின்றன என்பதை அறிந்து கொள்ள முடியும்.
இதன் மூலம், ஒரு தொழில் முறை சோதிடரால் அவர் சொல்லும் பலன்களின் உறுதியை, மற்ற சிறந்த சோதிடர்கள் சொன்னால் என்ன பலன் வருமோ அதனுடன் ஒப்பீடு செய்துபார்த்து உடனடியாக அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் சொல்லப்படும் பலன்களில் உறுதித்தன்மை அதிகரிக்கும். இது சோதிட துறைக்கும், சோதிடர்களுக்கும் அவர்களை நம்பி வரும் ஜாதகர்களுக்கும் பெரிய வரப்பிரசாதம் அல்லவா!
இந்த அறிமுகத்துடன் இக்கட்டுரையை இங்கே நிறுத்துகிறேன். இதன் அடுத்த பாகத்தில், இன்னும் சற்று ஆழமாக இந்த தொழில் நுட்பத்தினை பகுத்து ஆய்வோம்.
இது ஒரு கூட்டு முயற்சி. உங்கள் கருத்துக்களை வெளிப்படையாக பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
தொடரும்…
Pingback: T013 சோதிடத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரவழிக் கற்றல்: பாகம் 2 – படிநிலைகள் - AI ML in Astrology