T020 நட்சத்திரங்களின் இட அமைவு – பன்னிரண்டு ராசிகளும் 27 நட்சத்திரங்களும்: வானியல் சார்ந்த பார்வை (இறுதி பாகம்)
இந்திய வானியலின் 12 ராசி 27 நட்சத்திரங்கள் – இந்த பாகத்தில் 27 நட்சத்திரங்களின் இட அமைவு மற்றும் அவற்றிற்கு இடையே உள்ள இடைவெளி, அவை எந்த அளவு சோதிட கட்டுமானத்தை வடிவமைக்க உதவி உள்ளன என்பதையும் பார்க்கலாம். இந்த தொடரின் முந்தைய பாகங்களை படித்துவிட்டு, இதனை தொடர்வது உங்களுக்கு உதவியாக இருக்கும். நாம் இந்த கட்டுரையில் பார்க்க இருக்கும் எல்லா தரவுகளும் கிரகணக் கட்ட அடிப்படையில் (Ecliptic Grid) அமைந்தவை என்பதை கவனத்தில் கொள்ளவும்.
முக்கிய வேண்டுகோள்
இது சற்று ஆழமான ஆராய்ச்சிக்கட்டுரை. குமுதம், ஆனந்த விகடன் போல மேம்போக்காக படிக்காதீர்கள்! உங்களுக்கு உண்மையிலேயே சோதிடத்தின் பின்னே உள்ள வானியல் கட்டமைப்புகள் புரியவேண்டும் என்றால், இந்த கட்டுரையில் உள்ள படங்களை நிதானமாக பார்த்து, உள்வாங்கி, அனுமானித்து, பிறகு மேற்கொண்டு படிக்கவும். ஒரு முறை படித்தால் புரியவில்லை என்றால் சற்று காலம் தாழ்த்தி மீண்டும் படியுங்கள்.
நட்சத்திரங்களும் அவற்றின் தாரைகளும்
இந்த கட்டுரையில் தாரைகள் என்ற பதம் ஒரு நட்சத்திரத்தின் தொகுப்பில் உள்ள நட்சத்திரங்களை குறிப்பிட பயன்படுத்தப்பட்டு உள்ளது. இது பொதுவாக சோதிடத்தில் சொல்லப்படும் ஜென்ம தாரை, சம்பத்து தாரை போன்ற ஒன்பது வகைகள் அல்ல என்பதை நினைவில் கொள்ளவும்.
இதுவரை தரவுகளாக பார்த்த நட்சத்திர தாரைகளின் வடிவங்களை, கீழே உள்ள படத்தில் நீங்கள் பார்க்கலாம். இரண்டு அல்லது அதற்கும் மேலான தாரைகளை கொண்ட நட்சத்திரங்களின் வடிவங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.
கிரகணப்பாதையின் முக்கியத்துவம்
இந்த கட்டுரையை மேற்கொண்டு படிக்கும் முன்பு, சில உபரியான தகவல்களை நீங்கள் தெரிந்துகொள்வது உங்கள் புரிதலை மேம்படுத்தும் என நான் நினைக்கிறேன்.
இந்திய சோதிடத்தில், ஒரு ராசி மண்டலத்தில் சந்திரனின் இருப்பு மிகப் பிரதானம் ஆகும். இந்திய முறையில், சந்திரன் பூமியை சுற்றி வரும் பாதையில் அமைந்த ராசிகள் மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன என்ற ஒரு கூற்று உள்ளது. மற்ற நாட்டு முறைகளில், பூமி மற்றும் பிற கிரகங்கள் சூரியனை சுற்றிவரும் பாதையில் உள்ள ராசிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன என்ற கருத்து உள்ளது. கிரகண கட்டத்தில் சந்திரனின் சுற்று வட்ட பாதைக்கும், சூரியனை மற்ற கிரகங்கள் சுற்றி வரும் பாதைக்கும் இடையே 5.5 பாகைகள் வரை சாய்வு வித்தியாசம் உள்ளது. இது கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டு உள்ளது.
இந்த இரு பாதைகளும் வெட்டிக்கொள்ளும் புள்ளிகளையே, ராகு மற்றும் கேது என்ற நிழல் கிரகங்களாக இந்திய சோதிடத்தில் பயன்படுத்துகின்றோம் (அங்கு எந்த பாம்பும் இல்லை நண்பர்களே!).
நீண்டநெடும் காலத்திற்கு முன்னால் (பல மில்லியன் ஆண்டுகள் என படிக்கவும்!), சந்திரனின் பாதையும் மற்ற கிரகண பாதையுடன் பெருமளவில் ஒத்திருந்தது என இன்றைய வானியல் புரிதல்கள் தெரிவிக்கின்றன. அதுபோன்ற காலங்களில் முழு கிரகணங்கள் அடிக்கடி நிகழ்ந்து வந்துள்ளன.
இந்திய சோதிடத்தில் கிரகண நிகழ்வுகள் மிகவும் முக்கியமாக கருதப்படுகின்றன. பெரும் உலகியல் மாற்றங்களும், அரசியல் மற்றும் பிற முக்கிய திருப்பங்களும் கிரகணம் நிகழும் ராசி, நட்சத்திரம், மற்றும் சம்பந்தப்பட்டுள்ள பிற கிரகங்களை பொருத்து ஏற்படுவதாக பலன்கள் சொல்லப் படுகின்றன. இன்றைய தேதியில், பல சோதிடர்கள் கொரோனாவை வைத்து சொல்லும் பல கணிப்புகள் மற்றும் அனுமானங்கள் இந்தக் கணக்கில் சேரும்!
கிரகண நிகழ்வு என்பது சூரியன் மற்றும் சந்திரன் பாதைகள் சம்பந்தப்பட்டதாக இருந்த போதிலும், இந்த ராகு மற்றும் கேது என்ற கிரகண புள்ளியுடன் சம்பந்தப்படும் அல்லது நெருங்கி வரும் பிற கிரகங்களும் தங்களின் சுய காரகங்களை இழக்கின்றன மற்றும் மாறுதலான பலன்களை தருகின்றன என்ற கண்டுபிடிப்பு இந்திய சோதிடத்தின் மிகவும் மூலாதாரமான கட்டுமானம் ஆகும். கிரகணங்கள் ஆச்சரியமாக, பயமூட்டுபவையாக இருந்த ஒரு காலத்தில், அவற்றுக்கு மனிதன் பயந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே!
காந்தப்புலம்
பூமி மற்றும் பிற கிரகங்களைப் போல சந்திரனுக்கும் அது தோன்றிய காலத்தில் சுயமான ஒரு காந்தப்புலம் இருந்தது என்று வானியல் சொல்லுகிறது. இந்த காந்தப்புலம், கிரகங்கள் தன்னை சூரியன் இடம் இருந்து தொடர்ச்சியாக வெடித்துக் கிளம்பும் சூரியக் காற்றில் (solar wind) இருந்தும் மற்றும் வான் குப்பைகளில் இருந்தும் தற்காத்துக் கொள்ளும் ஒரு அரணாக செயல்படுகிறது. இந்த அரண் இல்லாமல் பூமியில் உயிர்கள் இல்லை.
சில வானியல் நிகழ்வுகளால் சந்திரன் தனது காந்தப்புலத்தை இழந்து, பின்னர் அதன் காரணமாக தொடர்ச்சியான விண்கல் தாக்குதலுக்கு உள்ளாகியதால் தான் அதன் மேற்பரப்பில் நாம் காணும் பள்ளங்கள் (craters) ஏற்பட்டுள்ளன என்று இன்றைய வானியல் நமக்கு விளக்குகிறது. செவ்வாய் கிரகத்திற்கும் கூட பூமியைப் போல வலிமை வாய்ந்த காந்தப்புலம் இல்லை என்பது கூடுதல் தகவல்!
காந்தப்புலம் கொண்ட கிரகங்களின் பாதையில் ஒன்றை ஒன்று கடக்கும் போது, அவை ஏற்படுத்தும் விளைவுகள் வித்தியாசமாக இருக்கும் என்பது போன்ற ஒரு கட்டமைப்பில் இந்த ராகு கேது என்ற தத்துவங்களும், அவை ஏற்படுத்தும் மாறுபாடான பலன்களும், அதற்கான சோதிட விதிகளும் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்பது எனது சிற்றறிவுக்கு எட்டிய அனுமானம்.
சந்திரன் பூமிக்கு மிக அருகில் இருப்பதாலும், அதன் விரைவான இயக்கம் பூமியில் உணரத்தக்க அளவில் பருவமாற்றங்களையும், கடல் அலைகளில் மாறுபாட்டை ஏற்படுத்தக் கூடியதாக இருப்பதாலும், சந்திரன் மட்டுமே பிற கிரகங்கள் மற்றும் பல நட்சத்திரங்களை முழுதாக மறைக்க வல்லது என்ற அடிப்படையிலும், சூரியனின் கிரகண பாதையுடன் சந்திரனின் வெட்டுப்பாதையை வைத்து, இந்த ராகு கேது தத்துவங்கள் உருவாக்கப்பட்டு இருக்கலாம்.
எது எப்படியாயினும், ராகு-கேது இல்லாமல் இந்திய சோதிடம் இல்லை. அந்த கணிதப் புள்ளிகளின் பின்னே நேரடியாக மற்றும் எளிதில் விளக்கமுடியாத ஏதோ ஒன்று உள்ளது என்பது மட்டும் சத்தியம்!
இதன் அடிப்படையில், கிரகண பாதையின் முக்கியத்துவம் உங்களுக்கு புரிந்து இருக்கும். நிற்க!
சந்திரனின் கிரகண பாதை
நாம் இப்போது சந்திரனின் பாதை பற்றி பார்க்கலாம். சந்திரனின் பாதை 5.5 பாகை வரை சாய்ந்து உள்ளதென பார்த்தோம். இன்றைய ராசி மண்டல உருவகங்கள் அடிப்படையில் அமைந்த எல்லைகளில், சந்திரனின் சுற்றுவட்ட பாதையில் நாம் நினைப்பது போல 12 ராசிகள் அல்லாமல், 22 ராசி மண்டலங்கள் வரை பயணம் செய்யக்கூடும் என கணக்கிடப்பட்டு உள்ளது. இது உங்களுக்கு கீழே காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
இந்தப்படம் இந்திய சோதிடத்தின் பின்னே உள்ள வானியல் அறிவினை பறைசாற்றும் படம் ஆகும். இந்த படத்தில் 88 நவீன ராசிகளும், அவற்றின் எல்லைகளும் காட்டப்பட்டு உள்ளன. படத்தின் மத்தியில் உள்ள பச்சை நிறக்கோடு, கிரகணப் பாதையையும், வெளிர் நீலக்கோடு நிலவின் பாதையையும் குறிக்கின்றன. இதில் நாம் சோதிடத்தில் கருதும் 12 ராசிகளும் பச்சை வண்ண பெட்டிகளால் (1 முதல் 12 வரை எண்கள் கொடுக்கப்பட்டவை) அடையாளம் காட்டப்பட்டு உள்ளன. அதனை அடுத்து, ஆரஞ்சு வண்ண பெட்டியில் எண்கள் குறிக்கப்பட்டுள்ள ராசிகள், சந்திரன் தனது பாதையில் கடந்து செல்லக்கூடிய வாய்ப்பு உள்ள பிற ராசிகள் ஆகும். படத்தில் உள்ள சிவப்பு வண்ணமிட்ட X என்று குறியிடப்பட்டுள்ள ராசிகளின் ஆங்கில பெயர்கள் என்ன என்பதை மட்டும் கவனித்துக்கொள்ளுங்கள்.
வானியல், சோதிடத்தை குறையாக சொல்லும் இடங்களில் ஒன்று 12 ராசிகள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு உள்ளோம் என்பது (அதிக தகவல்களுக்கு இந்த இணையப் பக்கத்தை பார்க்கவும்: https://www.space.com/5417-ecliptic-zodiac-work.html). சோதிடத்தில் உள்ள ஒரு அனுமான பிழையாக, வானியல் அறிஞர்கள் சொல்லும் ஒரு விளக்கம், ஏன் சந்திரனின் பாதையில் உள்ள 22 ராசிகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பது ஆகும். அதற்கான எனது பதில் இதோ வருகிறது 😊.
சில ஆச்சரியமூட்டும் வானியல் உண்மைகள்:
ஆச்சரியப்படும் விதமாக, இந்திய சோதிடத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள 27 நட்சத்திரங்களில் பல, 12 ராசி உருவகங்களுக்கு அப்பாலும் உள்ளன. 27 இல் 10 நட்சத்திரங்கள் அவற்றிக்கு அடையாளம் காணப்பட்டுள்ள ராசிகளிலேயே இல்லை! அதாவது 73 தாரைகளில் 33 தாரைகள் (45% தாரைகள்) சோதிடத்தில் அவற்றிற்கு என்று வரையறை செய்யப்பட்ட 12 ராசிகளிலேயே இல்லை! கவனிக்கவும் – சரியான அயனாம்சம் என்ற விடயம் இங்கே எடுத்துக்கொள்ளப்படவில்லை.
கீழே உள்ள அட்டவணையில், தனது ராசிக்கு மாறான இடத்தில் உள்ள நட்சத்திர தாரைகள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளன.
- இவற்றில் மூல நட்சத்திரம் தவிர்த்து, பிற ராசிகளுக்கு அடையாளமாக சொல்லப்பட்டுள்ள 9 நட்சத்திரங்கள், குறிப்பிட்ட ராசிக்கு மேலே அல்லது கீழே வேறு ஒரு ராசியில் அமைந்து உள்ளன.
- இந்த ஒன்பதில் ஆறு ராசிகளின் ஊடாக சந்திரன் குறைந்தபட்சம் அந்த ராசியை தொட்டுக்கொண்டாவது செல்கிறது.
- ஆறு வேறு ராசிகளில் சந்திரன் பயணம் செய்த போதிலும் (ஆரஞ்சு வண்ண பெட்டிகள் உள்ள ராசிகள்: Cetus, Sextans, Auriga, Crater, Ophiuchus and Scutum) அவற்றில் இந்திய சோதிடத்தில் சொல்லியுள்ள நட்சத்திரங்கள் எதுவும் இல்லை.
- சுவாதி, அவிட்டம் மற்றும் திருவோணம் ஆகிய நட்சத்திரங்கள் உள்ள ராசிகள் சந்திரனின் பாதையில் அமைந்து இருக்கவில்லை. ஆனாலும் கூட, அவை கணக்கில் எடுக்கப்பட்டு உள்ளன. அதற்கான காரணம் பின்னால் உங்களுக்கு தெரியவரும்.
- மூல நட்சத்திரம் (19) தனுசு ராசிக்கு உரியதாக சொல்லப்பட்டாலும் கூட, அது விருச்சிக ராசி எல்லையிலேயே அமைந்து உள்ளது.
பன்னிரண்டு ராசிகள் தான் முக்கியம் என்றால், நமது முன்னோர்கள் ஏன் இதுபோல வேறு ராசி நட்சத்திரங்களை தேர்ந்தெடுத்தார்கள் என்பது நம்மை குழப்பத்தில் ஆழ்த்துகிறது. அதற்கான பதிலையும் தேடுவோம்.
கிரகணப்பாதையில் 27 நட்சத்திரங்களின் இருப்பு
கிரகண கட்டத்தின் முக்கியத்தை நாம் மேலே பார்த்தோம். அதன் அடிப்படையில், நாம் வானில் உள்ள 27 நட்சத்திரங்களையும் செவ்வக வடிவிலான கிரகண கட்டத்தில் வைத்துப்பார்த்தால், அவை எவ்வாறு தோன்றும் என்பதை 2000 AD ஆம் ஆண்டு இருந்த கிரகணக் கட்டத்தில் நட்சத்திர தாரைகளின் இட அமைவின் தரவுகளின் ஊடாக பார்க்கலாம். அது கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது. வரைபடத்தின் X அச்சில் கிரகண தீர்க்கரேகை புள்ளிகளும், Y அச்சில் கிரகண அட்ச ரேகை புள்ளிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. வரைபடம் ராசிகளின் வரிசைப்படி, வலம் இருந்து இடமாக படிக்கப்பட வேண்டும்.
இன்றைய மேற்கத்திய முறைப்படி உள்ள கிரகண கட்ட அளவுகளில், 0°அசுவினி நட்சத்திரத்தில் ஆரம்பிக்கவில்லை. ஆனால், நமது இந்திய முறையில், நட்சத்திரங்களின் இட அமைவு வரிசையில், அசுவினி தான் முதல் புள்ளி. எனவே, இந்த படத்தை அப்படியே சற்று வலது புறம் அசுவினியில் 0 பாகை வருவது போல தள்ளிவைத்து பார்த்தால், நமது ராசி கட்டங்களுடன் நேரடியாக ஒப்பீடு செய்ய முடியும்.
அப்படி செய்தால் வரும் வரைபடம், கீழே காண்பிக்கப்பட்டு உள்ளது.
இந்தப்படத்தை சோதிடத்திற்கான எனது முக்கியமான ஒரு பங்களிப்பாக நான் கருதுகிறேன். சரியான அயனாம்சம் எது என்ற விடயத்தை தள்ளி வைத்துவிட்டு, சற்று நேரம் எடுத்துக்கொண்டு நிதானமாக இந்த படத்தில் உள்ள நட்சத்திரங்களின் இட அமைவை உணர்ந்து கொள்ளுங்கள். படத்தின் கீழே, 30 பாகை அளவுகளில் பிரிக்கப்பட்ட 12 ராசிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் மேலே, வானில் அமைந்து உள்ள நட்சத்திரங்களை நீங்கள் பார்த்துக்கொள்ளலாம்.
இந்த படத்தில் கிரகணப்பாதையும், சந்திரன் முழுதாக மறைக்கக்கூடிய 6 பாகை தூரம் வரையிலான ஒரு பட்டையும் காட்டப்பட்டுள்ளது. இந்த பட்டையில் உட்புறம் உள்ள நட்சத்திரங்களை, அதன் சாய்வான பாதையை பொருத்து, சந்திரனால் முழுதும் மறைக்க முடியும்.
கார்த்திகை, ரோகிணி, பூசம், மகம், சித்திரை, விசாகம், அனுஷம், கேட்டை, உத்திராடம் மற்றும் ரேவதி ஆகிய பத்து நட்சத்திரங்களின் தாரைகள் மட்டுமே, இந்த கிரகண மறைப்பு எல்லைக்குள் வருகின்றன. இவற்றில் ஏதாவது ஒரு நட்சத்திரத்தினை பின்புலமாக கொண்டு சூரிய அல்லது சந்திர கிரகணம் நிகழலாம்!
நாம் கருதும் 27இல், இந்த 10 நட்சத்திரம் தவிர்த்து வேறு எந்த நட்சத்திரத்திலும் (அதாவது அதன் முன்புலத்தில்), வானியல் ரீதியாக கிரகணம் நிகழாது.
இவற்றில் சூரியன், சனி, புதன் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நட்சத்திரங்கள் தலா 2 ஆகும். சந்திரன், கேது, செவ்வாய் மற்றும் குருவிற்கு தலா ஒரு நட்சத்திரங்கள் உள்ளன. இந்த 6 பாகை பட்டைக்கு சற்று வெளியே, ராகுவின் ஒரு நட்சத்திரம் ஆகிய சதயம் உள்ளது. எனவே, எல்லா நவகிரகங்களும் குறைந்த பட்சம் ஒரு நட்சத்திரத்தையாவது இந்த கிரகண கட்ட மறைப்பு எல்லைக்குள் அல்லது மிக அருகில் கொண்டுள்ளன.
நட்சத்திரங்கள் நகர்வதை நாம் அறிவோம். அதன் அடிப்படையில், புனர்பூசத்தின் ஒரு நட்சத்திர தாரை, சில ஆயிரம் ஆண்டுகள் கழித்து, அதன் உள்நோக்கிய நகர்வின் காரணமாக சந்திரனால் மறைக்கப்படும் பட்டையின் எல்லைக்குள் வரலாம்.
இந்த படத்தை சோதிட அடிப்படையில் பார்த்தால் கீழ்கண்ட முக்கிய வேறுபாடுகளை நீங்கள் கவனிக்க முடியும்.
- மகம் கடகத்தின் எல்லைக்குள்ளேயே இருக்கிறது.
- சித்திரையும் சுவாதியும் கிரகண தீர்க்கரேகை அளவுகளில் கிட்டத்தட்ட மிக அருகாமையில் உள்ளன.
- மூல நட்சத்திரம் விருச்சிகத்தின் எல்லைக்குள்ளேயே இருக்கிறது.
நட்சத்திரங்களுக்கு இடையே உள்ள தூரம்
ஒவ்வொரு ராசிக்கும் 30 பாகைகள் மற்றும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் 13 பாகை 20 கலை என்று சோதிடத்தில் அடிப்படை கணக்கீடு உள்ளதை நாம் அறிவோம்.
நாம் வானியல் படி, நட்சத்திரங்கள் எந்த அளவு தூரத்தில் ஒன்றில் இருந்து ஒன்று விலகி அமைந்து உள்ளன என்பதை இப்போது பார்க்கலாம். கிரகண கட்டத்தில் தீர்க்கரேகைகளுக்கு இடையே உள்ள தூரம், பாகை அளவில் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த படத்தில், இரு விதமான தரவுகள் கொடுக்கப்பட்டு உள்ளன. ரோஜா நிற புள்ளிகள், நட்சத்திரத்தின் முதல் தாரைகளுக்கு இடையே உள்ள தூரத்தை குறிக்கும். பச்சை நிற புள்ளிகள், தாரைகளின் சராசரி தூரத்தின் அடிப்படையில் அமைந்தவை. சராசரி மற்றும் திட்ட விலக்கம் (Mean and Standard Deviation) அடிப்படையில், நட்சத்திரத்தின் முதல் தாரைகளை கணக்கில் எடுத்துக்கொள்வது புள்ளியியல் அடிப்படையில் உசிதமாக இருக்கும்.
படத்தின் மத்தியில் 13° 20’ (எண்கள் அளவில் 13.33 பாகை) ஒரு மஞ்சள் நிற கோடு வரையப்பட்டு உள்ளது.
இந்த வரைபடத்தில், நட்சத்திரங்கள் சோதிட வரையறையான 13° 20’ இன் இருபுறமும் பரவி இருப்பதை பார்க்கலாம்.
- நமக்கு சோதிடத்தில் சொல்லப்பட்ட வரிசையிலேயே 27 நட்சத்திரங்களின் இடவரிசை அமைந்து உள்ளது.
- 27இல் கிட்டத்தட்ட 16 நட்சத்திரங்களின் அளவுகள், சராசரி± ஒரு பாதம் என்று நாம் சொல்லக்கூடிய 3.33 பாகைகளுக்கு உள்ளேயே இருக்கின்றன.
- மிக அதிகபட்சமாக, விசாகம் அதன் முந்தைய நட்சத்திரமாகிய சுவாதியில் இருந்து 26 பாகைகள் தள்ளி அமைந்து உள்ளது.
- சுவாதிக்கும், சித்திரைக்கும் இடையே உள்ள தூரம் மிக குறைவாக (0.4 பாகைகள் மட்டுமே) அமைந்து உள்ளது.
சோதிடம் மற்றும் வானியல் தரவுகளின் ஒப்பீடு:
சோதிடக் கட்டுமானத்தின் பின்னே உள்ள வானியல் தரவுகள் எந்த அளவுக்கு சோதிடத்துடன் ஒத்துப்போகின்றன என்பதை அறிய அவை இரண்டிற்கும் இடையே உள்ள தொடர்புகளை, புள்ளியியல் ரீதியாக ஆராய்வோம். வானியல் படி உள்ள நட்சத்திர தூரமும், சோதிடக் கணக்குகளின் படி நட்சத்திரம் இருப்பதாக கணக்கிடப்படும் பாகை தூரங்களும் கீழே உள்ள படத்தில் ஒப்பீடு செய்யப்பட்டு உள்ளன.
இவை இரண்டிற்கும் இடையே மிக மிக நெருக்கமான ஒரு தொடர்பு (correlation) இருப்பதை மேலே உள்ள இந்த வரைபடம் உறுதி செய்கிறது. இதில் நீங்கள் பார்க்கும் R2 என்ற மதிப்பீடு 1 என்ற அளவில் இருந்தால் அது சர்வ நிச்சயமான ஒரு சமன்பாடு ஆகும். இந்த அளவுக்கு (0.997) துல்லியமான தொடர்பினை நீங்கள் அறிவியலின் மிகச்சில பிரிவுகள் தவிர்த்து, மக்களை சார்ந்து அமைந்துள்ள எந்த ஒரு துறை சார்ந்த கணிதத்திலும் காண முடியாது. தரவு அறிவியலில், இதுபோல புள்ளியியல் மாதிரிகளில் 0.70 க்கு மேலே இருந்தாலே, நாங்கள் அது ஒரு நல்ல மாதிரி என்று கொண்டாடித் தீர்த்து விடுவோம்!
இந்தப்படம் நமது முன்னோர்களின் மேம்பட்ட வானியல் அறிவிற்கான மிகப்பெரிய சான்று ஆகும். ஏதோ ஒரு 27 நட்சத்திரங்களை சம்பந்தம் இல்லாமல் வெவ்வேறு ராசிகளில் தெரிவு செய்ததைப்போல முதலில் தோன்றினாலும், அவற்றின் பின்னே உள்ள வானியல் காரணங்கள் மற்றும் தூர அளவீடுகளின் துல்லியமான திரண்ட அறிவினை மெச்சாமல் கடந்து செல்ல முடியாது. இது இந்திய சோதிடம் தனது கணக்கீடுகளை, வானியல் சார்ந்து எந்த அளவுக்கு துல்லியமாக வடிவமைத்துள்ளது என்பதை விளக்குகிறது.
சோதிடத்தின் நட்சத்திரங்கள் பின்னே என்ன பெரிய கணிதம் இருந்துவிட முடியும் என்று கேட்பவர்களிடம் இந்த ஒரு படத்தை மட்டும் காட்டுங்கள். அது போதும்.
இதுவரை பார்த்தவற்றின் தொகுப்பு:
நாம் இதுவரை 5 பாகங்களில் பார்த்தவற்றின் திரண்ட கருத்துக்களை இங்கே எனது பார்வையில் தொகுத்து தருகிறேன்.
- ராசி மற்றும் நட்சத்திரங்களை வைத்து செய்யப்பட்டுள்ள சோதிட கட்டுமானத்தின் பின்னே, உண்மையிலேயே மிகப்பெரும் வானியல் கணித அறிவு மற்றும் காரணம் பொதிந்து உள்ளது. தரவுகளின் அடிப்படையில் பார்க்கையில், அவர்கள் மிகவும் கவனமாக நட்சத்திரங்களை தேர்ந்தெடுத்தது கூட நட்சத்திரங்களின் இட அமைவு மற்றும் தூரங்களில் அடிப்படையில் என்று தெரிகிறது. ராசிகளின் நீளத்தை விட நட்சத்திர தூரம் (பாகைகள்) கணிதம் செய்ய முக்கியம் என்பது அவர்களின் கட்டுமானத்தின் பின்னே இருக்கிறது. இந்த நட்சத்திர தேர்வின் பின்னால், ஒரு பெரிய கணித மாதிரி (mathematical model) இருப்பதைத்தான் நான் பார்க்கிறேன்.
- தனித்து பார்த்தால், வானியல் ராசிகளின் தரவுகள் குறிப்பிடத்தக்க அளவில் சோதிட ராசிகளின் தூரம் சம்பந்தப்பட்டுள்ள தரவுகளுடன் பொருந்திப்போகவில்லை. அதே நேரம், 12 ராசிகளை 27 நட்சத்திரங்களுடன் இணைத்து சொல்லும்போது, அவற்றின் வானியல் தூர அளவுகள் சோதிடத்தின் பாகை அளவிலான தூர அளவுகளுடன் மிகவும் நெருக்கமாக பொருந்திப்போகின்றன. இது இந்திய சோதிடத்தின் தனித்துவத்தையும் வானியல் மற்றும் கணித அறிவையும் பறை சாற்றுகின்றது. மற்ற நாட்டு சோதிட முறைகளின் பின்னே இந்த அளவு ஆழ்ந்த வானியல் கணித அறிவு இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை.
- சோதிடத்தினை துல்லிய வான்கணிதம் சார்ந்த ஒரு துறை என்று முன்னெடுக்காமல், அதனை வானியலின் மாதிரி சார்ந்து வடிவமைக்கப்பட்ட ஒரு துறை (applied astronomy) என்று முன்னெடுத்துச் செல்வது மிகவும் உசிதம் என்று நான் கருதுகிறேன். இதுவரை நான் முயற்சித்த வானியல் சார்ந்த ஒப்பீடுகளில் (உதாரணமாக, கிரகங்களின் உச்சம் மற்றும் நீச்சமும் கிரகங்களின் தூரமும் என்ற கட்டுரை), தற்கால சோதிடர்கள் சொல்லும் வானியல் விளக்கத்தினை உறுதி செய்ய நேரடியான வானியல் தரவுகள் ஒத்திசைவாக இல்லை. இது தற்கால சோதிடர்களின் மேம்போக்கான வானியல் புரிதலையே காட்டுகிறது. மாறாக, நமது முன்னோர்களின் கணக்குகள் கட்டமைப்பில் மிகப்பலமானவையாக, பிரமிப்பு ஊட்டுபவையாக உள்ளன.
எனது பார்வைகள்:
தற்கால சோதிடர்கள் சோதிட கட்டுமானங்களை நேரடியாக வானியல் கருத்துக்களை கொண்டு நிறுவாமல், அதனை வானியலில் உள்ள தரவுகள் மற்றும் சோதிட கணித கட்டுமானத்திற்கு இடையேயான தொடர்புகளை கொண்டு விளக்க முற்பட்டால், நமக்கு சோதிடத்தின் பின்னே நம் முன்னோர்கள் ஒளித்து வைத்துள்ள மாபெரும் வானியல் உண்மைகள் புலப்படக்கூடும். இது போன்ற முன்னெடுத்தலுக்கு, தரவு அறிவியல் உங்களுக்கு இன்றியமையாத தோழனாக அமையும் என்பது திண்ணம்.
கிரகங்கள் தான் மனிதனை வழி நடத்துகின்றன என்று ஒரு வாதத்திற்கு மட்டும் உதவும் ஆனால் வானியல் தரவு ரீதியில் உறுதிப்படுத்த முடியாத அல்லது விளக்கமுடியாத கருத்தினை முன்வைக்காமல், ஒரு குறிப்பிட்ட வாழ்வியல் நிகழ்வு நடக்கும் போதெல்லாம், மக்களின் ஜாதகத்தில் மற்றும் கோட்சாரத்தில் குறிப்பிட்ட கிரக நிலைகள் இருந்து வந்துள்ளன. எனவே, அது போன்ற அமைப்புகளை உடைய உங்களுக்கும் அது போன்ற பலன் நடக்க வாய்ப்பு உள்ளது என்று சோதிட சாஸ்திரத்தின் எல்லைகளுக்குள் நின்று நீங்கள் பலன் சொல்லும்போது, சோதிடத்தின் மீது வைக்கப்படும் தேவையற்ற அல்லது தவறான எதிர்பார்ப்புகளை நீங்கள் குறைக்க முடியும். அதுபோல செய்யும்போது, நீங்கள் சில நேரங்களில் சொல்லும் தவறான பலன்களும் கூட ஜாதகர்களால் அனுமதிக்கப்படலாம்.
இதுவரை இந்த கட்டுரையை எழுத வழிகாட்டிய இறை சக்திக்கும், இதனை தொடர்ந்து படித்துவரும் உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன!
Courtesy:
வானியல் மென்பொருள் மற்றும் தரவுகள்: http://stellarium.org
மேலான தகவல்கள்: www.wikipedia.org
பிற்சேர்க்கை – பதிவிட்டது – 4 செப்டம்பர் 2024
பொதுமக்களுக்கான ஜோதிடம் என்ற தொடரில் இந்த கட்டுரையின் நீட்சியாக பல கூடுதல் நுணுக்கங்களை நமது யூடியூப் சேனலில் பதிவிட்டு இருக்கிறேன். அவற்றில் ஒரு சுட்டி கீழே உள்ளது. மேலும் ஆர்வமுள்ள நண்பர்கள் நமது சேனலில் உள்ள கூடுதல் காணொலிகளையும் கண்டு அறியவும்.
Your articles are highly informative and they will surely help the people with science background to understand the indian astrology. There could have been a big gap in the knowledge transfer in old days and you are filling up that
Thank you for your feedback. I have covered more nuances in the lectures available in our YouTube channel. You can look at them.
Pingback: T035 இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 15. சட்பலம் – நான்காம் பாகம் – சேஷ்ட ப
Pingback: T025 இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 5. அடிப்படை சோதிட கட்டுமானங்கள் - 2 - AI ML
Great thoughts of our astrology. New information about the placement of nakshatra and how they are placed under a Rasi. Raghu , kethu information is new to me. Thanks
nice
மிக்க நன்றி ஐயா.. தெளிவான விளக்கம். ஆரம்ப நிலையில் உள்ள சோதிட பயிற்சியாளர்களுக்கு நன்றாக உதவும்.
அருமை. தாங்கள் உலகின ஒரு மிகச்சிறந்த ஆய்வுக்கூடத்தை கட்டமைத்து கொண்டிருக்கிறீர்கள. உங்கள் ஆய்வுகளை பயன்படுத்த மருத்துவரும் மருந்தகங்களும் மற்ற பல துறையினரும் தயாராகட்டும். வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி!
மீண்டும்மீண்டும் கவனமாக வாசித்தால் மட்டுமே ஓரளவிற்காவது புரிந்துகொள்ள முடியும் எனத் தோன்றுகிறது. ஆழமான கட்டுரைகள். மீண்டும் மீண்டும் வாசித்து புரிந்து கொள்வேன். நன்றி.
Good