உச்சம் மற்றும் நீசம்: இது இரண்டு பாகங்கள் கொண்ட கட்டுரையின் முதல் பாகம் ஆகும். இந்த கட்டுரையின் பின்புலத்தை இங்கே காண்க.
ஜோதிடத்தின் அடிப்படையான தத்துவங்களில் ஒன்று கிரகங்களின் உச்சம் மற்றும் நீசம் ஆகும். ஆயினும் இந்த உச்சம் மற்றும் நீசம் ஆவதற்கு அறிவியல் ரீதியிலான விளக்கங்கள் உங்களிடம் ஏதேனும் உள்ளதா? இது போன்ற விஷயங்களை நாம் கேள்விகள் எதுவும் கேட்காமலே கடந்து போய் விடுகிறோம். இந்த பதிவின் நோக்கம், அது போன்ற விஷயங்களை நாம் சற்று அறிவியல் பூர்வமாகவும் ஆராய்ந்து நமக்கு வழிவழியாக சொல்லப்பட்ட விளக்கங்களின் உண்மைத்தன்மையை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே!
பொதுவாக சூரியன் மேஷ ராசியில் 10 பாகையில் பிரவேசிக்கும்போது உச்சம் அடைவதாகக் சொல்கிறோம். இது இந்தியா போன்ற பூமத்திய ரேகைக்கு அருகில் இருக்கும் நாடுகளுக்கு நல்ல கோடை காலம் ஆகும். சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் பூமிக்கு மிகவும் அருகில் வருவதால் (கத்திரி வெய்யில் காலம்) அவர் மேஷ ராசியில் உச்சம் அடைவதாக சொல்லப்படுகின்ற விளக்கம் பெரும்பாலானோரால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
இந்த விளக்கம் உண்மை என்றால் மற்ற கிரகங்களும் பூமிக்கு அருகில் வருகின்ற காலத்தில் அவை உச்சம் அடைவதாக நாம் எடுத்துக்கொள்ள முடியும்! வெளிவட்ட கிரகங்கள் அவ்வாறு பூமிக்கு மிக அருகில் வரவேண்டும் எனில் அந்த காலகட்டத்தில் சூரியன் ஆனது, சம்பந்தப்பட்ட கிரகமானது உச்சம் அடைவதாக சொல்லப்படுகின்ற ராசிக்கு ஏழாம் ராசியில் 180 பாகை அளவில் இருக்க வேண்டியது வானியல் சார்ந்த ஒரு கட்டாயம் ஆகும். உதாரணத்திற்கு, குரு கடக ராசியில் 5 பாகையில் உச்சம் அடைகிறார் எனில் அந்த காலகட்டத்தில் சூரியன் ஆனது மகர ராசியில் 5 பாகையில் இருக்க வேண்டியது அவசியம். நன்கு கவனிக்கவும். இப்படிப்பட்ட ஒரு கிரக அமைப்பில் குரு வக்ரமாக இருப்பார்!
கீழேயுள்ள படத்தில் பூமியை மையமாக வைத்து பார்க்கும்போது வியாழன் கிரகமானது பயணிக்கும் பாதை உருவகப்படுத்தப்பட்டுள்ளது. இப்பாதை நீள்வட்டமாக இல்லாமல், நீள் வட்டத்தில் ஒரு பாகம் சற்று உள்வாங்கிய குறு வளையம் போல அமைந்துள்ளது. இதில் ஒரு வருடத்திற்கான குறு வளையம் மட்டும் காண்பிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் வியாழன் கிரகமானது கடக ராசியில் சஞ்சாரம் செய்யும் போது அதற்கு ஏழாவது வீட்டில் சூரியனானது மகர ராசியில் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது இவை இரண்டிற்கும் இடையேயான ஒரு நேர்கோட்டில் பூமியானது மத்தியில் அமைகிறது.
பூமி மைய பார்வையின் அடிப்படையில் பார்க்கும் போது, குரு கிரகமானது சூரியனுக்கு 115 முதல் 245 பாகை வரை உள்ள அமைப்பில் வக்கிரகதியை அடைகிறது. ஆரஞ்சு நிற அம்புக்குறிகள் வக்கிர கதியையும் பச்சை நிற அம்புக்குறிகள் இயல்பான கதியையும் குறிப்பிடுகின்றன. வக்கிர கதிக்கு இணையான காலத்தை அந்த குறு வளையப்பகுதியில் உள்ள 1 மற்றும் 2 ஆகிய இரு பச்சை நிற புள்ளிகள் காட்டுகின்றன.
இந்த குறு வளையத்திற்கு உள்ளேயே (அதாவது சூரியன் தோராயமாக 130+ பாகை கடக்கும் காலத்தில்) குரு தனது பாதையில் இரண்டு விதமான வக்கிர வேகங்களில் பயணிக்கும். முதல் பச்சை நிற புள்ளியில் (1) குருவின் வக்கிர கதி தொடங்குகிறது. அதன் பின்னோக்கிய வேகம் அதிகரித்து, அது சூரியன் மற்றும் பூமிக்கு நேர்கோட்டில் வந்தவுடன் வக்கிர கதி வேகம் குறைய ஆரம்பிக்கிறது. இந்த இடத்தில் தொடங்கி இரண்டாவது பச்சை நிற புள்ளியை (2) அடையும் வரை வக்கிர வேகம் குறைந்துகொண்டே வந்து அதை அடைந்தவுடன் வக்கிர கதி முடிவு பெற்று தனது இயல்பான கதியில் பயணம் செய்ய தொடங்குகிறது.
கிரகங்களின் வக்கிரகதி பற்றி மேலும் அறிந்து கொள்ள திரு. உஜ்வல் சூர்யகாந்த் ரானே (https://www.youtube.com/user/UjjwalRane/featured) அவர்களின் குருவின் வக்கிர கதி பற்றிய விளக்க காணொளி (எளிய ஆங்கிலத்தில்) உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கக்கூடும். அதன் சுட்டி இங்கே உள்ளது (https://youtu.be/OCG42_Z24iM ). அவரது சமீபத்திய சனி மற்றும் குருவின் பதிவு இரண்டு கிரகங்களின் வக்கிர கதியை விளக்குகிறது. அதன் சுட்டி: https://youtu.be/b9C05vb1D-w . அவரின் வானியல் பற்றிய மற்ற காணொளிகளும் உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் மிகவும் பயன் உள்ளதாக இருக்கக்கூடும்.
இப்பொழுது இந்தக் கட்டுரையின் முக்கிய பகுதிக்கு வருவோம்.
எனது இந்த ஆராய்ச்சிக் கட்டுரையின் குறிக்கோள் (Objective of this research article):
கிரகங்களின் உச்சத்திற்கும் நீச்சத்திற்கும் அவை பூமியோடு பயணம் செய்யும் தூரத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதை வானியல் சார்ந்து உறுதிப்படுத்துவது.
எனது கருதுகோள்கள் (My Hypothesis):
கிரகங்களின் உச்சம் மற்றும் நீச்சம் பற்றி நான் கீழ்க்கண்ட கருதுகோள்களை முன்வைக்கிறேன்.
- ஒரு கிரகம் உச்சமடையும் காலத்தில் அது பூமிக்கு மிகவும் அருகில் வருகிறது.
- இது நாம் சூரியனின் உச்சத்திற்கு சொல்லும் விளக்கம் ஆகும். பெரும்பாலானோரால் இந்த விளக்கம் எல்லா கிரகங்களுக்கும் சரியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
- ஒரு கிரகம் நீசம் அடையும் காலத்தில் அது பூமிக்கு மிகவும் அருகில் வருகிறது.
- இந்தக் கருதுகோள் உங்களுக்கு சற்று முரண்பாடானதாக தோன்றலாம். இந்த கருதுகோளுக்கு ஆதாரமான சுட்டி (https://issuu.com/saptarishisastrology1/docs/26-exaltationdebilitationofpla).
இவை நான் கற்றதும் கேட்டதும் ஆகும். இவை ஒரு கிரகத்தின் உச்சம் மற்றும் நீச்சத்தை சூரியனின் இட அமைவே முடிவு செய்கிறது என்பதன் அடிப்படையிலான கருதுகோள்கள் ஆகும். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரணான கருதுகோள்கள் ஆகும். இவற்றில் எந்த கூற்றில் உண்மை உள்ளது என்பதை எனது ஆராய்ச்சியின் மூலம் நான் அறிய முற்படுகிறேன்.
ஆராய்ச்சி முறை (Research Methodology)
- குரு அல்லது வியாழன் கிரகத்தின் உச்சம் மற்றும் நீச்சம் அடிப்படையில் இந்த கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைப்போலவே, மற்ற கிரகங்களின் உச்ச நீச்சம் அமையும் என்பது இதன் மூலம் சொல்லாமல் பெறப்பட்டது.
- நாம் சூரியனின் அமைப்பை வைத்து உச்சம் மற்றும் நீச்சம் முடிவு செய்வதால் குரு உச்சமாக வேண்டும் எனில் குரு கடகத்தில் 5 பாகையில் மற்றும் அதே நேரத்தில் சூரியன் மகரத்தில் ஐந்து பாகையில் இருக்க வேண்டும். அதுபோல குரு நீச்சம் ஆக வேண்டுமெனில் அது மகரத்தில் 5 பாகையிலும் அதே நேரத்தில் சூரியன் கடகத்தில் 5 பாகையிலும் அமைவது அவசியம் ஆகிறது. இதுபோன்ற அமைந்த கிரக நிலைகள் கிமு ஒன்றாம் நூற்றாண்டு முதல் கிபி 21ஆம் நூற்றாண்டு வரை கணக்கிடப்பட்டு, அவை ஆராய்ச்சியில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
- அடுத்தகட்டமாக இதுபோல கிரக நிலைகள் அமைந்த நாட்களில் பூமிக்கும் வியாழன் கிரகத்திற்கும் இடையிலான வானியல் அலகு (Astronomical Unit – AU) நேர்கோட்டு தூரம் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது.
- உபரியாக, நாம் எடுத்துக் கொண்டுள்ள இரு கருதுகோள்களின் சார்பு பற்றி சூரியனும் குருவும் ஐந்து பாகையில் கடக மற்றும் மகர ராசியிலும் ஒன்றாக இருக்கும் காலமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, அந்த காலத்திற்கான வானியல் அலகு தூர அளவுகளும் கணக்கிடப்பட்டுள்ளன.
- இந்த இரு கிரகங்களுக்கு இடையிலான தூரமானது புள்ளியியல் முறையில் பரிசீலனை செய்யப்பட்டுள்ளது
நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியது:
- கிரகங்களுக்கு இடையிலான தூரம் ஆனது வானியல் அலகு (AU) என்ற குறியீட்டின் மூலம் அழைக்கப்படுகிறது
- இது பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு வானியல் அலகு (AU) என்பது சரியாக 14,95,97,870.7 கிமீ ஆகும்.
வானியல் அலகு பற்றிய மேலான விவரங்களுக்கு இந்த இணைப்பில் படித்து தெரிந்து கொள்ளவும் (https://en.wikipedia.org/wiki/Astronomical_unit ).
இந்த ஆராய்ச்சிக் கட்டுரையில் கருதப்பட்டுள்ள கிரக நிலைகள்:
கீழ்காணும் எல்லா நிலைமைகளிலும் குருவும் சூரியனும் (கடகம் அல்லது மகரத்தில்) ஐந்து பாகையில் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் இடையிலான பாகை வேறுபாடு படம் 1 மற்றும் 2இல் 180±1 பாகை இருக்கலாம் என்றும் படம் 3 மற்றும் 4இல் 0±1 பாகை இருக்கலாம் என கருதப்பட்டுள்ளது.
- குரு உச்சம் மற்றும் வக்கிரம்
- குரு நீச்சம் மற்றும் வக்கிரம்
3. குரு உச்சம் மற்றும் அஸ்தங்கம்
- குரு நீச்சம் மற்றும் அஸ்தங்கம்
எனது இந்த ஆராய்ச்சியின் முடிவுகளை இந்தக் கட்டுரையின் இரண்டாம் பாகத்தில் காணலாம்.
வளரும்…
Pingback: T035 இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 15. சட்பலம் – நான்காம் பாகம் – சேஷ்ட ப
Pingback: T030 இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 10. மகரிஷி பராசரர் முறை - பகுதி 5 - AI ML in Astrolo
Pingback: T020 பன்னிரண்டு ராசிகளும் 27 நட்சத்திரங்களும்: வானியல் சார்ந்த பார்வை - பாகம் 5 (இறுதி பாகம்) - AI ML in Astrology
Pingback: E010. Need for research mindset for an Astrologer - AI ML in Astrology
Pingback: T011. கிரகங்களின் உச்சம் மற்றும் நீச்ச நிலைகளின் வானியல் சார்ந்த ஆராய்ச்சி - பாகம் 2 - AI ML in Astrology