இந்தப் பாகம் தெய்வத்திரு. சிவதாசன் ரவி அவர்களுக்கு அர்ப்பணம்! தெய்வத்திரு. சித்தயோகி சிவதாசன் ரவி அவர்களுக்கு தமிழ் சோதிட உலகில் அறிமுகம் தேவை இல்லை. பிருகு நந்தி நாடியை பற்றி தமிழில் ஆழமாக எழுதியதன் மூலமும் எண்ணில் அடங்கா நல்ல மாணவர்களை உருவாக்கியதன் மூலமும் சித்தயோகியார் தன் காலம் கடந்தும் நிலைத்து நிற்பார். இவரிடம் நேரடியாக படிக்க முடியாமல் போனதில் எனக்கு ஆழ்ந்த வருத்தம் உண்டு. எளிதாக சோதிடம் பயில விரும்புவோர் இவரது புத்தகங்களை தேடிப்படியுங்கள்.
இது மிகவும் முக்கியமான, ஆனால் சற்று நீண்ட பதிவு. பதிவின் நீளத்தை பொறுத்தருள்க. நிதானமாக நேரம் எடுத்து படியுங்கள். ஆனால் நன்றாக புரிந்து கொண்டு படியுங்கள். இந்தப் பதிவில் வெவ்வேறு முறைகளில் விதிகள் அமைந்த ஒழுங்கு பற்றி அறிவியல் ரீதியாக பார்க்கலாம்.
அதற்கு முன்னர் நாம் அனைவரும் எப்படி தனித்துவமானவர்கள் என்பதை பற்றி பார்க்கலாம். நாம் அனைவருமே சூரியனின் ஒரு துகள். இந்த பூவுலகில் பிறந்த எந்த இரு உயிர்களும் ஒரே மாதிரியான காலத்தில் பிறப்பதில்லை. மனிதர்கள் பிறக்கும் பொது உள்ள கிரக நிலைகளை வைத்து பிறப்பு ஜாதகம் எழுதப்படுகிறது. இந்திய ஜோதிடத்தில் சூரியன் முதல் சனி வரை கண்ணால் பார்க்க கூடிய கிரகங்கள் மட்டுமே முக்கியமாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன (“Significant Predictors”). புவியை நாம் மையமாக வைத்து நமது சூரிய குடும்ப கோட்களை சுற்றி பார்ப்போம் எனில், 360 டிகிரி வட்டத்தில் நாம் 7 கிரகங்களையும் ராகு மற்றும் கேது ஆகிய கிரகண புள்ளிகளையும் (ecliptical points) வெவ்வேறு பாகை அளவில் குறிக்க முடியும்.
சூரியன் முதல் சனி வரை உள்ள 7 கிரகங்களையும், ராகு அல்லது கேதுவையும் (இரண்டும் ஒரு சேர அல்ல!) மற்றும் லக்கின புள்ளி மட்டுமான ஒன்பது தரவு புள்ளிகளையும் (data points) கணக்கில் எடுத்துக்கொண்டு, ஓவ்வொருவர் பிறக்கும் காலத்தில் உள்ள கிரக நிலைகளினையும் ஒரு டிகிரி அளவிலான துல்லியத்தில் எடுத்துக்கொண்டாலும் கூட, ஒரே மாதிரி கிரக அமைப்பை உடைய இருவர் 1,01,55,99,56,66,84,16,00,00,00,000 (அதாவது 360^ 9 = 1.02.E+23) பிறப்புகளுக்கு ஒருமுறை மட்டுமே தோன்றுவர் (just theoretical feasibility). அப்படி பார்த்தால் நம்மைப் போல இன்னொரு உயிர் தோன்ற பல ஆயிரம் ஆண்டுகள் தேவைப்படும். இந்த அமைப்பின்படி பார்த்தால் நாம் அனைவருமே தனித்துவம் ஆனவர்கள். தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கும் அண்ட வெளியின் வெவ்வேறு காலப்புள்ளிகளின் அடையாளங்கள்!
தனித்துவமான நம் அனைவருக்கும் தனித்தனியாக விதிகள் சொல்ல ஆரம்பித்தால், நாம் ஒரு எல்லையில்லா பெருவெளியில் தொலைந்து போவோம்! எனவே, இத்தனை பரந்துபட்ட மனிதர்களையும் எல்லா காலத்துக்கும் பொருந்தும் வகையில் ஒரு ஒழுங்கில் வகைப்படுத்த வேண்டும் எனில் அவர்கள் அனைவருக்கும் பொருந்தும்படியான விதிகளை ஏதாவது ஒரு கட்டமைப்பின் (system) கீழ் சொல்லுவது அவசியமாகிறது. இதையே வெவ்வேறு சோதிட முறைகளும் வெவ்வேறு வகையில் அணுகுகின்றன.
நம் ஒவ்வொருவரையும் தனி மரமாகவும், நம் அனைவரின் தொகுப்பை ஒரு காடு என்றும் உருவகம் செய்து கொள்ளுங்கள். இப்போது இந்தக் காட்டை வெவ்வேறு மனிதர்களிடம் உருவகப்படுத்த சொன்னால் அவர்கள் இந்த காட்டை பற்றி வெவ்வேறு வகையான விளக்கங்களை முன்வைப்பார்கள். ஒருவர் பார்வையில் உள்ளது போல மற்றவர் பார்வை இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் ஒரு காட்டைப் பற்றி விவரிக்க வேண்டும் என்று வந்துவிட்டால் கண்டிப்பாக அதில் உள்ள மர வகைகளை பற்றியும் வெவ்வேறான மரங்களின் பயன்கள் பற்றியும், மரங்களின் பொதுவான பண்புகள் பற்றியும், காட்டிலுள்ள சிறப்பு வாய்ந்த அரிய வகை மரங்களைப் பற்றியும் கண்டிப்பாக வர்ணனை செய்யப்பட வேண்டும் அல்லவா? யார் வர்ணனை செய்தாலும் சில பொதுப்பண்புகள் அதில் கண்டிப்பாக இருக்கும் அல்லவா?
அதுபோலத்தான் ஒவ்வொரு சோதிட முறையும் நம் கூட்டுத் தொகுப்பை வெவ்வேறாக விளக்கம் செய்த போதிலும், அவை அனைத்துக்கும் பொதுவாக சில கருதுகோள்கள் (constructs) உள்ளன. நாம் ராசி மண்டலம், ராசி, நட்சத்திரம், இராசிகளின் குண நலன்கள், கிரக காரகத்துவம் போன்றவற்றை இந்த பொது கூறுகளாக கருதலாம். பெருமளவில், இந்த விளக்கங்கள் எல்லா முறைகளிலும் ஒன்று போலவே உள்ளன.
நீங்கள் ஒவ்வொரு சோதிட முறையையும் ஒரு செயல்படும் மாதிரி (working model) என்ற அளவில் கருதுகிறீர்கள் என்றால் வெவ்வேறு சோதிட முறைகளையும் நீங்கள் பயம் இன்றி அணுக முடியும். ஒரு மாதிரியின் கட்டுமான அடிப்படையையும் அதில் பயன்படுத்தப்பட்டுள்ள வெவ்வேறு பாகங்கள் உண்மைக்கு எந்த அளவில் நெருக்கமாக ஒப்பிடும் அளவிலும் வருகின்றன என்பதைப் பொறுத்து, ஒரு மாதிரியானது உண்மையை எந்த அளவில் பிரதிபலிக்கிறது என்று நாம் அறியலாம்.
பொது கட்டமைப்பு (Common Framework):
கட்டுமான விதிகள் (Structural rules)
இப்போது அடுத்த நிலைக்கு போவோம். விளக்கத்துக்கு பதிலாக, இந்த காட்டையே ஒரு படமாக வரையுங்கள் என்று சொல்கிறோம் என்று எடுத்துக்கொள்ளுங்கள். அப்போது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக காட்டின் படத்தை வரைவார்கள் அல்லவா? வரைகின்ற ஓவியனின் திறமையை பொறுத்து, பார்வை கோணம் மற்றும் பரிமாணத்தை பொறுத்து, ஒரு காடு அழகாகவோ அல்லது திகிலாகவோ உங்களுக்கு காட்டப்படலாம். அதுபோல காடுகளின் எல்லைகளும் வெவ்வேறாக வரையப்படலாம். ஆனால் எல்லா படங்களிலும் மரங்களின் தொகுப்பும், மரங்களுக்கு என்று ஒரு அடிப்படை கட்டமைப்பும், ஒவ்வொரு மரத்திலும் கிளைகளும் இலைகளும் என சித்திரம் விரிவதை பார்க்க முடியும் இல்லையா? இந்த உவமானத்தை நாம் கட்டமைப்பு சார்ந்த விதிகள் என்று எடுத்துக்கொள்ளலாம்.
இந்த இடத்தில் தான் ஓவ்வொரு சோதிட முறையும் மற்றத்தில் இருந்து வேறுபடுகிறது. நாடி சார்ந்த முறைகளில் ஒரே மாதிரியான சிக்கனமான அடிப்படை கட்டமைப்பை கொண்டு பெரிய படமும், வேத சோதிடத்தில் வெவ்வேறான கூறுகளையும் அவற்றின் தொடர்பு பற்றியும் அதே படம் விரித்தும் சொல்லப்படுகின்றது. சொல்லப்படுகின்ற விடயம் ஒன்றுதான். சொல்லப்படும் முறையும், பார்வை கோணமும், தகவல் செறிவும் தான் வேறானது.
தேவையான மற்றும் அலங்காரமான நுண்ணிய விதிகள் (Essential and Ornamental Building Blocks):
மேற்சொன்ன உதாரணத்தில், இப்போது நாம் அதே ஓவியர்களை காட்டில் உள்ள ஒரு குறிப்பிட்ட மரத்தின் படத்தை வரைய சொன்னால் அவர்கள் என்ன செய்வார்கள்? ஓவியனின் மரங்களை பற்றிய பொதுவான கவனிப்பு அறிவு மற்றும் ஓவிய திறமையை பொருத்து, ஒரு மரத்தின் ஓவியம் வேர், தண்டு, கிளை, காம்பு, முள், இலை, மொட்டு, பூ, காய், கனி, விதை போன்றவை நமக்கு காட்சிப்படுத்தப்படலாம். இவை தேவையான விதிகள் (essential rules) ஆகும். இவை தெளிவாக இல்லாவிடில் மரத்துக்கு மரம் மாறும் வித்தியாசங்களை காட்ட முடியாது.
சில நேரங்களில் ஓவியருக்கு ஓவியம் வரைய அதிக நேரம் கிடைத்தால், மரத்தில் உள்ள வித்யாசமான பட்டை, இலை, தண்டு, பூ வடிவமைப்புகள் கூட கவர்ச்சியாக காட்சிப்படுத்தப்படலாம். இவை அலங்காரம் பற்றி வந்த விதிகள் ஆகும் (ornamental rules for aesthetic purposes). இன்று பெரும்பாலான சோதிட குழுக்களில் ஆர்வத்தையும், கிளுகிளுப்பையும், சில நேரங்களில் கிலியையும் தூண்டும் படியாக போடப்படும் ஓரிரு வரி சோதிக்காத விதிகள் இந்த வகையை சார்ந்தவை 😊. உதாரணம்: யாருக்கு எப்போது இன்னொரு தொடர்பு ஏற்படும் என்பன போன்றவை. இவை சில சமயங்களில் சாதகரின் மூளை அரிப்புக்களை சொறிந்து விட உதவும். ஆனால், அதனால் அவருக்கோ அல்லது சமூகத்துக்கோ எந்த ஒரு உருப்படியான நடைமுறை உபயோகமும் கிடையாது.
இந்த நுண்ணிய விதிகளின் எல்லைகளை அறிந்து, தெளிவாக, சரியான பார்வை கோணத்தில் ஒரு ஓவியம் வரையப்படும்போது, வரையப்பட்ட மரத்தின் பாகங்கள் ஒன்றுக்கு ஒன்று ஒத்திசைவான அளவிலும் அமைந்தால் அந்த ஓவியம் நம் கண் முன்னே உயிர் பெறும்.
சோதிடத்திலும் இது போலத்தான். நுண்ணிய விதிகள் என்பவை மிகவும் சிக்கலான விடயங்களை காட்சிப் படுத்துவதற்காக ஏற்படுத்தப் பட்டவை. அவை ஆழ்ந்த கவனிப்பு அனுபவத்தின் மூலம் உறுதி செய்யப்பட்ட, தனித்துவமான, பொறுக்கி எடுத்த முத்துக்கள் (common and unique patterns). அவை சரியான இடத்தில், அளவில், தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்தப்பட்டால், அவை ஓவியத்துக்கு அழகூட்டக்கூடும். அதே நேரத்தில், நீங்கள் ஒரு குறிப்பிட்ட விதியை மட்டும் விரித்துக்கொண்டே போய்க்கொண்டிருந்தால், ஓவியம் அழகற்றுப்போய் விடும். உங்களுக்கு தேங்காய் மட்டும் நன்கு வரைய தெரியும் என்பதற்காக நீங்கள் ஒரு தென்னை மரம் முழுதும் தேங்காய்களை வரையக்கூடாது! ஒருவர் தேங்காய்களை அலங்காரம் என கருதி பனை மரத்தில் வரைதலும் ஆகாது! 😊.
நாம் இப்போது இன்று உள்ள சோதிட முறைகளில் இந்த கட்டுமான விதிகள் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ள என்று பார்க்கலாம். பொது கட்டமைப்பு அதிகம் வித்தியாசம் இன்றி உள்ளதாலும், நுண்ணிய விதிகள் மிக அதிக அளவில் இருப்பதாலும் அவற்றை தவிர்த்து கட்டுமான விதிகள் (structural rules) சோதிட முறைகளில் எவ்வாறு வேறுபடுகின்றன என்று மட்டும் இங்கே பார்ப்போம்.
இந்திய சோதிட முறைகளில் மூன்று வகையான அடிப்படைகள் பின்பற்றப்படுகின்றன. பாவம், பாவ ஆதிபத்தியம் மற்றும் கிரக காரகம். இவை மூன்றும் முக்கியமான மூன்று பரிமாணங்கள் ஆகும். இன்று பிரபலமாக உள்ள அனைத்து சோதிட முறைகளிலும் இந்த மூன்றில் இருந்து ஏதாவது ஒரு பரிமாணத்தை பிரதான பார்வை கோணமாக பயன்படுத்துவதைப் பார்க்கலாம் (மேற்கோள் உபயம்: தெய்வத்திரு. சிவதாசன் ரவி அவர்கள்). ஒருவரின் பிறப்பு ஜாதகத்தை இந்த முப்பரிமாணங்களின் அடிப்படையில் அலசுவதன் மூலம் அந்த ஜாதகரின் அடிப்படை குணநலன்களையும் அவருக்கு வாழ்க்கையில் கிடைக்க உள்ள நல்லது கெட்டதுகளையும் அவரின் பலம் மற்றும் பலவீனங்களையும் பயன்படுத்துகின்ற முறைகளில் வகுக்கப்பட்டுள்ள விதிகளின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இந்த முப்பரிமாணத்துடன் நீங்கள் காலம் என்ற நான்காவது பரிமாணத்தையும் (அதாவது கோட்சாரத்தையும்) சேர்க்கும்போது ஒரு மனிதருக்கு அந்தந்த காலகட்டத்தில் நடைபெற உள்ள வாழ்வியல் நிகழ்வுகளையும் அறிந்து கொள்ள முடியும். ஒரு சோதிட முறையானது இந்த புரிதலை எத்தனை பரிமாணங்களில் இருந்து அணுகுகிறது மற்றும் எவ்வளவு சுலபமாக கட்டமைப்பையும் விதிகளையும், தொடர்புகளையும் அதனால் விளக்க முடிகிறது என்பதை பொறுத்து மற்ற முறைகளில் இருந்து அது மாறுபடுகிறது.
கட்டுரை சுருக்கம் (Synopsis):
இப்போது நாம் மேலே பார்த்த மரம் – காடு ஓவிய உதாரணத்திற்கு வருவோம். இந்த உதாரணத்தில், எல்லோரும் வரைய முற்படுவது ஒரு காடு அல்லது மரம் ஆயினும், அனைவரும் வரைவது யாவுமே விதிகள் சார்ந்து ஒரு உருவகத்தை மட்டும் தான். ஒரு காட்டையோ அல்லது ஒற்றை மரத்தையோ கூட 100% அச்சு அசலாக விதிகள் சார்ந்து மட்டுமே யாராலும் வரைய முடியாது என்பதே உண்மை. வரையப்படும் எல்லாமே ஒரு மாதிரி (model) மட்டுமே. ஒரு மாதிரி சிறப்பாக இருக்கக்கூடும். ஆனால், அதன் மேன்மையை முடிவு செய்வது அது எந்த அளவு பொதுவாக உள்ளது என்பதே.
பொதுவில் இருந்து தான் விதிகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால், எல்லா தெரிந்த விதிகளை கூட்டினாலும் தனிப்பட்ட ஒரு புள்ளியை முற்றிலும் விவரிக்க முடியாது. இதுவே தனித்துவத்தின் அடையாளம். இந்த தனித்துவம் தான் புள்ளியியல் சார்ந்த அறிவியலின் அடிப்படையும் ஆகும்.
இதை எப்போதும் ஞாபகத்தில் இருத்துங்கள்! எல்லா சிறந்த சோதிடர்களுக்கும் தோற்றுப்போகும் இடங்கள் உண்டு. அப்போது தோற்பது தனி மனிதர்கள் அல்ல. அவர்கள் பின்பற்றும் முறைகளில் உள்ள விவரிக்கப்படாத அறிவின் இடைவெளிகளே காரணம் ஆகும். எல்லா தனிப்பட்ட சோதிட முறைகளுக்கும் ஒரு எல்லை உண்டு. அதே நேரத்தில், அவைகள் சரியாக, முறைகளுக்குள் கலப்படம் செய்யப்படாமல், அதனதன் எல்லையில், ஒரு ஜாதகத்தை வெவ்வேறு கோணத்தில் ஆராயப் பயன்படுத்தப்படும் போது, அவை சோதிடரின் தொகுத்த அறிவின் (collective wisdom) இடைவெளிகளை குறைக்கின்றன (ensemble models).
இந்த சோதிட அறிவியல் அடிப்படை உங்களுக்கு புரியும் போது, சோதிட கல்வியையும், சோதிட முறைகளையும், சக சோதிடர்களையும் இவை எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் வாடிக்கையாளர்களையும் நீங்கள் இன்னும் நேசத்தோடும், அக்கறையோடும் அணுக முடியும்.
வளரும்…
சிறப்பு
Pingback: T022 இந்திய சோதிடத்தில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 2. சில புள்ளியியல் அடிப்படைகள் - AI ML in Astrology
Pingback: T024 இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 4. அடிப்படை சோதிட கட்டுமானங்கள் - 1 - AI ML
GOOD