universe, பேரண்டம்

T016 பேரண்டம் – 12 ராசிகள்

பேரண்டம்
சித்தமுஞ் செல்லாச் சேட்சியன் காண்க!

பேரண்டம் – பண்டைக்காலத்தில் நம் சோதிட முன்னோர்கள் இரவில் வானத்தை பார்த்தால் எந்த நட்சத்திரம் மற்றும் கிரகம் எங்கே உள்ளது, எந்த ராசி உதயமாகிறது போன்றவற்றை பஞ்சாங்கத்தின் துணை இல்லாமலேயே பார்த்துச் சொல்லக்கூடிய வானியல் அறிவை பெற்று இருந்தார்கள். ஆனால், இந்த காலத்தில் உள்ள சோதிடர்களை அதுபோல வானை பார்த்து நட்சத்திரம் மற்றும் கிரகம் கண்டுபிடிக்க சொன்னால் பெரும்பாலானோர் திணறித்தான் போவார்கள். பெருமளவிலான சோதிட பாடங்கள் ஏட்டு சுரைக்காயாகவே புரிந்துகொள்ளப்பட்டு வருகின்றன.

படிப்பதை உண்மையோடு தொடர்புப் படுத்தி பார்க்கவில்லை எனில், நமக்கே நாம் படித்ததில் நம்பிக்கை வராது. சோதிடர்களுக்கு முக்கியமான ராசி மற்றும் நட்சத்திரம் பற்றி வானியல் சார்ந்த பதிவுகள் தமிழில் குறைவாகவே உள்ளன. சோதிடத்தை விரித்து எழுதிய அளவுக்கு அதன் பின்னே உள்ள நிகழ்கால வானியல் விரித்து எழுதப்படவில்லை. நம் முன்னோர் சொல்லிய கருத்துக்களை மறுதலிக்கலாகாது அல்லது அதில் பிழை எதுவும் இருக்காது அல்லது உறுதிப்படுத்துவதற்கு தேவையான துல்லியமான கருவிகள் நம்மிடம் இல்லை போன்றவை காரணங்களாக இருக்கலாம். இந்த கட்டுரை அந்த இடைவெளியை நிரப்பும் பொருட்டு, வானியல் தரவுகளின் அடிப்படையில் எழுதப்படுகிறது.

புதிதாக சோதிடம் கற்றுக்கொள்ள விரும்பும் நண்பர்களுக்கும், சோதிடத்தின் பின்னே என்ன வான்அறிவியல் இருக்கிறது என்று விவரமில்லாமல் கேள்வி கேட்பவர்களுக்கும் இந்த வானியல் அடிப்படை கட்டுரை வித்தியாசமான ஒரு பரிமாணத்தை உணர்த்தும் என நான் நம்புகிறேன்.

முக்கிய குறிப்பு: எனது சிற்றறிவிற்கு எட்டிய வானியல் கூறுகளைக் கொண்டு இந்த கட்டுரையை எழுதி உள்ளேன். வானியலில் தேர்ச்சி பெற்ற அறிஞர் பெருமக்கள், இந்த கட்டுரையை மேம்படுத்த உதவி செய்யலாம்.

12 ராசி 27 நட்சத்திரங்கள் – தாரை அட்டவணை – நட்சத்திரம் அட்டவணை

இந்த கட்டுரையில் வானியலுக்கும் ஜோதிடத்திற்கும் பொதுவாக அமைந்த ராசி மண்டலத்தை பற்றி, வானியல் சார்ந்த பார்வையில் அலசுவோம். அடுத்தடுத்த பாகங்களில் ராசிகளின் நீளம் பற்றியும் சோதிடத்தில் நாம் பயன்படுத்தும் நட்சத்திரங்கள் பற்றியும் ஆழமாக எழுதுகிறேன். இந்தக் கட்டுரையானது நமக்கு சோதிடத்தில் சொல்லப்பட்ட வானியல் சார்ந்த கருத்துக்களில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை ஆராயும்/உறுதிப்படுத்தும் ஒரு முயற்சி ஆகும். இந்த கட்டுரை சோதிடத்தில் நீங்கள் படித்த வானியல் தரவுகளில் இருந்து பெருமளவில் வேறுபடலாம்.

இதனை திறந்த மனதோடு அணுகவும். இது சோதிட கட்டமைப்புகளில் அல்லது நமது முன்னோர்கள் ஏற்படுத்தி சென்றுள்ள முறைகளில் குறை காணும் முயற்சி அல்ல. மாறாக, நம் முன்னோர்களால் சோதிட கட்டமைப்பு எந்த அளவுக்கு மாதிரிகளை சார்ந்து, உள்வாங்கி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை கணிதம் சார்ந்து விளங்க வைக்க முயலும் ஒரு முயற்சி ஆகும். அறிவியல் சார்ந்து சோதிடத்தை முன்னெடுத்து செல்லும் முயற்சிகளில்,  ஒரு படிக்கல் ஆக இந்த கட்டுரை அமைய வேண்டும் என்பது எனது அவா.

நான் எழுத எடுத்துக்கொண்ட தலைப்பு மிகவும் ஆழமானது மற்றும் நீளமானது என்றபடியால் முக்கியமான சில விடயங்களை மட்டும் கோடிட்டு காட்டிவிட்டு செல்வேன். ஆர்வமுள்ள வாசகர்கள் மேலும் தேடிப்படிக்கவும்.

பேரண்டம் – ஒரு விரைவான அறிமுகம்

மேலே உள்ள படத்தில் பால்வெளி மண்டலமும் அதன் கரங்களும் நமது சூரிய மண்டலத்தின் இருப்பும் காட்டப்பட்டுள்ளன. நாம் வாழும் பூமியும் நமது சூரிய குடும்பமும், தனுசு கரத்தில் ஒரையன் கிளையில் அமைந்து உள்ளன.

நீங்கள் தெளிவான இரவுகளில் மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு வானில் உள்ள நட்சத்திரங்களையும் கிரகங்களையும் பார்த்த அனுபவம் உண்டா? தொலைநோக்கியோ அல்லது பைனாகுலரோ கூட கொண்டு பார்த்தல் இன்னும் உசிதம். நிலவை முதலில் பாருங்கள். அப்படி இதுவரை நீங்கள் பார்த்தது இல்லையெனில், நீங்கள் விரைவில் அதனை செய்து பாருங்கள். படைத்தவனை நேரில் பார்க்க முடியவில்லை என்றாலும் அவனின் பெருமைகளை, எல்லையில்லா பிரம்மாண்டத்தை இரவின் வான்வெளி  உங்களுக்கு உணர்த்தக் கூடும்.

ஒரு யானையை எப்படி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் சலிப்பின்றி பார்த்துக்கொண்டிருக்க முடியுமோ, அது போல வான்வெளியையும் அதில் நிகழும் மாற்றங்களையும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். எவ்வளவு நேரம் பார்த்தாலும், நம் கண்முன்னே நாம் பார்ப்பதெல்லாம் கற்பனைக்கும் எட்டாத மாபெரும் அண்டப் பெருவெளியின் தூசியிலும் தூசியான தூசியின் ஒரு பகுதி மட்டுமே.

நமது அண்டம் (Universe) ஒன்று மட்டுமே அல்ல. எண்ணில் அடங்காத அண்டங்கள் (multi-verse) உள்ளதாக இன்றைய அறிவியல் அறியத் தொடங்கி உள்ளது. இந்த கருத்தை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நமது பக்தி இலக்கியங்கள் கூறி இருப்பதை காணலாம். உதாரணமாக,

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி

ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்

நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன…    

திருவாசகம் – திரு அண்டப்பகுதி

அண்டம் – சில குறிப்புகள்

  • இன்றைய அறிவியல் புரிதல் படி, 13.77 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட ஒரு பெருவெடிப்பின் மூலம் நமது அண்டம் தோன்றியது.
  • முதல் நட்சத்திரங்கள், அதன் பின் 400 மில்லியன் ஆண்டுகள் கழித்துத் தோன்றின.
  • அதுபோல தோன்றிய நம் பால்வெளி மண்டலம் 13.6 பில்லியன் ஆண்டுகள் வயதுடையது.
  • பால்வெளி மண்டலம் மையப்பகுதி தடிமனான ஒரு தட்டு போன்ற அமைப்பை உடையது.
  • பால்வெளி மண்டலம் 4 கரங்களை கொண்டு ஒரு சுழலும் காற்றாடி போல சுழன்று வருகிறது. அதன் ஒவ்வொரு கரத்திலும் பல ஆயிரம் கோடி சிறியதும் பெரியதுமான நட்சத்திர கூட்டங்கள் மாறுபட்ட வேகத்தில் நகர்ந்து கொண்டே உள்ளன.
  • நமது அண்டம் தொடர்ச்சியாக விரிவடைவதாக கருதப்படுகிறது. இந்த விரியும் அண்டத்தில், நமக்கு அருகில் உள்ள நட்சத்திரங்கள் நம்மை விட்டு குறைவான வேகத்திலும், நமக்கு தொலைவில் உள்ள நட்சத்திரங்கள் அதிகமான வேகத்திலும் நம்மை விட்டு விலகிச் சென்றுகொண்டே உள்ளன.
  • சூரியன் அண்டவெளியை ஒருமுறை சுற்றிவர 250 மில்லியன் ஆண்டுகள் ஆகும். பிறந்ததில் இருந்து சூரியன் இதுவரை 20 முறை அண்டத்தை சுற்றிவந்துள்ளது. மேலும் அது இந்த சுழலும் கரத்தில் இருந்து பல முறை சேர்ந்தும் விலகியும் இருந்து வந்துள்ளது.
  • இந்த சுழலும் கரங்களே, பல புதிய நட்சத்திரங்களின் நாற்றங்கால்களாக உள்ளன.
  • அண்டத்தின் சுழல் மையத்தில் ஒரு மாபெரும் கருந்துளை அமைந்து எல்லாவற்றையும், தன்னுள்ளே களீபரம் செய்துகொண்டே உள்ளது.
  • இது போன்ற கருந்துளைகள் சிறு அளவில் அண்டம் முழுதும் நீக்கமற நிறைந்து உள்ளதாக வான் அறிவியல் கண்டு பிடித்து உள்ளது.

மேலே நாம் பார்த்த படத்தை இன்னும் சற்று விரித்து நோக்கினால் அது கீழே உள்ள படம் போல அமையும்.

இந்த படங்கள், அண்டத்தை ஒப்பிடுகையில் சூரியனும் அதன் குடும்பமும் எந்த அளவுக்கு சிறிதிலும் சிறியவர்கள் என்பதை உங்களுக்கு உணர்த்தக்கூடும். இவ்வளவு பெரிய அண்டத்திலும் அறிவியலுக்கு தெரிந்த வகையில், பூமியில் மட்டுமே உயிர்கள் இருப்பதாக அறிகிறோம். நமது பக்தி இலக்கியங்கள் நம்மை போல வெவ்வேறான உலகங்கள் இருப்பதாக சொல்கின்றன. அறிவியல் அதனை விரைந்து கண்டு பிடிக்கட்டும்!

எல்லையற்ற சிவபெருமானின் ஆரம்பமும் முடிவும் கண்டறிய முற்பட்ட பிரம்மா மற்றும் விஷ்ணுவை போல, இன்றைய அறிவியலும் விரிந்துகொண்டே செல்லும் அண்ட வெளியில் ஆரம்பமும் முடிவும் தேடி தனது தேடுதலை தொடர்ந்து கொண்டே உள்ளது.

வானியலும் சோதிட கலையும்

அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது என்பதை உணர்ந்த ஞானிகள், தமது தேடலை உள்நோக்கி திருப்பினர். நமது வாழ்க்கையை இறைவனை அடையும் தத்துவங்களாக உணர்ந்த ஞானிகள், மனித வாழ்வு மற்றும் இயல்புகள், பல்வேறு குணங்களின் கூட்டு என்பதை உணர்ந்தனர். இந்த குணங்களின் கூட்டு கலவையை, நமது சூரிய குடும்பத்தின் கண்ணால் பார்க்கக்கூடிய கிரகங்களுடன்* பொருத்தி, கிரக நிலைகளை மற்றும் இணைவுகளை சார்ந்து வாழ்வியல் நிகழ்வுகளை கணிக்கக்கூடிய விதிகளை சோதிடம் என்ற மாபெரும் கணித அறிவாக தொகுத்து, நமக்கு விட்டுச் சென்று உள்ளனர்.

* பின் குறிப்பு: இந்திய சோதிடத்தில் ஏன் சூரியன் தொடங்கி சனி வரை மட்டுமே எடுத்துக்கொள்கிறோம் என்பதற்கான காரணம் கணிதம் / புள்ளியியல் சார்ந்து உறுதிப்படுத்தப்படக் கூடியது. அதனை தனி கட்டுரையாகவே எழுதுகிறேன்.

நட்சத்திர வெளி

நமது வெற்று கண்களால் 6000 நட்சத்திரங்கள் வரை பார்க்க முடியும் என்று கணக்கிடப் பட்டுள்ளது. வான்வெளியில் இதுபோல நட்சத்திரங்களை கண்ட நம் முன்னோர் பார்வைக் கோணம், இடம், பொருள், கலாச்சாரம் பொறுத்து, நட்சத்திரங்கள் ஒரு குறிப்பிட்ட அமைப்பில் தோன்றுவதாக உருவகம் செய்து வந்துள்ளனர். இந்திய சோதிடத்தில் எடுத்துக்கொள்ளும் 7 கிரகங்களையும், வான்வெளியில் அவற்றின் இடத்தையும் சரியாக கணக்கிட வேண்டும் எனில் அவர்களுக்கு நிலையான ஒரு பின்புல திரை அல்லது அதிகம் நகராத அடையாள புள்ளிகள் தேவைப்பட்டன. அவர்கள் வானில் நமக்கு வெகு தொலைவில் உள்ள நட்சத்திரங்களை இதற்கு பின்புலமாக பயன்படுத்தினார்கள்.

பூமி உருண்டையின் புறப்பகுதியில், வானில் சில ஆயிரம் நட்சத்திரங்கள் தெரிந்த போதிலும், சூரியனை அனைத்து கிரகங்களும் சுற்றி வரும் பாதையில் உள்ள நட்சத்திரங்கள் அவர்களுக்கு முக்கியமான பின்புல அடையாளங்களாக அமைந்தன. கணிதம் சார்ந்த ஒரு கட்டுமானத்தை, வானியலை மாதிரியாக வைத்து உருவகப்படுத்தும் போது, பெரிய அளவிலான சூரியனின் சுற்றுவட்ட பாதையை சிறு கூறுகளாக பிரிக்க, அவர்களுக்கு நட்சத்திரங்களை இணைத்து, உருவங்களாக எல்லைகளை வரையறை செய்வது தேவைப்பட்டது. இது போல கிரகண பாதையில் எல்லைகளை நிர்ணயிக்க அவர்கள் கருதிய நட்சத்திரங்களின் கற்பனையான இருபரிமாண இணைவுக்கோடுகளே, சோதிடத்தில் நாம் பயன்படுத்தும் 12 ராசிகள் ஆகும். இவை தேசத்திற்கு தேசம், காலம் பொறுத்து சிறு அளவில் மாறிக்கொண்டே வந்துள்ளன.

நட்சத்திரங்களை பலரும் பல்வேறு பெயர்களாலும், ராசிகளை பல்வேறு உருவங்களாலும் குறிப்பதால், அனைவரும் புரிந்து கொள்ளும் பொருட்டு, அதனை ஒழுங்குபடுத்த வேண்டிய தேவை வந்தது. பூமி பந்தின் முழு பரப்பினையும் எடுத்துக்கொண்டால், 88 ராசிகள் உள்ளதாக மேற்கத்திய வானியல் அறிஞர்களால் வரையறை செய்யப்பட்டு உள்ளது. ராசிகளுக்கு இடையே எல்லைக்கோடுகளும் வரையறை செய்யப்பட்டுள்ளன.

கீழே உள்ள படத்தை பாருங்கள்.

88 ராசிகளும் அவற்றின் எல்லைகளும்

இது இன்றைய அளவில் உள்ள அது போன்ற ராசிகளின் தொகுப்பு மற்றும் எல்லைக்கோடுகள் ஆகும். இந்த எல்லைக்கோடுகள் 1930க்கு பிறகு நடைமுறையில் வந்தவை ஆகும். பெரும்பாலான மொபைல் செயலிகளில் பயன்படுத்தப்படும் ராசி எல்லைகள் மற்றும் நட்சத்திர உருவங்கள், இந்திய சோதிடம் சார்ந்தவை அல்ல என்பதை நினைவில் வையுங்கள்.

பழங்கால இந்திய சோதிடத்தில் இதுபோல தெளிவான எல்லைக்கோடுகள் குறிப்பிடப்பட்டுள்ளதாக நான் அறிந்த வரையில், எனக்கு தெரியவில்லை.

வானியல் அளவீடுகள் (Astrometry):

வான்வெளியில் உள்ள நட்சத்திரங்களின் இருப்பையும் அவற்றின் ஒளி, அளவு, தூரம், பக்கவாட்டு இயக்கம், முறையான நகரும் வேகம், நகரும் கோணம் ஆகியவற்றை துல்லியமாக கணக்கிட 1989 ஆம் ஆண்டு ஹிப்பார்க்கஸ் (Hipparcos – https://www.cosmos.esa.int/web/hipparcos/home) என்ற செயற்கைக்கோள் ஐரோப்பிய வான்வெளி நிறுவனத்தால் (European Space Agency) ஏவப்பட்டது. அது 1993 ஆம் ஆண்டு வரை செயல்பட்டு 118,218 நட்சத்திரங்களை பற்றிய துல்லிய அளவீடுகளை அளித்துள்ளது. இதன் விளைபொருள், ஒரு தொகுப்பாக (catalogue) 1997 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக கையா (Gaia – https://www.cosmos.esa.int/web/gaia) என்ற செயற்கைக்கோள் 2013ஆம் ஆண்டு ஏவப்பட்டது. இது 1 பில்லியன் வான்வெளி பொருட்களை (நட்சத்திரம், எரிகல், புறவெளி கிரகங்கள் போன்றவை) பற்றிய மிக மிக துல்லியமான முப்பரிமாண தரவுகளின் தொகுப்பை விரைவில் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனது கட்டுரைகள் ஹிப்பார்க்கஸ் அளித்த தரவுகளின் அடிப்படையில் அமைந்தவை.

ராசி அல்லது நட்சத்திரங்களின் இடம் மற்றும் தூரத்தை உறுதி செய்தல்:

குறிப்பிட்ட நட்சத்திரங்களின் தொகுப்பே ராசி ஆகும். நட்சத்திரங்களின் இருப்பினை பூமி அல்லது சூரியனின் மண்டலத்தின் மீது வரையப்படும் கற்பனை கோடுகளின் அடிப்படையில் இரு புள்ளிகளின் இணைவாக குறிக்க முடியும்  (latitude, longitude for Equatorial Grid; Right Ascension and Declination for Celestial Sphere).

கீழே உள்ள படங்களில் சூரியன் சார்ந்து வரையப்படும் கிரகண கட்டங்களின் அடிப்படையில் (Celestial Sphere) படங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. நமது பூமியானது தனது அச்சில் 23.5 பாகை சாய்வாக உள்ளதால், இவற்றை பூமியில் இருந்து பார்த்தால், சூரியனை கிரகங்கள் சுற்றிவரும் நடுவில் காட்டப்பட்டுள்ள நீள்வட்ட பாதை வளைவாக காட்சி அளிக்கும் என்பதை உணரவும்.

பல்வேறு தேசத்தை சேர்ந்த நமது முன்னோர்கள் அவர்கள் பார்வையில் அவர்கள் காலத்தில் கருதிய ராசிகளின் உருவங்கள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன. இவை யாவும் ஸ்டெல்லரியம் என்ற மென்பொருள் உதவியுடன் உருவாக்கப்பட்டவை. இன்றைய வானியல் மென்பொருட்கள் இது போன்ற உருவகித்தலை சாத்தியம் ஆக்கி உள்ளன.

அரேபியர்களின் ராசி மண்டல தொகுப்பு
பாபிலோனியர்களின் ராசி மண்டலங்கள்
எகிப்தியர்களின் பார்வையில் ராசிகளின் தொகுப்பு
சீனர்கள் பார்வையில் ராசி மண்டலங்கள்
மாயன்களின் ராசி மண்டல உருவகங்கள்
மேற்கத்திய நாட்டாரின் ராசி மண்டலங்கள் – 1
மேற்கத்திய நாட்டாரின் ராசி மண்டலங்கள் – 2

நம் இந்திய சோதிடத்தில் கருதும் ராசிகள் கீழே உள்ள படத்தில் இருப்பது போல இருக்கும். இந்த படத்தில் நாம் சூரிய மைய பாதையை உச்சியில் இருந்து பார்ப்பதாக எடுத்துக்கொண்டு பார்க்கவும்.

இந்திய சோதிடத்தின் ராசிகளின் பரவல் 1

மேலே உள்ள படத்தில் பூமியின் பார்வைக்கோணத்தில், சூரியனின் சுற்றுவட்ட பாதையில் உள்ள ராசிகளும், பூமியின் வடதுருவ அயனாசலன பாதையும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த படத்தையே செவ்வக வடிவமாக விரித்துப்பார்த்தால் அது கீழே உள்ள படம் போல அமையும்.

இந்திய சோதிடத்தின் ராசிகளின் பரவல் – 2

மேலே உள்ள படத்தில் சூரியனின் சுற்றுவட்ட பாதையில் கிரகங்களின் பாதை பல வண்ண கோடுகளால் காட்டப்பட்டு உள்ளன.

  • இந்த படத்தை உற்று கவனித்தால் நீங்கள் ராசிகள் வெவ்வேறான நீளத்துடன் இருப்பதை அறியலாம்.
  • மேலும் இரு ராசிகளுக்கு இடையே சில இடங்களில் இடைவெளி இருப்பதையும் நீங்கள் பார்க்கலாம்.
  • சில ராசிகள் (மகரம் மற்றும் கும்பம்) ஒன்றோடு ஒன்று சேர்ந்து இருப்பதையும் கூட நீங்கள் பார்க்கலாம்.
  • மிகவும் சுவாரசியமாக , நாம் சோதிடத்தில் கருதும் சில நட்சத்திரங்கள் இந்த 12 ராசிகளின் எல்லைகளுக்கு அப்பால் இருப்பதையும் கூட நீங்கள் கவனிக்கலாம்.

இவை யாவற்றையும் நாம் வரப்போகின்ற கட்டுரைகளில் மிகவும் விரிவாக பார்க்க இருக்கிறோம். கட்டுரையின் நீளம் கருதி, இந்த முதல் பாகத்தை இங்கே முடிக்கிறேன்.

இதன் அடுத்த பாகத்தில், நாம் இந்திய சோதிடத்தில் கருதும் ராசிகளின் நீளம் பற்றியும், அவை நமக்கு சோதிடத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களோடு எந்த அளவு ஒத்துப்போகின்றன என்பது பற்றியும் பார்க்கலாம்.

இந்த கட்டுரையில் நாம் பார்த்த விடயங்களை பற்றி உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரியப்படுத்தலாம்.

நன்றி!

Astronomy Software Courtesy: Stellarium 

Feel welcome to share your comments or feedback!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This Post Has 8 Comments

  1. நான் திருவாசகம் – திருவண்டப்பகுதி கேட்பது வழக்கம். உங்கள் விளக்கம் அண்டத்தைப் பற்றிய பரந்த பார்வையைக் கொடுத்துள்ளது. வானவியல் பற்றி உங்கள் கட்டுயுரைகள் மிகவும் உபயோகமாக உள்ளது. வாழ்க வளமுடன். வளரட்டும் உங்கள் சோதிட தொண்டு. நன்றி

  2. Senthamarai selvi

    Interesting to see the arrangements of strars. Different countries rasi chart is new to me.
    Good going

  3. கணியன் மாய எதார்த்தி

    அருமை…

  4. R.Swaminathan

    Dear Sir,
    Your artical is quite interesting! Apart from your research I myself tried a little bit about our Ancient Indians Fixed and the Integrated form of the 27 Nakshatra-groups around the the Earth which forms the Cosmos through which one understand the Earth-Centered Cosmos!
    Furhter, from the Indian slogans the order of the Planets and their 8 kinds of movements along and parallel to the Fixed Nakshtra-groups around the Earth in the Cosmos which are found to be the basics of the Earth-Centered Cosmic Theories!
    Further, it can be understand that the Ancient Indians derived their basics of the Calendar system through differentiating the sequence of Sun-raises over the Earth they used the order of the Planets in the space between the Nakshtra-groups and the Earth in the cosmos and arrived the order of the Week-Days through which the system known as “HORA”.
    Not only that the Ancient Indians explained that the formations of the Solar and Lunar Eclipses which are fromed in the Cosmos are due to the obsecure of the shadow planets which having their movements in the opposite direction of other planets !
    For more details kindly log on http://www.swamycosmology.wordpress.com or kindly go through The Indian Cosmograph-A Discovery or kindly go through pandaiya Indiargalin vaniyal.
    To contact: mannaiswami@gmail.com

  5. SenthilKumar

    அருமை.,.