T028 காரகம் அல்லது காரகத்துவங்கள்

காரகம்

காரகம் அல்லது காரகத்துவம் – புள்ளியியல் பார்வையில் (இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 8. மகரிஷி பராசரர் முறை – பகுதி 3)

சோதிடம் மற்றும் புள்ளியியல் என்ற இருவேறு உலகங்களை இணைக்கும் பாலத்தைக் கட்டும் என் முயற்சியில், இந்தக் கட்டுரை காரகம் பற்றிய ஐந்தாம் சோதிடபாகம் ஆகும்.

இக்கட்டுரை பாகங்கள் ஒன்றோடுஒன்று தொடர்பு உள்ளவை. இவை தொடர்ச்சியாகப் படிக்கப்படும்போதே இந்தத் தொடரின் முழுவீச்சும் உங்களுக்கு புரியவரும். இந்த தொடரின் முந்தைய பாகங்களை (T024, T025, T026, T027) நீங்கள் இதுவரை படிக்கவில்லை என்றால் அவற்றை படித்தபின் இந்த பாகத்தை படிப்பது உங்களுக்கு நல்ல புரிதலை ஏற்படுத்தித்தரும்.

சில பாகங்கள் ஒரு புதுப்பட பாடலைப் போல! மீண்டும் மீண்டும் படித்தால்தான் எழுத்தின் ஆழம் புரியவரும். எனவே, எங்கேனும் சந்தேகம் வந்தால், மீண்டும் பழைய பாகங்களை புரட்டிப் பாருங்கள். உங்களுக்கு கண்டிப்பாக விடை கிடைக்கும். காரகம் பற்றிய இந்தப்பாகமும் அந்த வகையை சேர்ந்தது என்பேன். 😊

இது தரவு அறிவியல் பார்வையில் எழுதப்பட்ட சோதிடபாகம். சில இடங்களில் எனது விளக்கம் பிடிபடவில்லை எனில் மேலே கடந்து செல்லவும். நீங்கள் சோதிடர் எனில் இறுதியில் உள்ள கட்டுரைச் சுருக்கம் மட்டும் உங்களுக்குப் புரிந்தால் போதும்!

இந்த பாகத்தில் என்ன பார்க்கப் போகிறோம்?

காரகம் அல்லது காரகத்துவங்கள் போன்றவை சோதிடத்தில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் தவிர்க்கவே முடியாத சொல்லாடல் ஆகும். இந்தச்சொல் அறிவியல் ரீதியாக, படிநிலைகளாக சோதிடம் படிக்கும் எவரையும் சற்று குழப்பக்கூடியது. சோதிடம் பற்றி அறியாதவர்கள் பலரும் “என்ன கதைவிடுகிறீர்கள்?” என்று கேள்வி கேட்கும் சோதிடக் கட்டுமானக்கூறு இதுவாகும்.

மூன்று விதமான காரகத்துவங்கள் – அதாவது ராசி, பாவம் மற்றும் கிரக காரகத்துவங்கள் பராசர முறையின் முப்பரிமாணங்களின் அல்லது அங்கங்களின் அடிப்படையில் சொல்லப்படுகின்றன. காரகம் என்பது ஏதோ சிக்கலான கலைச்சொல்போலத் தோன்றினாலும் இது மிகவும் எளிமையான புள்ளியியல் ரீதியான கட்டுமானம் ஆகும். இதனைப் பற்றி இந்தப் பாகத்தில் பார்க்கப்போகிறோம்.

காரகம் பற்றிய தெளிவு, உங்களின் சோதிடம் பற்றிய தரவு அறிவியல் சார்ந்த பார்வையை கண்டிப்பாக விசாலப்படுத்தும் என்று நம்பலாம். என் கை பிடித்து நடந்து வாருங்கள். உங்களுக்கு மற்றுமொரு சோதிடக்கூறினை, தரவு அறிவியல் பார்வையில் எளிமைப்படுத்தி விளக்குகிறேன்.

காரகம் என்றால் என்ன?

தண்டியலங்காரம் என்ற நூல் காரகம் என்ற சொல்லை “செயலை இயற்றுவிப்பது” என்று வரையறை செய்கிறது

காரகம் என்பது செயல், காரணத்துவம், கருவி, வினைமுதல் போன்றவற்றை குறிக்கிறது. காரகன் என்ற சொல் “செயல்படுத்துபவர்” என்று பொருள்படும். காரகம் என்ற பதம் புள்ளியியல் ரீதியாக ஒரு விளைவுக்கான (effect – dependent variable(s)) காரணி(களை) அல்லது அதன் கர்த்தாக்களைக் (causing factor(s) – independent variable) குறிக்கிறது.

ஒரு உதாரணத்தின் மூலம் காரகத்தை பொதுப்பார்வையில் விளங்க முற்படுவோம்.

காரகம் – ஒரு நடைமுறை உதாரணம்

ஒரு மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளை நமது உதாரணமாக எடுத்துக்கொள்வோம். அவர்களைப் பற்றிய தரவுகள் (data) அனைத்தும் உங்களிடம் உள்ளன என்று எடுத்துக்கொள்வோம்.

அதாவது, முந்தைய ஆண்டுகளில் தேர்வு எழுதிய மாணவர்களின் தரவுகள் (பாலினம், கல்வியில் பொதுவான ஈடுபாடு), பள்ளி விபரம் (அரசு அல்லது தனியார் பள்ளி, ஆசிரியர் விபரங்கள், ஆசிரியர் தரம்), பெற்றோர் விபரங்கள் (கல்வி, பொருளாதார நிலை) போன்ற பல தகவல்கள் மற்றும் அந்த மாணவர்கள் 10ஆம் வகுப்பு மற்றும் முந்தைய வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் விபரங்கள் அனைத்தும் உங்களிடம் உள்ளன என எடுத்துக்கொள்வோம்.

இப்போது இந்தத் தரவுகளை வைத்துக்கொண்டு நீங்கள் பொதுவான சில விஷயங்களை தொடர்புப்படுத்திச் சொல்லவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். நீங்கள் இந்தத் தரவுகளை எந்தெந்தக் கோணங்களில் எல்லாம் திறனாய்வு (analysis) செய்வீர்கள்? என்னவெல்லாம் பொதுவாக சொல்ல முடியும் என்று நினைக்கின்றீர்கள்? எவற்றையெல்லாம் தொடர்புபடுத்திப்பார்க்க முடியும்?

என் அணுகுமுறை

உங்களிடம் உள்ள தரவுகளை சரியாக மற்றும் போதுமான திறனாய்வு (data analysis) செய்யும் பட்சத்தில் உங்களால் கீழ்கண்ட கோணங்களில் (perspectives) தொடர்புகளைச் சொல்ல முடியும்.

  1. மாணவர்களின் தேர்ச்சிக்கும் பாலினத்திற்கும் உள்ள தொடர்பு: – உதாரணமாக, பெண் பிள்ளைகளின் தேர்ச்சி சதவீதம் ஆண்களை விட X% அதிகம். எனவே, ஒருவரின் பாலினம் என்ற காரணி, தேர்ச்சி விகிதம் என்ற விளைவை பாதிக்கிறது.
  2. பள்ளி (அரசு மற்றும் தனியார்) அளவிலான தேர்ச்சிவிகித வேறுபாடுகள்: உதாரணமாக, தனியார் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் அரசுப்பள்ளிகளை விட அதிகம் இருக்கும். எனவே, ஒருவர் படிக்கும் பள்ளியின் வகை என்ற காரணி, தேர்ச்சி விகிதம் என்ற விளைவை பாதிக்கிறது.
  3. கிராமப்புற மற்றும் நகரப்பள்ளிகளின் தேர்ச்சி அளவுகள்: உதாரணமாக, நகர்ப்புற பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம், கிராமப்புற பள்ளிகளைவிட அதிகம் இருக்கும். எனவே, ஒருவர் படிக்கும் ஊரின் வகை என்ற காரணி, தேர்ச்சி விகிதம் என்ற விளைவை பாதிக்கிறது.

மேலே பார்த்தவை எல்லாம் நேரடியான ஒருபரிமாண அளவிலான திறனாய்வுகள். நாம் பார்த்த இந்த உதாரணத்தில் பாலினம், பள்ளியின் வகை, ஊரின் வகை போன்றவை காரகக் கூறுகள் எனலாம். தேர்ச்சி விகிதம் என்பதை விளைவு எனலாம்.

அவற்றையே, நாம் இன்னும் சற்று ஆழமாக கீழ்க்கண்ட இருபரிமாணத்தில் அலசலாம். உதாரணமாக:

பள்ளி இடம் மற்றும் பாலினம் சார்ந்த தேர்ச்சி அளவுகள்: அதாவது கிராமப்பள்ளிகளின் ஆண்கள், கிராமப்பள்ளிகளின் பெண் குழந்தைகள், நகரப்பள்ளிகளின் ஆண் பிள்ளைகள் மற்றும் நகரப்பள்ளிகளின் பெண் குழந்தைகள் என நான்காக பிரித்து, தேர்ச்சி விகிதம் மற்றும் பாடங்களில் பெற்ற சராசரி மதிப்பெண்கள் போன்றவற்றில் உள்ள வேறுபாடுகளை ஆராயலாம்.

இதனையே நாம் மேலும் ஆழமாக முப்பரிமாணத்திலும் அலசலாம். உதாரணமாக:

ஊரின் வகை, பள்ளி இடம் மற்றும் பாலினம் சார்ந்த தேர்ச்சி அளவுகள்: அதாவது கிராமப்புற அரசுப்பள்ளிகளின் ஆண்கள், கிராமப்புற  அரசுப்பள்ளிகளின் பெண்கள், கிராமப்புற தனியார் பள்ளிகளின் ஆண்கள், கிராமப்புற தனியார் பள்ளிகளின் பெண்கள், நகர்ப்புற அரசுப்பள்ளிகளின் ஆண்கள், நகர்ப்புற அரசுப்பள்ளிகளின் பெண்கள், நகர்ப்புற தனியார் பள்ளிகளின் ஆண்கள், நகர்ப்புற தனியார் பள்ளிகளின் பெண்கள்… என்று விரித்துக்கொண்டே போகலாம். அதுபோன்ற ஒவ்வொரு தொகுப்பிற்கும் தேர்ச்சி விகிதம், மதிப்பெண் அளவுகள் போன்றவற்றை ஆராயலாம்.

இதில் தேர்ச்சி, மற்றும் பெற்ற மதிப்பெண் போன்ற விளைவுகளை பாலினம், ஊரின் இடம், பள்ளியின் வகை போன்ற காரகங்களுடன் (அதாவது காரணிகளுடன்) இணைத்து தனித்தனியாக தொடர்பை சொல்ல முடியும். இந்த காரகங்கள் தனித்தனியாக விளக்குவதைவிட பல பரிமாணங்களையும் இணைத்து சொல்லும்போது நம்மால் துல்லியமாக தேர்ச்சிவிகித மற்றும் மதிப்பெண் வித்தியாசங்களை அறியவும் விளக்கவும் முடியும். இந்த தொகுப்பை வைத்துக்கொண்டு நாம் தோராயமாக எந்த ஒரு மாணவரின் தேர்ச்சி மற்றும் சராசரி மதிப்பெண்களை, குறைந்த தரவுகளை வைத்துக்கொண்டே கணிக்க முடியும்.

உதாரணமாக, பொதுவாக ஒரு நகர்ப்புற தனியார் பள்ளியில் படித்த பெண் பிள்ளையின் தேர்ச்சி அளவும், அவர் ஆங்கிலப் பாடத்தில் பெற்ற மதிப்பெண்களும் ஒரு கிராமப்புற அரசுப்பள்ளியில் படித்த ஆண் மாணவரை விட பெரும்பாலும் அதிகமாக இருக்கக்கூடும். இதனுடன் மாணவரின் பொருளாதார நிலையையும் சேர்த்தால் நம்மால் ஒரு மாணவரின் தோராயமான தேர்ச்சி மற்றும் ஆங்கில மதிப்பெண்களை சொல்லிவிட முடியும் இல்லையா? இதுபோல காரணிகளின் பலவித இணையும் புள்ளிகளை வைத்துக்கொண்டு விளைவை அனுமானிக்க முடியும் அல்லவா?

சோதிடமும் இதுபோன்ற ஒரு அமைப்பையே பின்பற்றுகிறது. அதனைப்பற்றி காரகத்துவங்கள் என்ற இந்தச்சோதிடக் கட்டுமானத்தின் ஊடாக விரிவாகப் பார்ப்போம்.

சோதிடக் கட்டுமானம் #6: காரகம் அல்லது காரகத்துவம்  

இந்த சோதிடக் கட்டுமானக்கூறு பராசரர் முறையின் கீழ்வைத்துச் சொல்லப்பட்டாலும், இது அனைத்து சோதிடமுறைகளுக்கும் பொதுவான ஒரு கட்டுமானக்கூறு ஆகும். பயன்படுத்தும் சோதிடமுறையை பொறுத்து, சிறு மாறுபாடுகள் விளக்கங்களில் இருக்கலாம். கட்டுமான தத்துவம் அடிப்படையில் ஒன்றே!

காரகத்துவங்களை புரிந்துகொள்ளும் முன்னர் சோதிடத்தில் பலன்கள் எவ்வாறு சொல்லப்படுகின்றன என்று பார்க்கலாம். நீங்கள் ஒரு சோதிடரிடம் திருமண ஆலோசனை பெறவேண்டிப் போகும்போது, அவர் உங்கள் ஜாதக குறிப்புகளைப் பார்த்தவுடன் சில சோதிட சொல்லாடல்களுடன் உங்களுக்கு பலன்களை சொல்வார்.

உதாரணமாக, 7ஆம் வீட்டின் அதிபன் லக்கினத்தில் அமர்ந்து இருப்பதால் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகம் ஆகிய நபர் வாழ்க்கைத்துணையாக அமையும் என்று சொல்வார். மற்ற அமைப்புகளும் நன்றாக இருக்கும் பட்சத்தில் வரன் உங்களைத் தேடி வரும் என்றும் சொல்வார். இவை பாவகம் சார்ந்த காரகத்துவங்கள்.

இதனுடன் களத்திரகார கிரகங்கள் என்று சொல்லப்படும் செவ்வாய் மற்றும் சுக்கிரனின் நிலையும் ஜாதகத்தில் கவனிக்கப்படும். அவற்றைப் பொறுத்து தனியான பலன்கள் சொல்லப்படும். உதாரணமாக, ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் வக்கிரம் ஆகி இருந்தால் ஜாதகருக்கு அவரைவிட சற்று முரண்பாடான குணமுடைய கணவர் அமைய வாய்ப்பு அதிகம். இதுவே பையனின் ஜாதகத்தில் நல்ல நிலையில் சுக்கிரன் உச்சம் பெற்று இருந்தால், ஜாதகருக்கு அருமையான மனைவி அமையும். இது போன்றவை கிரகம் சார்ந்த காரகத்துவ பலன்கள் ஆகும்.

அடுத்ததாக, ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் குறிப்பிட்ட ராசிகளில் இருந்தால் வரப்போகும் கணவரின் குணாதிசயங்களை அடையாளம் கண்டுசொல்ல முடியும். அதுபோல பையன் ஜாதகத்தில் சுக்கிரன் எந்த ராசியில் மற்றும் நட்சத்திரத்தில் உள்ளது என்று அறிவதன் மூலம் தனித்துவமான பலன்களை சொல்லமுடியும். இதுபோன்ற கிரகம்நின்ற ராசியை வைத்துச் சொல்லப்படுபவை ராசி காரகத்துவங்கள் ஆகும்.

இதற்கு அடுத்த நிலையில், இந்த மூன்று பரிமாணங்களின் தனிப்பட்ட பலன்களையும் இணைத்து பலன்களை கோர்வையாகத் தொகுத்துச் சொல்லும்போது, ஒரு ஜாதகருக்கு அவர் அறியவிரும்பிய விடயங்களின் விஸ்தீரணம் காட்டப்படலாம்.

இந்த உதாரணத்தில் சோதிடர் பயன்படுத்தும் “7ஆம் அதிபதி” என்பது பாவம் சார்ந்த ஒரு காரகக் கூறு (காரணி). அது 1ஆம் இடத்தில் இருப்பது என்பது அந்த காரணியின் நிலை (மதிப்பு). அதன் பலனாகிய ‘ஏற்கனவே அறிமுகமாகியவர் வாழ்க்கைத்துணை’ என்பது ஏற்கனவே தரவுகளின் மூலம் உறுதி செய்யப்பட்ட ஒரு முடிவு. இதைப்போல சொல்லப்படும் ஒவ்வொரு பலனின் பின்னரும், ஒரு காரணியும் (அல்லது பல காரணிகளும்), அதன் மதிப்பும் அதன் பிற காரணிகளுடனான தொடர்பும் மறைந்து உள்ளன.

புள்ளியியல் பார்வையில் காரகத்துவங்கள்

சோதிடத்தில் காரகத்துவங்கள் என்பது விளைவுகளையும் அதன் காரணிகளையும் இணைத்து வைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட தொகுப்பு (Catalogue) ஆகும். மனிதரின் வாழ்க்கையில் நிகழும் அனைத்து உயிர் சார்ந்த மற்றும் பொருள் சார்ந்த விடயங்களையும் மொத்தமாக ஒரு பட்டியல் எடுத்தால், அவற்றில் உள்ள தனித்துவமான விடயங்களை, சோதிடத்தின் அங்கங்கள் ஆகிய கிரகம், ராசி மற்றும் பாவகம் ஆகியவற்றின் எந்தெந்த மதிப்புகளுடன் தொடர்புப்படுத்த முடியும் என்பதன் சுருக்கமான வினை-விளைவுகள் தொகுப்பே காரகத்துவங்கள் எனலாம். It serves as an catalogue of different matters under study and serve as a clue to their causal factors.

இந்த மாபெரும் தொகுப்பை எளிமையாக மூன்று பரிமாணங்களில் தொகுத்துத் தந்ததில் இருக்கிறது சோதிடத்தை உண்டாக்கிய ஞானிகளின் அறிவின் மேன்மை. கல்யாணமா? 7ஐ பார், களத்திர காரகனைப் பார், 7ஆம் அதிபன் அல்லது கிரகம் நின்ற ராசியை பார் என்று எளிதில் அலசி முடிவெடுக்கும் வண்ணம் சுருக்கிச் சொன்னதில் ஒளிந்துள்ளது மாபெரும் கணித மேன்மை.

ஒரு சோதிடர் உங்களுடன் ஒரு 20 நிமிடம் பலன் சொல்ல அமரும்போது, அவர் கிட்டத்தட்ட 300 முதல் 500 வகையிலான காரகத்துவத் தொடர்புகளை அலசிவிட்டுத்தான் உங்களுக்கு விதவிதமான தனித்த பலன்களைத் தொகுத்துச் சொல்வார். சோதிட அங்கங்களின் காரகத்துவங்கள் என்ற அறிவு, பலன் சொல்லத் தேவையான காரணிகளை பொறுக்கிஎடுத்து ஆராய உதவுகிறது.

முதல்நிலை காரகங்களும் பெறப்பட்ட காரகங்களும்

சோதிடத்தில் கிரகங்களே மிகவும் முதலான அடிப்படை ஆகும். ராசிகளும், பாவகமும் அதன் பின்னே வருகின்றன.

காரகத்துவங்கள் என்ற இந்த காரண – காரியங்களின் அறிவுத்தொகுப்பு, தத்துவம் சார்ந்த கணித கட்டுமான (mathematical constructs) அடிப்படையிலும் மற்றும் தரவுகளின் திறனாய்வின் (data analysis) அடிப்படையிலும் உண்டாக்கப்பட்டு இருக்கலாம். இந்தக் கூற்றை சற்று விளங்க முற்படுவோம்.

கிரக காரகத்துவங்கள் முதல்நிலை தத்துவம் சார்ந்த காரகங்கள் எனலாம். உதாரணமாக, பராசரர் முறையில் குரு அல்லது வியாழன் கிரகத்துக்கு சில மனிதப் பண்புகளை, குணங்களை, உறவுகளை மற்றும் பொருட்களை சம்பந்தப்படுத்தியது ஒரு முதல்நிலை தத்துவம் சார்ந்த கணித கட்டுமானம் ஆகும்.

கிரக காரகங்களை பொது மற்றும் தனித்துவமான குணாதிசயங்களின் கலவை எனலாம். இவை ஞானிகளால் ஒரு கணித கட்டுமானத்தின் அடிப்படையாக வரையறை செய்யப்பட்டவை ஆகும். இவற்றை உருவாக்க தரவு திறனாய்வு மற்றும் காரணம் தேவை இல்லை. இந்த காரகக்கூறுகள் தனித்துவமாகவும் எளிதில் விளங்கும் வண்ணமும் இருக்கவேண்டும் என்பது மட்டுமே முக்கியம்.

இவை சொல்லப்படும் சோதிட முறை சார்ந்து மாறக்கூடியவை. தனித்துப்பார்த்தால் இவற்றிற்கு எந்தப் பொருளும் கிடையாது. ஆனால் நம்மில் பலரும் இவற்றை தனித்தும் பயன்படுத்துகிறோம். அவற்றை நம்பி அதிகமாக பயப்படவும் செய்கிறோம்.

உதாரணமாக, பராசரர் முறையில் குரு குழந்தையை குறிக்கும், லக்கினம் ஜாதகரைக் குறிக்கும். அதுவே பிருகு-நந்தி நாடியில், லக்கினத்திற்கு பதிலாக குருவினை ஆண் ஜாதகருடன் இணைத்துச் சொல்வதை இதற்கு ஆதாரமாக சொல்லலாம். பராசரர் முறையில் சனியைப் பார்த்து பயப்படும் அளவுக்கு பிருகு-நந்தி நாடியில் சனி பற்றி பயம் கொள்ளத் தேவையில்லை!😊

பெறப்பட்ட காரகத்துவங்கள்

இதற்கு அடுத்த நிலையில் உள்ள ராசி, பாவக காரகத்துவங்களை திறனாய்வின் (data analysis) அடிப்படையில் பெற்றவை எனலாம். உதாரணமாக 6, 8, 12 என்ற பாவகங்கள் மற்றும் அந்த மறைவிடங்களில் உள்ள கிரகம் நேர்மறையான பலன்களை செய்வதில்லை என்ற விளக்கம் தரவுகளின் திறனாய்வின் அடிப்படையில் பெறப்பட்டதாக இருக்கக் கூடும். இதிலும் பாவகம் என்ற கணித கட்டுமானம் மீதும் கிரக காரகத்துவங்கள் என்ற பலன்கள் ஏற்றப்பட்டு உள்ளன.

இதனை ஒரு உதாரணம் மூலம் விளங்குவோம்.

ஒரு மொத்த ஜனத்திரளைப் பற்றிய அனைத்து விபரங்களும் நம்மிடம் இருப்பதாக கொள்வோம். இப்போது இந்த தொகுப்பில் உள்ள மனிதர்களை விதவிதமாக குணங்களின் அடிப்படையில் வகைப்படுத்த முடியும் அல்லவா? உதாரணமாக,  நல்லவர் / கெட்டவர், நேர்மையானவர் / நேர்மை அற்றவர், மென்மையானவர் / முரடர், நன்கு சாப்பிடக் கூடியவர் / நல்ல உணவு சரியாக கிடைக்காதவர், இனிமையாக பேசக்கூடியவர் / கடுஞ்சொல் பகலுபவர், நம்பத்தகுந்தவர் / துரோகி, குடும்பஸ்தன் / ஒண்டிக்கட்டை என்று தனித்தனியாக வகைப்படுத்த முடியும் என்று எடுத்துக்கொள்வோம்.

இப்போது இதுபோன்ற தனித்த குழுக்களின் அனைத்து ஜாதகங்களையும் எடுத்துக்கொண்டு அவர்களின் ஜாதகத்தில் ஒன்பது கிரகங்களும் எங்கே அமைந்துள்ளன என்று பார்ப்பதாக எடுத்துக்கொண்டால், ஒவ்வொரு கிரகம் நின்ற ராசியையும் வைத்துக்கொண்டு நம்மால் தொடர்புகளை தொகுக்க முடியும்.

சூரியன் மேஷத்தில் இருந்தால், மிதுனத்தில் இருந்தால், குரு கன்னியில் இருந்தால், சனி மீனத்தில் இருந்தால் என்பது போன்ற பொதுவான பலன்கள் இதுபோன்ற ராசி மற்றும் ஒரு கிரகம் உடனான தொடர்புகளின் அடிப்படையில் பெறப்பட்டவை ஆகும்.

இதுபோலவே, இந்த தரவுகளை பாவகம் என்ற அடுத்த பரிமாணத்தில் பார்க்கும்போது, லக்கினாதிபதி இரண்டில் இருந்தால், லக்கினாதிபதி 7இல் இருந்தால், 6ஆம் அதிபதி 12இல் இருந்தால், லாபாதிபதி அஷ்டமத்தில் இருந்தால் என்ன பலன் என்பது போன்றவை ஏற்கனவே நம்மிடம் உள்ள தரவுகளின் அடிப்படையில் பெறப்படலாம்.

ராசிகளின் தனித்துவமான கட்டுமானம்

ராசிகளின் குணங்களாக சில தத்துவம் சார்ந்த தனித்துவமான கட்டுமானக் கூறுகளும் கட்டமைக்கப்பட்டு உள்ளதால், அந்த ராசிகளின் தத்துவங்களையும் இணைத்து பலன் சொல்லும் போது நபருக்கு நபர் மாறும் நுணுக்கமான பலன் வித்தியாசங்களை சொல்ல முடிகிறது.

உதாரணமாக, ராசி மண்டலத்தை காலபுருஷ தத்துவத்தின் அடிப்படையில் 12 ஆகப் பிரித்து அவற்றை மனித உடலின் தொடர்ச்சியான பாகங்களாக அடையாளம் கண்டுள்ளனர். இந்த 12 தனித்த ராசிகளை ஆண்/பெண் ராசி என்று இருவகை கூறுகளாக பிரித்து உள்ளனர். அதுபோலவே, சரம், திரம், உபயம் என்று இயக்கத்தின் அடிப்படையில் 3 வகையாக குறித்துள்ளனர். அதுபோலவே, பஞ்சபூத தத்துவ அடிப்படையில் நெருப்பு, நிலம், காற்று மற்றும் நீர் என 4 வகைகளாக கூறுபோட்டுள்ளனர்.

ஒவ்வொரு ராசிக்குள்ளும் விரவியுள்ள நட்சத்திரங்களை ஒரு குறிப்பிட்ட கிரகத்துடன் அதிபதியாக இணைத்தும் உள்ளனர். இதுபோன்ற தனித்துவமான, பலவித அடுக்குகளாக ராசிகளை பார்க்கும்போது ஒவ்வொரு ராசியும் மற்றும் அவற்றின் உள்ளடக்கமாகிய நட்சத்திரங்களும் அவற்றின் பாதங்களும் தனித்துவம் பெறுகின்றன. சில கிரகங்களுக்கு இரண்டு ராசிகள் ஒதுக்கப்பட்டு இருந்தாலும், எந்த ஒரு ராசியும் மற்றதைப்போல இல்லவே இல்லை!

இவற்றுடன் நிலையான காரகங்கள் வரையறை செய்யப்பட்ட 9 கிரகங்களையும் இணைத்து சொல்லும்போது, ராசி அளவிலான பொது பலன்களையும் நட்சத்திர அளவிலான ஆழ்ந்த பலன்களையும் எளிதில் இணைத்துச் சொல்லிவிட முடிகிறது.

சுருக்கமாக சொல்வதானால், கிரக காரகங்கள் ஒரு கட்டுமானத்தை உருவாக்க கொடுக்கப்பட்ட முதல்நிலை காரகங்கள் ஆகும். அவற்றின் நேரடியான அர்த்தங்கள் விளக்க முடியாதவை. உதாரணமாக, செவ்வாய் கிரகம் சகோதரம், பெண்களுக்கு கணவர், காலி நிலம், சொத்துக்களுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. ஏன் இப்படி கொடுக்கப்பட்டது என்று கேட்டால் அதற்கு நேரடியான புள்ளியியல் ரீதியிலான பதில் கிடையாது. புள்ளியியல் ரீதியாக இவற்றை பெயரளவு மாறிகள் (nominal variables) என்று அழைக்கலாம்.

அதுபோலவே, ராசி மண்டலக் கட்டமைப்பும் புள்ளியியல் காரணங்களுக்கு அப்பாற்பட்டவை ஆகும். சந்திரனுக்கு ஏன் கடகராசி ஒதுக்கப்பட்டது? மேஷம் ஏன் தலைப்பகுதி ஆகும்? ஏன் ஒரு குறிப்பிட்ட ராசிக்கு ஒரு அதிபதி அடையாளம் காணப்பட்டு உள்ளார்? ஏன் சில கிரகங்களுக்கு மட்டும் இரண்டு ராசிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன என்பனவற்றுக்கு புள்ளியியல் சார்ந்த காரணங்களை சொல்ல இயலாது.

இவை மேற்கொண்டு உருவாக்கும் மாறிகளின் மதிப்புகளே நமக்கு புள்ளியியல் கணிதத்தில் தேவைப்படுகின்றன. இவற்றிற்கு சோதிடரீதியான மற்றும் மனித வாழ்க்கையுடன் மற்றும் உடல் பாகங்களுடன் தொடர்புடைய விளக்கங்கள் பல இருக்கின்றன. நேரடியான புள்ளியியல் காரணங்கள் மட்டும் கிடையாது.

இதுபோன்ற பெயரளவு மாறிகள் (nominal = assigned variables and values), பிற கட்டுமானக்கூறுகளுடன் தொடர்புபடும்போதே அதன் அர்த்தம் விளங்கும். இதுபோன்ற முதல்நிலை ராசி, கிரக காரகத்துவம் பெரும்பாலான இந்திய முறைகளில் பெருமளவில் ஒத்தும் இருக்கின்றன என்பது சிறப்பு ஆகும். பாவகம் மட்டும் பராசர முறையின் சிறப்பான தனித்துவம் என்பதால் இதற்கு இணையான காரகத்துவங்கள் வேறுமுறைகளில் கிடையாது.

பராசரர் முறையில் நீங்கள் எந்த பலனைச் சொல்வதாக இருந்தாலும், ஒரு கிரகம், அது நின்ற ராசி, அதன் அதிபதி அல்லது நட்சத்திர அதிபதி அல்லது பாவக அதிபதி என்ற முப்பரிமாண காரகத்துவங்களும் பலன் சொல்வதற்கு முன்னால் வந்து நின்றுவிடும். இவை அனைத்தையும் தசா-புக்தி மற்றும் கோட்சாரம் என்ற நான்காம் பரிமாணத்துடன் சரியாக இணைத்துச் சொல்வதே பராசரர் முறையின் சிறப்பு ஆகும்.

முற்றும் புதிதாக ஒரு சோதிட முறையை உருவாக்க முடியாதா?

இன்றைய தேதிக்கு முற்றும் புதிதாக ஒரு சோதிடமுறையை எந்தவித பழைய முறைகளின் சாயலும் இன்றி உருவாக்க முடியாதா என்பது சிலரின் மனதில் இருக்கும் கேள்வி ஆகும். இது சாத்தியம் என்றுகூட சொல்லலாம். ஆனால், அதில் கவனிக்க வேண்டிய சில விடயங்கள் சில உள்ளன. அதுபற்றி சோதிட விதிகள் பாகம் 3 என்ற கட்டுரையில் நான் கோடிட்டுக் காட்டியுள்ளேன். பின்னர் படித்து அறியுங்கள்.

புதிதாக ஒரு முறையை உருவாக்க வேண்டுமெனில், அதற்கென புது பரிமாணங்களும் அவற்றின் உபகூறுகளாக மனிதருக்கு மனிதர் மாறும் குறைவான எண்ணிக்கையிலான மாறிகளும் வரையறை செய்யப்பட வேண்டும். மேலும் அந்தப் பரிமாணங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாதவையாக, தனித்துவமாகவும் அமைய வேண்டும்.

நமது ஞானிகள் அதையெல்லாம் யோசித்து, சாறுபிழிந்து எடுத்துக் கொடுத்ததே இப்போது நாம் பயன்படுத்தும் சோதிட அங்கங்களும் அவற்றின் தனித்துவமான மாறிகளும் ஆகும். நீங்கள் எங்கே சுற்றினாலும் இந்த மூன்று பரிமாணங்களின் சாயல் இன்றி சிறப்பான ஒன்றை கண்டுபிடிக்கவே முடியாது என்பதே நிதர்சனம். இவற்றையும் தாண்டி நீங்கள் ஒன்றை உருவாக்க விரும்புகின்றீர்களா?

உதாரணமாக புதிதாக ஒரு முறையை யாரேனும் உருவாக்கும் போது, செவ்வாயை வேறு விடயத்துடனும் தொடர்புபடுத்த முடியும் (செவ்வாய் மனைவிக்கு உரிய கிரகம் என்றும் நீங்கள் முதல்நிலை வரையறை செய்யலாம்! 😉). அதில் உள்ள சிக்கல் என்னவெனில், அவ்வாறு செய்யும்போது, அதனை ஒட்டி இதுவரை இல்லாத ஒரு தனித்துவமான அணி தொகுப்பு கட்டுமானமே (unique matrix structure consisting of unique variables) உண்டாக்கப்பட வேண்டும். இவற்றின் ஊடாக நீங்கள் உண்டாக்கும் விதிகளும் இப்போது புழக்கத்தில் உள்ள எந்த விதிகளுடனும் பொருந்திப்போகாது.

இன்றைய தேதிக்கு, நம்மிடம் உள்ள, ஞானிகள் தந்த சோதிட கட்டுமானங்களை முறையாக, ஆழம் உணர்ந்து சரியான கோர்வையாக பயன்படுத்தத் தெரிந்தாலே, நம்மால் காலாகாலத்துக்கும் நம்பிக்கையான சோதிடப்பலன்களை சொல்ல முடியும்.

இதுவரை பார்த்தவற்றின் சுருக்கத்தை இப்போது காண்போம்.

காரகம் – கட்டுரை சுருக்கம்

காரகத்துவம் என்ற கட்டுமானம் ஒரு விடயத்தில் பலன் சொல்ல எந்தெந்த சோதிட அங்கங்களை மற்றும் அதன் கூறுகளை சோதிடர் பார்க்க வேண்டும் என்ற தொகுப்பு எனலாம்.

தனித்த காரகத்துவங்களை, ஒற்றை மாறிகளுக்கும் (single variables) விளைவிற்கும் (results) இடையிலான தொடர்பாக பார்ப்பது சரியான புள்ளியியல் அணுகுமுறை ஆகும் (univariate relationships). சோதிடத்தின் எண்ணற்ற மாறிகளை விளைவுகளுடன் (அல்லது பலன்கள்) இணைத்து ஏற்படுத்தப்பட்ட ஒரு தொகுப்பே பலவித காரகத்துவங்கள் எனலாம்.

ஒரு சோதிடர் பலன் சொல்லும் பெருவெளியில் தொலைந்து போகாமல், குறிப்பிட்ட விடயங்களை மட்டும் ஒரு ஜாதகத்தில் தேடியறிந்து பலன்சொல்ல காரகத்துவங்கள் பற்றிய விசாலமான அறிவு உதவுகிறது.

அடுத்து வர இருப்பது என்ன?

இந்தத் தொடரின் அடுத்த பாகத்தில் கிரக பார்வைகள், சேர்க்கைகள் மற்றும் யோகங்கள் பற்றி புள்ளியியல் பார்வையில் பார்க்கலாம். சோதிடர்கள் சொல்லும் சில பலன்களின் பின்னே உள்ள புள்ளியியல் ரீதியான விளக்கங்கள் பற்றியும் எழுதலாம் என்று நினைத்து உள்ளேன்.

இதுவரை இந்த கட்டுரையைப் படித்தமைக்கு நன்றி. பின்னூட்டங்களும் பகிர்வுகளும் வரவேற்கப்படுகின்றன.

Feel welcome to share your comments or feedback!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This Post Has 9 Comments

  1. chenniyappan

    nice analysis

  2. Priya Nandhini

    nice article sir !!! you explained an informative article in a interesting way . Waiting for your next article ….

  3. பாலு நடராஜன்

    Absolutely brilliant analysis. Crystal clear explanations. Appropriate example which enables (even a layman like me) can understand a complex subject. Thank you Sir. Best wishes for all success in your massive endeavour.