T019 பன்னிரண்டு ராசிகளும் 27 நட்சத்திரங்களும்: வானியல் சார்ந்த பார்வை – பாகம் 4
இந்த கட்டுரையில் நாம் நட்சத்திரங்களின் தரவுகள் பற்றிய அலசலை மேற்கொள்ள இருக்கிறோம். இந்த தொடரின் முந்தைய பாகங்களை படித்துவிட்டு, இதனை தொடர்வது உங்களுக்கு உதவியாக இருக்கும். நேரடியாக கட்டுரைக்குள் நுழைவோம். நாம் இந்த கட்டுரையில் பார்க்க இருக்கும் எல்லா தரவுகளும் சூரிய மைய அடிப்படையில் அமைந்தவை என்பதை கவனத்தில் கொள்ளவும்.
தரவு 1 : வெளிப்படையான பிரகாச ஒப்பீடு (Apparent Visual Magnitude)
நமக்கு நட்சத்திரங்களை பார்க்கும் போது தோன்றும் ஒரு கேள்வி இது எவ்வளவு பிரகாசம் ஆனது என்பதாகும். அதுவும் நமது சூரியனுடன் ஒப்பிட்டால் எப்படி என்று தோன்றும். கீழே உள்ள படம் அந்த ஒப்பீட்டை உங்களுக்கு அளிக்கிறது.
நட்சத்திரங்கள் நம் வெற்று கண்ணுக்கு வானில் காட்சி அளிப்பது போல உள்ள அளவில் (அதாவது அவற்றின் தற்போதைய இருப்பிடத்தில்) அவற்றின் பிரகாசத்தை ஒப்பீடு செய்தோமேயானால், அந்த ஒப்பீட்டை அவற்றின் ஒளி அளவின் எதிர்மறை மடக்கை (negative logarithm) அளவால் அறியலாம். அப்படிப் பார்க்கையில் சூரியனின் பிரகாச அளவு -26.71 ஆகும். எதிர்மறை எண் அளவு அதிகமானால் மிக பிரகாசம் என்றும் அளவு குறைந்தால் (அதாவது நேர்மறை எண் அதிகரித்தால்) குறைந்த பிரகாசம் என்றும் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த எண்கள் சில நட்சத்திரங்களுக்கு குறிப்பிட்டு காட்டப்பட்டு உள்ளன. நட்சத்திரங்கள் நட்சத்திர அதிபதியினை பொறுத்து வெவ்வேறான வண்ணத்தில் அடையாளம் காணப்பட்டு உள்ளன.
இந்த அளவு +6.5 வரை உள்ள நட்சத்திரங்களை தெளிவான இரவுகளில் பொதுவாக வெற்று கண்களால் பார்க்க முடியும். அந்த வகையில் பார்த்தால் நாம் கருதும் 73 நட்சத்திர தாரைகளில், சூரியனுக்கு அடுத்த பிரகாசமான நட்சத்திரம் சுவாதி ஆகும். அதற்கு அடுத்து திருவாதிரை நட்சத்திரமும், திருவோணம் நட்சத்திரமும் வருகின்றன. நாம் பார்ப்பதிலேயே சற்று பிரகாசம் குறைவாக தெரிவது கார்த்திகையில் இரண்டு நட்சத்திரங்களும் (அதனால் தான் 8 நட்சத்திர தாரைகளில் 6 மட்டும் நமக்கு தெரிகின்றனவோ?), பூசத்தில் ஒன்றும் மற்றும் ரேவதி நட்சத்திரமும் ஆகும்.
இந்த அளவீடு, நட்சத்திர தாரைகள் வெவ்வேறான தூரத்தில் இருப்பதாலும் மற்றும் அவற்றின் உருவ அளவுகள் வித்தியாசமாக இருப்பதாலும் தோன்றுவன.
தரவு 2 : நிலையான தூரத்தில் பிரகாசத்தின் அளவு (Absolute Magnitude)
நாம் எல்லா நட்சத்திர தாரைகளையும் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் வைத்து பார்த்தால் தான் அவற்றின் உண்மையான பிரகாசத்தை ஒப்பிட முடியும். இது போல ஒரு கணக்கீட்டை மேற்கொள்ள நாம் எல்லா நட்சத்திரங்களையும் 10 பர்செக் (10 parsec) என்ற தூரத்தில் (அதாவது 32.62 ஒளி ஆண்டுகள் தூரத்தில்) வைப்பதாக எடுத்துக்கொண்டால், அவற்றின் ஒளி அளவானது கீழ்கண்ட படத்தில் உள்ளது போல இருக்கும்.
நான் மேலே குறிப்பிட்டதை போல, ஒளி அளவுகளை மடக்கை (logarithm) அளவில் ஒப்பிட்டால், கேதுவின் மூல நட்சத்திர தொகுப்பில் ஒரு நட்சத்திரமும் (HIP 87073: -5.91) அதனை அடுத்து ராகுவின் திருவாதிரை நட்சத்திரமும் (HIP 27989 / Betelgeuse: -5.47) தான் இருப்பதிலேயே மிகவும் ஒளி பொருந்தியவை. நம் சூரியன் 73 நட்சத்திர தாரைகளையும் விட, இந்த அளவு தூரத்தில் மிகவும் பிரகாசம் குன்றியதாக (+4.83 மட்டுமே) தோன்றும்.
இந்த அளவு தூரத்தில் கேட்டை, அனுஷம், மிருகசீரிடம், சித்திரை போன்ற நட்சத்திரங்களும் பிரகாசம் மிகுந்தவை ஆகும். மூலம் நட்சத்திர தாரைகள் தொகுப்பு மிக அதிக மற்றும் மிகவும் குறைந்த பிரகாசம் உள்ள நட்சத்திரங்களின் தொகுப்பாக உள்ளது.
தரவு 3 : நட்சத்திர தூரம் (ஒளி ஆண்டுகளில்)
நம் எல்லோரும் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கும் மற்றொரு தரவு நட்சத்திரங்களின் தூரம் ஆகும். நட்சத்திரங்கள் யாவுமே நம் கற்பனைக்கும் எட்டாத தூரங்களில் அமைந்து உள்ளன. இவற்றின் தூரம் ஒளி ஆண்டுகள் என்ற அளவீட்டின் அடிப்படையில் ஒப்பிடப்படுகின்றன.
ஒரு ஒளி ஆண்டு என்பது ஒளியானது ஒரு வருடம் பயணித்தால் கடக்கும் தூரம் ஆகும். சூரியனிடம் இருந்து நமக்கு ஒளி வந்தடைய 8:19 நிமிடங்கள் ஆகின்றது. அப்படியெனில், இந்த நட்சத்திர தாரைகளின் தூரத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள். நம் வாழ்நாள் முழுதும் இப்போதுள்ள வேகம் மிகுந்த விண்கலத்தில் பயணம் செய்தால் கூட, 73 நட்சத்திர தாரைகளில், ஒரு தாரையின் அருகில் கூட நம்மால் செல்ல முடியாது!
இந்த கட்டுரையில், நான் இன்றைய அளவில் நமக்கு தெரிந்த தூரங்களின் சராசரி மதிப்பை எடுத்துக்கொண்டு உள்ளேன். உண்மையான தூரம், இந்த சராசரியின் இருபுறமும் (திட்ட விலக்கம் / standard deviation) அமையலாம். கீழே உள்ள படத்தில் இந்த தூரங்கள் காட்டப்பட்டு உள்ளன.
நான் கணக்கில் எடுத்துக்கொண்டுள்ள 73 நட்சத்திரங்களில், குறைந்த பட்ச தூரம் 16.73 ஒளி ஆண்டுகளில் (திருவோணம்) இருந்து அதிகபட்சமாக 1,930 ஆண்டுகள் (மூலத்தின் ஒரு தாரை) வரை பரவிக் கிடக்கிறது. திருவோணம், புனர்பூசம், உத்திரம், சுவாதி மற்றும் அஸ்த நட்சத்திர தாரைகள் நமக்கு அருகில் உள்ளவை ஆகும் (50 ஒளி ஆண்டுகள் தொலைவில்).
600 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திரங்களை மட்டும் கீழே உள்ள மற்றுமொரு உருவகத்தில் உங்களுக்குக் கொடுத்து உள்ளேன்.
விருச்சிகம் மற்றும் தனுசுவில் உள்ள நட்சத்திரங்கள் பெரும்பாலும் மிகவும் அதிக தொலைவில் இருக்கின்றன என்பதை நீங்கள் இந்த படத்தில் இருந்து அறியலாம்.
நட்சத்திர அதிபதி சார்ந்து நாம் தூரங்களை கணக்கிட்டால், அனைத்து நட்சத்திரங்களின் சராசரி 304.59 ஒளி ஆண்டுகள் ஆகும்.
இவற்றில் சந்திரனிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நட்சத்திரத் தாரைகள் நமக்கு சற்று அருகில் உள்ளன. அதனை தொடர்ந்து, குரு, சுக்கிரன், ராகு, சூரியன், சனி, புதன், கேது மற்றும் செவ்வாய் என இந்த சராசரி தூரம் அதிகரித்துக்கொண்டு செல்கிறது.
திருவாதிரைக்கு என்ன ஆனது?
சென்ற ஆண்டு திருவாதிரை நட்சத்திரம் மங்கிப்போகிறது என்றும் மறைந்து போய் இருக்கலாம் என்றும் வந்த ஒரு தகவலை நீங்கள் கேட்டு இருப்பீர்கள். உலகில் எல்லாம் ஒரு முடிவுக்கு வரப்போகிறது மற்றும் இனிமேல் திருவாதிரை மற்றும் ராகுவின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கதி அதோ கதி தான் என்பது போன்ற பல கட்டுக்கதைகளும், அதனை தொடர்ந்து சோதிடர்களாலேயே கிளப்பப்பட்டன.
அது போன்ற புரளிகளுக்கு முடிவு கட்டும் விதமாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் திருவாதிரை நட்சத்திரம் மீண்டும் தெரிய தொடங்கியது. அது ஒரு இரட்டை நட்சத்திரம் வகையை சார்ந்தது. சமீபத்தில், மீண்டும் அதன் பிரகாசம் 60% மங்கிப் போனது. அது ஏன் மங்கலானது என்று தீவிரமாக வானியல் ஆராய்ச்சி நடைபெற்று கொண்டு உள்ளது. அதில், பெரிய அளவில் சூரியப் புள்ளிகள் உள்ளதை (மேலே உள்ள மாதிரி படத்தைப் பார்க்கவும்) சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அளவில் பெரியதாக இருந்த போதிலும், அதனை பற்றிய வானியல் தரவுகள் நமக்கு தெரிந்த வானியல் அறிவினை சோதிப்பதாகவே உள்ளன. இதன் விளைவாக அந்த நட்சத்திரத்தின் தூர அளவு கூட மறு பரிசீலனை செய்யப்பட்டு உள்ளது. அதன் தூரம் 724 ஒளி ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கலாம் என புதிய கணக்கீடுகள் சொல்கின்றன. உடனே, அறிவியலை குறை சொல்ல கிளம்பிவிடாதீர்கள். அறிவியல் புதிய தகவல்களின் அடிப்படையில் தன்னை மேம்படுத்திக்கொள்ள தயங்கியதே இல்லை என்பதை நினைவில் வையுங்கள்.
நீங்கள் மேலே பார்த்த தூரத் தரவுகளின் அடிப்படையில் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான விடயம், நாம் இன்று வானில் பார்க்கும் எல்லா நட்சத்திரங்களின் இன்றைய ஒளி அலைகளும், குறைந்த பட்சம் பல ஒளி ஆண்டுகளுக்கு முற்பட்டவை. நாம் இன்று பார்க்கும் மிருகசீரிடத்தின் ஒளி, ராஜராஜன் காலத்தை சேர்ந்தது. மூலத்தின் ஒரு நட்சத்திர ஒளி, வள்ளுவர் காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம். பெரும்பாலும் அவற்றின் ஒளி பயணப்பட்டு, பூமிக்கு வரும் காலம் நம் ஆயுளை விடவும் அதிகம்.
நமது இன்றைய காலத்தில் அந்த நட்சத்திரங்களின் நிலை என்ன என்பது நமக்கு உண்மையிலேயே தெரியாது. எனவே மேலே பார்த்த தரவுகளின் அடிப்படையில், நட்சத்திரங்களின் ஒளியை கிரகங்கள் வாங்கி நமக்கு அளிக்கின்றன என்ற கூற்றில் சிறிதளவும் உண்மை இல்லை. நட்சத்திரங்களை பின்புல அடையாள புள்ளிகளாக மட்டுமே பார்த்தல் நலம்.
தரவு 4: நட்சத்திரங்களின் நகர்வு
நான் இக்கட்டுரையின் முதல் பாகத்தில் கூறியது போல, பால்வெளியில் உள்ள அனைத்து வான் பொருட்களும் அண்டத்தின் விரிகின்ற தன்மையின் காரணமாக, ஒன்றை விட்டு ஒன்று விலகி சென்று கொண்டே உள்ளன. இது நமது சூரிய குடும்பத்து கிரகங்களுக்கும் பொருந்தும். நமது 27 நட்சத்திரங்கள் இதற்கு விதி விலக்கு அல்ல. இதனை புரிந்து கொள்ள, கீழே உள்ள படத்தை பாருங்கள். இதில் வெடித்து சிதறும் ஒரு புள்ளியாக சூரியனை கருதுங்கள். மற்ற நட்சத்திரங்களை பிற ஒளி புள்ளிகளாக பாருங்கள். அனைத்து புள்ளிகளும் ஒன்றை விட்டு ஒன்று ஒரு குறிப்பிட்ட முறையில் விலகிச்செல்வது உங்களுக்குப் புரியும்.
முறையான நகர்வு மற்றும் பக்கவாட்டு இடமாறு
நட்சத்திர தாரைகளின் தொகுப்பால் ஆன சோதிட ராசிகளும் நிலையானவை அல்ல. அவை மிகவும் சிறிய அளவில் இடம் மற்றும் உருவம் மாறிக்கொண்டே உள்ளன.
(1 மில்லி ஆர்க் செகண்ட் (mas) = 1/36,00,000°)
நமது ராசிகளும் நட்சத்திரங்களும் எந்த அளவுக்கு இந்த இட மாற்றத்திற்கு உள்ளாகிக் கொண்டு இருக்கின்றன என்பதை தெரிந்துகொள்வது நமக்கு அவசியம் ஆகின்றது. அந்த இயக்கத்தை பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
நட்சத்திரங்கள் யாவும் நாம் பூமியில் இருந்து பார்க்கும் போது முறையான நகர்வு (Proper Motion) மற்றும் பக்கவாட்டு இடமாறு (Parallax Motion) என்ற இரண்டு இயக்கங்களுக்கு உட்படுகின்றன. இவற்றில், பக்கவாட்டு இடமாறு பூமியின் நீள்வட்ட பாதையில் நகர்வதன் காரணமாக நட்சத்திரங்கள் சற்று இடம் வலமாக இடம் மாறி இருப்பது போல தோன்றுவது. அதாவது நீங்கள் ஒரு 6 மாத இடைவெளியில் ஒரு நட்சத்திரத்தை, பூமியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து பார்த்தால், ஒரு நட்சத்திரம் சற்று இடம் வலமாக மாறி தோன்றுவது.
முறையான நகர்வு என்பது நட்சத்திரம் சூரியனை விட்டு ஒரு குறிப்பிட்ட கோணத்தில் விலகி செல்வதால் தோன்றுவது. இவற்றில் முறையான நகர்வு அதிகமாகவும், பக்கவாட்டு இடமாறு அதில் ஒரு சிறு பின்னமாகவும் அமையும். மேலே உள்ள படத்தில் இந்த மொத்த இயக்கம், திருவாதிரை நட்சத்திரத்திற்கு காட்டப்பட்டுள்ளது.
நட்சத்திர தாரைகள் எவ்வளவு கோண வேகத்தில் முறையாக நகர்கின்றன (angular speed of proper motion) என்பதை இப்போது பார்ப்போம். நட்சத்திர தாரைகள் ஒரு வருடத்தில் இதுபோல சூரியனை விட்டு விலகும் முறையான இயக்கத்தின் தூரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
விருச்சிகம் முதல் மகரம் வரை உள்ள தாரைகள் அதிகம் நகர்வது இல்லை. முக்கியமாக, மூலத்தின் முக்கிய தாரைகள் மிக சொற்பமான பாகைகளே (mas) விலக்கம் அடைகின்றன.
நட்சத்திரங்களின் பக்கவாட்டு இடமாறு (parallax motion) மற்றுமொரு முக்கியமான வானியல் தரவு ஆகும். ஒரு தாரை எந்த அளவு இடம் வலமாக வானில் இடம் மாறி தோன்றும் என்பதை இது குறிக்கிறது. இந்த இடம் மாற்றம் பூமியின் பூமியின் சுற்றுவட்ட பாதையில் இரு எல்லைகளில் இருந்து பார்க்கும் போது தோன்றுவது ஆகும். சூரியனுக்கு அருகில் உள்ள நட்சத்திரங்கள், அதிக பக்கவாட்டு இடமாற்றத்திற்கு உட்படுவது போல தோன்றும்.
கீழே உள்ள படத்தில் இது காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இதிலும் கூட நட்சத்திரங்களிலேயே மூத்த நட்சத்திரமாக கருதும் மூல நட்சத்திர தாரைகள் சிறிய அளவிலேயே நகர்வதை காணலாம். நமக்கு அருகில் உள்ள திருவோணம் தாரை சற்று அதிக பக்க வாட்டு நகர்விற்கு உள்ளாகும். சுவாதி, உத்திரம், புனர்பூசம் போன்ற அருகில் உள்ள நட்சத்திரங்கள் அதிக பக்கவாட்டு நகர்விற்கு உட்படுவதை இந்தப் படத்தில் நீங்கள் பார்க்கலாம்.
கட்டுரையின் நீளம் கருதி, இந்தப் பாகத்தை இங்கே நிறைவு செய்கிறேன். இந்த கட்டுரையின் அடுத்த பாகத்தில் நாம் முக்கியமாக கருதும் 73 நட்சத்திரத்தாரைகளின் இட அமைவையும் அவை எந்த அளவு சோதிட கட்டுமானத்தை வடிவமைக்க உதவி உள்ளன என்பதையும் பார்க்கலாம். அடுத்த பாகம், நிறைவு பாகமாக அமையும் என நினைக்கிறேன்.
நன்றி !
வானியல் மென்பொருள் உதவி:
- http://Stellarium.org
- Night Sky for iOS – App
Pingback: T032 இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 12. சட்பலம் அல்லது ஷட்பலம் - முதல் பாக