T036 சட்பலம் – தொகுத்த பார்வை

சட்பலம்
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும்

(அதிகாரம்:ஊழ் குறள் எண்:373)

சட்பலம் – தொகுத்த பார்வை (இந்திய சோதிட முறைகளில் புள்ளியியல் கட்டுமானங்கள்: பாகம் 16)

மகரிஷி பராசரர் முறையின் சட்பலம் (Shadbala) என்ற கட்டுமானத்தைப் பற்றிய தொடரின் ஐந்தாம் / இறுதி பாகம் இதுவாகும். இந்த பாகத்தில் இதுவரை பார்த்த சட்பல கூறுகளின் திரண்ட திறனாய்வை (consolidated analysis) மேற்கொள்வோம்.

இந்தப் பாகம் ஜோதிடத்தில் காலடி எடுத்து வைப்பவர்களுக்கும் மற்றும் சோதிடத்தில் உயர்நிலை புரிதல் நோக்கி செல்பவர்களுக்கானதுமான கட்டுரை. இந்தப் பாகத்தில் பராசரர் சட்பலம் மூலம் சொல்ல வரும் திரண்ட கருத்துக்கள் என்ன என்பதை புள்ளியியல் பார்வையில் அறிய முற்படுவோம்.

இந்த கட்டுரையில் பயன்படுத்தியுள்ள சில கலைச்சொற்களின் ஆங்கில மொழியாக்கம் கீழே உள்ளது.

  • தரவு (Data)
  • மாறி (Variable)
  • புள்ளியியல் மாதிரி (Statistical Model)
  • தொகுத்த மதிப்பெண் (Composite Score)
  • சட்பலம் (Shadbala)
  • நைசர்கிக / இயல்பான பலம் (Naisarkiga bala / Natural Strength)
  • ஸ்தான / இட பலம் (Sthana bala / Positional Strength)
  • கால பலம் (Kala bala / Temporal Strength)
  • திக் / திக்கு பலம் (Dig bala / Directional Strength)
  • திருக் / பார்வை பலம் (Drik bala / Aspectual Strength)
  • சேஷ்ட / சேட்டை பலம் (Chesta bala / Motional Strength)

பதினெண் (18) கூறுகளாக சொல்லப்பட்ட சட்பல தொகுப்பில் இதுவரை நாம் ஒவ்வொரு கூறையும் மிகவும் விளக்கமாக வானியல், சோதிடம் மற்றும் புள்ளியியல் என்று முப்பரிமாணங்களிலும் இந்த குறும்தொடரில் முந்தைய பாகங்களில் படித்து அறிந்தோம். சட்பலம் பற்றிய இந்தக் கட்டுரையின் முதல் பாகம் (நைசர்கிக பலம் மற்றும் ஸ்தான பலம் பற்றியது) மற்றும் இரண்டாம் பாகம் (காலபலம் பற்றியது), மூன்றாம் பாகம் (திக்பலம் மற்றும் திருக்பலம்) மற்றும் நான்காம் பாகம் (சேஷ்ட பலம்) ஆகியவற்றை நீங்கள் இதுவரை படிக்கவில்லை எனில், அவற்றை படித்த பின்னர் இந்தப் பாகத்தை படிப்பது உங்களுக்கு ஒரு நல்ல தொடர்ச்சியை தரும். ஏற்கனேவே படித்தவர்களும் பின்னர் ஒருமுறை விரைவாக வாசித்துவிடுங்கள். கொஞ்சம் நாள் ஆகிவிட்டபடியால் மறந்து இருக்கக்கூடும்! 😊

இந்தக் கட்டுரையை படிக்கும்போது குறைந்தபட்சம் ஏதாவது ஒரு ஜாதகத்தையும் அதன் அடிப்படையில் கணக்கிடப்பட்ட சட்பல அட்டவணையையும் உங்கள் முன் வைத்துக்கொண்டு இக்கட்டுரையில் சொல்லவரும் விடயங்களை ஒப்பீடு செய்து படிப்பது உங்களுக்கு சட்பல கணக்கின் பல நுண்ணிய விடயங்களை, ஏற்கனவே ஒருமுறை படித்ததை அசைபோட உதவக்கூடும்.

நீங்கள் எளிதில் தொடர்புபடுத்திப் படிக்க, நாம் முன்பு பார்த்த மாதிரி உதாரண ஜாதகத்தின் மொத்த சட்பல அட்டவணையையும் கீழே கொடுத்துள்ளேன்.

சட்பலம் அட்டவணை
உதாரண ஜாதகத்தின் மொத்த சட்பல அட்டவணை

கட்டுரையின் தொடர்ச்சி கருதி முன்பே சொன்ன சில முக்கிய விடயங்கள் திரும்பவும் வரக்கூடும். வாசகர்கள் கூறியது கூறல் குற்றமென எடுத்துக்கொள்ள வேண்டாம்.

சோதிடக்கட்டுமானம் #10: சட்பலம் திரண்ட கருத்துக்கள்

சட்பலம்  கூறுகளின் குறைந்தபட்ச மதிப்புகள் (minimum scores for shadbala components)

கிரகங்கள் பெரும் பலத்தை ஆறுவித பெரும் கூறுகளாக சட்பலத்தை வரையறை செய்த பராசர முனிவர், அடுத்து இந்த தனித்த கூறுகளை எப்படி தொகுத்து மதிப்பீடு செய்வது என்பதை பற்றி விளக்குகிறார். வாருங்கள், அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை பார்க்கலாம்.

சட்பலம் கட்டுமானத்தின் கூறுகள்

சட்பலம் (சட் = ஆறு (6)) என்பது ஆறுவிதமான பலங்களை குறிப்பிட்டாலும் இந்த கணக்கீட்டின் பின்னே மொத்தம் 18 வகையான தனித்த கணக்கீடுகள் பொதிந்துள்ளன. அவற்றை கீழே உள்ள படத்தில் காட்சிப்படுத்தி உள்ளேன். ஒவ்வொரு கூறின் இறுதியிலும் அவற்றின் உப கூறுகளின் எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஸ்தான பலம் 5 உப கூறுகளால் ஆனது.

சட்பலம்
சட்பலம்

கிரகம் பெற்ற நிலைகளை, பிற அடிப்படை சோதிட கட்டுமான கூறுகளோடு தொடர்புபடுத்தி இந்த கூறுகள் தருவிக்கப்படுகின்றன என்பதை முன்பே சொல்லி இருந்தேன். சட்பல கணக்கீட்டில் ராகு-கேதுக்களுக்கு ஒளி, கதி மாறும் நிலைகள் மற்றும் ஆட்சி வீடுகள் போன்றவை வரையறை செய்யப்படவில்லை என்ற காரணத்தால் இவை சட்பல கணக்கில் சேர்க்கப்படவில்லை என்பதையும் முன்னமே சொல்லி இருக்கிறேன்.

பராசரர் வரையறை செய்த குறைந்த பட்ச பல மதிப்பீடுகளுக்குள் செல்வதற்கு முன்னர் நாம் இதுவரை முந்தைய நான்கு பாகங்களிலும் பார்த்த சட்பல கூறுகளின் அடிப்படை, குறிப்பாக முக்கியத்துவம் தரப்பட்ட கிரகங்கள் மற்றும் ஒரு சட்பல கூறு பெறக்கூடிய அதிக பட்ச மதிப்பு ஆகியவற்றை பற்றிப் பார்ப்போம்.

சட்பல கூறுகள்
சட்பல கூறுகள்

ஆழ்ந்து படிப்பவர்கள் சில நிமிட நேரம் எடுத்து இந்த அட்டவணையை உள்வாங்கிக் கொள்ளவும்.

சட்பலம் அட்டவணையில் இருந்து கற்றதும் பெற்றதும்

இந்தக் கூறுகளை போட்டியிடும் கூறுகளாக பார்க்காமல் தனித்த பலம் கூறுகளாக பார்க்கவேண்டும். ஒரு பெரிய வினாத்தாளில் உள்ள வினா வகைகளுக்குள்ளே தனித்த வினாக்கள் போல ஒவ்வொன்றையும் பாருங்கள். அதிக வினாக்களுக்கு சரியான விடை இருந்தால் அதிக மதிப்பெண் கிடைக்கும்.

தருமி சொல்வதை போல “பாட்டில் எந்த அளவு பிழை உள்ளதோ, அந்த அளவு பரிசை குறைத்துக் கொள்ளுங்களேன்” கதை தான். 😉

இதையே வேறு வகையில் பார்ப்பதானால், ஒரு வாகனத்தை பரிசோதித்து அதன் முக்கிய மதிப்பீடுகளில் ஒரு வண்டி எந்த அளவுக்கு தேறியுள்ளது என்று ஒரு வண்டி மெக்கானிக் கொடுக்கும் ரிப்போர்ட் போல இந்த சட்பல கணக்கை எடுத்துக்கொள்ளலாம். இந்த அட்டவணை அதுபோல் கணக்கிடப்படும் கூறுகளின் விளக்கம் ஆகும்.

  1. பராசரர் ஜோதிடர்கள் பொதுவாக பலன் சொல்ல பயன்படுத்தும் அனைத்து கூறுகளையுமே இந்த சட்பல கணக்கில் தொட்டுச் செல்கிறார். இதையே சற்று நேர்மையாக மாற்றிச் சொல்வதானால், சட்பலத்தின் சில கூறுகளை மட்டும் சோதிடர்கள் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம்.
  2. சில கூறுகள் அதிக மதிப்பை உடையதாகவும், வேறு சில குறைவான மதிப்பெண் பெறுவதாகவும் கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட கூறிற்கு கொடுக்கப்படவேண்டிய முக்கியத்துவம் உள்ளார்த்தமாக உணர்த்தப்படுகிறது.
  3. சிலவற்றின் குறைந்தபட்ச மதிப்பே, பிற கூறுகளின் அதிகபட்ச அளவுக்கு சமமாக உள்ளன. உதாரணம் – கேந்திர பலம் குறைந்த மதிப்பு 15 விரூபா – கிரகம் பெரும் அதிக பட்ச திரேக்காண பலத்துக்கு (15 விரூபா) சமமாகும்.
  4. சில கிரகங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கட்டமைப்பிலேயே தரப்பட்டுள்ளது. உதாரணம் – புதன், குரு போன்றவை. இந்த முக்கியத்துவமும் அளவில் மாறுபடுகிறது.
  5. சப்தவர்க்க பலம் போன்ற கூறுகள் வர்க்க சக்கரங்களின் பலத்தையும் கணக்கிட்டு பெறப்படுகின்றன மற்றும் 7 வர்க்க தொகுப்பாக அமைவதால், இந்தக் கூறு பெரும் மதிப்பு சட்பலத்தில் அதிக பட்ச மதிப்பை (7X) பெறுவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  6. கிட்டத்தட்ட அனைத்து அடிப்படை ராசி அளவிலான தொகுப்புகளும் சட்பல கணக்கில் கருதப்பட்டுவிடுகின்றன. உதாரணமாக, ராசி பாலினம், திரேக்காணம், உச்சம், அயனம், கேந்திரம், வக்கிரம், கிரக தூரம் போன்றவை.
  7. பஞ்சாங்க கூறுகளான பிறை (வளர்பிறை, தேய்பிறை), பொழுது (பகல்/இரவு), வருடம், மாதம், கிழமை, ஓரை போன்றவையும் கூட இந்த பலம் கணக்கில் வந்துவிடுகின்றன.

விட்டுபோனவை என்றால் கிரக ரீதியில் முக்கியமாக வேறு ஏதுமில்லை!

இந்தப் பின்னணியில் பராசரர் வரையறுக்கும் குறைந்தபட்ச பலம் மதிப்புகள் பற்றி பார்ப்போம். இதுபற்றிய விரிவான விபரங்கள் பக்கம் BPHS, Vol 1, P – 413 இல் (சாகர் பதிப்பகம்) உள்ளன. அவற்றை கீழே உள்ள அட்டவணையில் தொகுத்துக் கொடுத்துள்ளேன்.

குறைந்தபட்ச பலம் மதிப்புகள்
குறைந்தபட்ச பலம் மதிப்புகள்

ஸ்தான, காலம் (+அயனம்), திக்கு மற்றும் சேஷ்ட பல கூறுகளுக்கு குறைந்த பட்ச மதிப்புகளை மூன்று கிரக தொகுப்புக்களாக பராசரர் வரையறை செய்துள்ளார். சூரியன், குரு மற்றும் புதன் முதல் அணியாகவும், சந்திரன், சுக்கிரன் இரண்டாம் அணியாகவும், செவ்வாயும் சனியும் மூன்றாம் அணியாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிரக தொகுப்புக்கும் ஒரே அளவிலான பல மதிப்புகள் குறைந்த பட்ச மதிப்புகள் ஆகும். இவை அட்டவணையில் ஒரே வண்ணமுள்ள பட்டைகளால் குறிக்கப்பட்டுள்ளன.

காலபலத்தில் கூடுதலாக அதன் உட்கூறாகிய அயன பலத்துக்கு தனியாக குறைந்த பட்ச மதிப்புகள் சொல்லப்பட்டுள்ளன.

இந்த குறைந்தபட்ச மதிப்பில் இயல்பான பலம் மற்றும் திரிக் பலம் கூறுகள் குறிப்பிடப்படவில்லை. இயல்பான பலம் நிலையானது என்பதாலும் திரிக் பலத்தில் எதிர்மறை எண்கள் வரக்கூடும் என்பதாலும் இவற்றுக்கு குறைந்தபட்ச அளவுகள் சொல்லப்படவில்லை.

முக்கிய குறிப்பு: பேராசிரியர் கே.ஜெயசேகர் (Prof K. Jeyasekar) போன்றோர் இந்த திரிக் பல அளவுகளை மொத்த அளவில் கூட்டி அல்லது கழித்து ஒரு கிரகம் பெற வேண்டிய அளவுகளை வரையறை செய்துள்ளனர். ஸ்ரீ ஜோதி ஸ்டார் போன்ற முன்னணி ஆராய்ச்சி மென்பொருட்களிலும் அவரது முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கணித ரீதியாக எதிர்மறை எண்களை அந்தக் காலத்தில் பயன்படுத்தும் வழக்கம் நம் முன்னோர்களிடம் இல்லாத காரணத்தால், அதுபோன்ற அணுகுமுறையில் எனக்கு உடன்பாடு இல்லை. மேலும் அவரது முறையில் பொதுவாக கணிதத்தில் ஏற்க முடியாத கணக்கீட்டு பிழைகளும் உள்ளன என்பது எனது கருத்தாகும். திரிக் பல கணக்கு தனியாகவே கையாளப்படலாம் என்பதே எனது புரிதல் ஆகும். 

சட்பலம் குறைந்தபட்ச மதிப்பில் சில கவனிப்புகள்

சட்பல கூறுகள் தனித்த கிரகத்துக்கு வரையறை செய்யப்பட்ட போதிலும், குறைந்த பட்ச மதிப்புகள் ஒரே அளவில் இல்லை. இதற்கான காரணங்கள்  சில கட்டமைப்பு சார்ந்தவை. உதாரணமாக, ஓரை சக்கரத்தில் கடகம் மற்றும் சிம்மம் ஆகிய இரண்டில் மட்டும் அனைத்து கிரகங்களும் வரும் என்பதால் சூரிய சந்திரருக்கு இங்கே கூடுதல் முக்கியத்துவம் மறைமுகமாக வந்துவிடுகிறது. எனவே அவை பெற வேண்டிய ஸ்தான பல மதிப்புகள் அதிகம்.

சூரிய சந்திரரின் சேட்டை பலம், அவற்றின் அயன பலம் மற்றும் பட்ச பலம் மூலம்  பெறப்படலாம் (அவற்றின் பாதி).

சுக்கிரன் மற்றும் சந்திரன் லக்கினத்துக்கு 4வது ராசிக்கு மிகஅருகில் இருந்தால் மட்டுமே குறைந்தபட்ச திக் பலம் பெறும். அதுவே செவ்வாய் மற்றும் சனி ஆகியவை 2 ராசிகள் தள்ளி இருந்தாலும் அவை பெறவேண்டிய குறைந்தபட்ச திக்பலத்தை அளவை பெற்றுவிடும்!

சுக்கிரன் சம கதிக்கு மேலான வேகத்தில் இருந்தாலே அதற்கு குறைந்தபட்ச சேட்டை பலம் கிடைத்துவிடும். அதுவே, குரு மற்றும் புதன் உச்சவக்கிரத்துக்கு அருகில் மட்டும் குறைந்தபட்ச சேட்டை பலத்தை பெறுகின்றன. இதுபோல மற்ற எண்களையும் பகுத்து அறியவும்.

கிரகங்களின் மாறுபடும் மொத்த குறைந்த பட்ச பலம்

இதற்கு அடுத்த நிலையில் ஒவ்வொரு கிரகமும் பெறவேண்டிய குறைந்தபட்ச மொத்த மதிப்புகளை பராசரர் வரையறை செய்கிறார். சூரியனுக்கு 6.5 ரூபம் (அல்லது 6.5 x 60 = 390 விரூபா), சந்திரனுக்கு 6.0 ரூபா (அல்லது 360 விரூபா) என்று இந்த அளவுகள் மாறுபடுகின்றன. இந்த அளவுகள் சனி மற்றும் செவ்வாய் தவிர்த்த 5 கிரகங்களுக்கும் மாறுபடுகின்றன. இவை மேலே உள்ள அட்டவணையில் இடமிருந்து வலமாக 7. மொத்தம் என்ற பச்சை நிறமிட்ட வரிசையில் காட்டப்பட்டுள்ளன.

ஒரு கிரகம் இது போல அதற்கு வரையறை செய்யப்பட்ட குறைந்த பட்ச அளவை விட அதிக மொத்த பலத்தை பெறும்போது அந்தக் கிரகம் தன் முழு பலத்தோடு இருப்பதாக கருதப்பட வேண்டும் என்கிறார் பராசர முனிவர்.

சட்பலம் கிரகங்களின் குறைந்த பட்ச மொத்த பலங்கள் ஏன் மாறுபடுகின்றன?

இதற்கான காரணம் எளிமையானது. பராசரர் புதன், குரு, சூரியன், சந்திரன் ஆகிய கிரகங்கள் கூடுதலான பலம் பெரும்வண்ணம் சில கூறுகளை கட்டமைப்பில் செய்துள்ளார் என்பதை இக்கட்டுரையின் முதல் அட்டவணையில் பார்த்தோம். எல்லா கிரகங்களும் சமமெனில் அவற்றுக்கான மதிப்பீடுகளும் சமமாக இருக்க வேண்டும் அல்லவா?

புதன் இரண்டு கூறுகளில் (நத உன்னத பலம் மற்றும் அயன பலம்) அதிகப்படியான பலம் பெறும்படி கட்டுமானம் உள்ளதால், அது பெறவேண்டிய குறைந்தபட்ச மொத்த அளவையும் உயர்த்தி 7 ரூபம் அல்லது 7 x  60 = 420 விரூபா என பராசரர் நியமிக்கிறார். இதன் மூலம் எல்லா கிரகங்களையும் ஒரே அளவில் சீர் தூக்கி எடைபோடும்படி, கணித முறையில் தேவையான திருத்தத்தை பராசரர் கொண்டுவருகிறார்.

சட்பல மதிப்பின் பொதுவான பயன்பாடு

சட்பல கூறுகள் தனித்தனியாகவோ அல்லது மொத்த பலமாகவோ பார்க்கப்படலாம். மொத்தமாக பார்க்கும்போது, ஒரு கிரகம் பெறவேண்டிய குறைந்தபட்ச அளவால், அது பெற்ற மொத்த அளவை வகுப்பதன் மூலம் கிடைக்கும் எண்ணை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துவதன் மூலம் ஒரு ஜாதகத்தில் அல்லது குறிப்பிட்ட பலத்தில் எந்த கிரகம் அதிக பலத்தோடு இருக்கிறது என்பதை தெளிவாக அறியலாம். அது போன்ற ஒரு மாதிரி வரிசைப்படுத்துதல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சட்பலம்
மாதிரி வரிசைப்படுத்துதல்
சட்பலம் ஒப்பீடு
சட்பலம் ஒப்பீடு

ஒரு ஜாதகத்தில் அதிக வலு பெற்ற கிரகம் எது என்ற கேள்வி வரும்போது நீங்கள் எந்த சந்தேகமும் இல்லாமல் பதில் சொல்ல உதவுவது கிரகம் பெற்ற சட்பல மதிப்புகளே!

குறைந்தபட்ச மதிப்பை விட (<100%) பலம் குறைந்த கிரகங்கள் வலு குறைந்தவை. அவற்றின் காரக விடயங்களில் மற்றும் தசாபுக்திகளில் சிறப்பான பலன்கள் கிடைக்காது எனலாம். அதுவே ஒரு கிரகம் நல்ல வலு பெற்று இருந்தால், அந்தக் கிரக தசைகள் சிறப்பானவை எனலாம்.

சட்பல மதிப்பின் தனித்துவமான பயன்பாடு

சட்பலத்தின் தனித்த கூறுகளை தனித்துவமான சோதிட பலன்களுடன் தொடர்புபடுத்தி விரிவான பலன்களை சொல்லலாம். எதனுடன் எதனை தொடர்புபடுத்துவது என்பது சொல்லிக்கொடுக்கும் குருநாதர் பொறுத்து மாறக்கூடும். உதாரணமாக நீங்கள் என் குருநாதர் திருப்பூர் S கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களின் மாணவர் எனில், உச்ச பல மதிப்பின் அடிப்படையில் ஒரு நபர் அல்லது அவரின் செயலின் தரம் பற்றி நீங்கள் பலன் சொல்ல முடியும். அதுவே மூலத்திரிகோணம் எனில், அது ஒரு ஜாதகர் பிறவியிலேயே பெற்ற கொடுப்பினைகளைப் பற்றி சொல்கிறது என்பார் என் குருநாதர். திக்கு பலம் சாதகமான திசைகளை அடையாளம் காண உதவும். இதுபோல தனித்த சட்பல அட்டவணையின் அடிப்படையிலேயே நம்மால் ஒரு ஜாதகத்துக்கு மிகவும் விரிவான பலன்களை சொல்ல இயலும்.

ராசிக்கட்டத்தில் மேம்போக்காக தெரியாத பல நுண்ணிய விடயங்களை சட்பல மதிப்பின் ஊடாக உற்று நோக்கினால், நாம் அலட்சியமாக கடந்து சென்ற பல கூறுகள் பிடிபடும். ஒரு குறிப்பிட்ட கிரக பலத்தை நிர்ணயிப்பதில் குழப்பம் வரும்போது யோசிக்காமல் சட்பல அட்டவணையை எடுத்துப் பார்த்துவிடுங்கள். இன்னும் குறிப்பாக சொல்வதானால், முதலில் சட்பல அட்டவணையின் அடிப்படையில் ஜாதகம் பார்க்கப் பழகுங்கள். நீங்கள் மேன்மை அடைவது நிச்சயம்!

தனித்த சட்பல கூறுகளின் முக்கியத்துவம்

இதுவரை அட்டவணை 2ஐ, கிரக ரீதியாக இடமிருந்து வலமாக பார்த்தோம். இப்போது மேலிருந்து கீழாக பார்ப்போம். தனித்த சட்பல கூறுகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஸ்தான பலம் – அனைத்துக் கிரகங்கள் பெறவேண்டிய குறைந்த பட்ச அளவுகளின் கூடுதல் 953 விரூபா ஆகும். இதனை 7 கிரகங்கள் பெறவேண்டிய கூடுதல் 2,400 விரூபா ஆல் வகுக்க கிடைப்பது 39.7% ஆகும். இதுபோல கணக்கிடப்பட்ட வரைபடம் கீழே உள்ளது.

சட்பலம் குறைந்த பட்ச பலம்
குறைந்த பட்ச பலம்

குறைந்தபட்ச பல மதிப்புகளின் கூட்டுத்தொகையின் அடிப்படையில் பார்த்தால் 5 கூறுகளால் ஆன ஸ்தான பலத்துக்கு அதிக முக்கியத்துவமும், அதற்கு அடுத்து ஒரு கூறால் ஆன சேட்டை பலத்துக்கு இரண்டாம் நிலை முக்கியத்துவமும் தரப்பட்டுள்ளன. 9 கூறுகளால் ஆன காலம் 3வது ஆகவும் ஒரே கூறால் ஆன திக்கு பலம் 4வது ஆகவும் வரிசையில் வருகின்றன.

தனித்த கூறுகளின் அடிப்படையில் பார்க்கும் போது வக்கிரம், திக்கு ஆகியவை அதிக பலம் உள்ளவையாக கருதப்படவேண்டும் என்பது இங்கே பராசரரால் குறிப்பாக உணர்த்தப்படுகின்றன.

புள்ளியியல் பார்வையில் சட்பலம் மொத்த மதிப்புகள்

ஒன்றோடொன்று கலக்காத தனித்துவமான கிரகம் சார்ந்த மாறிகள், அவற்றின் தருவிக்கும் முறைகள், வகைப்பாடுகள், சிறப்பு கவனிப்புகள், பலம் எல்லைகள், மாறுபடும் குறைந்தபட்ச மதிப்புகள்,  அவற்றின் பின்னே உள்ள கட்டுமான ரீதியிலான எல்லை மீறாத நியாயங்கள், சமன்படுத்தும் உத்திகள் என விரியும் சட்பலம் மிகவும் ஆழமான புள்ளியியல் கட்டுமானம் எனலாம்.

ஒரு மதிப்பீட்டு முறை எப்படி கட்டமைக்கப்படவேண்டும் என்பதன் சாட்சியாக அல்லது உதாரண வடிவமாக சட்பலத்தை நாம் பார்க்க முடியும். இன்றைய தேதிக்கு நாம் பயன்படுத்தும் எந்த ஒரு மதிப்பீட்டு முறைக்கும் சற்றும் குறைவில்லாத சொல்லப்போனால் ஆதாரமாக இருக்கும் முறை சட்பலம் என்ற கணக்கீடு ஆகும். வார்த்தைகளில் விரியும் மாபெரும் விளக்கங்களை சுருக்கமாக எண் அளவில் சுருக்கி ஒரு மதிப்பீடாக தருவது சட்பல மேன்மையை உங்களுக்கு உணர்த்தக்கூடும்.

கட்டுரை சுருக்கம்

ஒரு மாணவரின் தேர்வுத்தாளை ஒரு மதிப்பீட்டாளர் எப்படி மதிப்பிடுவாரோ அதுபோன்றதொரு விரிவான மதிப்பீடு செய்யும் விளக்கத்தை பராசரர் இந்த சட்பல கணிதம் மூலம் நமக்கு தருகிறார். ஒரு ஜாதகம் கிரகப் பரிமாணத்தில் எந்த அளவு தேர்ச்சி பெற்றது அல்லது மேன்மையானது என்பதை சட்பலமே சொல்லிவிடும். இங்கே குறைந்தபட்ச சட்பல மதிப்புகள் பிரிக்கும் புள்ளி போல (cut-off score) செயல்படுகின்றன.

ஆறு பாகங்களாக கிரக பலத்தைப் பிரித்து, அவை ஒவ்வொன்றிலும் கவனிக்க வேண்டிய நுட்பங்களை விளக்கி, எவ்வாறு ஒரு கிரக பலத்தை நிர்ணயிப்பது என்று மிகவும் தெளிவான வழிகாட்டுதல்களை தருவதன் மூலம் ஒரு ஜாதகத்தை எப்படி அலசவேண்டும் என்று பராசரர் மிகவும் கணித ரீதியிலான, குழப்பங்களுக்கு இடமளிக்காத ஒரு அணுகுமுறையை நமக்கு சொல்லித்தருகிறார்.

நம்மில் பெரும்பாலோனோர் சட்பலத்தை ஊறுகாய் போலத்தான் பயன்படுத்துகிறோம்! ஆனால், ஒரு முற்றிலும் கணக்கீடு ரீதியிலான வழியை நமக்கு சொல்லித்தருவதன் மூலம், ஒரு ஜாதகத்தில் கிரக பலத்தை எப்படி விருப்பு வெறுப்பின்றி கண்டுபிடிப்பது என்று விரிவானதொரு அணுகுமுறை நம் கண்முன்னே விரித்துக் காட்டப்படுகிறது.

உண்மையில் சட்பலம் கடைசியாகப் பார்க்கப்படவேண்டியது அல்ல! அதுதான் முழுமையான கிரகபலத்தை ஜாதகத்தில் கணக்கிடும் முறை ஆகும் என்பது இந்தக் கட்டுரை தொடர் மூலம் உங்களுக்கு விளங்கி இருக்கும் என்று நான் நம்புகிறேன்!

இதன் அடுத்த நிலைகளில் இஷ்டபலம் – கஷ்ட பலம் மற்றும் பாவக பலம் போன்றவையும் சட்பல கணிதத்தின் தொடர்ச்சியாக அமையும். இவற்றில் பாவக பலம், பாவகம் என்ற பரிமாணம் சார்ந்து அமைந்தது ஆகும். அது ஒரு ஜாதகத்தில் எந்தெந்த பாவகங்கள் எவ்வளவு வலுவாக அமைந்துள்ளன என்பது பற்றி அறிய உதவும் கட்டுமானம் ஆகும். காலம் அனுமதித்தால் பாவக பலம் பற்றி தனி கட்டுரையாக பார்க்கலாம். அவையும் இதுபோன்ற ஒரு மேன்மையான கட்டுமான பரிமாணங்கள் என்பதை மட்டும் இப்போதைக்கு நினைவில் இருத்தவும்.

பராசர முனிவருக்கு ஒரு வணக்கத்தோடு, இந்திய சோதிடத்தில் புள்ளியியல் கட்டுமானங்கள் என்ற நெடும் தொடரில், சட்பலம் பற்றிய இந்த குறும்தொடரை இங்கே நிறைவு செய்கிறேன். மற்றுமொரு பராசர முறையின் கட்டுமானத்தோடு அடுத்த பாகத்தில் விரைவில் சந்திப்போம்.

இதுவரை இந்தக் கட்டுரையை முழுமையாக படித்தமைக்கு நன்றி!

இந்த சட்பலம் குறும்தொடரில் உங்களுக்கு பிடித்த விடயங்கள் என்னென்ன? பின்னூட்டம் இடுங்கள்.

மேலும் வளரும்!… 🙏🌷🌸🌹🌺🌻🌼

Leave a Reply to ShanthiCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This Post Has 5 Comments

  1. sriram

    dear sir , good evening , can i taken shat palam for gemstone prediction , athigamana palam ulla grahangalain gemstone payanpadutha lama ?

  2. Kumaresan

    🌹 ஒரு சந்தேகம் நண்பரே! நீச்ச பங்கம் ஆகும் கிரகம் உச்ச பலனைத்தரும் ஆனால் சட்பலத்தில் பலம் பெறுவதில்லையே? எனவே, சட்பலத்தை மட்டுமே நம்பி பலன் கூற முடியுமா?

    1. Ramesh

      நல்லது. நீச்ச பங்கம் என்பது கிரகச் சேர்க்கை பலன்களில் வரும். சட்பலத்தில் வருவது எல்லாம் தனித்த கிரக பலம்.

      நீச்ச பங்கம் ஆன கிரகம் உச்ச பலனைத் தரும் என்று பராசரர் எந்த இடத்தில் சொல்லியுள்ளார் என்று தெரிவிக்க இயலுமா?

      நீச பங்கம் ஆன கிரகம் சட்பலத்தில் பலம் பெறுவதில்லை என்று எப்படி சொல்கின்றீர்கள்? அது 18 கூறுகளில் இழப்பது உச்சம், மூலத்திரிகோணம் போன்ற பலங்களையே. நீசம் ஆன கிரகம் லக்ன, கேந்திரங்களில் அமைந்தால் அது பிற சில பலங்களை பெறுமே!

      சட்பலம் என்பது தனிநபர் விருப்பு வெறுப்பு மற்றும் விளக்கங்களுக்கு அப்பாற்பட்ட தெளிவான கணித அளவீடு. கிரக பலம் அறிய இதுவே சரியான வழி.

  3. Shanthi

    Not fully understand

    1. Ramesh

      Hello Madam, Thanks for visiting and sharing your feedback. You seem to be a new visitor. Please read and work with a horoscope from part 1 of Shadbala to get a full understanding. One can’t make out anything worthwhile just by ‘reading’ it for some 15-20 min.