T002 சோதிடத்தில் நீண்டகால தரவு தொகுப்பின் அவசியம்

தரவு

T002 சோதிடத்தில் நீண்டகால தரவு தொகுப்பின் அவசியம்

சோதிடம் என்பது முழுக்க முழுக்க தரவு, கணித அறிவியல் சம்பந்தப்பட்ட ஒரு துறை. சூரிய குடும்பத்தில் உள்ள சூரியன் முதல் சனி வரையிலான கிரகங்கள் பூமியில் வாழும் உயிர்கள் மேல் தனது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்ற உண்மையை, கணித ரீதியாக கிரகங்களின் சுழற்சியைக் கொண்டு கணக்கிட்டு, அந்த விளைவுகளை வெவ்வேறாக வகைப்படுத்தி எல்லோருடைய மனிதரின் வாழ்விலும் பொருந்தும் வண்ணம் சுருக்கமான விதிகளாக தொகுத்து கொடுத்ததே சோதிடம் ஆகும். இதனை புள்ளியியல் ரீதியாக புரிந்து கொள்வது அவசியம் ஆகும்.

இன்றைய நவீன தரவு அறிவியலின் (data science) அடிப்படை கோட்பாடுகளாகவும் உச்சக்கட்ட வளர்ச்சியாகவும் சொல்லப்படுகின்ற பல விஷயங்களையும் நமது முன்னோர்கள் சோதிட துறையில் மிக நேர்த்தியாகவும் தெளிவாகவும், அப்படியே போகிற போக்கில் சாதாரணமாகவும் பயன்படுத்தி உள்ளனர். மிகவும் சிக்கலான கிரக நகர்வுகளை எண்களாக குறித்தால் அவற்றை எல்லோரும் எளிதாக புரிந்து கொள்ள முடியாது என்ற காரணத்தால், இந்தக் கணக்குகளின் சாரத்தை மட்டும் தொகுத்து, அவற்றை வகைப்படுத்தி, தேவையான இடத்தில் விரித்து, விதிகளையும் விதிவிலக்குகளையும் வரையறை செய்து, மிகவும் சிக்கலான மனித வாழ்க்கையின் முக்காலத்தையும் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் சுருக்கி கொடுத்ததில் இருக்கிறது நமது முன்னோர்களின் மகத்தான தரவு அறிவியல்.

அவர்களை பெரும் ரிஷிகள் என்றும் தங்கள் ஞானத்தினால் தான் அனைத்தையும் உணர்ந்து எழுதினர் என்றும் சொல்வது, அவர்களுடைய மாபெரும் கணித அறிவை கொச்சைப்படுத்துவது என்றே சொல்லவேண்டும். இன்றைய நவீன காலத்தில் இத்தனை மென்பொருள்களும் மிகவும் சக்திவாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டர்களும் வந்துவிட்ட போதும் நம்மால் சாதிக்க முடியாத பல்வேறு சிக்கலான காலக்கணித சமன்பாடுகளையும் மிக எளிதாக தீர்த்து வைத்து, அவற்றின் தீர்வுகளை பலன் சொல்லும் விதிகளாக தொகுத்துக் கொடுத்த அவர்களது கணித அறிவு மகத்தானது.

இது போன்ற விதிகளை நமது முன்னோர்கள் வரையறை செய்யும் போது அவர்கள் பலருடைய பிறப்பு ஜாதகத்தையும், ஜாதகர்களின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளையும் கணக்கில் கொண்டு, அவை அன்றைய கிரக நிலைகள் உடன் எவ்வாறு ஒத்துப்போகின்றன என்பதையும் உணர்ந்து, இந்த கிரக நகர்வுகளை, மனிதர்களின் வாழ்வுடன் தொடர்பு படுத்தி, அவற்றில் பிரதானமாக, உறுதி இட்டு கூறக்கூடிய பொது அம்சங்களை மட்டும் விதிகளாக தொகுத்து, ஒரு மாபெரும் ஒழுங்கில் கட்டமைத்து பின்வரும் தலைமுறைக்கு கொடுத்துள்ளனர். இது காலம்காலமாக கண்டிப்பாக அவசியம் முன்னேறி வர வேண்டும்.

இது அறிவுசார் துறையாக இருப்பதினால் அன்றைய காலகட்டத்தில் குறிப்பிட்ட சில சமூகத்தினர் மட்டுமே இதுபோன்ற படிப்புகளைப் படிக்க வாய்ப்பு இருந்த காரணத்தினால் இது அங்கங்கு ஒரு குழு சார்ந்த அறிவாகவே தங்கிவிட்டது.

தரவுகள் இந்தத் துறையின் முக்கியமான முக்கியமான அடிப்படை. நான் தரவுகள் என்று குறிப்பிடுவது பிறப்பு ஜாதகம் கணக்கிட தேவையான பிறந்த நாள், நேரம் மற்றும் இடம் மட்டும் அல்ல. ஒரு மனிதனின் வாழ்வில் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகளும் அந்தக் காலகட்டத்து கிரக நிலைகளும் இந்த தரவில் அடக்கம். இன்றைய கணினிகள் இதுபோல பிறப்பு ஜாதகம் கணிப்பது, கோட்சார நிலையை கணிப்பது போன்றவற்றை மிகவும் எளிமையாக மாற்றி கொடுத்துள்ளன.

இருப்பினும், அன்று நமது மூதாதையர்கள் தனிமனித வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளை எழுதி வைத்து, அதை அவர்களுக்கு சொல்லப்பட்ட விதிகளுடன் பொருத்திப் பார்த்து சரி என்றால் விதியை உறுதிப்படுத்தியும், தவறு எனில் விதியை பெரும்பாலானோருக்கு பொருந்தும்படி திருத்தம் மற்றும் முன்னேற்றம் செய்தும் சோதிட துறையை வளர்த்து வந்துள்ளனர்.

இந்தக் காலத்தில் ஜோதிடம் கற்கும் அனைவரும், அதே அளவு சிரத்தையோடு தனி மனித வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளை பதிவு செய்து அவற்றை நமது முன்னோர்கள் தந்த விதிகளோடு பொருத்திப் பார்க்கிறோமா என்பது மிகவும் பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.

ஆயிரக்கணக்கில் அல்லது லட்சக்கணக்கில் ஜாதகங்களை பார்த்திருக்கிறோம் என்று பெருமை சொல்லிக்கொள்ளும் ஜாதக துறையின் ஜாம்பவான்கள் கூட, அவர்களிடம் ஜாதகம் பார்க்க வந்த எத்தனை ஜாதகர்களின் வாழ்வியல் நிகழ்வுகளை தொடர்ச்சியாக பதிவு செய்து வைத்திருக்கிறார்கள் என்பது கேள்விக்குறியே. அப்படியே பதிவு செய்து வைத்திருந்தாலும் கூட, அவை மற்றவர்கள் சோதனை செய்ய கிடைக்குமா என்பது அதைவிட பெரிய கேள்விக்குறி.

ஜோதிட ஆரூடங்கள் அறிவியல் முறையில் நிரூபிக்கப்பட முடியாதவை என்பது ஜோதிடத்தின் மீது அறிவியல் உலகம் சொல்லும் தீராத பழியாகவே இருக்கிறது. சோதிடத்தை அறிவியல் துறைக்கும் பொருந்தும் வண்ணம் மெருகேற்றி, இத் துறையின் மீது பூசப்பட்டுள்ள களங்கத்தை நீக்க, சோதிட துறையின் பால் ஈடுபாடு கொண்டுள்ள நீங்கள் என்ன செய்யலாம் என்று இருக்கிறீர்கள்?

இன்று உலகத்தில் எத்தனையோ ஜோதிட முறைகள் வழக்கத்தில் உள்ளன. சோதிடம் தொடர்பான ஆராய்ச்சிகள் பல்வேறு தனி நபர்களாலும் தனிப்பட்ட குழுக்களாலும் செய்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அவற்றின் பெரும்பாலான நோக்கம் யாவுமே, தங்கள் தங்கள் முறையே பெரிது என்பதிலும் அதைக் கொண்டு எவ்வாறு பொருள் சேர்ப்பது என்பதிலுமே சுருங்கிப் போய்விட்டது.

ஜோதிடம் என்ற பெயரில் இன்று இணையத்தில் நடக்கும் தனிநபர் முகஸ்துதிகளும் கேலிப்பேச்சு களும் கிண்டல்களும் சோதிடத்தின் மீதான நம்பகத் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு இதில் மிகவும் மோசமான ஒரு முன்னுதாரணத்தை இப்போது ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

இன்று வழக்கத்தில் உள்ள பெரும்பாலான ஜோதிட முறைகள் யாவுமே காலம் கடந்து வந்து, அதற்கென பிரத்தியேகமான விதிகள் வழிமுறைகள் கருவிகள் கணக்கீடுகள் என்பதைக் கொண்டு ஒவ்வொன்றும் தனி விருட்சமாக வளர்ந்துள்ளன. எந்த ஒரு விஷயத்திலும் ஒரு குறிப்பிடத்தக்க அளவாவது உண்மை இல்லை எனில் அந்த விஷயம் காலம் கடந்து நிற்காது. இது அடிப்படையான விதி.

புது சோதிட முறைகள் வருவதும் இருக்கின்ற ஜோதிட முறைகளில் புதிய விதிகள் கண்டுபிடிக்கப் படுவதும் மிகவும் வரவேற்க தக்க விஷயம்தான். ஆனால் அவை யாவுமே காற்றில் மிதக்கும் வார்த்தைகளாக மட்டுமே இருக்கக்கூடாது. தங்கள் முறை அல்லது விதிதான் தான் சிறந்தது என்று முன்வைக்கும் அனைவருமே, அதற்கு சான்றாக எந்த தரவுகளை வைத்து, அந்த முடிவுக்கு வந்தார்களோ அதை பொது வெளியில் வைக்க வேண்டியது அவசியம். அந்தத் தரவுகள் அவர்களால் பொறுக்கி எடுக்கப்பட்ட தரவுகளாக இல்லாமல், பொதுஜனம் அத்தனை பேருக்கும் பொருந்தும் வகையில் இருந்தால் தான் நாம் அந்த முறை நல்ல முறை என்று ஒப்புக்கொள்ள முடியும்.

உண்மையிலேயே உங்களுக்கு சோதிடத்தின் மீது அளவுகடந்த ஆர்வமும் அதை அறிவியல் சார்ந்து முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்ற முனைப்பும் இருந்தால் நீங்கள் கண்டிப்பாக முதலீடு செய்ய வேண்டிய இடம் ஜாதகர்களை பற்றிய தொடர்ச்சியான நீண்டகால தரவுகள். இந்தத் தரவுகள் விருப்பு வெறுப்பின்றி, நம்பிக்கைக்கு உள்ள முறையில் நேர்மையாக தொடர்ந்து பதிவு செய்யப்படுதல் மிக மிக முக்கியம். ஜோதிட விதிகளை விடவும் சோதிட தரவுகள் நாம் நமது சந்ததிக்கு விட்டுச் செல்லும் மிகப்பெரிய சொத்தாக அமையும். இது தனிநபர் முயற்சியாக இல்லாமல் இப்போது ஜோதிடத் துறையில் கோலோச்சிக் கொண்டிருக்கும் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு ஒழுங்குபடுத்தி செய்ய முன்வந்தால் நாம் இந்த தரவு தொகுப்பை மிக விரைவிலேயே உருவாக்க முடியும்.

இந்த தரவுத் தொகுப்பு, சோதிடம் சார்ந்து ஆராய்ச்சி செய்யும் அத்தனை பேருக்கும் ஒரு இன்றியமையாத அடிப்படை மூலமாக அமையும். உங்கள் முறையிலான விதிகளை முன்வைக்கும்போது, இந்த தரவுகளின் அடிப்படையில் கிடைக்கும் முடிவுகளை, பின்னொரு காலத்தில் அறிவியல் சார்ந்து, புள்ளியியல் சார்ந்து உங்களால் நிரூபிக்க முடியும்.

உங்களில் எத்தனை பேர் சந்தேகத்துக்கிடமான ஒரு கலை என்று பலராலும் சொல்லப்படுகின்ற ஒரு கலையின் பிரதிநிதியாக தொடரப் போகின்றீர்கள்? உங்களில் எத்தனை பேர் சோதிடத்தின் மீது பூசப்பட்டுள்ள களங்கத்தை நீக்க, முன்வந்து முயற்சி செய்யப் போகிறீர்கள்? நீங்கள் கேள்வியின் பகுதியாக இருக்க விரும்புகிறீர்களா அல்லது பதிலின் ஒரு புள்ளியாக இருக்க விரும்புகிறீர்களா?

வளரும்…

Feel welcome to share your comments or feedback!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This Post Has One Comment

  1. P. VENKATESWARAN

    தாங்கள் கூறியவை முற்றிலும் உண்மையே. தொண்ணூறு விழுக்காடு மக்களும் சரி, அதில் கரை கன்னடதாக கூறுபவர்களும், தொடர்ச்சியான ஆறிவியல் பூர்வமான பதிவுகள் மற்றும் தரவுகள் இல்லாமல் புழுதி வாரி இறைக்கின்றனர்.
    நன்றி
    ப. வெங்கடேசுவரன்
    கவியரசு கண்ணதாசன் நகர்,
    சென்னை
    +91 9444041632