T025 அயனாம்சம் (புள்ளியியல் பார்வையில்)

அயனாம்சம்
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்

T025 அயனாம்சம் (இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 5)

அயனாம்சம் – சோதிடம் மற்றும் புள்ளியியல் என்ற இரு வேறு உலகங்களை இணைக்கும் பாலத்தை கட்டும் என் முயற்சியில், இந்த கட்டுரை இரண்டாம் சோதிடபாகம் ஆகும். இந்த பாகத்தை சோதிடத்தை ஒரு சேவையாக நினைத்து, சக மனிதர்கள் மேல் உண்மையான அக்கறை கொண்டு உழைத்து வரும் அனைவரின் பாதங்களிலும் சமர்ப்பிக்கிறேன்.

அயனாம்சம் பற்றிய இந்த கட்டுரைக்கு முன்னுரையாக எனது இந்த கட்டுரையை (https://aimlastrology.in/2020/06/t017/) சொல்வேன். உங்களுக்கு கிரகணக் கட்டம், வான் கோளக்கட்டம் அல்லது பூமத்திய ரேகை கட்டம் போன்றவற்றைப் பற்றி எதுவும் தெரியாது எனில் முதலில் அதனைப் படித்த பின்னர் (முடிந்தால் அந்த முழு கட்டுரை தொடரையும் – T016 முதல் T020 வரை), இந்த கட்டுரையை தொடர்வது நல்ல புரிதலை கொடுக்கும்.

ஒரு இரண்டு பாகத்தில் மொத்த சோதிட அடிப்படை கட்டுமானங்களையும் சுருக்கமாக எழுதி முடித்திவிடலாம் என்றுதான் முதலில் நினைத்து இருந்தேன். எழுத ஆரம்பித்த பின்னர்தான் ஓவ்வொரு கட்டுமானக்கூறும் எவ்வளவு பெரிதாக விரியும் என உணர முடிகிறது.

அடுத்த கட்டுமானம் என்ன?

அளவிடும் பட்டை (ராசிமண்டலம்), அதன் பின்னர் அளக்கப்படவேண்டிய கிரகங்கள் ஆகியவற்றை முதல் இரு கூறுகளாகப் பார்த்தோம். அப்படியெனில் அடுத்த கட்டுமானம் என்ன? கிரகங்களின் இருப்புகளை அளப்பதுதானே? அளப்பது எனில் ராசிமண்டலம் என்ற பட்டையில் எங்கே இருந்து தொடங்குவது? 360 பாகை கொண்ட வட்டப்பாதையில், எந்த புள்ளி ஆரம்பப் புள்ளி? அதனை எப்படி தீர்மானிப்பது? அதனைப் பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

அயனாம்சம் – இது யாருக்கான கட்டுரை மற்றும் இதனை எப்படி அணுகுவது

சோதிடம் நன்கு தெரிந்தவர்கள், ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் மற்றும் இதில் என்ன அறிவியல் இருந்துவிடப்போகிறது என்று சந்தேகத்தோடு அணுகும் அனைவருக்கும் இந்த கட்டுரை பதில் அளிக்கும்.

இந்த கட்டுரை சற்று நீளமானது, தகவல்கள் செறிந்தது மற்றும் ஒரு சராசரி வாசகரை எண்ணத்தில் கொண்டு எழுதப்பட்டது. ஒரு வாசிப்பில் எல்லாவற்றையும் புரிந்துகொள்ள வேண்டுமெனில், நீங்கள் சோதிடத்தில் மற்றும் வானியலில் திளைத்தவர்களாக இருக்க வேண்டும். எல்லோரும் அப்படி இருப்பது கடினம். எனவே, முதலில் சில விடயங்கள் புரியவில்லை எனில் அதனோடு மல்லுக்கு நிற்காமல் மற்றும் தப்பி ஓடிவிடாமல் (😉), நிதானமாக நேரம் எடுத்து, பல முறை படித்து புரிந்து கொள்ளவும்.

கட்டுரையின் மூல நோக்கமாகிய சோதிடத்தினையும் புள்ளியியலையும் இணைத்துக் காட்டுவது என்ற தொடர்பை இறுதியாகத்தான் விளக்குவேன் என்பதை இப்போதே, முன்கூட்டியே சொல்லிவிடுகிறேன். அதுவரை தாக்குப்பிடித்து படியுங்கள் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். 😊    

இந்த கட்டுரையின் தேவை என்ன?

தமிழ்நாட்டில் பலவித அயனாம்சங்கள் பற்றிய அடிப்படைப் புரிதல் குறைவாக உள்ளது. சோதிடர்கள் கணிதமா அல்லது வாக்கியமா என்று பிரிந்துகிடப்பது மற்றும் எதற்காக சண்டை இடுகிறோம் என்று தெரியாமலேயே சண்டையிட்டுக் கொள்வது அதிகரித்து வருகிறது. இதனால், அதிகம் பாதிக்கப்படுபவர்கள் அவர்களை நம்பிச் செல்லும் ஜாதகர்கள் தான்.

தமிழில் அயனாம்சம் பற்றி சமகாலத்தில் ஆழ்ந்த வானியல் புரிதல்களுடன் வெளிவந்துள்ள நடுநிலையான அலசல்கள் குறைவு. பொதுவெளியில் உள்ள விளக்கங்களும் பெரும்பாலும் தன் முறை நியாயங்களாகவே உள்ளன. இந்த கட்டுரை அந்த வெற்றிடத்தை நிரப்பும் பொருட்டு, மிகவும் நீண்ட விளக்கங்களுடன் சமகாலத்து தரவுகள் அடிப்படையில், நீண்ட ஆய்வுக்குப் பின்னர் எழுதப்படுகிறது.

சொல்லவந்த விடயத்தின் தீவிரம் கருதி, வாசகர்கள் சற்று நேரம் செலவிட்டு இந்த கட்டுரையை முழுதாக உள்வாங்கிக் கொள்ளுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன். இதனை படித்த பிறகு, உங்களில் ஒருவராவது தேவையற்ற அயனாம்ச சண்டையை நிறுத்தினால், இக்கட்டுரையின் நோக்கம் நிறைவேறியதாக மகிழ்வேன்.

தவறான அயனாம்சம் கணிப்புகளில் என்ன விளைவை ஏற்படுத்தும்?

இந்திய சோதிட கட்டுமானம் தேடுபவரின் தேவைக்கேற்ப பலன்களை அளிக்கும் வான்கருணையால் உண்டாக்கப்பட்ட மாபெரும் கற்பகதரு ஆகும். தேடுபவரின் தேடலுக்கு ஏற்ப ஆழமான பலன்களை கண்டுபிடிக்க முடியும்வண்ணம் மிகவும் நுணுக்கமான கட்டமைவுகளை நமது ஞானிகள் செய்து வைத்துள்ளனர்.

ஜாதகர் பற்றிய குறைந்தபட்ச விபரங்கள் இருந்தாலே ஓரளவுக்கு சரியாக பலன் சொல்லிவிட முடியும் (உதாரணம் – நட்சத்திர பொருத்தப் பலன்கள், வார ராசிபலன்கள் போன்றவை). சரியான பிறப்பு விபரங்கள் இருந்தால் மிகவும் ஆழமான பலன்களையும் கண்டுபிடித்து அளிக்க முடியும்வண்ணமே நமது ஞானிகள் சோதிட கட்டமைப்பை செய்து வைத்துள்ளனர்.

உதாரணமாக, சோதிடத்தில் வர்க்க கட்டங்கள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அவற்றில் முதன்மையான ராசிக்கட்டம்(D-1), நேரடியான வானியல் கிரகநிலையை காட்டுகிறது. மற்ற வகைகளான வர்க்க கட்டங்கள் பெறப்பட்ட கணித மாறிகள் (derived charts) ஆகும்.

அவற்றில் சில:

  • நவாம்சம் (D-9 Chart) – ஒரு ராசியை ஒன்பதாக கூறிட்டது – வாழ்க்கைத்துணை, உறவுகள் பற்றி அறிய உதவுவது
  • தசாம்சம் (D-10 Chart) – ஒரு ராசியை 10 பாகங்களாக கூறிட்டது – தொழில் பற்றி அறிய உதவுவது மற்றும்
  • சஷ்டியாம்சம் (D-60 Chart) ஒரு ராசியை 60 பாகங்களாக கூறிட்டது – பொதுப்பலன் மற்றும் முன்வினைப்பயன் பற்றி அறிய உதவுவது.

இவற்றில் முக்கியமாக, சஷ்டியாம்சத்தில் (D-60) ஒரு ராசியின் ஒவ்வொரு அரை பாகைக்கும் நல்ல மற்றும் கெட்ட விளைவுகள், கிரகம் நின்ற பாகையை வைத்தே சொல்லப்பட முடியும்!(தமிழ்நாட்டில் இதனை அதிகம் பயன்படுத்துபவர்கள் இல்லை!). மேலும், இது ஒற்றைராசி மற்றும் இரட்டைப்படை ராசி எனில் முன்பின்னாக கணக்கிடும் முறையும் மாறும். எனவே, அளக்கும் தொடக்கப்புள்ளி தவறானால் சொல்லப்படும் பலன்கள் தவறும். இதுபோன்ற இடங்களில்கூட தவறுகள் வந்துவிடலாகாது என்பதற்காகவே ராசிமண்டலத்தின் தொடக்கப்புள்ளியை நிலையாக நிறுத்தி உள்ளனர் நமது ஞானிகள்.

தவறான அயனாம்சம் பயன்படுத்தினால் வர்க்க கட்டங்கள் தவறாக வரும். நீங்கள் வேறுவேறு அயனாம்சங்களை உங்கள் ஜாதகம் கணிக்க பயன்படுத்தினால் உங்களது ராசி மற்றும் பிற வர்க்க கட்டங்களில் கிரக நிலைகள் மாறக்கூடும். அப்படியெனில், வெறும் அயனாம்சத்தில் செய்யும் மாற்றமே, சொல்லப்படும் பலன்களில் பெருமளவு மாற்றத்தை ஏற்படுத்திவிடக்கூடும். எனவே, இந்த மாறுபடும் அயனாம்சங்கள் பற்றிய அடிப்படை அறிவு மிகவும் தேவையாக இருக்கிறது.

கட்டுமானம் 3: அயனாம்சமும் அதன் புள்ளியியல் முக்கியத்துவமும்

இன்றைக்கு நாம் பார்க்க இருப்பது சோதிடத்தின் மிகவும் சிக்கலான மற்றும் ஆழமான ஒரு கட்டுமானமாகிய அயனாம்சம் என்பதைப் பற்றி ஆகும். இதனைப்பற்றி தெளிவாக புரிந்துகொள்ளாவிட்டால், இந்திய சோதிடத்தின் பின்னே உள்ள வானியல் மற்றும் கணித அறிவின் பெருமையையும் தீர்க்கதரிசனத்தையும் உணரவே முடியாது.

அயனாம்சம் நூறாண்டுகளாக சிலர் அடித்ததாக நினைக்கும் மற்றும் பலரும் அடிக்க முயன்றும் தப்பிக்கொண்டே இருக்கும் பாம்பு போல! நான் வானியலில் சிறு குழந்தை. இதனை, எனக்கு தெரிந்தவரை விளக்க முயலுகிறேன். எனவே, எங்கேனும் பிழை இருப்பின் சுட்டிக்காட்ட தயங்காதீர்கள்.

இந்த தலைப்பை பார்த்த உடனேயே உங்களுக்கு வாக்கிய பஞ்சாங்கம் சரியா அல்லது திருக்கணிதம் சரியா என்ற கேள்வி தோன்றினால், நீங்கள் இன்னும் சோதிட அடிப்படை வகுப்பே தாண்டவில்லை என்று அர்த்தம். வாக்கியமா அல்லது கணிதமா என்ற தமிழ்நாட்டின் நீண்டகால பஞ்சாயத்துக்கு விடைதேடும் கட்டுரையாக இதனை பார்க்க வேண்டாம். இந்த கட்டுரையை படித்தபின்னும் உங்களுக்கு அந்த பஞ்சாயத்துக்கு தீர்ப்பு தெரிந்தே ஆகவேண்டும் என்று தோன்றினால், இன்னொரு தனிக்கட்டுரையில் வானியல் தரவுகளோடு அதற்கான விடையை தேடுவோம். 😊  

இந்த கட்டுரையில் சொல்லப்படும் விடயங்களை ஒரு ஆழமான அலசல் பார்வையோடு, நடுநிலையாக நின்று பார்க்கும்படி உங்களை கேட்டுக் கொள்கிறேன்  (பெண்களின் குடுமிப்பிடி குழாயடி சண்டையை பிறர் ஆர்வமாக ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதைப்போல).

ஏதாவது ஒரு பக்கம் சார்ந்து நின்று பார்க்கும் போது, தெரிய வேண்டிய விடயத்தின் தீவிரம், நுணுக்கங்கள் மற்றும் பிற பக்கத்தினரின் நியாயங்கள் தவறிவிட வாய்ப்பு உள்ளதால் (மற்றும் நன்றாக அடிபடவும் வாய்ப்பு உள்ளதால்! 😊), எந்த முடிவும் எடுத்துவைத்துவிட்டு பிறகு இதனை படிக்காதீர்கள். படித்த பிறகும் எந்த உறுதியான முடிவும் எடுக்கப்பட முடியும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. 😉

நாம் உணரக்கூடிய காலஅளவில் அதிகம் நகர்வது கிரகங்கள் மட்டுமே (non-inertial frame of reference). மாறும் கிரகநிலையை குறிக்க மாறாத அல்லது நகராத அளவுகோல் அவசியம். அதனை அடையாளம் காண, நாம் உணரக்கூடிய காலஅளவில் அதிகம் நகராத ராசிகள் மற்றும் நட்சத்திரங்கள் உதவுகின்றன (inertial frame of reference). அடுத்ததாக, அளக்கும் தொடக்கப்புள்ளி நிறுவப்பட வேண்டியதும் இன்றியமையாதது ஆகும். ஒரு வயலின் எல்லையை நிறுவ, வயலில் போடும் மூலக் காணிக்கல் முக்கியம் என்பதைப் போல. அயனாம்சம் என்பது அந்த தொடக்கப்புள்ளியை நிறுவுவதற்காக ஏற்படுத்தப்பட்ட சோதிட கட்டுமானக்கூறு ஆகும்.

இந்த கட்டுரையை இரண்டு பகுதிகளாக நீங்கள் அணுகலாம். முதலில் வானியல் பார்வையிலும் பின்னர் புள்ளியியல் பார்வையிலும் இந்த கட்டுமானத்தை பிரித்து எழுதியுள்ளேன். வானியல் புரிந்து புள்ளியியல் பாகத்தை படிப்பது நல்லது. நீங்கள் சோதிடர் எனில் வானியல் பாகத்தைக் கண்டிப்பாக படிக்கவேண்டும். வானியல் பாகம் அலுப்புதட்டினால், நேரடியாக புள்ளியியல் பகுதிக்கு சென்றுவிடுங்கள். புரியும் காலம் வரும்போது படித்தால் போதும். நஷ்டம் ஒன்றுமில்லை. 😊

பகுதி 1 – அயனாம்சம் – வானியல் பார்வை 

இன்றைய வானியல் அறிவின்படி சில விடயங்களை புரிந்து கொள்ள முற்படுவோம். முதலில் சில தொடர்பில்லாத தகவல்கள் போல தோன்றினாலும், பின்னர் அவை இணைவதை உணர்வீர்கள். புரியவில்லை எனில் மீண்டும் மீண்டும் படித்தால் கண்டிப்பாக புரியும். மேலும் தகவல்கள் வேண்டும் எனில் பின்னூட்டத்தில் கேளுங்கள். அதிக தகவல் தரும் இணைப்புகளை தெரிவிக்கிறேன்.

அயனாம்சம் என்பது பூமியின் சுழற்சியின் அடிப்படையில் அமைந்த ஒரு காலக்கணிதம் ஆகும். இந்த கணிதத்தில் மூன்றுவிதமான பூமியின் சுழற்சிகள் அடங்கி உள்ளன.

பூமியின் தற்சுழற்சியும் சூரியனை பற்றிய சுழற்சியும்

பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றிவருவதாக நாம் படித்து இருக்கிறோம். சூரியனை அடிப்படையாக வைத்தால்(non-inertial frame of reference) பூமி தனது ஒரு சுற்றினை முடிக்க 24 மணி நேரமும் (சூரிய நாள் – solar day), தொலைவில் உள்ள நட்சத்திரங்களை அடையாளமாக வைத்தால் (non-inertial frame of reference) அது தன்னைத்தானே ஒரு முறை சுழல 23 மணி நேரம் 56 நிமிடம் 4.1 செகண்டுகளும் (நட்சத்திர நாள் – Sidereal day) எடுத்துக்கொள்கிறது. அது கீழே உள்ள படம் மூலம் காட்டப்பட்டு உள்ளது.

(Image Credit: By Xaonon – Own work, CC BY-SA 4.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=56258488)

இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட வித்தியாசத்தின் காரணமாக பூமி சூரியனை ஒரு வருடத்தில் (365.24 சூரிய நாட்கள்) சுற்றிவரும் போது 366.24 நட்சத்திர நாட்கள் கடந்து இருக்கும். அதாவது, ஒரு சூரிய வருடம் என்ற காலத்தில் பூமி 366.24 முறை தன்னைத்தானே சுற்றிக்கொண்டு இருக்கும்.

மேலும், அது இந்த ஒரு சுழற்சியின்போது சூரியனை சுற்றிய நீள்வட்டப் பாதையில் சுமாராக 1° (அதாவது 360°/365.25 சூரிய நாட்கள் = 0.9856°) அளவிலான தூரத்தை கடந்து வருகிறது.

பூமியின் சாய்வான அச்சும் (Axial tilt or obliquity of ecliptic) அதன் சுழற்சியும் (Axial Precession):

பூமி தன்னுடைய சுழலும் அச்சில் 23.5 பாகை சாய்ந்து இருப்பதாக பள்ளிக் காலத்தில் படித்து இருப்போம்.

Image Credit: By I, Dennis Nilsson, CC BY 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=3262268

பெரும்பாலானோர் நினைப்பது போல இந்த சாய்வு கோணம் நிலையானது அல்ல. தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருப்பது. கீழே உள்ள படத்தில் பூமியின் அச்சு காலப்போக்கில் மாறி வந்துள்ள சாய்வுக்கோணம் காட்டப்பட்டு உள்ளது.

Image Credit: By Tfr000 (talk) 17:58, 21 March 2012 (UTC) – Own work, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=18779834

தற்போது அது ஒருநூறு ஆண்டுகளுக்கு 0.013 பாகைகள் அல்லது 47 ஆர்க் செக் (1 ஆர்க் செக் = 0.000277778 பாகைகள்) என்ற அளவில் குறைந்து வருவதாக கணக்கிடப்பட்டு உள்ளது. தற்போதைய சரியான சாய்வுக்கோணம் 23.44 பாகை ஆகும் (23.439281° இன்னும் துல்லியமான தோராய அளவு).

இந்த சாய்வான அச்சுக்கோணம் காரணமாகவே பூமியின் வட,தென் பாகங்களில் நான்கு வகையான பருவங்கள் தோன்றுகின்றன. தமிழ்நாட்டில் நமக்கெல்லாம் வெயில், அதிக வெயில், கடுமையான வெயில், தேர்தல் வெயில் என்று நாம் அனுபவிக்கும் பருவங்களே வேறு 😉.

சோதிடத்திற்கும் இந்த சாய்வான அச்சுக்கோணம் பிரதானம் ஆகும். இந்த சாய்வின் காரணமாகவே சூரியன் வடதுருவத்துக்கும் தென் துருவத்துக்கும் பயணம் சென்றுவருவதுபோல நமக்கு தோன்றுகிறது. சூரியன் வடதுருவத்தில் இருக்கும்போது அங்கே பகல்பொழுது அதிகமாகவும், தென் துருவத்துக்கு செல்லும்போது வடதுருவத்தில் இருள்பொழுது அதிகமாகவும் இருப்பதற்கு இந்த சாய்வான அச்சே காரணம். இதனை கீழே உள்ள படத்தின் மூலம் அறியலாம்.

அவ்வாறு சாய்வான ஒரு அச்சில் பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வரும்போது, அந்த அச்சும் ஒரு மெலிதான சுழற்சிக்கு உள்ளாகிறது. பூமியின் இந்த நகரும் சுழல்அச்சின் பாதை ஏற்படுத்தும் கற்பனையான வட்டம், துருவ அயனச்சலன பாதை என்று அழைக்கப்படுகிறது. இதுபோன்ற பாதை கீழே காட்டப்பட்டு உள்ளது.

துருவ அயனச்சலன பாதை
Image Credit: Stephen Mackintosh 2018, https://modulouniverse.files.wordpress.com/2018/06/bosf_02_04_ani2-2.gif?w=676

இது (அயனச்சலன பாதை) ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட 50.3 ஆர்க் செகண்டுகள் மற்றும் 71.6 வருடத்தில் ஒரு பாகையும் நகர்வதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது ஒரு முழு சுற்று (360 பாகை) முடிக்க 25,772 ஆண்டுகள் (தோராயமாக 26,000 ஆண்டுகள்) ஆகும். இது போன்ற ஒரு அயனச்சலனப் பாதை கீழே காட்டப்பட்டு உள்ளது. இதுவும் நிலையானது அல்ல. அதற்கான காரணங்களை பின்னால் பார்க்கலாம்.

துருவ நட்சத்திரங்கள்

துருவ நட்சத்திரம் வடதுருவ அயனச்சலன பாதையிலேயே அடையாளம் காணப்படுகிறது. தென்துருவத்திற்கும் இதுபோல துருவ அயனச்சலன பாதை உண்டு. இருப்பினும் தென்துருவத்தில் நாம் கண்ணால் பார்த்து எளிதில் அடையாளம் காணக்கூடிய ஒளி அளவோடு நட்சத்திரங்கள் இல்லை. எனவே வடபுல துருவ நட்சத்திரங்களே ஜோதிடத்தில் குறிப்பிடப்படுகின்றன.

இன்று நாம் துருவநட்சத்திரமாக கருதும் போலாரிஸ் (Polaris) என்ற நட்சத்திரம் இன்னும் சிலஆயிரம் வருடம் கழித்து துருவ நட்சத்திரமாக இருக்காது. கிட்டத்தட்ட 14,000 ஆண்டுகளுக்கு முன் அபிஜித் நட்சத்திரம் (Vega) நமது துருவ நட்சத்திரமாக இருந்தது.

புவியின் மூன்று சுழற்சிகளின் விளைவுகள்

இந்த மூன்று விதமான பூமியின் சுழற்சிகள் காரணமாக பூமி தன் சுழற்சியில் ஒரு நட்சத்திர ஆண்டினை (sidereal year), ஒரு சூரிய வருடத்திற்கு (solar year) முன்னர் சுமாராக 20 நிமிடம் இருக்கும்போதே முடித்து விடுகிறது.

பூமி தன் சுழலும் அச்சில் எப்படி சுழன்றாலும் (precession of equinox) மற்றும் சற்று தள்ளாடினாலும் (nutation), மீண்டும் அது கிரகணக் கட்டத்தில் குறிப்பிட்ட ஒரு புள்ளியை பின்புல நட்சத்திரம் அடிப்படையில் அடையும் போது இந்திய முறைப்படி நமக்கு அடுத்த ஆண்டு தொடங்கும். ஒரு சம பகல்இரவுக் காலத்தை (மிகக்குறிப்பாக ஒரு உத்தராயணக் காலம்) ஆரம்பத்தில் அடிப்படையாக கொண்ட இந்த தொடக்கப்புள்ளியை, நாம் இந்திய ராசிமண்டலத்தின் தொடக்கப்புள்ளி எனக்கொள்கிறோம்.

நமது இந்திய முறையில் மேட ராசியில் அமைந்த இந்த தொடக்கப்புள்ளி என்னும் அசுவினிப்புள்ளி நிலையானது ஆகும். இந்திய சோதிடத்தில் நாம் 27 நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டு கணக்கிடும் அல்லது பயன்படுத்தும் இந்த முறைக்கு நிராயன முறை என்று பெயர்.

மேற்கு நாட்டார், சூரியனை அடிப்படையாகக் கொண்டு சூரிய வருட அடிப்படையிலான சாயன முறையை பின்பற்றுகின்றனர். இந்த முறையில் அவர்கள் கருதும் சூரியன் அடிப்படையிலான மேஷப்புள்ளி என்னும் தொடக்கப்புள்ளி (உத்தராயணக் காலத்தின் தொடக்கப்புள்ளி) நிலையாக இல்லாமல் ஓவ்வொரு வருடமும் சிறு அளவு மாறிக்கொண்டே இருக்கும். அதாவது அவர்கள் முறையில், ராசிகள் நிலையானவை அல்ல. தொடர்ச்சியாக நகர்பவை மற்றும் மாறுபவை. இந்த இரு முறைகளுக்கும் இடையில் ஒரு வருட அளவில் ஏற்படும் பாகை அளவின் விலக்கம் அதாவது சாயன மற்றும் நிராயன அளவுகளின் தொடக்கப்புள்ளிகளுக்கு இடையே ஏற்படும் பாகை வித்தியாசமே அயனாம்சம் ஆகும்.

சாயன மற்றும் நிராயன முறைகள் இரண்டையும் இணைக்கும் தொடர்பு இந்த அயனாம்சம் ஆகும். இந்திய முறையில் கிரகநிலை கணக்கிடும்போது இந்த அயனாம்ச வித்தியாசத்தை கணக்கில் எடுத்துக்கொண்டால்தான் நமக்கு சரியான கிரகநிலைகள் கிடைக்கும். அதாவது, மேற்கத்திய சாயன கிரகநிலைகளில் இருந்து அயனாம்ச அளவை கழித்தால்தான் நமக்கு உண்மையான இந்திய சோதிட நிராயன கிரகநிலைகள் கிடைக்கும்.

சுருக்கமாகச் சொன்னால் மேற்கத்திய முறையின் ராசி தொடக்கப்புள்ளி (உத்தராயணக் காலம்) பருவங்கள் அடிப்படையில் (சாயன முறை) அமைந்தது. இந்தியாவின் நிராயன முறை, நிலையான நட்சத்திரப் புள்ளி அடிப்படையில் அமைந்தது.

வெவ்வேறு அயனாம்சங்களும் அவற்றின் அடிப்படை வருடங்களும்

இந்திய சோதிடத்தில் ஏன் பலவித அயனாம்ச முறைகள் உள்ளன என்று உங்களுக்கு எப்போதாவது தோன்றி உள்ளதா? ஸ்ரீ சூரிய சித்தாந்தம், ராமன், லஹிரி,  கிருஷ்ணமூர்த்தி, திருக்கணிதம், சித்ரபட்சம், பூச பட்சம், ரேவதி பட்சம், ரோஹிணி பட்சம், மூல பட்சம் மற்றும் புது வரவுகளான சி ஜி ராஜன், நியூ கோம்ப், யுக்தேஷ்வர், பாஸின், தேவதத்தா, சந்திரஹரி என பலவித அயனாம்ச வகைகளும் அவற்றின் பின்னே பலவித அடிப்படை வருடங்களும் கணக்கில் சொல்லப்படுகின்றன.

மேலும் சில அயனாம்ச வகைகள் வந்தாலும் வரலாம். புது அயனாம்சம் கண்டுபிடிப்பது இப்போது ஒரு நாகரீக அடையாளம் போல ஆகிவிட்டது. (நான்கூட தற்பெருமைக்காக புதிதாக ஒன்றைக் கண்டுபிடிக்கலாம் – யார் கண்டது? 😉  ).

இதுபோன்ற பலவித முறைகளை பின்பற்றுபவர்களும் குறிப்பிட்ட ஒரு அயனாம்சம்தான் சரியானது என்றும் அந்தமுறை சார்ந்து தங்கள் தரப்பு சரியான கணிப்பு சதவீதங்களையும் (பெரும்பாலும் 80%-90+ % என்று) சாதிப்பதை பார்த்து இருக்கலாம். 80+% சதவீதம் சரி. ஆனால் யாருமே ஏன் அந்த அடிப்படை மொத்த எண்ணை (sample size – ‘N’) சொல்லவே மாட்டேன் என்கின்றார்கள் என்று எனக்கு புரியவே இல்லை!  மேலும், பெரும்பாலும் எப்போதும் ஒரு முறையை மட்டும் பயன்படுத்திவிட்டு அதுவே சிறந்தது என்று எப்படி சொல்வது?

இந்த மாறுபடும் அயனாம்ச அளவுகள், வேறுவேறு பஞ்சாங்கங்கள் கணிக்க அடிப்படையாக அமைகின்றன. துல்லியமானது வாக்கியமா அல்லது திருக்கணித பஞ்சாங்கமா என்ற கிரகவரப்பு தகராறு இந்த வகையைச் சேர்ந்ததே ஆகும். இந்த அயனாம்ச சிக்கல் சனீஸ்வரன் சோதிடத்திற்கு இட்ட சாபம் என்று அவரை வம்புக்கு இழுப்பவர்களும் உண்டு 😊.

தர்க்கரீதியாக எல்லா முறைகளிலும் நியாயம் உள்ளது என்பதுபோல தோன்றினாலும், நடைமுறையில் இவற்றில் எதை நம்பிப் பின்பற்றுவது என்பது மிகவும் குழப்பமான விடயம் ஆகும். அதனை சரியாக புரிந்துகொள்ள வானியல் அறிவே துணைக்கு வரவேண்டும். எந்த முடிவையும் எடுக்கும் முன்னர், முதலில் இந்த அயனாம்சம் கணக்கிடுவதில் உள்ள முழு பிரச்சினையையும் சரியாக, விலாவாரியாக புரிந்து கொள்வோம்.

கீழே சொல்லப்படுபவை தனித்தனியான ஆனால் தொடர்புடைய வானியல் கணக்கீடு சிக்கல்கள் ஆகும். சற்று நேரம் எடுத்து அனுமானித்து புரிந்து கொள்ளுங்கள்.

கிரகணக் கட்டமும் பூமத்திய ரேகைக்கட்டமும் இணையும் புள்ளி

சம பகல் மற்றும் இரவு உள்ள நாட்களில் பூமியின் கிரகணக் கட்டமும் சூரியனின் அடிப்படையில் அமைந்த வான்கோளக் கட்டமும் ஒன்றை ஒன்று 0 பாகைகளில் வெட்டிக்கொள்ளும். அதாவது சூரியன் சரியாக பூமத்திய ரேகைக்கு மேலே வரும்போது இந்த இருவித கட்டங்களும் ஒன்றுடன் ஒன்று பொருந்திப் போகும் (மேலும் விபரங்களுக்கு எனது இந்த கட்டுரையை பார்க்கவும் – https://aimlastrology.in/2020/06/t017/ ). அது கீழேஉள்ள படத்தில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. அயனாம்ச கணக்கிற்கு இந்தப் புள்ளியே அடிப்படை. வருடம் தோறும் நகரும் இந்தப் புள்ளியின் வித்தியாசமே அயனாம்சம் ஆகும்.

அயனாம்சம்

பூமியின் அச்சுக்கோணம் மற்றும் வேறு காரணிகள் காரணமாக சாயனம் மற்றும் நிராயனம் என்ற இந்த இரண்டு முறையிலான தொடக்கப்புள்ளிகளும் முற்காலத்தில் வெவ்வேறு வருடங்களில் ஒன்றாக பொருந்திப்போனதாக பல சோதிட வித்வான்களால் கணிக்கப்பட்டு உள்ளது.

இந்திய முறையில், இந்த தொடக்கப் புள்ளியை கண்டுபிடிக்க ஏதாவது ஒரு நட்சத்திரம் உறுதிப்படுத்தும் புள்ளியாக எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளது. உதாரணமாக, உண்மையான சித்ரபட்ச அயனாம்சத்தில் சித்திரை நட்சத்திரம் 180 பாகைகளில் இருப்பதாக கொண்டு அதற்கு எதிரான 180 பாகைகளில் உள்ள புள்ளி மேடராசியின் தொடக்கப்புள்ளி என கொள்ளப்படுகிறது. அதாவது சித்திரை நட்சத்திரம் கன்னி மற்றும் துலாம் ராசிகளின் பிரிக்கும் புள்ளியாக கொள்ளப்படுகிறது.

இந்த தொடக்கப்புள்ளி,  தேர்ந்தெடுக்கும் நட்சத்திரம் பொறுத்து மாறுபடலாம். அதன் அடிப்படையிலேயே வெவ்வேறான அயனாம்சங்களின் ஆதார வருடங்கள் (Epoch Year) நம் சோதிட முன்னோர்களால் அடையாளம் காணப்பட்டு உள்ளன. மேலும், ஒருவருடத்திற்கு உரிய அயன அளவுகளும் அவர்களால் கணக்கீடு செய்யப்பட்டு உள்ளன. அவற்றின் ஒரு தொகுப்பை கீழே பாருங்கள். கிடைத்த வரையில் தரவுகளை தொகுத்து கொடுத்துள்ளேன். உங்களுக்கு மேலும் தெரிந்தால், இதனை மேம்படுத்த தரவுகளை தந்து உதவலாம்.

அயனாம்சம்
பலவித அயனாம்சங்கள்

குறிப்பிட்ட வருட அயனாம்சம் கண்டுபிடிப்பது எப்படி?

மேலே உள்ள அட்டவணையில் நீங்கள் காணும் வருட அயன அளவுகள் பெரும்பாலும் நிலையானவை (fixed) ஆகும். முதலில் ஒரு நட்சத்திரத்தை அடிப்படையாக வைக்க வேண்டும் (fiducial or anchor star). பிறகு அதன் அடிப்படையில் கிரகண கட்டமும் பூமத்தியரேகை கட்டமும் இணைந்த ஒரு காலத்தை கண்டுபிடிக்கவேண்டும்.

அதனை அடிப்படை வருடமாகக் கொண்டு (epoch year) நமக்கு தேவைப்படும் வருடத்துடன் வரும் வித்தியாசத்தை கணித்து, அந்த எண்ணுடன் இந்த நிலையான அயன மதிப்பை பெருக்கினால் தேவைப்படும் ஆண்டின் அயன வித்தியாசம் கிடைத்துவிடும். எளிமையாக உள்ளது அல்லவா?

இந்த நேர்கோட்டு (linear) சமன்பாட்டின் அடிப்படையில்தான் பெரும்பாலான மென்பொருட்களில் மற்றும் பஞ்சாங்கங்களில் இந்திய ராசிமண்டல ஆரம்ப புள்ளியும், அதன் அடிப்படையில் ராசிகளில் வருடாந்திர கிரக அமைவுகளும் கணக்கிடப்படுகின்றன. ஆனால் சில உண்மைகள் அவ்வளவு எளிமையானவையா என்ன? வாருங்கள், இந்த கணக்கீட்டில் உள்ள சிக்கல்களை பார்ப்போம்.

பூமியின் சுழல் அச்சும் கணக்கீட்டு சிக்கல்களும்:

நாம் கீழே காண உள்ள காரணிகளின் அடிப்படையில் பூமியின் சுழல் அச்சின் அயனச் சலனப்பாதையை கண்டுபிடிப்பதில் சிக்கல் உள்ளது.

வடதுருவ அயனச்சலனப் பாதையின் சுழல் காலம் இப்போது 25,772 வருடங்கள் என்கிறோம். காலச் சமன்பாட்டில் இது மிக முக்கியமான முதன்மை மாறி ஆகும். இன்றைய தேதிக்கு 26,000 வருடம் என்பதன் அடிப்படையிலேயே பெரும்பாலான அயனாம்ச மதிப்புகள் ஒரு நேர்கோட்டு சமன்பாடாக (linear estimation) பெறப்படுகின்றன. அது முழுக்க சரி அல்ல!

பூமியின் சாய்வுக்கோணம் காலப்போக்கில் மாறுவது என மேலே பார்த்தோம். அது பெருமளவில் ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்குள் மாறினாலும், சாய்வுக்கோணம் அதிகரித்தால் அயனச்சலனப் பாதை ஒரு சுற்று முடிக்க ஆகும் காலம் அதிகரிக்கும். நமது ஞானிகள் (சூரிய சித்தாந்தம்), சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த காலம் 21,000 ஆண்டுகள் என கணித்து உள்ளனர். அப்படியெனில், அவர்கள் காலத்தில் அச்சு தற்போது உள்ளதை விட இன்னும் சாய்வு குறைவாக இருந்திருக்கலாம்! அவர்கள் வானியல் அறிவின் நீட்சி ஆச்சரியம் அல்லவா!

இந்த பூமியின் அச்சுக் கோணம் (axial tilt) மற்றும் ஒழுங்கற்ற தலைஆட்டம் (nutation) கீழ்கண்ட காரணங்களால் தொடர்ச்சியாக மாறுகிறது.

1.நீண்டகால அச்சுக்கோண மாற்றம் (change in axial tilt)

இது பெரும்பாலும் குறிப்பிட்ட எல்லைகளுக்குள் நிகழ்வது. கணிக்கப்படக்கூடியது

2.சந்திரனின் உடன்சுழல் விளைவு (nutation):

சந்திரன் பூமிக்கு மிக அருகில் உள்ள பெரிய பருப்பொருள் ஆகும். மேலும், அது பூமியின் சுழல் அச்சில் இருந்து 5.5 பாகை சாய்வான அச்சில் சுழல்கிறது. சந்திரனும் பூமியும் ஒரு பொது மையப்புள்ளியை மையமாக வைத்து (பேரி மையம் – bary center) சுழலும் போது, அவை ஒன்றின் மீது ஒன்று தொடர்ச்சியாக ஏற்படுத்தும் ஈர்ப்பு விசையினை காரணமாக பூமியின் அச்சு சிறு மாற்றத்திற்கு உள்ளாகிறது (9.2 ஆர்க் செகண்டுகள் வரை). இந்த மாற்றம் 18.6 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொடர்ச்சியாக நிகழ்கிறது. இது ராகு கேது சுழற்சியுடன் ஒத்துப்போகிறது.

சந்திரனின் காரணமாக பூமியின் அச்சில் ஏற்படும் இந்த தள்ளாட்டம் அயனாம்ச மதிப்புகளை தொடர்ச்சியாக பாதிக்கக் கூடிய மாறி ஆகும். எனவே, நேர்கோட்டு அயனாம்ச மதிப்புகளை (linear fixed values) நேரடியாக காலக்கணித்ததில் பயன்படுத்துவது தவறானது ஆகும். அயனாம்ச மதிப்புகளில் தொடர்ச்சியான பிழைத்திருத்தம் செய்யப்படவேண்டும். கிருஷ்ணமூர்த்தி பத்ததி போன்ற துல்லியம் தேவைப்படும் முறைகளில் இது மிகமிக முக்கியம் ஆகும்.

காலப்போக்கில் பூமியின் சுழல் வேகம் மிகமிகமிக மெதுவாக குறைந்து வருவதாகவும் சந்திரனின் சுழற்சியும் அதற்கு காரணம் என்றும் வானியல் அறிவியல் சொல்கிறது. கடந்த நூற்றாண்டில் பூமி சூரியனை சுற்றிவரும் இந்த சுழலும் காலம் 1.7 மில்லிசெகண்ட் அதிகம் ஆகி உள்ளது.

3. பூமியின் காந்தப்புல அச்சின் தொடர் மாற்றம்

பூமிக்கு ஒரு காந்தப்புல அச்சும் உண்டு என்பது உங்களுக்கு தெரிந்து இருக்கலாம். இந்த அச்சு பூமியின் சுழலும் அச்சுடன் பொருந்தாமல் 10 பாகை தள்ளி உள்ளது. பூமியின் உட்புற மையத்தில் தொடர்ச்சியாக ஏற்படும் மாற்றங்களின் காரணமாக இதுவும் தொடர்ச்சியாக மாறக்கூடியது. கீழே உள்ள படம் அதனை உங்களுக்கு காட்சிப்படுத்துகிறது.

இந்த அச்சு மாற்றம் புவியின் சுழல் அச்சில் மாற்றத்தை சிறு அளவில் ஏற்படுத்தக்கூடியது.

4.பிற கிரக பாதிப்பு

சந்திரனைப் போல பிற கிரகங்களும் சூரியனை சுற்றிவரும் போது, பூமியின் சுழல் அச்சினை சிறு அளவில் பாதிக்கக் கூடும். முக்கியமாக குரு, சனி போன்ற பல கிரகங்கள், சந்திரன் மற்றும் ராகு கேது அச்சுடன் ஒரு கிரகண காலத்தில் இணையும் போது அவை பூமியின் சுழல் அச்சில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் (சந்திரன் + பிற கிரகங்கள் இணைந்து 2% வரை).

5.பிற சுற்றுசூழல் மாற்றங்கள்

இவற்றுடன் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் பருவநிலை மாற்றங்கள் போன்றவையும் இந்த சுழல் அச்சின் மீது காலப்போக்கில் சிறு அளவில் மாற்றங்களை ஏற்படுத்தும்.

இதுபோன்ற காரணிகளின் விளைவாக 25,772 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பூமி அச்சு, அயனசலனப்பாதையில் தான் முன்பு இருந்த இடத்திற்கே வரும் என்பது நிலை இல்லை! இவற்றில் பல காரணிகளுக்கு நம்மிடம் நீண்டகால தரவுகள் இல்லை (கணித மாதிரிகள் மட்டுமே உண்டு). இவற்றின் விளைவுகள் முழுதும் அயனாம்ச மதிப்புகளில் பிரதிபலித்தால்தான் அயனாம்ச கணக்கு முழுமை பெரும். குறைந்தபட்சம் சந்திரன் விளைவாவது கணக்கில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். இதுபோன்ற வானியல் காரணங்களால்தான் சோதிடத்தில் சந்திரன் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

ராசியின் தொடக்கப்புள்ளிக்கான ஆதார நட்சத்திரங்களும் (Fiducial / Anchor Star) அவற்றின் தேர்வுகளின் நியாயங்களும் (மற்றும் குறைகளும்)

நாம் பார்க்கும் பலவித அயனாம்சங்களின் பின்னும் சில குறிப்பிட்ட நட்சத்திரங்கள் அடிப்படை புள்ளியாக கருதப்படுகின்றன. பெரும்பாலும் சித்திரை நட்சத்திரமும், அதற்கு அடுத்து பூசம், ரோகினி, ரேவதி, மூலம் போன்றவையும் ஆதார நட்சத்திரங்களாக கருதப்பட்டு அயனாம்சங்கள் வரையறை செய்யப்பட்டு உள்ளன. சோதிடப்படி, ஒரு நட்சத்திரத்தின் தொடக்க எல்லைகளாக சொல்லப்படக்கூடிய பாகையில் ஒரு நட்சத்திரம் உண்மையிலேயே இருப்பதாகக் கொண்டு மேஷ ராசியின் தொடக்கப்புள்ளியாகிய 0 பாகை பின்னோக்கி நிர்ணயம் செய்யப்படுகிறது.

எனது முந்தைய கட்டுரையில் (https://aimlastrology.in/2020/07/t020/ ) நட்சத்திரங்களை தூர அடிப்படையில் நமது முன்னோர்கள் தேர்வு செய்து  உள்ளனர் என்று பார்த்தோம். நட்சத்திரங்கள் தொடர்ச்சியான சிறு நகர்வுக்கு உள்ளாகின்றன என்றும் பார்த்தோம். சோதிடம் வரையறுக்கப்பட்ட காலத்தில் இந்த 27 நட்சத்திரங்களும் சோதிடத்தில் சொல்லப்பட்டபடி மிகச்சரியான தூர இடைவெளியில் இருந்து இருக்கவேண்டும். இதனை இன்றைய வானியல் மென்பொருள் துணையோடு பின்னோக்கிச் சென்று உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். அப்படியான எனது முதல்நிலை அனுமானத்தின்படி சோதிடம் குறைந்தபட்சம் ஒரு 20,000 ஆண்டுகளாவது பழமை வாய்ந்தது என்பேன்!

காலப்போக்கில் நட்சத்திரங்கள் வெவ்வேறு திசைகளில் மற்றும் வெவ்வேறு வேகங்களில் நகர்ந்து செல்வதால், அவற்றுக்கு இடையே உள்ள தூரம் சற்று மாறி உள்ளது. பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரங்கள் அதிகம் நகர்வுக்கு உள்ளாகும். கீழே உள்ள படத்தில் நட்சத்திரங்கள் எந்த பக்கமாக நகர்கின்றன என்பதை காட்சிப்படுத்தி உள்ளேன். படம் எதிர்மறை அளவுகள் உள்ள நட்சத்திரங்கள் (0 அச்சின் இடப்புறம்), பின்னோக்கி செல்வதையும் நேர்மறை அளவுகள் உள்ள நட்சத்திரங்கள், சூரியனை நோக்கி வருவதையும் குறிக்கிறது.

மையப்பகுதியில் உள்ள அதிகம் நகராத நட்சத்திரங்கள் சோதிடப்படி தங்கள் இடத்திலேயே இருக்கின்றன என்றும், அவற்றின் அடிப்படையில் அமைந்த அயனாம்ச கணக்குகள் அதிகம் நம்பகமானவை என்றும் நாம் எடுத்துக்கொள்ளலாம். இதனோடு நாம் அவற்றின் கிரகணக்கட்ட இடத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இங்கு நமக்கு தோன்றும் கேள்வி, 27 நட்சத்திரங்களில் எதன் வானியல் இடம் சரியானது, அதிகம் நம்பகமானது மற்றும் நிலையானது என்பதாகும். பல்வேறு அயனாம்சங்களின் அடிப்படை நட்சத்திர தேர்வின் ஆதாரமாக சொல்லப்படும் சில வாதங்களை இப்போது பார்ப்போம்.

இதனுடன் காலபுருஷனின் (அதாவது – விஷ்ணு பகவான்!) உடல் அமைப்பிலான சக்கரங்களை இணைந்தும், மற்றும் கலியுக ஆண்டின் தொடக்கத்தின் அடிப்படையிலும் அயனாம்ச அடிப்படை நட்சத்திர தேர்வின் மேன்மை பரிசோதிக்கப்படுகிறது. எனக்கு அதுபற்றி அதிகம் தெரியாது என்பதால் அந்த பாகத்தை சான்றோரிடமே விட்டுவிடுகிறேன். 😊

கிரகணக்கட்ட வாதம்

எனது முந்தைய ஒரு வானியல் கட்டுரையில் (T020), கிரகணப்பாதையின் முக்கியத்துவத்தையும் அதன் பக்கவாட்டு தூர அடிப்படையில் 27 நட்சத்திரங்கள் (மற்றும் தாரைகள்) தேர்வு செய்யப்பட்டு உள்ளன என்றும் பார்த்தோம். சூரியனின் பாதையும், சந்திரனின் பாதையும் வெட்டிக்கொள்ளும் 0 பாகை கிரகணக்கட்டத்தில் உள்ள நட்சத்திரங்கள் கிரகங்களின் இடத்தை அடையாளம் காண சிறப்பானவை என்றும் பார்த்தோம். அதன் அடிப்படையில் பார்த்தால் பூசத்தின் இரு தாரைகள் (குறிப்பாக HIP 42806 மற்றும் HIP 42911), மகம் (தனி நட்சத்திரம் – Regalus – HIP 49669), விசாகத்தின் ஒரு தாரை (Zubenelgenubi / Alpha2 Lib – HIP 72622), அனுஷத்தின் ஒரு தாரை (HIP 78820 A) மற்றும் ரேவதி (தனி நட்சத்திரம் – Zeta Piscium – HIP 5737 A) ஆகிய 5 நட்சத்திரங்கள் மட்டுமே இந்த ஒரு காரணியின் அடிப்படையில் ஆதாரமாக இருக்க உகந்தவை ஆகும். மேலே உள்ள படத்தில் இந்த நட்சத்திரங்கள் கட்டமிட்டு காட்டப்பட்டுள்ளன.

எல்லா கிரகங்களும் இந்த கிரகணப்புள்ளியில் இணைந்தால் அவை எவ்வாறு பூமியின் அச்சில் மாறுபாட்டை ஏற்படுத்தும் என்று மேலே பார்த்தோம். அந்த அடிப்படையில் இந்த வாதம் எனக்கு ஏற்புடையதே!

அயனாம்சம் – அசுவினிப் பட்சம்

காலபுருஷ தத்துவப்படி, அசுவினியில் இருந்துதான் ராசி மண்டலம் தொடங்குகிறது. எனவே, அந்த நட்சத்திரம் தொடக்கமாக (0 பாகை) அமையவேண்டும் என்ற வாதத்தின் அடிப்படையில் கீழேஉள்ள படத்தை நான் சமகாலத் தரவுகளின் அடிப்படையில் உருவாக்கினேன்.

இது 2000 ஆண்டின் (ஜூலியன் ஆண்டு – J2000.0) கிரகணக் கட்டத்தை அடிப்படையாக (epoch year) கொண்டு  உருவாக்கப்பட்ட படம்.

அசுவினி 0 பாகை எனக்கொண்டால் பரணி, கார்த்திகை, பூசம், பூரட்டாதி, ரேவதி உட்பட 8 நட்சத்திரங்கள் தங்களுக்கு சோதிடத்தில் சொல்லப்பட்ட பாகைகளுடன் நெருக்கமாக பொருந்திப்போகின்றன என்பது இதன் சிறப்பு ஆகும்.

இதன் குறைகள்

இதில் அசுவினி 0 பாகை என்று வைத்தால் சித்திரை 170.66 பாகையில் வருகிறது. மற்றும், மூல நட்சத்திரத்தின் இடம் 222.15 பாகை என்று வரும். சித்திரை கன்னி ராசியின் மத்தியிலும், மூலம் உள்ள ராசி விருச்சிகம் என்றும் மாறிப்போய்விடும்! இது ஒருவகையில் தவறாகும்! ☹

மேலும், அசுவினி நட்சத்திரம் கிரகணக்கட்ட பாதையில் இருந்து 7 பாகைக்குமேல் வடக்கில் உள்ளது. இதன் பின்புலத்தில் கிரகணம் நிகழ வாய்ப்பு குறைவு. எனவே, இதன் அடிப்படையில் அமைந்த அயனாம்சம் சிறப்பான தேர்வாக இருக்க வாய்ப்பு குறைவு.

அயனாம்சம் – சித்திரை பட்சம் (Chitrapaksha) பற்றிய வாதங்கள்

சித்திரையை மையமாகக் கொண்ட அயனாம்சங்கள் (லஹிரி, கிருஷ்ணமூர்த்தி, தேவதத்தா, திருக்கணிதம் போன்றவை) சித்திரையின் இட அமைவு எந்த புள்ளியில் (பாகையில்) தொடங்குகிறது என்பதில் மட்டுமே வேறுபடுகின்றன. சோதிடப்படி, ஒரு நட்சத்திரத்தின் நான்கு பாதங்கள் நட்சத்திர முனையில் தொடங்குவது எனில், சித்திரை இப்போது 173.33 பாகைகளில் இருக்க வேண்டும் (அசுவினி பட்சப்படி, அது 170.66 பாகைகளில் உள்ளது). ஆனால் சித்திரை 180 பாகையில் அல்லது அதற்கு அருகில் இருப்பதாகத்தான் அதன் அடிப்படையில் அமைந்த எல்லா அயனாம்சங்களும் சொல்கின்றன.

இதன் குறைகள்:

நான்கு பாதத்தில் மூன்றாம் பாத ஆரம்பத்தில் தான் ஒரு நட்சத்திரம் இருக்கும் என்ற வாதம் சித்திரைக்கு பொருந்தினாலும் பிற நட்சத்திரங்களுக்கு அதே வாதம் பொருந்தவில்லை.

மேலும் கிரகணக்கட்டத்தில், சித்திரை நட்சத்திரம் 2.05 பாகை தெற்காக அமைந்து உள்ளது. நடுவில் அமையவில்லை. இதில் சில வானியல் கணித முரண்பாடுகள் இருப்பினும் இதன் அடிப்படையில் அமைந்த அயனாம்சங்களே பெருமளவில் பயன்பாட்டில் உள்ளது. திருக்கணிதம் இதில் அடங்கும்!

மூலம் மற்றும் ரோஹிணி நட்சத்திரம் தொடர்பான அயனாம்சங்கள்

சந்திரஹரி (மூல பட்சம்) அயனாம்சத்தின் வாதம், ஆதாரமாக பயன்படுத்தவேண்டியது அதிகம் நகராத நட்சத்திரம் என்பது ஆகும். மூல நட்சத்திரத்தின் பல தாரைகள் அந்த வாதத்திற்கு சிறப்பாக பொருந்துகிறது.

இருப்பினும் மூலத்தின் தாரைகள் கிரகண கட்டத்திற்கு வெளிய 12 முதல் 20 பாகைகள் தெற்கில் அமைந்துள்ளதால், அது ஒரு சிறப்பான தேர்வாக பெரும்பாலானோரால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

பஃகன் மற்றும் பிராட்லி ஆகியோரின் ரோகினி பட்ச வாதம், அந்த நட்சத்திரம் கிரகண கட்டத்திற்கு 5.47 பாகைகள் வடக்கில் இருப்பதால் சிறப்பான தேர்வாக கருதப்படுவதில்லை.

வாக்கியம் எங்கே?

இதுவரை பார்த்த தகவல்களில் இருந்து நீங்கள் அயனாம்சம் பற்றி தெளிவு பெற்று இருப்பீர்கள் என நம்புகிறேன். இதுவரையிலான விவாதத்தில் வாக்கியம் பற்றிய அயனாம்சம் எங்கும் தென்படவே இல்லையே என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது. உங்களில் யாருக்கேனும் வாக்கியத்தின் பின்னே உள்ள ஆதார நட்சத்திரம் (fiducial nakshatra) மற்றும் அடிப்படை வருடம் (epoch year) தெரிந்தால் சொல்லுங்கள். நான் எங்கு தேடியும் மற்றும் கேட்டும் எனக்கு பதில் கிடைக்கவில்லை.

வாக்கியத்தையே பி வி ராமன் பயன்படுத்தியதாக சுப்பையா வாத்தியார் கருதுகிறார். மேலும், ராமன் அயனாம்சம் பூச பட்சத்திற்கு அருகில் உள்ளதாக PVR நரசிம்மராவ் அவர்கள் சொல்வதால், வாக்கியத்தின் பின்னே இருப்பது பூச பட்சமாக இருக்கலாம் என்பது எனது அனுமானம்! அப்படியெனில் அது ஒரு சிறப்பான தேர்வே! 😊

இந்த அயனாம்ச பிரச்சினைக்கு தீர்வே இல்லையா?

எவ்வளவு சொல்லியும் இதற்கு சுருக்கமான விடை தெரியாவிட்டால் பலருக்கும் தலையே வெடித்துவிடும் என்று எனக்கு புரிகிறது. அதற்கு என்னிடம் மூன்று விதமான ஆலோசனைகள் உண்டு. அதனை புள்ளியியல் பக்கத்தில் இருந்து பார்த்தவுடன் கடைசியாக விளக்குகிறேன்.

பகுதி 2 – அயனாம்சம் – புள்ளியியல் பார்வை

நாம் இப்போதுதான் இந்த கட்டுரையின் முக்கிய பகுதியை பார்க்கப் போகிறோம். 😊

இந்திய சோதிடத்தில் ராசி, நட்சத்திரம் மற்றும் கிரகத்தின் நட்சத்திரப் பாத இருப்புகள் பலன்சொல்லப் பயன்படும் அடிப்படை தொகுப்புக்கூறுகள் என்று இந்த தொடரின் முந்தைய பாகத்தில் பார்த்தோம். மேலும், அவை பலன் எடுக்க பயன்படும் மொத்த மாதிரிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் உத்தி என்பதையும் பார்த்தோம்.

சோதிடத்தின் பயன்படும் கால எல்லைகள் முடிவற்றது என்பதை பார்த்தோம். காலாகாலத்துக்கும் பொருந்தும்படி சொல்லப்பட்ட ஒரு சாத்திரத்தில் அளவுகளும், அளவிடும் முறைகளும் நிலையாக இருக்கவேண்டியது மிகவும் முக்கியம் அல்லவா. நமது ஞானிகள் அதனை யோசிக்காமலா இருந்து இருப்பார்கள்?

இந்தவகை தொகுப்புகளை ஏற்படுத்தும் போது பல காலத்திற்கும் பொருந்தும் வண்ணம், எப்போதும் கிரகஇருப்புகள் ஒரே மாதிரியாக சரியாக கணக்கிடப்படவே நட்சத்திர அடிப்படையிலான நிலையான ராசிமண்டல தொடக்கப்புள்ளி நிறுவப்பட்டு உள்ளது (precision in measurement). அயனாம்சம் என்பது அதை உறுதிப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட புள்ளியியல் கட்டுமானக் கூறு எனலாம்.

எந்த ஒன்றைப் பற்றியும் அளவீடு செய்ய வேண்டும் எனில் அதனை அளக்க பயன்படுத்தும் அளவீடுகள் மற்றும் அளவிடும் கருவிகள் முதலில் நிலையானதாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். ஒன்றை எடைபோடும் முன்னர் அதற்குப் பயன்படுத்த உள்ள தராசின் செங்கோன்மை உறுதிசெய்யப்பட வேண்டியது முக்கியம் அல்லவா? அதெற்கென உண்டாக்கப்பட்டதே அயனாம்ச கணக்கு!

இந்திய சோதிட கட்டுமானத்தின் புள்ளியியல் மேன்மை

மேலைநாட்டு சோதிடம் புள்ளியியல் ரீதியாக சோதிடத்தை நிரூபிக்க முடியாமல் தோற்றுப்போவதற்கு அடிப்படை காரணம் வருடம்தோறும் மாறும் ராசிமண்டல தொடக்கப்புள்ளி என்பேன் நான். ஒருவரின் உயரத்தை அளக்கும்போது கூடவே அளக்கும் பட்டையும் நகர்ந்தால் எப்படி அளவு சரியாக இருக்கும்? மேலும் எல்லாக்காலத்துக்கும் சொல்லும் ஒரு சாத்திரத்தில் அடிப்படையே ஆடிக்கொண்டு இருந்தால் எப்படி? அந்த வகையில் நமது ஞானிகள் செய்துவைத்துள்ள நிலையான ராசிமண்டல புள்ளி மிகவும் வலுவான கட்டுமானம் ஆகும். அதனால்தான், நம் சோதிடர்கள் பொதுவாக சொல்லும் ராசிபலன்களும் கூட ஓரளவுக்காவது பொருந்தி வருகிறது.

நமக்கு இத்தனை அயனாம்சங்கள் தேவையா?

ஒரு விடயத்தில் ஆழ்ந்த அறிவு இருக்கும் இடத்தில்தான் கேள்விகளும்,  மாற்றுக் கருத்துக்களும், மேம்படுத்தும் உத்திகளும் தோன்றும். நான் பலவித அயனாம்சங்களையும் அப்படித்தான் பார்க்கிறேன். நமக்கு அவற்றை பற்றிய சரியான புரிதல் இல்லாததன் காரணமாக, அவை குழப்பம் ஏற்படுத்துவது போல தோன்றலாம். ஆனால், அந்த குழப்பங்கள் மற்றும் வேறுபாடுகள் தத்துவார்த்தமானவை!

அவை ஒரு பிரச்சினையின் ஆழம் உணர்ந்து அதனை தீர்க்க எடுக்கப்படும் நேர்மையான அறிவுத்தேடல்கள் ஆகும். எல்லா முறைகளின் அடிநாதமாகவும் இருப்பது நமது சோதிட ஞானிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளும் சிரத்தையும் அதன்மூலம் அவர்கள் சொல்ல விரும்பும் சரியான பலன்களுமே ஆகும். இந்த பன்முகத்தன்மை நமதுநாட்டின் வரம் ஆகும். ஏனெனில் நம்மிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட தீர்க்கும் முறைகள் உள்ளன. அவற்றை சலிப்படையாமல், வெறுத்து ஒதுக்காமல், கட்சி கட்டாமல் கடந்து செல்லுங்கள்.

அயனாம்சம் பிரச்சினைக்கு எனது தீர்வுகள்

நான் முன்பு சொல்லியது போல என்னிடம் இப்போதைக்கு மூன்று தீர்வுகள் உள்ளன. இந்த எண்ணிக்கை காலப்போக்கில் எனது பட்டறிவால் மாறக்கூடும். 

தீர்வு 1:

நீங்கள் ஒரு ஜாதகர் எனில், இந்த அயனாம்சம் பற்றி அதிகம் கவலைப்படாதீர்கள். இந்த பிரச்சினையை உங்கள் ஜோதிடரிடமே விட்டுவிடுங்கள். என்றாவது நீங்கள் உங்கள் மருத்துவரின் அறிவை சோதித்து கவலைப்பட்டு இருக்கின்றீர்களா? இல்லை தானே? அப்படியெனில் உங்கள் சோதிடர் சொல்லும் பலனை கேட்டுக்கொண்டு நிம்மதி அடையுங்கள். அயனாம்சம் உங்களுக்கு தேவையற்ற பிரச்சினை!

நீங்கள் சோதிடர் எனில் நீங்கள் பயன்படுத்தும் அயனாம்சக் கப்பல் எங்கே தரைதட்டும் என்று உணர்ந்து, பாதுகாப்பான எல்லைகளுக்குள் நின்று பலன் சொல்லுங்கள். ராசி, நட்சத்திரம் மற்றும் அதன் பாத சந்தியில் உள்ள கிரகங்களை எச்சரிக்கையோடு கையாளுங்கள். நல்லபடியாக உள்ள பலன்களை அழுத்திச் சொல்லுங்கள்.

தீர்வு 2:

நீங்கள் சோதிடம் மற்றும் வானியலில் துறை போனவர் எனில், புதிதாக ஒரு அயனாம்சம் கண்டுபிடியுங்கள்! விளையாட்டுக்கு சொல்லவில்லை. உண்மையாகவே சொல்கிறேன். ஒரு நட்சத்திரத்துக்கு பதிலாக மிகவும் அதிகபட்ச நட்சத்திரங்கள் தங்களுக்கு சோதிடத்தில் சொல்லப்பட்டுள்ள பாகை அளவின் அடிப்படையில் சரியான இடத்தில் இருப்பது போன்ற ஒரு காலத்தை வரலாற்றில் கண்டுபிடியுங்கள்.

பின்னர் கிரகண கட்ட அடிப்படையில் ஒரு அல்லது சில நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு அயனாம்சம் கட்டமையுங்கள். அதன் ஆதார வருடத்தையும், மாறும் வருடாந்திர அயனாம்ச மதிப்புகளையும் கண்டுபிடித்து வெளியிடுங்கள். சந்திரனை கணக்கில் சேர்க்க மறந்து விடாதீர்கள். மிகப்பெரிய ரகசியம் சொல்லி உள்ளேன். நீங்கள் கருத்தூன்றி வேலை செய்யவேண்டியது மட்டுமே மிச்சம். சோதிட நோபெல் பரிசு உங்களுக்கே! 😊

தீர்வு 3:

இருப்பதில் சிறந்த அயனாம்சத்தை அறிவியல் பூர்வமாக தேர்ந்தெடுப்பதற்கு இன்னும் சில காலம் (வருடங்களாவது) ஆகலாம். அதற்கு முன்னர் நாம் சோதிடத்தில் தரவு அறிவியல் மற்றும் இயந்திர வழி கற்றல் முறைகளை புகுத்த வேண்டும். அதன் பின்னர் எல்லா அயனாம்சங்கள் அடிப்படையிலும் மாதிரி ஜாதகங்களின் பலன்களை கணக்கிட்டு எந்த முறையை பயன்படுத்தும்போது பலன்கள் அதிக பட்ச நம்பகத்தன்மையோடு வருகின்றன என்று கண்டுபிடித்து அதனை பிரபலப்படுத்தலாம். இதுவே அறிவியல் பூர்வமான அணுகுமுறை ஆகும்.

கட்டுரையின் இறுதி பாகத்திற்கு வந்து விட்டோம். அப்பாடா! என்று தோன்றுகிறது அல்லவா. 😉

அயனாம்சம் – கட்டுரை சுருக்கம்

நமது முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ள  அயனாம்சம் என்ற கட்டமைப்பு எந்த அளவு அறிவியல் பூர்வமாக, சரியான விளக்கங்கள் மற்றும் வானியல் அறிவோடு செய்யப்பட்டுள்ளது என்பதை இதுவரை பார்த்தோம். பல சிக்கலான வானியல் காரணிகளையும் துல்லியமாக கணக்கிட்டு நிலையான ஒரு புள்ளியியல் அறிவுக்கட்டுமானத்தை ஏற்படுத்தி உள்ள அவர்களின் பெருமை அளப்பரியது. அவர்களை நினைக்கையில் இந்த திருக்குறள் தான் எனக்கு இப்போது ஞாபகத்திற்கு வருகிறது!

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

(அதிகாரம்: நீத்தார் பெருமை குறள் எண்:22)

இந்த பாகத்தை இங்கே நிறைவு செய்கிறேன். இத்தொடரின் அடுத்த பாகத்தில் பிற சோதிட கட்டுமானங்களின் புள்ளியியல் தொடர்புகளை பற்றி  பார்க்கலாம்.

இதுவரை நேரம் செலவிட்டு படித்தமைக்கு நன்றி. உங்களின் பல கேள்விகளுக்கும் விடை கிடைத்து இருக்கும் என்று நம்புகிறேன். 😊

உங்கள் கருத்துக்கள், பின்னூட்டங்கள் மற்றும் பகிர்வுகள் வரவேற்கப்படுகின்றன!


பிற்சேர்க்கை – 4 டிசம்பர் 2023
இந்தக் கட்டுரை சித்திர பட்ச அயனாம்சம், லஹிரி அயனாம்சம் போன்ற பிற வகைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அயனாம்சம் பற்றிய எனது நீண்ட உரைகள் யூடியூபில் நமது சேனலில் (youtube.com/@aimlastrology) காணக் கிடைக்கும்.

பிற்சேர்க்கை – 3 ஆகஸ்ட் 2024
தற்போது புழக்கத்தில் உள்ள அயனம்சங்களில் முக்காலத்திலும் சிறந்த அயனாம்சம் எது என்பது பற்றிய எனது நீண்ட உரைகள் யூடியூபில் நமது சேனலில் பொதுமக்களுக்கான சோதிடம் என்ற தொடரில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் சுட்டிகள் இவையாகும். வரிசைக்கிரமமாக பார்த்து கூடுதல் விபரங்களை அறிந்துகொள்ளலாம்.

  1. https://youtu.be/x7M4EJSnXdc
  2. https://youtu.be/gdb0txMmcqM
  3. https://youtu.be/f91k93TPNAg
  4. https://youtu.be/BgZTYalizq8
  5. https://youtu.be/SEkvXHyV-C8
  6. https://youtu.be/YpuDr6k21FQ
  7. https://youtu.be/Ec44B03b8VI
  8. https://youtu.be/CJYrGCshn00

Feel welcome to share your comments or feedback!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This Post Has 11 Comments

  1. Sivakumar Ramakrishnan

    ஐயா முனைவர் ரமேஷ் அவர்களுக்கு,

    நேற்று எதார்தமாக தங்களின் வலைத்தளத்தை முதன் முறையாக படித்தேன் . முதன் முறையாக சோதிடப் பெரும் புலம், அறிவியல் தரவு சான்றுகளைச் சார்ந்து செலுத்தப்படுவதை உங்கள் எழுத்துக்களில் கண்டு வியந்து, மகிழ்ந்தேன். எங்கே முறையான தடம் காணாது சோதிட அறிவியல் ஒரு சுணக்கம் கண்டு விட்டதோ என்று பல முறை எண்ணி வருந்தியுள்ளேன். ஆனால் அப்பார்வையைத் தங்களின் எழுத்துக்கள் மாற்றிவிட்டது. தங்களின் புள்ளியல் கட்டுமானம் அணுகு முறை மிகச்சிறப்பு. நான் எழுதிவரும் தமிழர் கால மெய்யறிவு எனும் நுலோடு, புள்ளியல் கட்டுமானம் பெரிதும் ஒத்து நிற்பதைக் கண்டு பெரிதும் மகிழ்வடைந்தேன். நான் சோதிட வள்ளுவன் கிடையாது. தமிழர் கணித ஏரணங்களை ( mathematic logics) ஆய்வுசெய்து வருகிறேன். தங்களின் ஆய்வுகள் தொடர்ந்து மேலோங்க வாழ்த்துவதோடு, இறைவனை இறைஞ்சுகிறேன்.

    1. Ramesh

      திரு சிவக்குமார் அவர்களே,
      தாங்கள் எனது கட்டுரைகளை படித்து பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி!
      இந்திய சோதிடத்தின் பின்னே கோலத்தில் ஒளிந்திருக்கும் புள்ளிகளைப் போல தரவு அறிவியல் ஒளிந்துள்ளது. புள்ளிகளை மட்டும் பிரித்து பார்க்கத் தெரிந்தால் ஒரே கோலத்தில் பல கோலங்கள் வரைய முடியும் என்பதையும் அறியலாம்.
      தங்கள் வாழ்த்துக்களுக்கு மீண்டும் நன்றி! தொடர்ந்து படித்து வாருங்கள்.

  2. அதிபதி

    அயனாம்சம்னா எதோ ஜோதிடம் சம்பந்தப்பட்டதுனு தெரியாமத்தான் இருந்தேன்
    நல்லா தெளிவா,எனக்கே புரியும்படி சொல்லியிருக்கீங்க