இந்த பதிவில் நாம் சோதிடத்தில் நாம் பயன்படுத்தும் அடிப்படையான தரவுகள் எந்த அளவு நம்பிக்கையானவை என்பதை பற்றி பார்க்கலாம். எந்த தரவையும் நீங்கள் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், அவற்றை சோதித்து அறிவியல் ரீதியாக சரி என படுவதை மட்டும் ஏற்று செயல்படுத்த வேண்டும் என்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.
தனிநபர் சோதிடத்தின் மூல தரவாக நாம் அனைவரும் ஏற்றுக்கொள்வது ஒரு ஜாதகரின் பிறந்த ஜாதகம் ஆகும். சோதிடம் என்பது மிகவும் நுண்ணிய கணக்குகளால் கட்டமைக்கப்பட்ட ஒரு துறை என்பதால், இந்த பிறப்பு ஜாதகம் துல்லியமாக கணிக்கப்படுவது மிகமிக முக்கியம். முதல் கோணல் முற்றும் கோணல் என்பது என்பது நமது மூதாதையர்களின் பொன்மொழி. இந்த மூல தரவுகளில் ஏற்படும் பிழைகள் நீங்கள் பயன்படுத்தும் சோதிட முறையை பொருத்து வெவ்வேறு அளவிலான கணக்கீட்டு தவறுகளை ஏற்படுத்தலாம் (sensitivity to small changes in data). இந்த தவறான கணக்கீடுகளை வைத்து நீங்கள் பலன் சொல்லும்போது அவை நம்பகமாக இருக்க வாய்ப்பு குறைவு.
எடுத்துக்காட்டாக, கேபி போன்ற முறைகளில் நீங்கள் பிறந்த நேரத்தை நிமிடம் நொடி வினாடி சுத்தமாக சரியாக கணக்கிட வில்லை எனில் எனில் லக்ன புள்ளியும் /பாவகத்தின் ஆரம்ப புள்ளியும் மாறி வர வாய்ப்பு உள்ளது. இதில் சில வினாடி அளவில் ஏற்படும் வித்தியாசம் கூட நட்சத்திர அதிபதி, உப நட்சத்திர அதிபதி, உபஉப நட்சத்திர அதிபதி, பாவக தொடர்பு என்பது போன்ற பல துல்லியமாக கணக்கீடுகளை செய்யும் போது மாறுதலை தர வாய்ப்பு உள்ளது. லக்ன புள்ளியை பெரிதாக எடுத்துக் கொள்ளாத நாடி சோதிடம் சார்ந்த முறைகளில் இதன் தாக்கம் பெரிதாக இருப்பது இல்லை.
நாம் இப்போது, இந்த பிறப்பு ஜாதகம் கணிப்பதில் உள்ள சில அடிப்படை தரவு தரத்தின் பிரச்சனைகளை (basic data quality issues) பற்றி கவனிப்போம். பிறந்த ஜாதகத்தை கணிக்க மூன்று முக்கியமான தரவு புள்ளிகள் (data points) தேவைப்படுகின்றன. இவற்றில் முதலாவது ஜாதகர் பிறந்த தேதி, இரண்டாவது பிறந்த நேரம் மற்றும் மூன்றாவதாக பிறந்த ஊர் ஆகியவை ஆகும். இதற்கும் மேலாக நீங்கள் அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் பிறந்த ஜாதகருக்கு ஜாதகம் கணிப்பது எனில் இத்துடன் சேர்த்து கோடை காலத்திற்கு ஏற்ப பிறந்த நேரம் சரி செய்யப்பட்டதா என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும்.
இவற்றில் முதலாவதாக உள்ள பிறந்த தேதி என்பதைப்பற்றி பார்க்கலாம். பெரும்பாலும் இப்போது வருகின்ற ஜாதகங்களில் பிறந்த தேதி பற்றி குறிப்பிடுவதில் தவறு இருப்பது இல்லை. ஆங்கில தேதி குறிப்பிடுவது மிகவும் பரவலாக உள்ளது. பெரும்பாலான சோதிட மென்பொருள்களிலும் பிறந்த ஜாதகம் கணிக்கும் போது ஆங்கில தேதியின் அடிப்படையிலேயே தரவுகளை உள்ளீடு செய்கின்றனர். ஒரு சில நேரங்களில் மட்டும் சிலர் நள்ளிரவில் பிறந்த குழந்தைக்கு முதல் நாள் கணக்கில் எடுப்பதா அல்லது அடுத்த நாள் கணக்கில் எடுப்பது என்பது பற்றி தெளிவு இல்லாததால் சற்று குழப்பமான குறிப்புகளை கொண்டுவருவர். நீங்கள் உறுதிப்படுத்தும் வகையில் சரியான சில கேள்விகளை கேட்பதன் மூலம் பிறந்த தேதியை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.
இரண்டாவதாக, உள்ள பிறந்த நேரம் என்பதைப் பற்றி பார்ப்போம். ஒரு குழந்தையின் சரியான பிறந்த நேரம் என்பதைப் பற்றி பொதுமக்களிடையே அடிப்படையிலேயே மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. முதலாவதாக, பிறந்த நேரம் என்பது குழந்தை தலை வெளியில் வந்த நேரமா அல்லது குழந்தை உடல் முழுவதுமாக வெளியில் வந்த நேரமா அல்லது தொப்புள் கொடியை வெட்டிய நேரமா அல்லது குழந்தை முதன்முதலாக தனது சுவாசத்தை தொடங்கிய நேரமா என்பது பற்றி சரியான தெளிவு எல்லோரிடமும் இருப்பது இல்லை. குழந்தையின் தலை வெளியில் வருவதற்கும் தனது சுவாசத்தை ஆரம்பிப்பதற்கும் இடையில் சில நிமிட வித்தியாசம் உள்ளது. இதில் நீங்கள் எந்த நேரத்தை பிறந்த நேரமாக கணக்கில் எடுப்பீர்கள்? (ஒரு குழந்தை தனது சுவாசத்தை ஆரம்பிக்கின்ற தருணத்தை அக்குழந்தையின் சரியான பிறந்த நேரமாக நாம் எடுத்துக்கொள்ளலாம் என்பது எனக்கு ஏற்புடைய கருத்து).
மேலும் நீங்கள் யாருடைய கடிகாரத்தின் நேரத்தை கணக்கில் எடுப்பீர்கள்? மருத்துவருடைய கடிகாரத்தை/ செவிலியருடைய கடிகாரத்தை/ அந்த பிரசவ அறையில் உள்ள கடிகாரத்தை/அல்லது வெளியில் காவல் காத்துக் கொண்டிருக்கும் குடும்ப உறுப்பினர்களின் கடிகாரத்தை? நீங்கள் ஆதாரமாக பயன்படுத்தும் அந்த கடிகாரம் உண்மையிலேயே சரியான நேரத்தை காட்டுகிறதா அல்லது சற்று முன்பின்னாக உள்ளதா என்பது உங்களுக்கு எப்படி தெரியும்? பெரும்பாலான நேரங்களில் செவிலியர் அல்லது மருத்துவர் சொல்லித்தான் சரியான பிறந்த நேரம் என்பதை நாம் குறித்துக் கொள்கிறோம். அவர்கள் சிறு அளவில் மாற்றி சொல்லி இருக்கவும் வாய்ப்பு உள்ளது (errors in reporting). எனவே மிகவும் துல்லியமான பிறந்த நேரம் என்பது என்னைப் பொறுத்த வரையில் சற்று சந்தேகத்துக்கு உரிய தரவு ஆகும். இதனால்தான் சிறு நேர வித்தியாசத்திற்கே பலன்கள் பெரிதும் மாறிவிடும் முறைகள், பல நேரங்களில் சரியான பலன்களை தருவது இல்லை என்பது எனது தனிப்பட்ட அபிப்ராயம்.
நாம் மூன்றாவதாக பிறந்த ஊர் பற்றிய தரவினை பார்ப்போம். இன்றைய தேதிக்கு பெரும்பாலும் பிறப்பு ஜாதகம் சோதிட மென்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது என்ற அடிப்படையில் இக்கருத்தினை நான் முன்வைக்கிறேன். பெரும்பாலான ஜாதகம் கணிக்க பயன்படுத்தும் மென் பொருட்களில் ஒவ்வொரு பெரிய ஊருக்கும் அட்சரேகை தீர்க்க ரேகையும் ஏற்கனவே குறிப்பிட்டு வைத்து இருப்பார்கள். இந்த அட்ச ரேகை தீர்க்க ரேகை பற்றிய தரவுகள் பெரும்பாலும் சரியாக இருந்தாலும் சில ஊர்களுக்கு இது துல்லியமாக இருப்பது இல்லை. சந்தேகம் இருந்தால் நீங்களே சில பேரூராட்சி அளவிலான ஊர்களின் அட்சரேகை தீர்க்கரேகை அந்த ஊர்களின் உண்மையான தரவுகளுடன் எந்த அளவு ஒத்துப் போகிறது என்பதை கூகிளில் தேடி தெரிந்து கொள்ளுங்கள். சிறு அளவிலான எல்லைகளை உடைய ஊர்களுக்கு இது கணக்கீடுகளில் பெரிய தவறுகளை ஏற்படுத்தாது. ஆனால் சென்னை போன்ற நீண்ட எல்லைகளை உடைய ஊர்களுக்கு நீங்கள் மென்பொருளில் கொடுக்கப்பட்டுள்ள தரவுகளை சீர்திருத்தாமல் பயன்படுத்தினால், உங்கள் கணக்கீடுகள் தவறு உள்ளதாகவே அமையும். உங்களிடம் கணினியும் இணைய சேவை வசதிகளும் இருக்கும் பட்சத்தில் நீங்கள் ஒரு ஜாதகர் பிறந்த மருத்துவமனை வரையிலான அட்சரேகை தீர்க்கரேகை அளவிலான தரவுகளை கண்டறிந்து, அதை மென்பொருளில் உள்ளீடு செய்வதன் மூலம் பிறப்பு ஜாதகம் கணிப்பதில் வரும் பிழையை குறைக்கலாம். எல்லா மென்பொருட்களிலும் இந்த வசதி இருப்பது இல்லை.
இவற்றுடன் மென்பொருள் மூலம் பிறப்பு ஜாதகம் கணிக்கும்போது உங்களுக்கு மென்பொருளில் உள்ள மற்ற சில தரவு தேர்வுகளும் (input options) கண்டிப்பாக தெரிந்திருப்பது அவசியம். அவற்றில் முக்கியமானது அயனாம்சம் ஆகும். இன்றைக்கு சந்தையில் உள்ள மென்பொருள்கள் பெரும்பாலும் லாகிரி, கேபி, ராமன் திருக்கணிதம் போன்ற அயனாம்சங்களை மென்பொருளில் அளிக்கின்றன. எந்த முறை அயனாம்சத்தை எந்த முறைக்கு பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் ஓரளவுக்கேனும் அறிந்திருக்க வேண்டும்.
இவற்றுக்கு அடுத்தபடியாக நீங்கள் அறிந்திருக்க வேண்டியது உங்கள் மென்பொருளில் கணக்கு முறைகளில் ராகு மற்றும் கேதுவுக்கு சராசரியான பாகையை பயன்படுத்துகிறார்களா அல்லது உண்மையான பாகையை பயன்படுத்துகிறார்களா என்பதைப் பற்றிய தெளிவு இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, நீங்கள் கிருஷ்ணமூர்த்தி பத்ததி (KP) போன்றவர்களின் முறையை பயன்படுத்தும் போது ராகு கேதுவின் உண்மையான பாகையைத்தான் பயன்படுத்த வேண்டும்.
இதற்கும் மேலாக தசா புத்திகளை கணக்கிடும்போது 360 நாட்களை பயன்படுத்த வேண்டுமா அல்லது 365.25 நாட்களை பயன்படுத்த வேண்டுமா என்பதையும் நீங்கள் தெரிந்து இருக்க வேண்டும்.
நீங்கள் பூமியின் வடதுருவத்தில் அருகில் பிறந்தவர்களுக்கு பிறப்பு ஜாதகம் கணிக்கும்போது நீங்கள் நேர அளவை சரியாக கணக்கீடு செய்ய வேண்டும். நாடுகளின் நேரக்கோடுகள் நேராக இருப்பது இல்லை. மேலும் வட துருவத்தில் கோடை காலத்தில் சூரியன் மறைவதே இல்லை. இதை எவ்வாறு லக்னம் கணிக்கும் போது கணக்கில் எடுப்பீர்கள்? நான் பார்த்த பல இந்திய மென்பொருள்களில் இந்த கணக்கீடு அவ்வளவு சுத்தமாக இல்லை.
பின்னொரு காலத்தில் நீங்கள் உங்கள் ஜாதகர்களின் தரவுகளை வகைப்படுத்தி தொகுத்து வைக்கும் போது இந்த குறிப்புகளை கண்டிப்பாக கவனத்தில் வையுங்கள். உங்களை நாடி வரும் பொதுமக்களுக்கு ஜாதகம் கணிக்கும்போது உங்களால் முடிந்தவரை சுத்தமான தரவுகள் மூலம் பிறந்த ஜாதகத்தை கணித்து தாருங்கள்.
எல்லா ஜாதகங்களும் ஓரளவிற்கு தோராயமானவையே என்பதையும் அவைகளில் பிழைகள் இருக்கலாம் எப்போதும் ஞாபகத்தில் வையுங்கள்!
வளரும்…
நல்ல கட்டுரை. உங்கள் எண்ணங்களை சரியான முறையில் வைக்க உங்கள் முயற்சிகளுக்கும் நேரத்திற்கும் நன்றி. நமது முன்னோர்கள் அதிக நேரம் செலவழித்து இந்த ஜோதிட தரவுகளை சேகரித்தனர். துரதிர்ஷ்டவசமாக, முகலாய மற்றும் பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு, பெரும்பாலான ஜோதிட தரவுகளை நாம் இழந்துவிட்டோம், பின்னர் யாரும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படவில்லை.
Pingback: T026 இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 6. மகரிஷி பராசரர் முறை - பகுதி 1 - AI ML in Astrolog