T030 கிரக ஆட்சி, உச்சம் நீசம், மூலத்திரிகோணம், நட்பு பகை, கிரகயுத்தம், கிரக அவஸ்தை, கிரக அஸ்தங்கம், வக்கிரம்

நோக்கரிய நோக்கே
நுணுக்கரிய நுண்ணுணர்வே!

இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 10. மகரிஷி பராசரர் முறை – பகுதி 5

கிரக ஆட்சி, உச்சம் நீசம், மூலத்திரிகோணம், நட்பு பகை, கிரகயுத்தம், கிரக அவஸ்தை, கிரக அஸ்தங்கம், வக்கிரம்

இந்த நெடும்தொடரில் இப்பாகம் கிரகங்களின் உறவுகள் (planetary relationships), மூலத்திரிகோண வீடுகள் (moolatrikona houses), உச்சம் (exaltation) மற்றும் நீச்சம் (debilitation), கிரகயுத்தம் (planetary war), அஸ்தங்கம் (Combustion) மற்றும் வக்கிரம் (retrograde), மற்றும் கிரக அவஸ்தைகள் (Avastha) பற்றிய ஏழாம் சோதிடபாகம் ஆகும்.

தொடரின் முந்தைய பாகங்களை (ராசிகளும் கிரகங்களும் (T024), அயனாம்சம் (T025), லக்கினம் (T026), பாவகம்(T027),  காரகத்துவம் (T028), யோகங்கள், கிரக சேர்க்கை மற்றும் பார்வைகள் (T029)) நீங்கள் இதுவரை படிக்கவில்லை என்றால், அவற்றை படித்தபின் இந்த பாகத்தை படிப்பது சிறப்பாக இருக்கும்.

இப்பாகம் சற்று நீளமானது. இந்த வலைத்தளம் தொடங்கி முதலாம் ஆண்டு நிறைவடைவதன் தருணத்தில் வெளிவரும் சிறப்புக் கட்டுரை இந்த பாகம் ஆகும். எனவே, வழக்கத்தை விட கொஞ்சம் நிறையவே எழுதியுள்ளேன். 😊வாசகர்கள் நேரம் ஒதுக்கி பொறுமையான மனநிலையில் படிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கட்டுரையில் பயன்படுத்தியுள்ள சில கலைச்சொற்களின் ஆங்கில மொழியாக்கம் கீழே உள்ளது.

 • தரவு (Data)
 • மாறி (Variable)
 • கட்டுமானம் / கட்டுமானக் கூறு (Construct)
 • பெறப்பட்ட மாறி (Derived variable)
 • புள்ளியியல் (Statistics)
 • மாதிரி (Model in this context)
 • பரிமாணம் (Dimension)
 • உச்சம் (Exaltation)
 • நீச்சம் (Debilitation)
 • கிரகயுத்தம் (Planetary War)
 • அஸ்தங்கம் (Combustion)
 • வக்கிரம் (Retrograde)
 • கிரக அவஸ்தை (Baladi Avastha)
 • சேர்க்கை (Conjunction)

இப்போது நாம் பார்க்க இருக்கும் சோதிடக்கூறுகள் பராசரர் முறை அல்லது அதன் சார்பு முறைகளுக்கு மட்டுமே உரியவை ஆகும் என்பதை நினைவில் இருத்தவும்.

நீங்கள் அஸ்ட்ரோ விஷன் போன்ற சோதிட மென்பொருட்களைப்  பயன்படுத்துபவர் எனில், உங்களுக்கு கீழே உள்ள ஒரு கிரகம் பற்றிய தொகுப்பு பரிச்சயமானதாக இருக்கலாம். இதில் கிரகங்களின் பெயர்களும் அவை பெற்ற சில சிறப்பு நிலைகளும் ஒரு ஜாதகருக்கு குறிப்பிடப்பட்டுள்ளன. நாம் இந்தக் கட்டுரையில் இந்த அட்டவணையில் குறிப்பிட்டுள்ள தகவல்களைப் பற்றி விரிவாக பார்க்க இருக்கிறோம்.

கிரகயுத்தம்

சோதிடக்கட்டுமானம் #8: சோதிடத்தில் கிரகம் சார்ந்த சில சிறப்பான மாறிகள்

சில கிரகங்களுக்கு, சில ராசிகளில், சில சிறப்பான அல்லது குறிப்பிடத்தக்க நிலைகள் சொல்லப்பட்டு உள்ளன. அவற்றில் முக்கியமானது கிரகங்களின் ஆட்சி வீடுகள், கிரகங்களின் உச்சம், நீச்சம், மூலத்திரிகோண வீடுகள் மற்றும் அவை பெற்ற வக்கிரம், அஸ்தங்கம், யுத்தம், அவஸ்தைகள் போன்றவை ஆகும். அவற்றைப் பற்றி ஒவ்வொன்றாக புள்ளியியல் ரீதியான பார்வையில் இப்போது பார்க்கலாம்.

இவற்றையும் தாண்டி, சட்பல நிர்ணயம் என்ற கட்டுமானம் மிகவும் விரிவாக கிரகங்கள் பெற்ற வலிமையை பல்வேறு உப பரிமாணங்களில் இருந்து கணிப்பதை விவரிக்கிறது. சட்பலம் பற்றி, காலம் அனுமதித்தால் பின்னொரு நாளில் தனியாக பார்ப்போம். சட்பலம் என்பது மிகவும் ஆழமான தனித்துவமான மாறிகளின் தொகுப்பு மற்றும் நாம் இன்று பார்க்க இருக்கும் அனைத்தையும் உள்ளடக்கியது என்ற அளவில் அறிந்து, அதனை இப்போதைக்கு கடந்து செல்வோம்.

நான் முன்பொரு கட்டுரையில் நமது ஞானிகள் ‘முற்றுமுழுதாக உணர்தல்’ என்ற அடிப்படையில் ராசிக்கட்டத்தை பிரித்து மேய்ந்து இருக்கிறார்கள் என்று சொல்லி இருந்தேன். பலன்கள் ராசிக்கட்டம் என்ற பெரிய அளவில் சொல்லப்பட்டாலும், ஒரு ராசிக்கட்டத்தை கலை – விகலை அளவுக்கு முற்று முழுதாக அலசி ஆராய்ந்து அவற்றை எளிதில் புரிந்துகொள்ளும் அளவில் குறைவான பலன் சொல்லும் மாறிகளையும் அவற்றின் பரிமாணங்களையும் கொண்டு சோதிடம் என்ற மாபெரும் கணிதக் கட்டுமானம் உருவாக்கப்பட்டு உள்ளது.

ராசிக்கட்டத்தின் 360 பாகைகளும் ஒரே மாதிரியாக இல்லை. அவற்றில் சில குறிப்பிட்ட இடங்களில் கிரகங்கள் இருக்கும் போது அவை சார்ந்த பலன்கள் வலுவாகவும் அல்லது நன்மை அல்லது தீமைகளை தருவதாகவும் இருப்பதாக உணரப்பட்டு, அந்த குறிப்பிட்ட இடங்களை அடையாளம்காண தனித்துவமான மாறிகளை உருவாக்கி வைத்துள்ளனர்.

நாம் பொதுவாக ராசிமண்டலத்தை 108 நட்சத்திர பாதம் அளவில் உற்றுநோக்கினால், பொதுவாக சில பாதங்கள் சிறப்பானவையாகவும் (புதையல் உள்ள இடங்கள்: உதாரணம் – புஷ்கர நவாம்ச பாதங்கள்), சில கண்ணி வெடிகளை புதைத்து வைத்துள்ள இடங்களாகவும் (உதாரணம் – கண்டாந்தம்) இருப்பதை அறிய முடியும். தனி நபர் ஜாதகத்தில், மேலும் சில பெறப்பட்ட மாறிகள் (derived variables) அவர்களுக்கு மட்டும் பிரத்தியேகமான கூடுதல் புதையல் உள்ள இடங்களையும் (உதாரணம் – இந்து லக்கினம்), கூடுதல் கண்ணி வெடிகளையும் (உதாரணம் – மாந்தி) அடையாளம் காண உதவும்.

அவற்றை சரியாக அறிந்து, சரியான இடத்தில் பயன்படுத்துவதன் மூலம் நாமும் மிகவும் மேலான பலன்களை சொல்ல முடியும். அதாவது, நமது பலன் சொல்லும் கணித சமன்பாட்டில் விளக்கப்படும் தகவல் செறிவினை அதிகரிக்க முடியும்.

நாம் இந்த கட்டுரையில் சற்று மேலோட்டமாகவே அது போன்ற மாறிகளைப் பார்ப்போம். அவற்றில் முதன்மையானது கிரகங்களின் ஆட்சி வீடுகள் ஆகும். அதுபற்றி புள்ளியியல் ரீதியாக அறிய முற்படுவோம்.

#8A: ராசி அதிபதிகள் அல்லது ஆட்சி வீடுகள் (Rasi Ownership)

சோதிடத்தில் கிரகங்கள் மிகவும் முக்கியமான பரிமாணம் (primary dimension) என்று பார்த்தோம். குறிப்பிட்ட ராசிகளின் அதிபதிகளாக குறிப்பிட்ட கிரகங்கள் சோதிட கட்டுமானத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளன. ராசிகளின் பெயர்களும் அவற்றின் கிரக அதிபதிகள் பெயர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆட்சி வீடுகள், கிரகயுத்தம்
ஆட்சி வீடுகள்

இந்தவகை கட்டுமானம், ஒரு முதல்நிலை கட்டுமானம் ஆகும். இந்த அளவில் ஏன் இப்படி கொடுக்கப்பட்டுள்ளன என்பதற்கு புள்ளியியல் காரணம் சொல்லப்பட முடியாது. ஆனால் புள்ளியியல் மாதிரியில் நமக்கு தேவை இந்த கட்டுமானம் சார்ந்து பெறப்படும் தொடர்புகள் மட்டுமே என்பதை முன்னமே பார்த்தோம். பல நேரங்களில் ராசி அளவில் பலன் சொல்லும்போது, இந்த ராசி அதிபதிகளுடனான தொடர்பு, கிரக காரகத்துவம் சார்ந்து பலன்களை சொல்ல உதவுகிறது.

மேலே உள்ள ராசி கட்டத்தில் தங்களுக்குள் எதிரெதிராக உள்ள ராசிகள் (அதாவது சம சப்தமாக 1-7 ஆக உள்ள ராசிகள். உதாரணமாக கடகம் மற்றும் மகரம்) பெருமளவில் எதிரெதிரான குணத்தை உடையவையாக கருதப்படலாம்.

மேலும் இவற்றை சரி பாதியாக, ஆறு ராசிகளாக தொகுத்தால் பச்சை மற்றும் மஞ்சள் வண்ணமிட்ட ராசி அதிபதிகள் தங்களுக்குள் நட்பு உறவில் இருப்பதாக அமையும் வண்ணம் இந்த ராசி ஒதுக்கீடு அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இரு ஒளி கிரகங்களுக்கு ஒரு ராசியும், புதன், சுக்கிரன், செவ்வாய், குரு மற்றும் சனி ஆகிய 5 கிரகங்களுக்கு இரண்டு ராசிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. ராகு-கேது ஆகிய நிழல் கிரகங்களுக்கு ராசிகள் ஒதுக்கப்படவில்லை. இவையெல்லாம் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்ததுதான்.

இதற்கு அடுத்து, கிரகம் சார்ந்த வேறுசில மாறிகளின் பின்னே உள்ள முதன்மை தத்துவம் சார்ந்த கட்டுமானம் ஒன்றைப் பார்ப்போம்.

#8B கிரக உறவுமுறைகள் (நட்பு-சமம்-பகை / Friend – Neutral – Enemy relationships)

சோதிடக் கட்டுமானரீதியாக, கிரகங்களுக்கு இடையே நட்பு-சமம்-பகை என்ற உறவுமுறைகள் வரையறை செய்யப்பட்டு உள்ளன.

நட்பு-பகை உறவுகளுக்கு, கிரகங்களின் மூலத்திரிகோணராசி அடிப்படை ஆகும். ராகு-கேது தவிர்த்த பிற 7 கிரகங்களுக்கும் மூலத்திரிகோண வீடுகள் அல்லது ராசிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. மூலத்திரிகோண வீடுகளுக்கு, குருவின் தனுசு ராசி அடிப்படை ஆகும்.

சந்திரனை தவிர்த்து அனைத்து மூலத்திரிகோண ராசிகளும், அந்த அந்த கிரகங்களின் சொந்த வீடுகளாகவும் வடிவமைக்கப்பட்டு உள்ளன. மூலத்திரிகோண வீடுகள் பிற பெறப்பட்ட மாறிகளையும், கட்டுமானங்களையும் (derived variables and dimensions) உருவாக்க ஆதாரமாக அமைந்துள்ளது.

மூலத்திரிகோணம் பெற்ற கிரகத்திற்கு 2, 4, 5, 8, 9 மற்றும் 12 ஆம் ராசி அதிபதிகள் நட்பு என வரையறை செய்யப்பட்டு உள்ளது. 3, 6, 7, 10 மற்றும் 11 ஆம் ராசி அதிபதிகளை பகையாக வரையறை செய்துள்ளனர். நட்பு-பகை என்ற இரு உறவுகளும் வரும்போது அது சமம் என்ற உறவினை அடைகிறது (அதிக விபரங்களுக்கு: திருப்பூர் S. கோபாலகிருஷ்ணன், அடிப்படை ஜோதிடம் – தொகுதி 1, பக்கம் – 26).

இதுபோன்ற உறவு சார்ந்த ஒதுக்கீட்டை, தத்துவம் சார்ந்த முதல்நிலை காரகத்துவங்கள் என்ற வரிசையில் சேர்க்கலாம். இந்த உறவு தற்காலிகமானது (temporary relationship) மற்றும் நிலையானது (permanent) என்று இரண்டு வகைப்படும்.

இந்த நட்பு, சமம் அல்லது பகை என்ற உறவில் சில கிரகங்கள் தங்களுக்குள் பரஸ்பர நட்பாகவும் (mutual friendship), சில ஒருதலை (non-mutual or one-sided) நட்பு அல்லது பகை மற்றும் பரஸ்பர பகை (mutual enmity) என்றும் தனித்துவமான உறவுகளை கொண்டுள்ளன. எந்த ஒரு கிரகத்தின் மொத்த நட்பு-பகை என்ற அணிக்கோவையும் (relationship matrix) மிகவும் தனித்துவமானது (unique) ஆகும். புள்ளியியல் ரீதியாக இந்த நட்பு-பகை என்ற உப கட்டுமானம் ஒரு பெறப்பட்ட மாறி (derived variable or matrix) அல்லது அணிக்கோவையாகவே சமன்பாட்டில் கருதப்படவேண்டும். 

இந்த நட்பு-பகை உறவு அடிப்படையில் பலவித பெறப்பட்ட மாறிகளும் (derived variables) சோதிடத்தில் எல்லா இடங்களிலும் காணக்கிடைக்கும். உதாரணமாக, பஞ்சாங்கங்களின் ஒரு அங்கமாகிய யோகம் என்ற கட்டமைப்பில், சூரியன்-சந்திரன் அடிப்படையில் அமைந்த யோகி-அவயோகி என்ற பலன் சொல்லும் மாறி, கிரக நட்பு-பகை உறவின் அடிப்படையில் அமைந்தது ஆகும். இது ஒரு ஜாதகத்தில் சொல்லப்பட்டுள்ள யோகங்களும் அவயோகங்களும் எப்போது வேலை செய்யும் என்று அறிய உதவும் கூடுதல் கருவி ஆகும்.

உபரித் தகவல்: தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஒரு முன்னணி சோதிடர் (மற்றும் ஆசிரியர்) முன்னெடுக்கும் சுபத்துவம் மற்றும் சூட்சுமவலு சார்ந்த சித்தாந்தம் அல்லது பலன்சொல்லும் முறையின் பின்னே, கிரகங்களின் இந்த நட்பு-பகை உறவே முக்கிய இயக்கும் பரிமாணம் ஆகும். 😊

#8C மூலத்திரிகோணம் (Moolatrikona)

கீழ்க்கண்ட படம், ராசிக்கட்டத்தில் கிரகங்களின் மூலத்திரிகோண ராசியை அடையாளம் காட்டுகிறது. மூலதிரிகோணம் என்பது ஒரு கட்டுமானக்கூறு என்ற அளவைத் தாண்டி, தனித்துவமான மாறி (unique variable) என்ற அளவிலும் கருதப்படலாம்.

மூலத்திரிகோணம்
மூலத்திரிகோணம்

இது ஒற்றை கிரகம் சார்ந்த மாறி ஆகும். ஒரு கிரகம் ஒரு குறிப்பிட்ட ராசியில் குறிப்பிட்ட பாகைகளில் இருந்தால் பெரும் கூடுதல் மதிப்பெண் என்று எடுத்துக்கொள்ளலாம். அந்தக் குறிப்பிட்ட பாகை எல்லைகள், மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டு உள்ளன. குறிப்பிட்டுள்ள இந்த பாகைகளில் குறிப்பிட்ட கிரகங்கள் இருக்கும் போது அவை நேர்மறையான விளைவுகளை அதிகமாகத் தரும் என்பதன் பின்னே, இந்த மாறியின் கெழுக்கள் நேர்மறையானவை என்பதை அறியலாம்.

ஒரு தாமரை மலரில் இதுவும் ஒரு தனித்த இதழ் போல. கூட்டாக மலரோடு இருக்கும் போதே மதிப்பு! பிய்த்துப் பார்த்தால் பொருள் இல்லை.

படம்: உன்னை நினைத்து – ‘ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவன்’

#8D கிரகங்களின் உச்சம் (Exaltation) மற்றும் நீச்சம் (Debilitation)

பராசரர் முறை சோதிடத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் மற்றொரு சொல்லாடல் உச்சம் மற்றும் நீச்சம் பெற்ற கிரகங்கள் ஆகும். உச்சம் நீச்சம் அட்டவணை – உச்சம் அல்லது நீச்சம் என்பவை குறிப்பிட்ட ராசிகளில் குறிப்பிட்ட கிரகங்கள் இருப்பதை குறிக்கிறது. ஒரு கிரகம் உச்சம் அடையும் ராசிக்கு நேர் எதிர் 7ஆம் ராசியில் (180° ல்) அது நீச்சம் அடைவதாக கட்டுமானம் உருவாக்கப்பட்டு உள்ளது.

கிரகங்களின் உச்ச ராசிகளும் அதியுச்ச பாகைகளும் (பச்சை நிற எண்கள்), அந்த பாகைக்கு உரிய நட்சத்திரமும் அதன் அதிபதியும் கீழே உள்ள படத்தில் குறிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட ராசியின் உள்ளே இடதுபுற மேல் மூலையில் உச்சம் ஆகும் கிரகமும், இடதுபுற கீழ் மூலையில் நீச்சம் ஆகும் கிரகமும் குறிப்பிடப்பட்டுள்ளன. 

உச்சம், நீசம்
கிரகங்களின் உச்ச நீச்ச ராசிகளும் அதியுச்ச பாகைகளும்

அவற்றிலும் சிறப்பாக, குறிப்பிட்ட ராசிகளுக்கு உள்ளேயும் அதியுச்ச / பரம உச்ச மற்றும் அதி/பரம நீச்ச பாகைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. பெரும்பாலான அதியுச்ச புள்ளிகள் குறிப்பிட்ட கிரகத்திற்கு எதிரான குணமுடையதாக கூறப்படும் கிரகத்தின் நட்சத்திரத்திலேயே அமைந்துள்ளது தனித்துவம் ஆகும். விதிவிலக்காக செவ்வாய் கிரகம் மட்டும் தனது சொந்த நட்சத்திரமாகிய அவிட்டதில் உச்சம் ஆகிறது. சந்திரன் சூரியனின் நட்சத்திரத்தில் ஆகிறார். பெரும்பாலான உச்சம் ஆகும் நட்சத்திரங்கள் ஒரே ராசியில் அனைத்து பாதங்களையும் உள்ளடக்கியவை. விசாகத்தில் மட்டும் ஒரு கிரகம் அதிஉச்சமும் அதிநீச்சமும் பெறுகின்றன என்பவை சோதிட ரீதியான கூடுதல் தகவல்கள்.

ஒவ்வொரு கிரகத்துக்கும் உச்சம் மற்றும் நீச்சம் தனித்த மாறிகளாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும். இந்த பரம உச்சப் புள்ளிகள் ஒவ்வொரு கிரகத்துக்கும் தனித்துவமாக இருப்பதைக் கவனிக்கவும். பலன் சொல்லும் சமன்பாட்டில், இந்த மாறிகள் தங்களுக்கு உரிய கெழுக்களை (coefficients) பெறும்போது, உச்சம் ஒரு நேர்மறை கெழுவைக் கொண்ட மாறியாகவும் (variable with a positive coefficient), நீச்சம் என்பது ஒரு எதிர்மறை கெழுவைக் கொண்ட மாறியாகவும் (variable with a negative coefficient) அமையும். உச்சத்தை தனியாக கருதுவதைக் காட்டிலும், ஒரு கிரகத்தின் உச்சபாகை நோக்கிய பயணத்தை கிரகம் பெறும் வலிமையாக கருதவேண்டும் என்று திருப்பூர் கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் எழுதி உள்ளார்.

உச்சம் மற்றும் நீச்சம் என்பது பலன்களை சொல்லும்போது குறிப்பிட்ட விளைவின் தரம் (qualitative aspects of predictions) பற்றி சொல்ல உதவும் ஒரு மாறி ஆகும். உதாரணமாக, சந்திரன் நீச்சம் ஆகி விருச்சிகத்தில் இருக்கும்போது மற்றும் அதனுடன் சனியும் 10ஆம் பாவமும் சம்பந்தப்படும் போது, ஜாதகர் தரக்குறைவான உணவுகளை கூசாமல் விற்பனை செய்து பிழைப்பவர் என்று பலன் சொல்ல முடியும். இதுபோல, பலன்கள் சம்பந்தப்படும் பாவகம் மற்றும் கிரகம் வைத்து சொல்லப்படும் விளக்கங்களை மெருகூட்ட, இந்த உச்சம் அல்லது நீச்சம் என்ற மாறி உதவுகிறது.

இந்த மாறியின் தொடர்ச்சியாக நீச்சம் பெற்ற கிரகம் நீச பங்கம் (அதாவது நீசம் நிவர்த்தி ஆதல்) என்ற விதிவிலக்கும் குறிப்பிட்ட கிரகம் அல்லது அதற்கு இடம் கொடுத்த கிரகம் சந்திரனுக்கு கேந்திரங்களில் (1,4,7,10 ல்) அமைவதை பொறுத்து சொல்லப்படுகிறது. பலன் சொல்லும் சமன்பாட்டில், இது குறிப்பிட்ட கிரகம் பெரும் கெழு (coefficient) எதிர்மறை எண்ணாக இருப்பதில் இருந்து நேர்மறையாக மாறுவதை சுட்டுகிறது (negative to positive). கூடுதலாக இங்கே நல்ல மதிப்பெண் கிடைப்பதால், இந்த நீசபங்கம் சிறப்பான யோகமாகச் சொல்லப்படுகிறது.

ஒரு ஜாதகத்தில் பல கிரகங்கள் உச்சம் அல்லது நீச்சம் பெறுவது நல்ல அமைப்பு அல்ல. எந்த ஒரு விடயத்திற்கும் நல்லது கெட்டது என்ற இரு பக்கங்கள் இருப்பதால், நல்லதாக தோன்றும் ஒன்று, கூடவே வலுவான பக்க விளைவுகளையும் கொண்டு வரும்.

இந்த உச்சம் அல்லது நீச்சம் என்ற மாறியும்,  பலன் சொல்லும் சமன்பாட்டில் மற்றொரு கூடுதல் விளக்கியாக (additional variable) கருதப்படவேண்டும். அதாவது, ஒரு பெரிய தாமரை மலரின் மற்றொரு இதழ்போல பார்க்கப்பட வேண்டும். தனித்த நிலையில் உச்ச நீச்சத்திற்கு குறிப்பிட்ட பலன் இல்லை. சொல்லப்படும் மொத்தப் பலன்களுக்கு வாசமூட்ட இந்தக் கட்டுமானம் பயன்படும் (qualitative variable).

கூடுதல் தகவல்: கிரகங்களின் உச்ச நீச்சத்தின் பின்னே ஏதேனும் வானியல் காரணங்கள் உள்ளனவா என்று நான் வானியல் தரவு (astronomical data) ரீதியாக அறிய முற்பட்டேன். அது இருபாகம் கொண்ட தனி கட்டுரையாக முன்னமே வெளிவந்துள்ளது. அதன் சுட்டி: https://aimlastrology.in/2020/03/t010/

வியாழன் கிரகம் நீச்சம் பெறும்போதே, அது பூமிக்கு அருகில் வருகிறது என்பது அந்தக் கட்டுரையின் மேலான சுருக்கம் ஆகும். நுணுகி நோக்கும் ஆர்வமுள்ளவர்கள் பின்னர் படித்து அறிக. 😊

#8E கிரக யுத்தம் (Planetary War)

முந்தைய கட்டுரையில் நாம் கிரகச் சேர்க்கைகள் என்ற கட்டுமானம் பற்றி அறிகையில், ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் மிகவும் நெருக்கமான பாகைகளில் இருக்கும்போது அவற்றின் கூட்டுவிளைவுகளை பலனாக சொல்வதில் சில புள்ளியியல் சிக்கல்கள் உள்ளன என்று சொல்லி இருந்தேன்.

ஒன்றிற்கும் மேற்பட்டவர்கள் ஒரு விளைவில் பங்கு கோரும்போது, யாருக்கு எவ்வளவு பங்கிட்டுக் கொடுப்பது என்பது சற்று சிக்கலான விடயம் இல்லையா? அதற்கு வழிகாட்டும் விதமாக செய்யப்பட்ட புள்ளியியல் ஏற்பாடுகள் அல்லது மாறிகள் தான் கிரகயுத்தம் மற்றும் அஸ்தங்கம் போன்றவை ஆகும்.

அவற்றில் முதலில் கிரகயுத்தம் பற்றிப் பார்ப்போம். சூரியன் மற்றும் சந்திரனைத் தவிர்த்து, எந்த இரு தாரா கிரகங்களுக்கும் இந்த யுத்தஉறவு ஒரு ஜாதகத்தில் சொல்லப்படலாம். கிரகயுத்தம் பெரும்பாலும் பகை உறவு வரையறை செய்யப்பட்ட இரு கிரகங்களுக்கே சிறப்பாக குறிப்பிட்டு சொல்லப்படுவது ஆகும். அதிலும் குறிப்பாக செவ்வாய் போன்ற வெளிவட்ட கிரகங்களுடன் சம்பந்தப்படுத்தி சொல்லப்படுவதாகும்.

ஒரு ராசியில் இருக்கும் ஒன்றிற்கும் மேற்பட்ட எல்லா கிரகமும் கிரகயுத்தத்தில் இருப்பதாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. இரு தாரா கிரகங்கள் ஒரே ராசியில், ஒரு பாகைக்கும் குறைவான தூர இடைவெளிகளில் நெருக்கமாக அமையும்போது மட்டுமே அவை யுத்தத்தில் இருப்பதாக கருதப்படவேண்டும். இதுபோன்ற எல்லைகளுக்குள் இரு கிரகங்கள் இருக்கும்போது, ராசியில் அதிக பாகை பெற்ற கிரகத்திற்கு அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.

ராசிக்கட்டம் என்பது பாகை அளவில் ஒருபரிமாண அளவில் குறிக்கப்படுவது ஆகும். கிரகணக்கட்ட அமைப்பில் (ecliptic grid) வரும் தீர்க்கரேகையே (longitude) ராசிக்கட்டத்தில் ஒரு கிரகம் பெற்ற பாகையாக குறிக்கப்படுகிறது. இந்த கிரகணக்கட்ட அமைப்பில், கிரகங்கள் பெற்ற அட்சரேகை (latitude) அளவுகள் கணக்கில் கொள்ளப்படுவது இல்லை.

உண்மையில், இரு கிரகங்கள் கிரகணப்பாதையில் வடக்கு தெற்காக அதிகபட்சம் 14 பாகைகள் இடைவெளியில் அமையக்கூடும். இரு கிரகங்கள் ஒரே தீர்க்கரேகை பாகையில் அமையும்போது அவற்றுள் கிரகணப்பாதையில் வடக்கில் உள்ள கிரகம் வெற்றி பெற்றதாக கருதப்படவேண்டும் என்ற குறிப்பு உள்ளது. இருப்பினும் ராசிக்கட்டத்தில் அதுபோன்ற வடக்கு தெற்கு இடஅமைவினை குறிக்க வழி இல்லாததால், பொதுவாக அதிக பாகைபெற்ற கிரகம் வெற்றிபெற்றதாக கருதப்படும். சில மென்பொருட்களில் இந்த அட்சரேகையையும் கணக்கிட்டு வெற்றிபெற்ற கிரகத்தை கண்டுபிடிக்கும் வசதி உள்ளது.

கீழே உள்ள படத்தில், சமீபத்தில் 21 டிசம்பர் 2020 அன்று, குருவும் சனியும் மகர ராசியில் இணைந்த மாபெரும் இணைவு  (Great Conjunction) தொடர்பான கிரகணக் கட்டப் புள்ளிகளை இருபரிமாண அளவில் (two dimensional scale) காட்சிப்படுத்தி உள்ளேன். அந்த நேரத்தின் ராசிகட்டமும் கொடுக்கப்பட்டுள்ளது.

கிரகயுத்தம்
கிரகயுத்தம் – குருவும் சனியும் மகர ராசியில் இணைந்த மாபெரும் இணைவு

மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ள இந்த மாபெரும் இணைவின்போது (கிரகயுத்தம்) குருவும் சனியும் கிரகணப்பாதையின் தெற்கில் அருகருகே இணைந்தனர். அந்த புள்ளிகள் படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவர்கள் இருவரில் சனியின் அட்சரேகை குருவின் அட்சரேகையை விட வடக்கில் அமைந்தது. எனவே, இந்த இடத்தில் சனி கிரக யுத்தத்தில் வெற்றி பெறுகிறார் என்று கருத வேண்டும்.

யுத்தத்தில் உள்ளதாக கருதப்படும் கிரகங்களை குரு (அல்லது வியாழன்) பார்க்கும்போது கிரகயுத்தம் நிகழ்வதில்லை என்று சில விதிவிலக்குகளும் சொல்லப்பட்டு உள்ளன. ஆனால் குருவே கூட சில நேரங்களில் வேறுஒரு கிரகத்துடன் யுத்தத்தில் இருக்கக் கூடும் (மேலே பார்த்தது போல).

யுத்தத்தில் உள்ள மெதுவாக நகரும் கிரகம் வெற்றி பெரும், வக்கிரம் பெற்ற கிரகம் வெற்றி பெரும், சுக்கிரனுக்கு மட்டும் கிரகயுத்தம் தெற்கில் பார்க்கப்பட வேண்டும் என்று கூடுதல் விதிகள் சொல்லப்படுகின்றன.

இருகிரகங்கள் பெரும் அட்சரேகை மற்றும் நகரும் திசை பொறுத்து, மகரிஷி பராசரர் நான்கு விதமான கிரகயுத்தம் வகைகளை குறிப்பிட்டு உள்ளார். அவை உலகியல் சோதிடத்தில் (mundane astrology) பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. கிரகயுத்தம் பற்றிய அதிகப்படியான சோதிடரீதியான தகவல்களை நீங்கள் இந்த இணைப்பில் படித்து அறியலாம்.

புள்ளியியல் பார்வையில் கிரகயுத்தம்

கிரகயுத்தம் என்பது ஒரே ராசியில் இரு கிரகங்கள் மிகவும் நெருக்கமான பாகைகளில் இருந்தால் எவ்வாறு பலன் சொல்வது என்பதை எளிமைப்படுத்த ஏற்படுத்தப்பட்ட புள்ளியியல் உத்தி ஆகும். இதுபோன்ற நெருக்கமான பாகை பெற்ற நிலையில், கிரகங்கள் தங்களுக்குள் யுத்தத்தில் உள்ளதாகவும் அதிகபாகை பெற்ற கிரகம் வெற்றி பெற்றதாகவும் கருதப்பட வேண்டும் என்றும் தோல்வியுற்ற கிரகத்தின் காரகத்துவங்கள் மட்டுப்படும் என்றும் பலன்கள் சொல்லப்பட வேண்டும் என்று சோதிடவிதிகள் வழிகாட்டுகின்றன.

இது அறிவியல்சார்ந்து சோதிடம் படிக்கும் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தலாம். அதுஎப்படி வெகுதொலைவில் உள்ள கிரகங்கள் யுத்தத்தில் ஈடுபடும் என்ற கேள்வி பலராலும் கேட்கப்படும் ஒன்றுதான். இதற்கான சரியான ஆழ்ந்த விளக்கம் புள்ளியியல்ரீதியாக பார்த்தால் மட்டுமே கிடைக்கும்.

வரிசைபேணி கட்டப்படும் புள்ளியியல் மாதிரி (ordered infusion of variables into a statistical model)  என்று ஒரு புள்ளியியல் முறை உள்ளது. அதில் எந்த மாறிக்கு ஒரு சமன்பாட்டில் முதலில் அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்று நம்மால் வரையறை செய்ய முடியும் (predefine importance of a variable). புள்ளியியல் ரீதியான பார்வையில் பார்க்கும்போது, ஒரு ராசியில் அதிக பாகை பெற்ற மாறி, விளைவில் அதிக பங்கினை எடுத்துக்கொள்ளும் வண்ணம் நமது புள்ளியியல் மாதிரி (statistical model) கட்டமைக்கப்படும் என்று சொல்லலாம்.

நாம் இந்த கட்டுரையின் மூன்றாம் பாகத்தில் பார்த்த உடல் எடையுடன் உயரம் மற்றும் வயிற்றுப்பகுதியின் சுற்றளவு என்ற உதாரணத்தில் தரவுகளின் அடிப்படையில் உயரம் முதன்மை மாறி என்ற முக்கியத்துவம் பெற்றதை அறிவோம். அத்தகைய ஒரு சமன்பாட்டினைப் பெறும்போது, உயரத்திற்குப் பதில் வயிற்றுப்பகுதியின் சுற்றளவு முதன்மை பெறவேண்டும் என்று நம்மால் ஒரு புள்ளியியல் மாதிரியில் திணிக்கவும் முடியும். மிகவும் நம்பகமான ஒரு மாறி சமன்பாட்டில் அதிக முக்கியத்துவம் பெற வைக்கும் புள்ளியியல் உத்தியாகும் இது.

இதுபோன்ற ஒரு மாறிக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்தபின்னர், அதற்கு அடுத்த நிலையில் உள்ள மாறி நமது சமன்பாட்டில் பெரும் முக்கியத்துவமும், அது ஒரு புள்ளியியல் மாதிரியில் கூடுதலாக சேர்க்கும் மேம்பட்ட விளக்கமும் சற்று குறைவாகவே இருக்கும்.

கிரகயுத்தம் என்ற மாறியை, நீங்கள் மேலே சொன்ன புள்ளியியல் முக்கியத்துவம் என்ற புள்ளியியல் தத்துவத்துடன் தொடர்புபடுத்திப் பார்த்தால் ஏன் அதிக பாகை பெற்ற கிரகம் வெற்றி பெற்றதாக கருதப்பட வேண்டும் என்று சோதிடத்தில் சொல்வதன் புள்ளியியல் காரணம் உங்களுக்கு புலப்படும்.

கிரகயுத்தம் ஒரு புள்ளியியல் மாறிக்கு அதிக முக்கியத்துவம் தர செய்யப்பட்ட ஒரு ஏற்பாடு ஆகும். இந்த இடத்தில் யுத்தத்தில் வெற்றி என்பது ஒரு கிரகம் ஒரு புள்ளியியல் மாதிரியில் அல்லது சமன்பாட்டில் பெரும் முக்கியத்துவம் என்பதையே குறிக்கிறது. உண்மையில் வான்வெளியில் எந்த கிரகமும் யுத்தத்தில் இல்லை! இந்த கிரகயுத்தம் என்ற சொல்லாடலின் புள்ளியியல் மகத்துவம் உங்களுக்கு ஆச்சரியத்தை அளித்திருக்கும் என்று நம்புகிறேன்.

#8F கிரக அஸ்தங்கம் அல்லது கிரக அஸ்தமனம் (Combustion)

சோதிடத்தில் பலரும் சந்தித்து இருக்கும் மற்றொரு சொல்லாடல் அஸ்தமனம் ஆகிய கிரகங்கள் என்பதாகும். இது சூரியனை முக்கியமாக வைத்து சொல்லப்படும் ஒரு சோதிட மாறி ஆகும்.

கீழ்க்கண்ட கிரகங்கள் சூரியனுக்கு குறிப்பிட்ட பாகைகளுக்குள் வரும்போது அவை தன் சுயவலுவினை இழந்துவிடுவதாக சோதிடத்தில் சொல்லப்படுகிறது. ராகு மற்றும் கேது இந்தக் கணக்கில் வராது.

சந்திரன் – 12 பாகைகள்

புதன் – 14 பாகை

சுக்கிரன் – 10 பாகை

செவ்வாய் – 17 பாகை

வியாழன் – 11 பாகை

சனி – 15 பாகை

(தகவல் உபயம்: திருப்பூர் S. கோபாலகிருஷ்ணன் (GK), அடிப்படை ஜோதிடம் – தொகுதி 1, பக்-38)

நிற்க! இதில் புதன் மற்றும் சந்திரனின் அஸ்தங்கம் பற்றி மாற்றுக் கருத்துக்கள் உள்ளன. புதன் எப்போதும் சூரியன் அருகிலேயே இருப்பதால் அது அஸ்தங்கம் அடைவதில்லை என்றும் சிலரால் சொல்லப்படுகிறது.

வக்கிரகதி இல்லாத கிரகங்களுக்கு அஸ்தங்கம் கிடையாது என்றும் எனவே சந்திரனுக்கு அஸ்தங்கம் கிடையாது என்றும் அமரர் சிவதாசன் ரவி அவர்கள் அவருடைய சோதிட சிவதாசம் என்ற நூலில் (பக். 25) குறிப்பிடுகிறார்.

இதையே கரணங்கள் என்ற (ஒரு திதி என்ற காலஅளவில் பாதி கரணம் ஆகும்) வேறு ஒரு கோணத்தில் பார்க்கும்போது, சந்திரன் மற்றும் சூரியன் இடையிலான முன்-பின் தூரமாகிய 12 பாகை இடைவெளி என்பது நான்கு ஸ்திர கரணங்களை (சகுனி, சதுஸ்பாதம், நாகவம், மற்றும் கிம்ஸ்துக்னம் ஆகியவை) உள்ளடக்கியதாகும். இவை நான்கும் அசுப கரணங்களாக கருதப்படுவதன் பின்னணியில் இந்த சந்திரனின் அஸ்தங்கம் என்ற காரணமும் இருக்கலாம் என்று நான் யூகிக்கிறேன்.

மேலேசொன்ன கிரகங்கள் சூரியனுக்கு அந்தந்த பாகை இடைவெளியில் வரும்போது, சூரியனே அந்த கிரகங்களின் பலனை எடுத்து செய்வதாக பலன் உரைக்கப்படுகிறது. சூரியன் உடனான இந்த தூரநெருக்கம் ஒரே ராசியிலோ அல்லது இரண்டு ராசிகளுக்கு இடையிலோ நிகழலாம்.

இந்த இடத்தில் அஸ்தமனம் ஆகிய கிரகங்கள் பலம் இழப்பதாக சொல்லப்படுவது புள்ளியியல் ரீதியாக ஒரு கணித சமன்பாட்டில் சூரியனுக்கு கொடுக்கப்படும் அதிக முக்கியத்துவத்தைத்தான் குறிக்கிறது. சூரியனின் பெரிய அளவும் அதன் வெப்பத்தன்மையும் அஸ்தங்கத்தின் காரணமாக பொதுவாகச் சொல்லப்பட்டாலும் அதன் பின்னே ஒளிந்திருப்பது ஒரு புள்ளியியல் காரணமே!

புள்ளியியல் ரீதியான பார்வையில் இந்த இடத்தில் சூரியன் ஒரு நேர்மறை கெழுவை (coefficient) உடைய முக்கியமான மற்றும் வலுவான மாறி (a strong and most important variable) ஆகும். பிறகிரகங்கள் எப்படி இருந்தாலும் அவற்றை பின்னுக்கு தள்ளி, சூரியன் இந்த இடத்தில் நேர்மறையாகவே பலன் சொல்லும் சமன்பாட்டில் முக்கியத்துவம் பெறுகிறது.

அஸ்தங்கமும் கிரகணமும்

ராகு கேதுக்கள் அஸ்தங்கம் ஆவதில்லை. ஆனால், பிற கிரகங்கள் அவற்றுடன் இணைவது கிரகணம் என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. சூரியன் மற்றும் எந்த ஒரு கிரகமும் இந்த இரு நிழல் கிரகங்களுடன் சேரும்போது அவை தன் சுயவலுவை முற்றிலும் இழப்பதாக சொல்லப்படுகிறது.

ராகு கேதுக்கள் சூரியனை விடவும் வலுவானவை என்று சொல்லப்படுவதன் காரணமும் அவற்றுக்கு கொடுக்கப்பட வேண்டிய புள்ளியியல் முக்கியத்துவத்தின் அடிப்படையிலேயே அமைகின்றது.

எளிமையாக சொல்வதானால், சோதிட கணித சமன்பாட்டில் ராகு கேதுக்கள் மிகப்பெரும் எதிர்மறை கெழுவை (huge negative coefficients) உடைய மாறிகளாக கருதப்படலாம். அவற்றுடன் நீங்கள் எந்த நேர்மறை எண்ணைப் பெருக்கினாலும் (அல்லது கூட்டினாலும்) உங்களுக்கு பெரும் எதிர்மறை எண்ணே விடையாக கிடைக்கும் அளவுக்கு அவை பெரிய எதிர்மறை மதிப்பை கொண்டுள்ளன. எனவேதான், அவை சோதிட கணிதத்தில் அனைவராலும் அஞ்சப்படுகின்றன. ஆனால், அதன் பொதுவான வெளிப்பாடு ராகு-கேதுக்கள் தீமையானவை என்று பொதுக்கருத்தாக நிலவுகிறது.

சோதிடத்தை ஒரு புள்ளியியல் பார்வையில் பார்க்கும்போது, இது போன்ற பல விடயங்கள் மக்களால் எவ்வாறு மாற்றிப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன என்பது புலப்படக்கூடும்!

#8G கிரக வக்கிரம் (Retrograde)

சோதிடத்தில் சொல்லப்படும் மற்றொரு கூறு வக்கிர கிரகம் என்பது ஆகும். கிரகங்கள் சூரியனை ஒரே திசையில் சுற்றிவருவதை அறிவோம். அது போல நிகழும் போது, ராசிக்கட்டத்தில் கிரகங்கள் மேஷத்தில் தொடங்கி ஒவ்வொரு ராசியிலும் பாகை அளவில் அதிகரித்துக் கொண்டே செல்லும்.

எல்லா கிரகங்களும் தத்தம் சுழலும் பாதைகளில் ஒழுங்காகவே சுற்றி வருகின்றன. இருப்பினும் நாம் பூமியில் இருந்து பார்க்கும்போது நாமும் சூரியனைச் சுழன்று வருவதால், பூமி மற்றும் பிற கிரகங்கள் சுற்றி வரும் வேக அளவின் வித்தியாசங்களின் காரணமாக, சில நேரங்களில் சில கிரகங்கள் தங்கள் சுழலும் பாதையில் முன்னேறிச்செல்லாமல் பின்னோக்கி செல்வதுபோல பூமியில் உள்ள நமக்கு தோன்றும். இதுவே வக்கிரகதி (retrograde motion) எனப்படுகிறது.

வக்கிரகதி என்பது சந்திரன் தவிர்த்த 6 கிரகங்களுக்கும் உரியது ஆகும். ஒரு கிரகம் எப்போது வக்கிரகதி அடைகிறது என்பதுபற்றி நான் எனது இந்தக் கட்டுரையில் விளக்கி உள்ளேன். மேலதிக விளக்கங்களுக்கு பின்னர் படித்து அறியவும்.

ராசிக்கட்டத்தில் ஒரு கிரகம் வக்கிரகதியை அடைவதை ராசிக்கட்டத்தில் உள்ள சூரியனின் ராசி மற்றும் பாகை இருப்பே அடையாளம் காண உதவுகிறது. குறிப்பிட்ட கிரகங்கள் சூரியனுக்கு குறிப்பிட்ட பாகை அளவுகளில் இருக்கும்போது வக்கிர கதியில் இருப்பதாக சோதிடம் வரையறை செய்கிறது.

ராகு-கேதுக்கள் சூரியனின் கிரகணப்பாதையும் சந்திரன் பூமியை சுற்றிவரும் பாதையும் வெட்டிக்கொள்ளும் கற்பனையான புள்ளிகள் என்று முன்பே பார்த்தோம். இந்தப் புள்ளிகளின் நகர்வு, பிற கிரகங்கள் சூரியனை சுற்றிவரும் இயக்கத்துக்கு எதிர்திசையில் இருப்பதால் அவை எப்போதும் வக்கிர கதியில் இருப்பதாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

ராகு-கேது புள்ளிகள் நேர்கதியில் செல்லும் குறுகியகால இடைவெளியும் உண்டு என்பது இங்கு உபரி தகவல் ஆகும். உதாரணமாக, சோதிடமேதை K.S. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ஜாதகத்தில் ராகு-கேதுக்கள் நேர்க்கதியில் உள்ளன. இந்த ராகு-கேதுக்களின் வக்கிரகதிக்கும் பிறகிரகங்களின் வக்கிரகதிக்கும் கணிதமுறைகளில் வித்தியாசம் உள்ளது.

ஒரு கிரகத்தின் வக்கிரகதி சோதிடத்தில் தனித்த கூடுதல் மாறியாக குறிப்பிட்டுச் சொல்லப்படலாம். சோதிடத்தில் இது மிகவும் புள்ளியியல் முக்கியத்துவம் வாய்ந்த, கிரகம் சார்ந்த வலுவான முதன்மை நிலை மாறி எனலாம். இது கிரகஇயக்கம் குறித்த, கதி பற்றிய மாறி ஆகும் (direction related variable). இதனை ஒரு இரட்டை மதிப்பு கொண்ட மாறி (binary variable – 1,0 values) என்ற வகையில் குறிக்க முடியும். ஒரு சோதிடக் கணிதச் சமன்பாட்டில் இதன் விளைவுகள் எதிர்மறையாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

சோதிடத்தில் வக்கிரகதி இயல்புக்கு மாறாக ஏற்படும் குண பேதகங்களையும், ஒரு விடயத்தில் ஆழமான அறிவையும்,  தாமதப்படுத்துவதையும் மற்றும் முரட்டு பிடிவாதத்தையும் அடையாளம்காண பயன்படுகின்றது.

#8H கிரக அவஸ்தைகள்

சோதிடத்தில் பலவித கிரக அவஸ்தைகள் சொல்லப்படுகின்றன. கிரகம் ஒரு ராசியில் எந்த நிலையில் உள்ளது என்பதைக் குறிக்க இந்த அவஸ்தை அல்லது அவத்தை என்ற மாறி உதவுகிறது. ஒரு ராசியில் குறிப்பிட்ட கிரகம் நின்ற பாகையின் அடிப்படையில் இவை 5, 10 முதல் அதிகபட்சம் 35 வகையாக சொல்லப்படலாம்.

டாக்டர் B.V. ராமன் அவர்கள்,  தீப்தா, ஸ்வஸ்தா… முதல் பீத அவத்தை வரையிலான 10 வித அவத்தைகளை தனது Astrology for Beginners என்ற நூலில் (பக். 13) குறிப்பிடுகிறார். நாம் இந்தக் கட்டுரையில் தமிழகத்தில் பரவலாக பயன்படுத்தப்படும் பலாடி அவஸ்தைகள் என்ற பெரும் கூறுகளை மட்டும் கருதுவோம்.

ஒரு கிரகத்தின் அவத்தையை கண்டுபிடிக்க ஆண்-பெண் என்ற ராசிகளின் இருவிதமான வகைப்பாடு உதவுகிறது. சஷ்டி அம்சம் என்ற ஒரு ராசியை அரை பாகைகள் அளவிலான 60 கூறுகளாக பிரிக்கும்போதும் இந்த ஆண்-பெண் ராசி வகைப்பாடு உதவுகின்றது.

கிரகத்தின் அவத்தை வகைகளை கீழே உள்ள அட்டவணையில் காட்சிப்படுத்தி உள்ளேன். இந்த வரிசை எல்லா ராசிகளுக்கும் ஒரே மாதிரியாக இல்லாமல் ஆண் – பெண் ராசிகளுக்கு வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது புள்ளியியல் ரீதியாக சிறப்பு ஆகும்.

கிரக அவஸ்தைகள்

பலாடி அவத்தைகள் பாலவம், கௌமாரம், யுவம், விருத்தம் அல்லது விருத்தா மற்றும் மரணம் / முதிர்நிலை என்று முறையே 5 வகைப்படும். ஒவ்வொரு அவத்தையும் 6 பாகைகள் அளவிலானது. இந்த வரிசை மேஷம், மிதுனம் போன்ற 6 ஆண் ராசிகளில் ஏறு வரிசைப்படியும், ரிஷபம், கடகம் போன்ற 6 பெண் ராசிகளில் இறங்கு முகமாகவும் கணக்கிடப்படவேண்டும். இரு அடுத்தடுத்த ராசிகள் சந்தித்துக் கொள்ளும் இடங்களில் உள்ள மொத்தம் 12 பாகைகளில் ( ± 6°) ஒரே வித அவத்தையே நிலவும் வண்ணம், இந்த மாறி தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கிரகங்கள் எந்த மன நிலையில் ஒரு ராசியில் உள்ளது என்பதை அறிய இந்தக் கட்டுமானக்கூறு பயன்படுத்தப்படுகிறது என்பார் திருப்பூர் S. கோபாலகிருஷ்ணன் (GK) ஐயா அவர்கள். யுவ அவத்தையில் உள்ள கிரகங்கள் தங்கள் முழு மனதிருப்தியுடன் பலன்களை வழங்கும் என்றும் மரண அவத்தையில் உள்ள போது, கிரகங்கள் பற்றற்ற நிலையில் பலன்களை தரும் என்பார் அவர். மேலும் அறிய விரும்புபவர்கள் அவரது வகுப்பில் சேர்ந்து பயனடையவும். இதுபோல, கோட்சாரத்தில் உள்ள கிரகங்களுக்கும் சொல்லப்படலாம். தரும் விளைவுகளில் மாற்றம் இராது, ஆனால் தரும் மனநிலையில் உள்ள வேறுபாடுகளைச் சொல்ல இந்த மாறி பயன்படுகிறது.

இன்றைக்கு நிறைய பார்த்துவிட்டோம். 😊 கட்டுரையின் நீளம்கருதி, இந்தப் பாகத்தை இங்கே நிறைவு செய்கிறேன். இதுவரை பார்த்தவற்றின் சுருக்கத்தை இப்போது காண்போம்.

கட்டுரைச் சுருக்கம்

இந்தப் பாகத்தில், கிரகம் சார்ந்த தனித்துவமான மாறிகளில் ராசி அதிபதிகள் மற்றும் அவற்றிற்கு இடையே உள்ள தொடர்பை அறிந்தோம். மூலத்திரிகோண ராசி அடிப்படையில் எவ்வாறு கிரகங்களின் நட்பு-பகை உறவுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன என்று தெரிந்து கொண்டோம்.

உச்சம்-நீச்சம், மூலதிரிகோணம் ஆகியவை கணித மாறியில் தகவல் செறிவை மேம்படுத்தும் கூடுதலான மாறிகள் என்று தெரிந்து கொண்டோம்.

கிரகயுத்தம் என்பது ஒரு ராசியில் அதிகப்பாகை பெற்ற கிரகத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட செய்யப்பட்ட புள்ளியியல் உத்தி என்பதை அறிந்தோம்.

அஸ்தங்கம் என்பது சூரியனுக்கு ஒரு சமன்பாட்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட புள்ளியியல் ஏற்பாடு என்பதையும் தெரிந்து கொண்டோம்.

வக்கிர கதி என்பதை ஒரு தனித்த புள்ளியியல் மாறியாக பார்க்கமுடியும் என்பதை அறிந்தோம். கிரக அவத்தைகள் பலனில் உள்ள உணர்வுகளைப் புரிந்துகொள்ள உதவும் கூடுதல் மாறி என்று அறிந்து கொண்டோம்.

மேலும் இதுபோன்ற சமன்பாடுகளில் கிரகங்கள் பெறக்கூடிய கெழுக்கள் நேர்மறையாக அமையுமா அல்லது எதிர்மறையாக இருக்குமா என்பதையும் இந்தப் பாகத்தில் தெரிந்து கொண்டோம்.

இந்தப் பாகம் உங்களுக்கு சில சோதிட கூறுகளை புள்ளியியல் பார்வையில் புரிந்துகொள்ள உதவி இருக்கும் என்று நம்புகிறேன். இதுவரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி.

பராசரர் முறையில் அடுத்து எந்தக் கட்டுமானம் பற்றி எழுதுவது என்று எனக்கு இன்னும் உத்தரவு வரவில்லை. வரும்போது, இந்த தளத்தின் முகநூல் குழுவில் முதலில் அறிவிப்பு வெளியாகும். நீங்கள் யாரேனும் அந்தக் குழுவில் இணைய விரும்பினால், உங்களை அன்போடு வரவேற்கிறேன்.

நன்றி! நன்றி!!

நன்றி சொல்லவே உனக்கு, என் மன்னவா வார்த்தை இல்லையே!

இந்தத்தளம் 2020 பிப்ரவரி மாதக் கடைசியில் தொடங்கப்பட்டது. ஓராண்டுக்கு முன்னர் இந்த வலைத்தளத்தை ஆரம்பித்தபோது, என்ன எழுதப்போகிறோம், இவற்றை யார் படிப்பார்கள், இது எதுவரை இட்டுச் செல்லும் என்றெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. ஓரிரு நாட்களில் எழுதும் ஆர்வம் வடிந்துவிடுமோ என்ற பயத்தோடுதான் ஆரம்பித்தேன்.

இறையருளும் குருவருளும் கூடிநின்று எனக்கு பல கதவுகளை திறந்துவிட்டு, சோதிடத்தை புதிய பரிமாணங்களில் உணர்த்தி வருகின்றனர். நான் அறிந்த எதையும் உங்களிடம் மறைக்காமல் பகிர்ந்து வருகிறேன். வாசகர்களாகிய நீங்களும் இந்தப் பயணத்தில் என்னோடு இணைந்து பயணிப்பதற்கு, உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் உரித்தாகுக!

இந்த தளத்தின் சேவைகளைப் பயன்படுத்தி, அதன் வருமானத்தை சமூகத்திற்கு திருப்பி அளிக்க வாய்ப்பளித்தமைக்கும் நன்றி!

எனது இந்தக் கட்டுரைகள் சோதிடத்தை தரவு அறிவியல் பார்வையிலும் அணுக முடியும் என்ற நம்பிக்கையை பலருக்குள்ளும் விதைத்து வருகின்றன என்பதை அறிவேன். நமது முன்னோர்கள் தொட்ட உயரங்கள், சிகரங்கள் அளவில் உள்ளது. நாம் இப்போதுதான் அவற்றை சமவெளி அளவில் இருந்து கொஞ்சம் அறிய முற்படுகிறோம்.

நாம் இன்னும் செல்ல வேண்டிய தொலைவு வெகு தூரம் உள்ளது. இந்த கட்டுரையின் விளைபொருட்களை நான் உருவாக்கும் காலம் விரைவில் வரும் என்று நம்புகிறேன். அதற்கு வாசகர்களாகிய உங்களின் பங்களிப்பும் கட்டாயம் தேவைப்படும். தொடந்து படித்து வாருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

உங்களுக்கு மீண்டும் என் நன்றிகளும் வணக்கங்களும்! அடுத்த பாகத்தில் மீண்டும் சந்திப்போம்.

பின்னூட்டங்களும் பகிர்வுகளும் வரவேற்கப்படுகின்றன!


Feel welcome to share your comments or feedback!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This Post Has 8 Comments

 1. Mithun

  Super Ragu/ketu UCHAM/NEECHAM DEGREE picture

 2. Kanbah

  I like it. Good effort and congrats to reach success in this field shortly.

 3. கு.முருகானந்தம்

  பிரமாதம் தங்களின் நற்பணி தொடர வாழ்த்துக்கள்

  1. Ramesh

   நன்றி ஐயா!