T009 ஜோதிடத்தில் ஆராய்ச்சி மனப்பான்மை

ஜோதிடத்தின் அடிப்படையான தத்துவங்களில் ஒன்று கிரகங்களின் உச்சம் மற்றும் நீச்சம் ஆகும். உதாரணத்திற்கு, குரு கடக ராசியில் 5 பாகையில் உச்சம் அடைகிறார், மகர ராசியில் 5 பாகையில் நீசம் அடைகிறார். இவை பெரும்பாலானோர் அறிந்ததே! ஆயினும் இந்த உச்சம் மற்றும் நீச்சம் ஆவதற்கு அறிவியல் பூரணமான ரீதியிலான விளக்கங்கள் உங்களிடம் ஏதேனும் உள்ளதா? இது போன்ற விஷயங்களை நாம் கேள்விகள் எதுவும் கேட்காமலே கடந்து போய் விடுகிறோம். இந்த பதிவின் நோக்கம், அது போன்ற விஷயங்களை நாம் சற்று அறிவியல் பூர்வமாகவும் ஆராய்ந்து உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே.

கேள்விகள் அற்ற நாட்கள் வெறுமையானவை! கொஞ்சம் நம் வள்ளுவப் பாட்டனை நினைவுபடுத்துகிறேன்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

குறள்: #423, அறிவுடைமை, அரசியல், பொருட்பால்

பொதுவாக சூரியன் மேஷ ராசியில் 10 பாகையில் பிரவேசிக்கும்போது உச்சம் அடைவதாகக் சொல்கிறோம். இது இந்தியா போன்ற பூமத்திய ரேகைக்கு அருகில் இருக்கும் நாடுகளுக்கு நல்ல கோடை காலம் ஆகும். சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் அவர் பூமிக்கு மிகவும் அருகில் வருவதால் (கத்திரி வெய்யில் காலம்) அவர் மேஷ ராசியில் உச்சம் அடைவதாக சொல்லப்படுகின்ற விளக்கம் பெரும்பாலானோரால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஆனால், நீங்கள் மற்ற கிரகங்களின் உச்சம் மற்றும் நீச்சத்திற்கு அறிவியல் பூர்வமான விளக்கங்களை வைத்திருக்கிறீர்களா? எடுத்துக்காட்டாக, குரு கடக ராசியில் 5 பாகையில் பிரவேசிக்கும்போது உச்சம் அடைவதாக சொல்லப்படுகிறது. உண்மையிலேயே குருவானவர் கடக ராசியில் இருக்கும் போதெல்லாம் உச்சம் அடைகிறாரா அல்லது உச்சத்தை கணக்கிடுவதற்கு குருவுடன் சேர்ந்து நாம் வேறு ஏதேனும் கிரகங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுமா?

இதுபற்றி எனக்கு கேள்வி ஞானமாகவும், நான் படித்த வகையிலும் சில கருத்துக்கள் உள்ளன. ஆனால் அவையாவும் அறிவியல்பூர்வமாக ஆராயப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் அல்ல. அவற்றின் உண்மையை அறிவியல்பூர்வமாக நான் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். அவற்றுடன் சேர்த்து உங்களுடைய கருத்துக்களில் ஏதேனும் ஏற்புடையதாக இருப்பின் அவற்றையும் என் ஆய்வில் சேர்த்து, நான் கண்டறிந்தது என்ன என்பதை உங்களுடன் பின்வரும் ஒரு பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

சோதிடம் சார்ந்த அடிப்படை கோட்பாடுகளில் நமக்கு சரியான அறிவியல் பூர்வமான விளக்கம் கிடைக்கும் பட்சத்தில் சோதிடத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையையும் ஜோதிடர்களுக்கு இன்னும் சற்று விழிப்புணர்வையும் அதிகரிக்க முடியும் என்ற நோக்கிலேயே இந்த பதிவை இடுகிறேன். நமக்கு சொல்லப்பட்ட விளக்கங்களில் அறிவியல் பூர்வமாக உண்மை இல்லாத பட்சத்தில் அவற்றை வேறு ஒரு கோணத்தில் இருந்து அணுகுவதற்கும் இதுபோன்ற ஆராய்ச்சிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எனக்கு தெரியவில்லை. ஆனால் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்பதே ஆராய்ச்சியின் முதன் ஆரம்ப புள்ளி ஆகும். நமது ஆராய்ச்சிகள் தோற்றுப் போகலாம். நமது ஆராய்ச்சியின் முடிவில் நமக்கு நாம் எதிர்பார்க்கும் முடிவுகள் மற்றும்/அல்லது தெளிவான முடிவுகள் கிடைக்காமல் போகலாம். அப்படி ஆனாலும் ஆராய்ச்சி மனப்பான்மை எப்போதும் தோற்றுப் போகக் கூடாது. இது ஒரு ஜோதிடருக்கு மிகவும் முக்கியமான அடிப்படை குணம் ஆகும். இந்த உலகம் தோல்விகளின் மூலமே செம்மைப் படுத்தப் பட்டுள்ளது. தோல்விகளே வெற்றிக்கான படிக்கற்கள்.

 

இப்போது உங்கள் முறை! ஒரு கிரகம் உண்மையிலேயே உச்சமாக வேண்டுமெனில் அதற்கான மற்ற கிரக அமைப்புகள் என்ன? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இதுபற்றி உங்களுடைய கருத்துக்கள்/புரிதல்கள் என்ன? உதாரணத்திற்கு, குரு கடகத்தில் உச்சம் ஆகும்போது மற்ற கிரகங்கள் எதற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? அப்படியெனில் எந்த கிரகம் எங்கே இருக்கும் போது மட்டும் குரு உண்மையிலேயே உச்சம் ஆகிறது என்று நாம் எடுத்துக்கொள்ள முடியும்? உங்கள் கருத்துக்கள் எதுவானாலும் தயக்கமின்றி பதிவிடுங்கள். அனைவரும் இணைந்து கற்கலாம்.

வளரும் …

Feel welcome to share your comments or feedback!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.